Monday, August 4, 2025

ஆடி 18 அன்று மானாத்தாள் ஏரியில் நல்ல கூட்டம்: கவிஞர் தணிகை

 மானாத்தாள் ஏரியில் நல்ல கூட்டம்: கவிஞர் தணிகை



காவிரி உபரி நீர் வீணாவதை ஏரிகளுக்கு நிரப்பும் முகமாக இந்த ஏரி நிரம்பி வழிகிறது.சேலம், ஓமலூர், தாரமங்களம் ஆகிய ஊர்களுக்கு ஏறத்தாழ சம அளவு தூரத்தில் இருப்பது இதன் சிறப்பு. இங்கு உயிர் ஆபத்து நிகழ்த்துமளவு நீர் வன்மை இல்லை. படிகளில் நீர் இறங்கி வழிவதில் குளிப்பதால் எந்த ஆபத்தும் இல்லை.


எனவே ஆடி 18 அன்று ஏகக் கூட்டம். ஆம்புலன்ஸ் முதற்கொண்டு ரெடியாக நிற்க, காவல் துறை சிறப்பு ஏற்பாடுகளை கவனிக்க, எல்லா வகையான உணவுகளும் கிடைக்க, கடைகள் நிறைய எல்லாத் தேவைகளுக்கும் மக்களுக்கு ஏற்பட்டிருக்க, அருகாமையில் உள்ள காடுகளில் நிறுத்தும் வாகனங்களுக்கு அனுமதிக் கட்டணம் பெற்றுக் கொண்டு டோக்கன் வழங்கி பாதுகாப்பு இருக்கிறது.


ஆங்கிலேயர் கால்த்திலேயே இந்த ஏரி அமைக்கப் பெற்று படிகளும் அமைக்கப் பட்டிருக்கின்றன். நிறைய பேர் சாப்பிடுவதும் நீர் விளையாட்டுகள் விளையாடுவதுமாக காலம் கழித்து மகிழ்கிறார்கள். நீர் நிரம்பி இருக்க,ஆடி 18 அங்கே அமோகம். முத்தம்பட்டி, குட்டப் பட்டி மாதநாயக்கன் பட்டி ஆகிய ஊர்கள் அருகே உள்ளன.மானாத்தாள் என்பது கிராமம் பெயர். இந்த ஏரிக்கு அதனால் ஆகு பெயர். மானத்துடன் வாழ்ந்தாள் அந்த ஆத்தாள் என்று இருக்கலாம், அல்லது மான்கள் நிறைய இருந்திருக்கலாம் நீர் பருக அங்கே கூட்டம் கூட்டமாக வந்திருக்கலாம். அதெல்லாம் காரணப் பெயர்களாக இருக்கலாம். மொத்தத்தில் தாரமங்களம் என்ற புகழ் பெற்ற கைலாய நாதர் ஆலயம் அமைந்துள்ள ஊருக்கு இது அருகாமையில் இருப்பதால் இன்னும் சிறப்பு கூடுகிறது.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

பி.கு:

நேர்காணலில் அங்கு சென்று வந்த இருவர்  வாய் வழி மொழிக‌ளுடன்

களை இல்லாத இந்த‌ ஆடி 18 (2025): கவிஞர் தணிகை

 களை இல்லாத இந்த‌ ஆடி 18 (2025): கவிஞர் தணிகை



வழக்கம் போல் 3 நண்பர்கள் நடைப் பயிற்சிக்கு செல்லும் நேரத்தில் 16 கண் மதகு வரை சென்று ஆடி 18ஐ கொண்டாட சென்றோம். உபரி நீர் ஏதும் 16 கண் மதகு வழி வெளி அனுப்பப் படவில்லை. அணை நிரம்ப கதவு முடிவு வரை நீர் நிரம்பி இருந்தது.ஆண்டுக்கு ஆண்டு கூட்டம் களை கட்டும் அணை மேல் மேட்டூரின் எல்லீஸ் டங்கன் பாலம் வெறிச்சோடிக் கிடந்தது. ஒரு வேளை நாங்கள் போகும் வழக்கமில்லாத கீழ் மேட்டூரில் கூட்டம் இருந்திருக்கலாமோ? காலை முதல் நிறைய வந்து சென்றிருக்கலாமோ? எல்லா நீர் நிலைகளிலும் நீர் நிரம்பி உள்ளதால் மக்கள் ஆங்காங்கு தங்கள் விழாவை நடத்திக் கொண்டு விட்டனரோ? நீர் வெளியே வராததால் புதிய பாலத்திலும் எவருமே இல்லை மக்களும், கடைகளும். 


இந்த நாள் வருமுன்பே சில முறை நீர் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப் பட்ட நீர்த் திரள் காட்சிகளை கண்டு விட்டதால் ஆர்வம் இழந்து விட்டனரோ...எப்படியோ மொத்தத்தில் கூட்டம் மிகக் குறைவே... மாலை சுமார் 6 மணி அளவில் உள்ளூர் மக்கள் வாகனங்களில் கொஞ்சம் வர ஆரம்பித்தனர், சிறு தூறலும் வர ஆரம்பித்திருந்தது.


நாங்கள் வழக்கம் போல கம்பி வேலி ஓரம் கடைசி வரை நடந்தோம். முடிவில் ஒரு விளக்கேற்றும் மாடம் புதிதாக இருந்தது. கொண்டு சென்ற காது ஓலைக் கருகமணி,கறுப்பு வளையல் வெற்றிலைகள், எல்லாம் வைத்து ஒரு கற்பூரக் கட்டி எங்கள் வீட்டில் கொடுத்திருந்ததை ஏற்றி வைத்தேன். கொளுத்தி வைத்தேன்.(உள்ளூர எப்போதோ: எம் மக்களால் இதுகாறும் கற்பூரத்துக்கு செலவளித்த காசு சேர்ந்திருந்தால் நதிகளை இணைத்திருக்கலாம் கங்கை காவிரியை இணைத்திருக்கலாம் என்று எழுதியது ஏனோ நினைவிலாடியது காரணமின்றி)


ஒரு இராட்டின தூரியுடன் வழக்கத்தை விட மிகக் குறைவான கடைகளே இருந்தன. ஞாயிற்றுக் கிழமையாதலால் அருகிருக்கும் வாரச் சந்தையில் கூட அவ்வளவு நெருக்கமான கூட்டம் காணப்படவில்லை. காலம் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி முன்னேறிச் சென்றபடியே இருக்கிறது.


நமைக் கடந்து போகும்  ஒவ்வொரு மணித் துளியும் நாம் மறுபடியும் திரும்பப் பெற முடியாததாய் மாறி விடுகிறது. வளர்ச்சி வண்ணங்களை இழக்க வைக்கிறது.சிறுவராய் இருந்த போது இரவெல்லாம் உறக்கம் வராமல் இருந்து சாலையில் செல்லும் மாட்டு வண்டிச் சத்தங்களும், கறுப்பு சட்டிகளும், சகோதர சகோதரி கைகளைப் பிடித்துக் கொண்டு அணை மேல் நடந்து  கடைசி வரை சென்று வந்ததும், அந்த ருசியான பொறி கடலை, பேரிக்காய்களுடன், ஏதோ ஒரு பலூனோ, விளையாட்டுச் சாமானோ, ஊதலோ, உண்டி வில்லோ, புல்லாங்குழலோ வங்கி வந்த அந்த இனி வராத காலத்தின் நினைவின் வாசம் மட்டுமே காலிப் பெருங்காய டப்பாவாக வாசனை பலமாக வீசியபடியே இருக்கிறது.


ஆற்று நீரில் காலை நனைத்து அந்தப் பழைய புண்களை மீன்கள் வெடுக் வெடுக் என பிடித்து இழுத்து அழுக்கை சுத்தம் செய்து புண் ஆற வத்த காலமும், நவ தானிய பாலிகை எல்லாம் மிக அழகாக பெண்கள் எல்லாம் எடுத்து ஆற்று நீரில் அலையோடு விட்டு வணங்கி வந்ததும், கன்னிமாரும், கன்னிப் பெண்கள் வேண்டுதலும் எல்லாப் புனிதமும் எங்கோ சென்று விட்டன... அட அங்கே இங்கே ஓரிரு கழிப்பறை கட்டி வைக்கலாமே... அதை மக்களை சரியாக பயன்படுத்த கற்று கொடுக்க வைக்கலாமே...அந்த துர் நாற்றம் மட்டும் தவறாமல் வீசியபடியே இருக்கிறது. மறக்க முடியாமல்.


மறுபடியும்  பூக்கும் வரை

கவிஞர் தணிகை.



Friday, August 1, 2025

என் மனதை விட்டு அகலாத சில செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறேன் : கவிஞர் தணிகை

  என் மனதை விட்டு அகலாத சில செய்திகள்: கவிஞர் தணிகை



1. இது வரை பிரபஞ்சம் விரிந்து கொண்டே செல்வதையும், ஏன் மையமிலா விரிதலில் விரிந்து கொண்டே இருப்பதாகவுமே நமது விண்வெளி அறிவியல் சொல்லி வந்தது. ஆனால் தற்போது ஒரு செய்தி:அது 1.5 பில்லியன் ஆண்டுகள் அதாவது 1500 கோடி ஆண்டுகள் விரிந்து வருவதாகவும் மேலும் 2 பில்லியன் ஆண்டுகள் அதாவது 2000 கோடி ஆண்டுகளில் விரிவதும் அதன் பின் அது சுருங்கி இல்லாமல் போய்விடும் என்று வந்திருப்பது புதிது.


2. அமெரிக்காவில் என்றுதான் நினைக்கிறேன்: பிரசவத்தின் போது ஐந்தரை மாதமேயான உயிருள்ள குழந்தையை பெற்று எடுத்து அதை இப்போது ஓராண்டு  நிறைவுக்கு வந்த போதும் குழாய் வழியே தேவையானவற்றை செலுத்தி உயிருடன் வைத்திருப்பதாக செய்தி.


3. நீங்கள் அறிந்திருப்பீர்: கடந்த சில நாட்கள் முன் ஹைத்ராபாத் இறகுப் பந்து விளையாட்டு மைதானத்தில் 26 வயதான இளைஞர் விளையாடிக் கொண்டிருக்கும் போதே விளையாட்டு மைதானத்திலேயே கீழே விழுந்து இறந்ததை.


4. இரண்டு வயது சிறு குழந்தை ஒன்று 3 அடி நீளப் பாம்பைப் பார்த்ததும் ஒரு செங்கல்லை அதன் மேல் விட்டெறிந்ததும், அந்த பாம்பு அந்த சிறுவனின் கையை சுற்றிக் கொள்ள, சிறுவன் அந்த பாம்பின் தலையைக் கடித்துக் கொண்டிருக்க அதன் பின் பெரியவர்கள் வந்து பார்க்க பாம்பு இறந்திருக்க, அதைக் கடித்ததால் சிறுவனுக்கு விஷம் பரவ, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவன் உயிருடன் காப்பாற்றப் பட்டு பிழைத்துக் கொண்டான். மருத்துவர் விஷம் பாதிப்பு இருந்திருக்கிறது ஆனால் அது மரணம் வரும் வரை இல்லை அதற்குள் உரிய நேரத்தில் வந்து சிகிச்சை எடுத்துக் கொண்டதால் எனப் பாராட்டி இருக்கிறார்.


5. காலை 9 மணி முதலே கடும் வெயில் மாலை 4 மணி 5 மணிக்கும் கடும் வெயில்...பருவ நிலை மாறி குளிர் காலம் ஆரம்பிக்க வேண்டிய கட்டத்தில் புவிச் சூடு உயிர்களை வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறது.


6. இந்த ஆடி 18 அணைகள் நிரம்பி உள்ளதால்  கூட்டம் நிறைய மகிழக் கூடும் நீர் நிலைகளில் சிறப்பு, மகிழ்ச்சி, நன்றி...

காவிரிக்கு நீர் அழகு, மேட்டூருக்கு அணை அழகு

இதுவே எமது சுவர் எழுத்துகளில்  இடம் பெற்றுள்ள வார்த்தைகள்...


அனைவர்க்கும் வாழ்த்துகளும் நன்றிகளும் வணக்கங்களும் உரித்தாகட்டும்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Wednesday, July 23, 2025

நீ...! கவிஞர் தணிகை

 நீ...!



நீ

ஒவ்வொரு முறை வரும்போதும்

அன்பின் பூக்களை 

அள்ளி எடுத்துச் சென்று விடுகிறாய்!


நீ

ஒவ்வொரு முறை வரும்போதும்

மனிதம் என்றால் என்ன? எதற்கு என்று

காட்டி விடுகிறாய்!


நீ

ஒவ்வொரு முறை வரும்போதும்

வாழ்க்கை என்பது பிறர்க்கு பயனாதல்,

பிறரை மகிழ்வித்தல் என்று சொல்லாமல்

சொல்லி விட்டுச் செல்கிறாய்!


உனை நினைக்கும்போது

கண்களில் நீ(ர்) நிறைகிறது


என் மகனுக்கு மூத்தோனே

எனது முதல்வனே


உனது அலை 

ஒவ்வொரு முறை வரும்போதும்

பிற(ர்) நினைவலைகளை

இழுத்துச் சென்று விடுகிறது

உணர்தலின் மேலீடு


கவிதை என்பது

பீறிடுவது

மீறிடுவது

அடக்க முடியா(த)து

அடங்கா(த)து



தியானம் ஒரு முற்றுப் புள்ளியில்

முடிந்து போய் விடுகிறது.

மீண்டும் எனை கவிஞனாக்குகிறது

உனது வருகை!


நீ எனை நாடி வருகையில்

சொற்களும் செயலுமின்றி 

சுயமிழந்து நிற்கிறேன்.


நமை இணைத்த அந்த காலத்திற்கு

நன்றி சொல்ல நாம் கடமைப் பட்டுள்ளோம்.


        மறுபடியும் பூக்கும் வரை

        கவிஞர் தணிகை

Sunday, July 20, 2025

பம்மாத்து: கவிஞர் தணிகை.

 சிவப்பு ரொட்டியூர் மேம்பாலத்தின் கல்வெட்டு மேல் பயில்வான் பல்பு படுத்துக் கிடந்தான். தலை தனியே தொங்கிக் கொண்டிருந்தது. பக்கத்தில் ஒரு பட்டன் செல்பேசி இருந்தது. பார்ப்பார் எல்லாம் இந்தப் பக்கம் அந்தப் பக்கம்  இவன் போதையில் தெரியாமல் புரளும்போது பாலத்திலிருந்து பல்பு கீழே விழுந்து விடுவானே என பயந்த படியே பரிதாபப் பட்டுக் கொண்டும் அனுதாபம் கொண்டும் சென்று கொண்டிருந்தனர்.



கொஞ்ச நாளுக்கும் முன்பு தான் , அந்தப் பக்கத்தில் இருந்த முட்டுக்கால் முனியப்பன் கோவிலில் சிசிடிவி இருந்த போதும், முகத்தை கறுப்புத் துணியை மூடிக் கொண்டு உண்டியலை கடப்பாரை கொண்டு நெம்பி கொள்ளை அடித்திருந்தான் ஒருவன், மேலும் பக்கமிருந்த மாரியம்மன் தாலியும் திருடப்பட்டது அங்கு பூட்டுகளை உடைக்க முடியாமல் போனதால்.


சில வருடங்களுக்கும் முன் அப்படி அந்தப் பகுதிகளின் கோவில்களில் நடந்திருந்த படியால் தாம் சிசிடிவி முனியப்பன் கோவிலில் வைத்தார்கள்...


இப்போது,அங்க அடையாளம் வைத்து காவல் துறை திருடனை, கொள்ளைக்காரனைப் பிடித்ததால், அவன் அதில் ஐந்தாயிரம் மட்டுமே இருந்தது என்றிருக்கிறான்


மாலை மயங்கியது, சிறுவன் வீரண்ணன் அந்தப் பக்கம் போகும் போது பயில்வான் பல்பு சுரணையின்றி பாலத்தில்  படுத்துக் கிடப்பதைப் பார்த்து விட்டு அந்த செல்பேசியை எடுக்க கை நீட்டி தொட்டதுதான் தாமதம், கப்பென்று அவன் கையை பயில்வான் பல்பு பிடித்துக் கொண்டான்.


ஏன்டா? எங்கிட்டியே செல்போன் திருடப் பார்க்கிறியா? எடு என் பாக்கெட்டிலிருந்த எடுத்த அந்த இரண்டாயிரத்தை முதல்ல குடு , என்றான், நான் எதுவும் எடுக்கல என் சிறுவன் அழ ஆரம்பித்தான், வா, வா ஒங்க வீட்டுக்கு போலாம், பெத்தவங்க கிட்ட வந்து கேட்கிறேன் என, தர தர என வராத சிறுவனைப் பிடித்து இழுத்தபடியே சென்று கொண்டிருந்தான் பயில்வான் பல்பு...



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




Monday, July 14, 2025

உன்னைக் காண: கவிஞர் தணிகை

 உன்னைக் காண:



திருப்பதி சென்றேன்

திருவண்ணாமலை சென்றேன்

திருவரங்கம் சென்றேன்

பழநி சென்றேன்

சமயபுரம் சென்றேன்

சிருங்கேரி சென்றேன்

மூகாம்பிகை சென்றேன்

தர்மஸ்தலம் சென்றேன்

சுப்ரமண்யா சென்றேன்

காசி ராமேஸ்வரம் சென்றேன்

அமிர்தசரஸ் சென்றேன்

ஜெருசலம் சென்றேன்

பெத்லகேம் சென்றேன்

வாடிகன் சென்றேன்

மெக்கா, மதீனா சென்றேன்

....................

......................

..........................,

நீ

இங்கிருப்பது அறியாமலே

எங்குமிருப்பது அறியாமலே.



    மறுபடியும் பூக்கும் வரை

      கவிஞர் தணிகை



Thursday, July 3, 2025

உண்மை எது பொய் எதுன்னு ஒன்னும் புரியல: கவிஞர் தணிகை.

 எதை நம்புவது?....கவிஞர் தணிகை



சினிமா நடிகர் அஜித் குமார் என்ற பேரை பின்னுக்குத் தள்ளி பேர் பெற்றது இறந்து போன அஜித்குமார் பேர் இந்த சில நாட்களில்.


ஊடகங்கள் மின்னலாய் பணி புரிவது தெரிகிறது.


ஆனால் வரும் செய்திகள் யாவும் நம்புவதா வேண்டாமா என்றே இருக்கிறது.

முதலில் சக்கர நாற்காலியையும், கார் சாவியையும் கொடுத்த அஜித் குமாரையும் அவரது இரண்டு நண்பர்களையும் விசாரித்த நகை  காணாமல்  திருடு போனது பற்றிய செய்தி.


அத்துடன் அந்த நிகிதா என்ற பெண்ணுக்கு உயரிய அந்தஸ்தில் உள்ள இந்திய நிர்வாகப் பணி (ஐ.ஏ.எஸ்_) பதவியில் உள்ளவர் நெருக்கத்தால் மட்டுமே அளித்த புகாரால் இந்த விளைவு என்றது,


அதன் பின் அந்தப் பெண் அப்படி எவரும் தெரியாது என அந்தப் பெண் சொல்கிறார் எனவும் நகை பணம் காணாதது பற்றி சாதாரணமாகவே காவல் நிலையத்தில் புகார் செய்தோம் என்று அவர் சொன்னதாக...


இப்போது அவரது குடும்பமே உறவினர்களிடமே வேலை வாங்கித் தர பல இலட்சங்கள் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய புகார்கள் இவர்கள் மீது ஏற்கெனவே காவல் நிலையத்தில் உள்ளதாக...


மேலும் அவரது குடும்பம் இப்போது எங்கே எனத் தெரியாமல் தலைமறைவில் உள்ளதாகவும்...


இடை நீக்கம் செய்யப்பட்ட காவலர்களின் குடும்பங்கள் மேலிடத்தில் சொல்லித்தானே இந்த காவலர்கள் இந்த‌ கொடூரச் செயல்களில் ஈடுபட்டதாக போராட்டம் செய்ய‌ அதை அனுமதி பெற்று செய்யவில்லை என அவர்கள் கலைக்கப் பட்டதாக...


பாதிக்கப் பட்ட குடும்ப‌த்துக்கு இலவச வீட்டு மனைப் பட்டா மற்றும் அவரது இளைய சகோதரர் நவீன் குமாருக்கு நிரந்தர அரசுப் பணி அரசு சார்பாக, த.வெ.க சார்பாக இரண்டு இலட்சம், மற்றும் எதிர்க்கட்சிகள் எல்லாம் உதவிகள்....


கழிவறையின் துளைகள் வழியாக இந்தக் காணொளிக் காட்சிகளை பதிவு செய்து வெளிப்படுத்திய அஜித் குமாரின் நண்பர்கள் செய்த செயலின் பலன் நாடெங்கும் அதிர்வலைகளை கொண்டு வந்து உண்மை வெளிப்பட உதவியிருக்கிறது என்பதை எவருமே மறுத்துவிட முடியாது.


சக்கர நாற்காலியை தள்ளிச் சென்றதற்காக ஈடாக சிரமப் பட்டதற்கான சிறு தொகையினைப் பெற‌ செய்யப் பட்ட பேரத்தின் விளைவாகவே இத்தனையும் நிகழ்ந்தன  என்ற செய்திகளும் வராமல் இல்லை.


மேலும் எல்லா பிரபல நடிகர் மற்றும் சினிமா பிரபலங்கள் யாவருமே கொக்கைன், கஞ்சா, போதை வழக்கத்தி ல் இருந்திருக்கிறார்கள் என்ற செய்தியை அர்ஜுன் சம்பத்,, மற்றும் சுஜித்ரா போன்றோர் அளித்திருந்த செய்திகள் யாவும் இந்த செய்தியால் பின்னுக்குத் தள்ளப் பட்டிருப்பதை நாம் சற்று கவனிக்கவும் வேண்டும் அளவு மறைய ஆரம்பித்து விட்டன.


அமெரிக்க அதிபர் டொனால்ட் மற்றும் மஸ்க் பிரிகிறார்கள் சேர்கிறார்கள் பிரிகிறார்கள்...


உண்மை எது பொய் எதுன்னு ஒன்னும் புரியல: கவிஞர் தணிகை.




Thursday, June 19, 2025

எபிஜெனெடிக் என்பது...

 THANKS: BBC TAMIL



எபிஜெனெடிக் என்பது, டிஎன்ஏ வரிசையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், மரபணு வெளிப்பாட்டை மாற்றியமைக்கின்றன. இது மரபணுக்கள் எவ்வாறு, எப்போது பயன்படுத்தப்பட வேண்டும் என்பதைப் நிர்ணயிக்கும் கூடுதல் தகவல் அடுக்கு ஆகும். "இது கரு எவ்வாறு உருவாகிறது என்பதையும், அந்த விந்தணுக்கள் உருவாக்கும் சந்ததிகளின் வாழ்நாள் பாதையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று வாட்கின்ஸ் கூறுகிறார்.

ஆண் உடலுக்குள் உருவாகும் விந்தணு முதிர்ச்சி அடைய ஒன்பது வாரங்கள் ஆகும். வெளியேறாத விந்தணுக்கள் உடலிலேயே மடிந்து, உடலாலே மீண்டும் உறிஞ்சப்படுகின்றன. வெளியேறிய அதிர்ஷ்டசாலி விந்தணுக்கள் தங்கள் சாகசப் பயணத்தைத் தொடங்குகின்றன

விந்துணு வெளியேறிய பிறகு, நுண்ணிய வடிவிலான இந்த செல்கள் ஒவ்வொன்றும் கருமுட்டையை சென்றடையும் பயணத்தில் தனது வால் போன்ற பிற்சேர்க்கைகளைப் பயன்படுத்தி முன்னோக்கி பாய்கின்றன. இந்த பயணத்தில் ஒரு விந்தணு, தோராயமாக 50 மில்லியன் போட்டியாளர்களுடன் போட்டியிட்டு முன்னேறிச் செல்கிறது. தலைப்பிரட்டையைப் போல் இருக்கும் விந்தணுக்கள் நீந்தும் வீடியோக்கள் பலவற்றை நீங்கள் பார்த்திருக்கலாம். விந்து உண்மையில் எப்படி நீந்துகிறது என்பதை முழுமையாக புரிந்துகொண்டோமா என்ற கேள்விக்கு, இல்லை, விஞ்ஞானிகள் விந்தணுக்களின் இயக்கம் குறித்து புரிந்து கொள்வதற்கான ஆரம்பகட்டத்தில்தான் தற்போதுவரை இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

 

முன்னதாக, விந்தணுவின் வால் - அல்லது ஃபிளாஜெல்லம், தலைப்பிரட்டையைப் போல பக்கவாட்டில் நகர்கிறது என்று கருதப்பட்டது. ஆனால், கணிதவியலாளரும், இரண்டாம் உலகப்போரில் ரகசியக் குறியீடுகளை படிப்பதில் வெற்றிகரமாக

செயல்பட்டவருமான ஆலன் டூரிங் கண்டுபிடித்த வடிவ உருவாக்கத்திற்கான டெம்ப்ளேட்டை விந்தணு வால்கள் ஒத்திருக்கின்றன என்பதை 2023 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர் .

1952 ஆம் ஆண்டில், வேதியியல் எதிர்வினைகள் வடிவங்களை உருவாக்க முடியும் என்பதை டூரிங் உணர்ந்தார். கைரேகைகள், இறகுகள், இலைகள் மற்றும் மணலில் உள்ள சிற்றலைகள் உள்ளிட்ட இயற்கையின் மிகவும் சுவாரஸ்யமான உயிரியல் வடிவ அமைப்புகளை விளக்க, நகரும் மற்றும் ஒன்றுக்கொன்று வினைபுரியும் இரண்டு உயிரியல் ரசாயனங்கள் பயன்படுத்தப்படலாம் என்று அவர் முன்மொழிந்தார். இது, "எதிர்வினை-பரவல்" கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது.

முப்பரிமாண நுண்ணோக்கியைப் பயன்படுத்திய பிரிஸ்டல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு விந்தணுவின் வால் பகுதியான ஃபிளாஜெல்லம், விந்தணு முன்னோக்கி செல்வதற்காக வால் வழியாக பயணிக்கும் அலைகளை உருவாக்குகிறது என்பதைக் கண்டறிந்தனர். ஆணின் கருத்தரிக்கச் செய்யும் தன்மையைப் புரிந்துகொள்ள விந்தணு நகர்வு விஞ்ஞானிகளுக்கு உதவும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு இது மிகவும் உதவியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணிடம் இருந்து வெளிப்படும் விந்தணுக்கள், பெண்ணின் கருப்பை வாய் வழியாக, ஃபெலோபியன் குழாய்கள் வழியாக கருவறைக்குள் சென்று, கருமுட்டையை அடைகின்றன என்பது நமக்குத் தெரியும். ஆனால் விந்தணு, கருமுட்டையை எவ்வாறு சென்றடைகிறது என்பதை விஞ்ஞானிகளால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது அறிவியலில் நாம் கண்டறியாத மற்றொரு இடைவெளியாக இருக்கிறது

,17 ஆம் நூற்றாண்டு டச்சு நுண்ணுயிரியலாளர் அன்டோனி வான் லீவென்ஹோக், விந்தணுக்களுக்குள் ஒரு சிறிய ஆனால் முழுமையான மனிதன் இருப்பதாக நம்பினார்

ஆரோக்கியமான மற்றும் சரியான பாதையில் செல்லும் விந்தணுக்கள் அரிதானவை. பெண் உடல் என்ற பிரமையில் தவறான இடத்தை பல விந்தணுக்கள் சென்றடைவதும், இலக்குக் கோட்டிற்கு அருகில் கூட செல்லாத விந்தணுக்களுமே எண்ணிக்கையில் அதிகமானவை. ஃபெலோபியன் குழாய்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கும் விந்தணுக்களை, பெண்ணின் கருமுட்டையில் இருந்து வெளிப்படும் வேதியியல் சமிக்ஞைகள் வழிநடத்தக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள். விந்தணுக்கள் முட்டையை அடையச் செல்லும் வழியில் "சுவைக்க" சுவை ஏற்பிகளைப் பயன்படுத்தலாம் என்பது சமீபத்திய கோட்பாடு.

விந்தணு கருமுட்டையைக் கண்டுபிடித்துவிட்டால், சவால் முடிவடைந்துவிடுகிறதா? இல்லை. கரு முட்டையானது, கொரோனா ரேடியாட்டா எனப்படும் செல்களின் வரிசை; சோனா பெல்லுசிடா எனும் புரதத்தால் ஆன ஜெல்லி போன்ற மெத்தை; முட்டை பிளாஸ்மா சவ்வு என மூன்று இழை கவசங்களால் சூழப்பட்டுள்ளது. விந்தணுக்கள், கருமுட்டையின் அனைத்து அடுக்குகளிலும் போராடி உள்நுழைய வேண்டும். அவற்றின் அக்ரோசோமில் உள்ள ரசாயனங்களைப் பயன்படுத்தி, கருமுட்டையின் செல் பூச்சை செரிமானம் செய்யும் நொதிகளைக் கொண்ட விந்தணு செல்லின் தலையில் உள்ள தொப்பி போன்ற அமைப்பைப் பயன்படுத்த வேண்டும். இருப்பினும், இந்த நொதிகள் எப்படி வெளியாகின்றன என்பதற்கான காரணம் இன்றுவரை ஒரு மர்மமாகவே உள்ளது.

விந்தணுக்களின் "தலைப்பகுதியில்" உள்ள ஒரு கூர்முனையைப் பயன்படுத்தி அவை கருமுட்டைக்குள் நுழைய முயற்சிக்கின்றன, தங்கள் வால்களை அடித்துக்கொண்டு வலுக்கட்டாயமாக தங்களை முன்னோக்கி நகர்த்துகின்றன. இறுதியாக, கருமுட்டை சவ்வுடன் தொடர்பு கொண்டால் மட்டுமே, அது கருமுட்டையை கருத்தரிக்கச் செய்ய முடியும்.

மனித செல்கள், இரண்டு முழுமையான குரோமோசோம்களைக் கொண்டுள்ள டிப்ளாய்டு வகையைச் சேர்ந்தவையாகும். ஒவ்வொரு பெற்றோரிடமிருந்தும் ஒன்று என இரு குரோமோசோம்களைப் அவை பெற்றுள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட விந்தணுக்கள் கருமுட்டையுடன் இணைந்தால், பாலிஸ்பெர்மி எனப்படும் ஒரு நிலை ஏற்படும். தவறான எண்ணிக்கையிலான குரோமோசோம்களைக் கொண்ட நான்டிப்ளாய்டு வகை செல்கள், வளரும் கருவுக்கு ஆபத்தான நிலையை உருவாக்குபவை.

இது நிகழாமல் தடுக்க, ஒரு விந்து செல் அதனுடன் தொடர்பு கொண்டவுடன், கருமுட்டை துரிதமாக இரண்டு வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. முதலாவதாக, அதன் பிளாஸ்மா சவ்வு விரைவாக டிப்போலரைஸ் செய்கிறது, அதாவது மேலும் விந்து கடக்க முடியாத ஒரு தடையை உருவாக்குகிறது. இருப்பினும், இந்தத் தடை சிறிது நேரம் மட்டுமே நீடிக்கும், பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். இங்குதான் கருமுட்டையின் 'புறணி எதிர்வினை' வருகிறது. கால்சியம் திடீரென வெளியிடப்பட்டு, சோனா பெல்லுசிடா எனப்படும் கருமுட்டையின் "புற செல் பூச்சு" கடினமாகி, விந்தணு ஊடுருவ முடியாமல் தடையை உருவாக்குகிறது.

பழ இனங்களில் சில தங்களுடைய உடலின் நீளத்தைவிட 20 மடங்கு பெரிய விந்தணுக்களை உற்பத்தி செய்கின்றன. அது, ஒரு மனிதன் 130 அடி மலைப்பாம்பு நீளமுள்ள விந்தணுவை உற்பத்தி செய்வது போல இருக்கும்

எனவே, கருமுட்டையை நோக்கி பயணத்தைத் துவங்கும் கோடிக்கணக்கான விந்தணுக்களில், ஒன்று மட்டுமே தனது அதிகபட்ச வேலையைச் செய்கிறது. விந்தணுவின் பிரமாண்டமான பயணம் கருமுட்டையுடன் இணைவதுடன் முடிவடைகிறது. இன்றும், ஆராய்ச்சியாளர்கள் விந்தணு-கருமுட்டை அங்கீகாரம், பிணைப்பு மற்றும் இணைவுக்கு காரணமான செல் மேற்பரப்பு புரதங்களின் அடையாளம் மற்றும் பங்கைக் கண்டறிய முயற்சித்து வருகின்றனர்.

அண்மை ஆண்டுகளில், பல புரதங்கள் இந்த செயல்முறைக்கு முக்கியமானவை என்று, எலிகள் மற்றும் மீன்களில் செய்யப்பட்ட ஆய்வுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன, ஆனால் இதில் உள்ள பல மூலக்கூறுகளை அடையாளம் காணமுடியவில்லை. எனவே, இப்போதைக்கு, விந்தணுவும் கருமுட்டையும் எவ்வாறு ஒன்றையொன்று அடையாளம் காண்கின்றன, அவை எவ்வாறு இணைகின்றன என்பவை இன்னும் தீர்க்கப்படாத மர்மங்களாகவே தொடர்கின்றன.

நியூயார்க் சைராகுஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியர் ஸ்காட் பிட்னிக் கூறுகையில், ஆராய்ச்சியாளர்கள் விந்தணுக்களைப் பற்றி புரிந்துக் கொள்ள பிற உயிரினங்களை ஆய்வு செய்வது உதவியாக இருக்கும் என குறிப்பிடுகிறார். மனித விந்தணுக்கள் நுண்ணியவை, எனவே நாம் அவற்றை வெற்றுக் கண்களால் பார்க்க முடியாது.

பழ இனங்களில் சில தங்களுடைய உடலின் நீளத்தை விட 20 மடங்கு பெரிய விந்தணுக்களை உற்பத்தி செய்கின்றன. அது, ஒரு மனிதன் 130 அடி மலைப்பாம்பு நீளமுள்ள விந்தணுவை உற்பத்தி செய்வது போல இருக்கும்.

பழ விந்தணுக்களின் தலைகளை பிட்னிக் வடிவமைக்கிறார். பெண் ஈயின் இனப்பெருக்க பாதைகள் வழியாக அவற்றை செலுத்தி அவை பயணிப்பதை ஆராயும் இந்த ஆய்வு, மூலக்கூறு மட்டத்தில் கருத்தரித்தல் பற்றிய புதிய விவரங்களை வெளிப்படுத்துகிறது .

"சில உயிரினங்கள் பெரிய விந்தணுக்களை உருவாக்குவது ஏன் தெரியுமா?" என்று பிட்னிக் கேட்கிறார். "அந்த இனங்களின் பெண்கள் தங்களுக்கு சாதகமாக இனப்பெருக்க பாதைகளை உருவாக்குகின்றன. அதற்கு உகந்ததாக ஆணினம் பெரிய விந்தணுக்களை உருவாக்குகிறது" என்பதே பதிலாக இருக்கும். ஆனால், "உண்மையில் இது முழுமையான பதில் இல்லை" என்று கூறும் அவர், அந்த பதிலே கேள்வியை திசைதிருப்புகிறது என்றும் சொல்கிறார். அந்தக் கேள்வி: பெண்ணினம் ஏன் இந்த வழியில் பரிணமித்தது? அது எங்களுக்கு இன்னும் அது புரியவில்லை.



விந்தணுக்கள் மிகச் சிறியவை, அவற்றை அவதானிப்பது கடினமாக இருக்கும். மாதிரிகளை நுண்ணோக்கியின் கீழ் எளிதாகப் பார்க்க, வண்ணம் தீட்டலாம்

உலகளவில் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், விந்தணு எண்ணிக்கை குறையும் போக்கு துரிதமாக அதிகரித்து வருவதாகவும் ஆராய்ச்சி தெரிவிக்கிறது

ஆனால், ஆண் உடலில் விந்தணுக்கள் இருப்பது என்பது கதையின் பாதி தான் என்பதை இதுவே நமக்கு உணர்த்துகிறது என பிட்னிக் கூறுகிறார். "அறிவியலில் வரலாற்று ரீதியாக மிகப்பெரிய பாலின சார்பு உள்ளது. ஆண்கள், ஆண்களின் குணாதிசயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் அருவருப்பானது. ஆனால் இந்த அமைப்பை இயக்குவது பெண் பரிணாமம் என்பது தெரியவந்துள்ளது, ஆண்கள் அதைத் தொடர முயற்சிக்கின்றனர்."

பூமியின் மிகவும் மாறுபட்ட மற்றும் வேகமாக வளர்ந்து வரும் உயிரணு வகை என்ன என்றால், அது விந்தணுக்கள் தான் என்று பிட்னிக் கூறுகிறார். விந்தணுக்கள் ஏன் இவ்வளவு வியத்தகு பரிணாம வளர்ச்சியை அடைந்தன என்பது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உயிரியலாளர்களால் விடை கண்டுபிடிக்க முடியாமல் திகைக்க வைத்துள்ள ஒரு மர்மமாகும்.

"பெண் இனப்பெருக்க பாதை என்பது நம்பமுடியாத அளவிற்கு வேகமாக வளர்ந்து வருகிறது என்று மாறிவிடும்," என்று பிட்னிக் கூறுகிறார், "விந்தணு, பெண்ணின் உள்ளே என்ன செய்கிறது

என்பது பற்றி நமக்கு அதிகம் தெரியாது. அதுதான் மறைக்கப்பட்ட மாபெரும் உலகம். பெண்ணின் இனப்பெருக்க பாதை என்பது பாலியல் தேர்வு, கோட்பாடு மற்றும் இனவிருத்தி [புதிய இனங்கள் உருவாகும் செயல்முறை] ஆகியவற்றிற்கான ஆராயப்படாத மிகப்பெரிய எல்லையாகும்" என நான் நினைக்கிறேன்."

பழ ஈயின் நீண்ட வால் கொண்ட விந்தணு என்பது, மானின் கொம்புகள் அல்லது மயில்தோகை போன்ற ஒரு அலங்காரமாகக் கருதப்படலாம் என்று பிட்னிக் கூறுகிறார்.

ஆபரணங்கள் என்பவை "பரிணாம வளர்ச்சியில் ஒரு வகையான ஆயுதம்" என்று பிட்னிக் விளக்குகிறார். வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாப்பது என்பதைத் தவிர, கொம்புகள் போன்ற ஆபரணங்கள் பெரும்பாலும் இரண்டு பரிணாமங்களைக் கொண்டவை. "இதுபோன்ற ஆயுதங்களில் பெரும்பாலானவை பாலினம் தொடர்பானவை. பொதுவாக ஆணுக்கும் ஆணுக்குமான போட்டி பற்றியவை. பழ ஈயின் நீண்ட விந்து ஃபிளாஜெல்லம் என்பது உண்மையில் ஒரு ஆபரணத்தின் வரையறைக்கான அளவுகோல்களை பூர்த்தி செய்கிறது. பெண்ணின் யோனி பாதையானது, சில விந்தணு பினோடைப்களுக்கு ஆதரவாக கருத்தரிப்புக்கு உகந்த பண்புகளைக் கொண்டுள்ளது என்று நினைக்கிறோம்.",பெண்ணின் யோனி பாதையானது, சில விந்தணு பினோடைப்களுக்கு ஆதரவாக கருத்தரிப்புக்கு உகந்த பண்புகளைக் கொண்டுள்ளது

இனச்சேர்க்கைக்கு முந்தைய பாலியல் தேர்வைப் பற்றி நமக்கு நிறைய தெரியும் என்று பிட்னிக் கூறுகிறார். "புல்வெளியில் நடனமாடும் மானாக இருந்தாலும் சரி, மழைக்காடுகளில் காட்சியளிக்கும் பறவையாக இருந்தாலும் சரி, அதன் இயக்கம், அதன் நிறம், அதன் வாசனை போன்றவை துணையை பாலியல்ரீதியாக ஈர்க்கும்" இந்த புலன் உள்ளீட்டைச் செயலாக்குவது, ஜோடி இணைகிறதா இல்லையா என்பதை முடிவெடுக்க வழிவகுக்கிறது என்று பிட்னிக் விளக்குகிறார்.

இனச்சேர்க்கைக்கு முந்தையவற்றை பற்றி நமக்கு தெரிந்த அளவு, இனச்சேர்க்கைக்குப் பிறகு பெண்ணின் உள்ளே நடக்கும் பாலியல் தேர்வு விந்தணுவின் பரிணாம வளர்ச்சியை எவ்வாறு இயக்குகிறது என்பது பெரும்பாலும் மர்மமாகவே உள்ளது என்று பிட்னிக் கூறுகிறார். "ஆபரணங்கள் மற்றும் விருப்பங்களின் மரபியல் பற்றி மிகக் குறைவாகவே புரிந்துகொண்டுள்ளோம்," என்று அவர் கூறுகிறார்.

விந்தணுவைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள, விந்தணுவின் முழு வாழ்க்கைச் சுழற்சி மட்டுமல்ல, பெண்ணின் உடலும் விந்தணுவின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்று பிட்னிக் விளக்குகிறார். "விந்தணுக்கள் விரைப்பையிலேயே முதிர்ச்சியடையாவிட்டால், அவை வளர்ச்சியடையவில்லை என்றே பொருள்." விந்தணுவிற்கும் பெண் இனப்பெருக்க பாதைக்கும் இடையில் சிக்கலான மற்றும் முக்கியமான தொடர்புகள் இருப்பதாக அவர் கருதுகிறார். "விலங்குகளின் விந்தணுக்களில் விந்தணு வெளியேறிய பிறகு ஏற்படும் மாற்றங்களை அவதானிப்பதில் தற்போது நிறைய நேரம் செலவிடுகிறோம்."

கருத்தரித்தல் நிறைவடைய ஒரு விந்தணு மேற்கொள்ளும் பல்வேறு மாறுபட்ட செயல்முறைகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து வரும் நிலையில், பிற ஆராய்ச்சிகள் மனித விந்தணுக்களின் தற்போதைய நிலை குறித்து உண்மையான கவலையை ஏற்படுத்துகின்றன. ஆண்கள் தங்கள் வாழ்நாளில், ஒரு டிரில்லியன் விந்தணுக்களை உற்பத்தி செய்கின்றனர், எனவே விந்தணுக்கள் சிக்கலில் இருப்பதாக கற்பனை செய்து பார்ப்பதுகூட கடினமாக இருக்கலாம். ஆனால், விந்தணுக்களின் எண்ணிக்கை அதாவது, ஒரு விந்து மாதிரியில் உள்ள விந்தணுக்களின் எண்ணிக்கை என்பது உலகளவில் குறைந்து வருவதாகவும், விந்தணு எண்ணிக்கை குறையும் போக்கு துரிதமாக அதிகரித்து வருவதாகவும் ஆராய்ச்சி தெரிவிக்கிறது

உலக சுகாதார அமைப்பு (WHO) 2023இல் வெளியிட்ட அறிக்கையின்படி , உலகளவில் 6 பெரியவர்களில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை இருக்கிறது. அதில் ஆண் மலட்டுத்தன்மை சரிபாதியாக இருக்கிறது. (சமீபத்திய ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதி அறிக்கை அடிக்கோடிட்டு காட்டியபடி, குழந்தை வளர்ப்புக்கான செலவு போன்ற பிற காரணங்களுக்காகவும் உலகெங்கிலும் உள்ள பலர், தாங்கள் விரும்பும் அளவுக்கு குழந்தைகளைப் பெறுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது).

மாசுபாடு, புகைபிடித்தல், மது அருந்துதல், மோசமான உணவுமுறை , உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் ஆகியவை ஆண்களிடையே மலட்டுத்தன்மையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும், கருவுறச் செய்வது தொடர்பான பிரச்னைகள் கொண்ட பெரும்பாலான ஆண்களுக்கு அதற்கான காரணம் என்ன என்பது தெரிவதில்லை.

"நகரும் விந்தணுக்கள் அனைத்திலும், தவறாக நடக்கக்கூடிய பல விசயங்கள் உள்ளன," என்று இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் தாய் மற்றும் கரு ஆரோக்கியத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஹன்னா மோர்கன் கூறுகிறார். "இது ஒரு பொறிமுறையாக இருக்கலாம்: அது சீராக நீந்த முடியாததால் கருமுட்டையை அடைய முடியாமல் போகலாம் அல்லது விந்தணுவின் தலைக்குள் அல்லது பிற பகுதிகளுக்குள் சிக்கல் இருக்கலாம். பல வழிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தாலும், விந்தணுக்களில் சிறிய பல விசயங்கள் தவறாக இருக்கக்கூடும்."

ஆணின் மலட்டுத்தன்மையைக் கண்டறிய ஒரு வழி விந்தணுவின் உள்ளே ஆராய்ந்து பார்ப்பது என்று மோர்கன் கூறுகிறார். "டிஎன்ஏ எப்படி இருக்கிறது? அது எப்படி தொகுக்கப்பட்டுள்ளது? அது எவ்வளவு பிரிந்துள்ளது? விந்தணுவைப் பிரித்துப் பார்க்கக்கூடிய பல்வேறு விஷயங்கள் உள்ளன. ஆனால் எந்த அளவீடு நல்லது அல்லது கெட்டது? உண்மையில் நமக்கு எதுவுமே தெரியாது."

விந்தணுக்களின் மர்மத்தையும் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பது போன்ற மர்ம முடிச்சுக்களை அவிழ்ப்பதன் மூலம், ஆண் மலட்டுத்தன்மையைப் பற்றியும் நாம் புரிந்துகொள்ளத் தொடங்கலாம் என்று மோர்கன் கூறுகிறார்.

 மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை