நன்றி: பிபிசி தமிழ்
ஒரு பிரமாண்ட கருந்துளையில் இருந்து வெளிப்பட்ட, இதற்கு முன் பார்த்திராத அளவிலான பெரும் ஆற்றல் வெடிப்பை, வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அந்தக் கருந்துளை 3 கோடி சூரியன்களுக்கு நிகரான அளவைக் கொண்டது.
திடீரென ஒரு பிரகாசமான எக்ஸ்ரே ஒளி வெடித்துச் சிதறியதையும், வெளிப்பட்ட உடனே அந்த ஒளி மிக வேகமாகப் பலவீனமடைந்ததையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
அந்த எக்ஸ்ரே ஒளி மங்கிய பிறகு, கருந்துளை தன்னில் இருந்து சில பொருட்களை, விநாடிக்கு 60,000கி.மீ என்ற அதீத வேகத்தில் விண்வெளியில் வீசியது.
கருந்துளையில் ஏற்பட்ட இந்த எக்ஸ்ரே ஒளி வெடிப்பும், அதன் விளைவாக உருவாக்கப்பட்ட வேகமான காற்றும், சூரியனில் நிகழ்வதை ஒத்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், இது பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி நாம் மேலதிகமாக அறிவதற்கு உதவக்கூடும் என்றும் கூறுகின்றனர்.
இந்த ஆய்வின் முழு விவரமும், அஸ்ட்ரானமி & அஸ்ட்ரோஃபிசிக்ஸ் என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது
கருந்துளை என்றால் என்ன?
கருந்துளை என்று பெயர் வைக்கப்பட்டிருந்தாலும், அவை துளைகள் இல்லை. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் கூற்றுப்படி, மிகச் சிறிய இடத்திற்குள் மிகப்பெரிய அளவிலான பொருள்களை கருந்துளைகள் கொண்டுள்ளன. அவை மிகவும் அடர்த்தியானவை. அதாவது, அவற்றிடம் இருந்து ஒளி உள்பட எதுவுமே தப்பிக்க முடியாத அளவுக்கு அடர்த்தி மிகுந்தவை.
பேரண்டத்தில் உள்ள மிகவும் மர்மமான வான்பொருட்களில் ஒன்றாக கருந்துளைகள் இருக்கின்றன.
இவற்றில், மிகப்பெரிய, பிரமாண்ட கருந்துளைகள் சில நேரங்களில் சூரியனைவிட பல்லாயிரம் மடங்கு அல்லது பல பில்லியன் மடங்கு அதிக நிறையைக் கொண்டுள்ளன. கிட்டத்தட்ட ஒவ்வொரு பெரிய விண்மீன் மண்டலத்தின்(galaxy) மையத்திலும் இவை காணப்படுகின்றன.
அவற்றைச் சுற்றி, வாயு, தூசு வடிவங்களில் இருக்கும் வான்பொருட்களால் ஆன சுழலும் வட்டுகள் உள்ளன. அந்தப் பொருட்கள் கருந்துளையின் அதிதீவிர ஈர்ப்புவிசை காரணமாக அதற்குள் இழுக்கப்படலாம்.
அப்படி, கருந்துளைகள் தம்மைச் சுற்றியுள்ள வட்டுகளில் இருக்கும் வான்பொருட்களை "விழுங்கும்போது", அந்த வட்டுகள் நம்ப முடியாத அளவுக்குத் தீவிரமாக வெப்பமடைந்து எக்ஸ் கதிர்கள் உள்பட வெவ்வேறு அலைநீளங்களைக் கொண்ட பிரகாசமான ஒளி வெடிப்பை வெளியிடுகின்றன.இரண்டு தொலைநோக்கி
மேலும் இதன்போது, கருந்துளைகள் அதிவேகமாக வாயுக்களை வெளியேற்றுகின்றன. விண்வெளியில் ஏற்படும் தீவிர காற்று போல் இருக்கும் அந்தக் காற்றில் மின்னூட்டம் மிக்க சிறு துகள்களும் இருக்கும்.
இந்தக் காற்று விண்மீன் மண்டலத்தின் வழியாக வீசும்போது, புதிய நட்சத்திரங்களின் தோற்றத்தில்கூட அவை தாக்கம் செலுத்தக்கூடும்.
"ஒரு கருந்துளை இவ்வளவு வேகமாக வெளிப்படும் காற்றை உருவாக்குவதை நாங்கள் இதற்கு முன்பு பார்த்ததில்லை" என்று நெதர்லாந்து விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முதன்மை விஞ்ஞானி லியி கு கூறுகிறார்.
ஆய்வு செய்யப்படும் இந்த பிரமாண்ட கருந்துளை, பூமியில் இருந்து சுமார் 13 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள ஒரு சுழல் விண்மீன் மண்டலத்தில் அமைந்துள்ளது.
இந்தத் தனித்துவமான விண்வெளி நிகழ்வைக் கண்டறிய, ஒன்றிணைந்து இயங்கிய இரண்டு தொலைநோக்கிகளை விஞ்ஞானிகள் பயன்படுத்தினர்.
அதில் ஒன்று, பிரபஞ்சம் முழுவதும் எக்ஸ்ரே மூலங்களை ஆய்வு செய்யும் ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் எக்ஸ்.எம்.எம்-நியூட்டன் தொலைநோக்கி.
மற்றொன்று, ஐரோப்பிய விண்வெளி நிலையம் மற்றும் நாசாவின் ஆதரவுடன் செயல்பட்ட ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் தலைமையிலான திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் எக்ஸ்ரே இமேஜிங் அண்ட் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மிஷன் (கருந்துளையைச் சுற்றியுள்ள மிகவும் பிரகாசமான பகுதி ஆக்டிவ் கேலக்டிக் நியூக்ளியஸ் (AGN) என்று அழைக்கப்படுகிறது.
ஒரு ரப்பர் பேண்ட் பல முறை முறுக்கப்பட்டு திடீரென விடுவிக்கப்படுவதைப் போல, ஏ.ஜி.என் பகுதியிலுள்ள காந்தப்புலம் முறுக்கப்பட்டு, பின்னர் திடீரென விடுவிக்கப்பட்டபோது, "அது பெரியளவிலான ஆற்றலை வெளியிட்டு, பலத்த காற்றை உருவாக்கியது. இது கிட்டத்தட்ட சூரியனில் நிகழ்வதைப் போலவே இருந்தாலும், கருந்துளையில் சூரியனில் நடப்பதைவிடப் பல மடங்கு, அதாவது கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாத அளவுக்கு, பெரிய அளவில் நிகழ்கிறது" என்று ஐரோப்பிய விண்வெளி நிலையத்தில் எக்ஸ்ரே இமேஜிங் அண்ட் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மிஷனின் திட்ட விஞ்ஞானியும், இந்தக் கண்டுபிடிப்பின் இணை ஆசிரியருமான மத்தேயோ குவைநாஸி விளக்கினார்.
இந்த ஆய்வுக் குழுவில் ஒருவரும், ஐரோப்பிய விண்வெளி நிலையத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவருமான கமில் டியெஸ், இந்த ஏ.ஜி.என்-கள் அவை இருக்கும் விண்மீன் மண்டலங்கள் காலப்போக்கில் எவ்வாறான மாற்றங்களை எதிர்கொள்கின்றன என்பதில் "பெருமளவு பங்கு வகிப்பதாக" கூறுகிறார்.
மேலும், "அவை மிகவும் செல்வாக்கு மிக்கவையாக இருப்பதால், ஏ.ஜி.என்.களின் காந்தத்தன்மை மற்றும் அவை எவ்வாறு காற்றை உருவாக்குகின்றன என்பதைப் பற்றி மேலும் அறிந்துகொள்வது, பிரபஞ்சம் முழுவதும் உள்ள விண்மீன் மண்டலங்களின் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோலாக இருக்கலாம்," என்றும் அவர் தெரிவித்தார்.)
.பேரண்டத்தின் ரகசியங்கள்
கருந்துளையில் காணப்பட்ட இந்த ஆற்றல் வெடிப்பு, சூரியனில் ஏற்படும் பெரிய ஆற்றல் வெடிப்புகளை ஒத்திருப்பதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
சூரியனில் ஏற்படும் பெரிய ஆற்றல் வெடிப்புகள் கொரோனல் மாஸ் எஜெக்ஷன் (Coronal Mass Ejection) என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றல் வெடிப்பின்போது, சூரியனின் வெளிப்புற அடுக்கில் இருந்து மின்னூட்டப்பட்ட துகள்கள் பெருமளவில் வெளியேறுகிறது. இந்த நிகழ்வு பூமியிலும் தாக்கம் செலுத்தக்கூடும்.
சூரியனில், காந்தப்புலங்கள் முறுக்கப்பட்டு திடீரென விடுவிக்கப்படும்போது வெளிப்படும் ஆற்றலின் விளைவாக சூரியப் பிழம்புகள்(Solar Flare) என்றழைக்கப்படும் பிரகாசமான ஒளி வெடிப்பு நிகழ்வு நடக்கும். மேலும், அது நடக்கும் அதே நேரத்தில்தான் கொரோனல் மாஸ் எஜெக்ஷன் என்றழைக்கப்படும் வெடிப்பும் நிகழ்கிறது.
அதேபோலத்தான் இந்த பிரமாண்ட கருந்துளையிலும், "முறுக்கப்பட்ட காந்தப்புலங்கள் விடுவிக்கப்படும்போது", ஆற்றல் வெடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து பெரும் காற்று உருவாக்கப்படுவது நடக்கிறது.
ஐரோப்பிய விண்வெளி நிலையத்தில் எக்ஸ்.எம்.எம்-நியூட்டன் தொலைநோக்கியின் திட்ட விஞ்ஞானியாக இருக்கும் எரிக் குல்கர்ஸ், இரண்டு விண்வெளித் தொலைநோக்கிகளும் இணைந்து "நாம் இதுவரை பார்த்திராத, புதிய ஒன்றைக் கண்டுள்ளதாக" கூறுகிறார். "கருந்துளையில் இருந்து வெளிப்படும் மிக வேகமான காற்று, ஆற்றல் வெடிப்பால் உருவாக்கப்பட்டது. இது சூரியனில் நிகழ்வதை ஒத்திருக்கின்றது."
மேலும் பேசிய அவர், "இதில் மகிழ்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், சூரியனில் நிகழும் அதேபோன்ற இயற்பியல் செயல்முறைகள், ஆச்சர்யமளிக்கும் வகையில், பேரண்டத்தில் உள்ள மிகப்பெரிய கருந்துகளைகளுக்கு அருகிலும் நிகழக்கூடும் என்பதை இது காட்டுகிறது" என்றும் தெரிவித்தார்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment