தகவல் பெறும் உரிமை:ஆசிரியர் ஹக்கிம்: கவிஞர் தணிகை
தற்போதுதான் இந்தியப் பிரதமரின் வீடு எவ்வளவு செலவில் கட்டப் பட்டு வருகிறது என்று பிபிசி தகவல் பெறும் உரிமை 2005 சட்டம் பின்பற்றி கேட்டதற்கு பொதுவாகRs.20,000 கோடியில் என்றும் ஆனால் இரகசியம் காக்கப் பட வேண்டிய நிலையில் மற்ற எந்த தகவல்களும் அறுதியிட்டுப் பெற முடியவில்லை இந்திய மைய அரசிடமிருந்து என்ற ஒரு செய்தியைப் படித்தேன்.
திரு RTI ஹக்கிம் அவர்கள் மனிதராய்ப் பிறந்ததன் பலனை செய்து விட்டதாகவே உணர்கிறேன். இந்த 44 வயதேயான இளைஞர் சாதித்துள்ளதைப் பார்க்கும் போது அந்தளவு எல்லையை நாம் தொடவில்லையோ என்ற ஒரு ஆதங்கம் எழுகிறது. (தோன்றின் புகழொடு தோன்றுக...எனக்குப் பிடித்த முதல் குறள்).
மனிதர் மின்னலாய் வெடிக்கிறார், மேகமாய்ப் பொழிகிறார் மழையைப் போல எல்லா இடங்களுக்கும் வேறுபாடின்றி சமமாய் தம் தொண்டு பரவ தம்மால் ஆனதை செய்து வருகிறார். எனக்கும் கூட தனிப்பட்ட முறையில் மாநில அரசிடம் மாவட்ட அலுவலகத்தில், வட்டாட்சியர், கோட்டாட்சியர் தொடர்புடைய பட்டா குறித்தான சில கேள்விகள் என் வாழ்வைக் கரையானாக அரித்து வந்தன. என்றாலும் இதை தனிப்பட்ட சுய இலாப நோக்கத்திற்காக பயன்படுத்த ஆர்வம் வேண்டாம் என்ற இவரது நூல்வழியிலான அறிவுரையை ஏற்று சுய சிந்தனைக்கு எனது அவாவை உள் தள்ளி விட்டு இந்தப் பதிவை மேற்கொள்கிறேன்.
அரசு அலுவலகங்களை பொது அதிகார அமைப்பு என்கிறார். என்னதொரு அரிய வார்த்தை அடியேன் புதிதாக இப்போதுதான் இந்த தகவல் பெறும் உரிமை நூல் மூலம் தான் கடந்து வருகிறேன். 2005 தகவல் பெறும் உரிமையை மக்கள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்கள்தாம் இந்தியாவுக்கு சட்ட மசோதா நிறைவேறச் செய்தார் என்பது எனக்குப் பிடித்த செய்தி. ஏன் எனில் அந்த மகான் எனக்கும் தமது கரம் கொண்டு கடிதம் எழுதினார் அல்லவா அதனால்...
நான் இந்தப் பதிவை செய்கிற போது பெரிதும் மெழுகாக உருகிக் கொண்டிருக்கிறேன். இந்த தகவல் பெறும் உரிமை சட்ட வடிவாக மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறிய அந்த நாள் தாம் இந்தியாவுக்கு இந்தியர்க்கு எல்லாம் கிடைத்த இரண்டாம் சுதந்திரம் என்கிறார் ஆசிரியர். எப்பேர்ப்பாட்ட தொலைநோக்குப் பார்வை. இந்த சட்டம் உலகில் 142 நாடுகளில் பயன்பட்டு வருகிறது என்பதை புள்ளி விவரங்களுடன் பட்டியலிட்டு தந்திருக்கிறார்
ஒவ்வொரு நூலகத்திலும் இடம்பெற வேண்டிய , பயன்படுத்தப் பட வேண்டிய அற நூல். எனது நூலகத்தில் இடம் பெற்றுள்ள ஒரு சிறப்பும் இந்த 416 பக்க நூலுக்கு உண்டு. அருமையான தயாரிப்பு மற்றும் கட்டமைவு. தேவையான இடங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புகளுடன் இடம் பெற்றுள்ளன.
எனக்கு நான் கேட்டவுடன் மறு சிந்தனையோ, நேரக் கணிப்போ தாமதமோ இன்றி இரவு செய்தி பரிமாறுகிறோம், மறு நாள் காலையில் புத்தகம் அவ்வளவு நேர்த்தியான பாதுகாப்புடன் எங்கள் வீட்டுக்கு அனுப்பிய கூரியர் விலாசத்துடன்,கூரியர் தொடர்பு எண்களுடன் வந்து சேர்ந்துவிட்டது. ஒரு அலுவலகம் இவருக்காக இயங்கி வருவதை இவர் எனது விலாசத்தை கணினி முறையில் அச்சடித்து ஒட்டியதிலிருந்தே அறிந்து கொண்டேன்.
மற்றபடி இதில் சொல்லப் பட்டுள்ள கனவான்கள்:முன்னால் மத்திய அமைச்சர் சுதர்சனம் நாச்சியப்பன் அவர்கள், சமூக சேவைச் செம்மல் அருணா ராய் இப்படி மற்ற பிற இவர் குறிப்பிட்டுள்ள மனித மாணிக்கங்கள் பற்றி எல்லாம் பாரட்டப் பட வேண்டியவர்கள். ஏன் எனில் இதற்காக அந்தளவு உழைத்துள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
1997 ஏப்ரல் 17லேயே தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி அவர்கள் கொண்டு வந்து விட்டார் என்றும் அதன் பின் சுமார்28 ஆண்டுகளுக்கும் பிறகே இந்தியா முழுமையான நாட்டுக்கும் இந்த சட்ட உரிமை கொடுக்கப்பட்டது என்பதும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கொடுக்கப் பட வேண்டிய செய்தி.
மற்றபடி இந்தப் புத்தகத்திலிருக்கும் புள்ளி விவரம் ஒவ்வொன்றையும் இங்கு குறிப்பிட்டால் புத்தகத்தின் ருசி உங்களுக்கு குறையலாம்...மேலும் எனக்கு திருத்தியமைக்கப் பட்ட 4ஆம் பதிப்பு கிடைத்திருக்கிறது. ஒரு பதிப்பே ஆயிரம் புத்தகம் போட்டால் என்ன ஆகும் நிலை என்பது என் போன்று 11 புத்தகம் வெளியிட்டவர்க்கு நன்கு தெரியும். ஆனால் ஹக்கிம் 4 ஆம் பதிப்புடன் முன்னேறி வருகிறார். சிறப்பு. பெருமகிழ்வு.
இந்த நூல் படித்த ஒவ்வொரு கையிலும் இருக்க வேண்டிய நூல்,ஒவ்வொரு நூலகத்திலும் இருக்க வேண்டிய நூல். பொதுவாக எனது நூல்களை எல்லாம் படிக்க அல்ல பயன்படுத்த என்ற ஒரு வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தி சொல்லி இருப்பேன்.ஆனால் அதை எல்லாம் தாண்டி இந்த நூல் இந்திய அரசு அலுவலகத்திற்கும் மக்களுக்கும் இருக்கும் இடைவெளியைக் குறைக்க வேண்டுமானால் எல்லா இடங்களிலும் பயன்பட வேண்டும். ஏன் எனில் அவ்வளவு புலைத்தனம் மிக்க நாடு இது. இது ஒரு சூரிய ஒளி. வினோபா பவே சொல்லியபடி உலகின் மாபெரும் தோட்டி யார் தெரியுமா சூரியன் என்பார். அது போல இந்தக் கதிரவனின் ஒளி இந்த நாடெங்கும் பரவ பயன் தர எல்லா மக்களும் நலம் பெற இந்த மனிதர், நூல் மூலம் கிடைத்திட எல்லாம் வல்ல இயற்கையை வேண்டி பிரார்த்தனை செய்து இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே...பராபரக் கண்ணி. தாயுமனவர்.
அல்லா கொடுக்க நினைப்பதை எவராலும் தடுக்க முடியாது...குரான் (முகமதிய வேதம்)
என்னிடமும் குரான், பைபிள், கீதை எல்லாம் உண்டு. மதம் கடந்த மனிதர்க்கு யாவும் இனிதே...
RTI ஹக்கிம் M.B.A அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும் வாழ்த்துகளும் ஆசிகளும்...என்றும்
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment