Tuesday, December 23, 2025

பாரதின்னா அவன் ஒருவன் தான்: கவிஞர் தணிகை

 பாரதின்னா அவன் ஒருவன் தான்: கவிஞர் தணிகை





மகாக் கவி பாரதியைப் பற்றித் தான் சொல்கிறேன். 

அதிகாலை 3.30 மணி இருக்கும் சிறு நீர் கழிக்க எழுந்தேன். கடும் பனிப் பொழிவு. நல்ல குளிர். (ஆமாம் நல்ல குளிர், கெட்ட குளிர்னு இருக்கா?) உறக்கம் தொடரவில்லை. கைப்பேசிப் பெட்டியைத் திறந்தால்: எனது அன்பின் விழுது ஒன்று தமது குழந்தைகளின் மழலை காணொளிக் காட்சி இரண்டை வெளியிட்டிருந்தது. அதில் ஒன்றும் பெரியது இல்லை எல்லா வீடுகளிலும் இப்போது அதைச் செய்கிறார்கள்தானே. அதைக் கேட்டு விட்டுயாழ் இனிது குழல் இனிது என்ப தம் மக்கள் மழலைச் சொல் கேளாதார் என்ற குறளைச் சொன்னேன் பதிலாக. இந்த விழுதுதான் ஒரு போது சொன்னது திருமணமே வேண்டாம் என்று...அது வேறு கதை.


அதன் பின் தாம் நெறி ஏறியது அது என்னவெனில்...


ஆனால் இது வேறுபாட்டுடன் புதுமையாக : நீங்கள் சொல்லிக் கொடுத்ததுதான், அதை இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் எங்கள் வீட்டின் அனைவரும் சொல்லி விட்டே படுக்கிறோம் என்று ஒரு செய்தியைப் போட்டதும் எனக்கு பிறவிப் பயனை அடைந்தாற் போலாகி விட்டது. அதன் பிறகும் கூட உறக்கம் வருமா என்ன?


எப்போதெல்லாம் சோர்ந்து போய் இருக்கிறேனோ அப்போதெல்லாம் இது போன்ற தேன் துளிர்க்கும் சொட்டுகள் எங்கிருந்தாவது எப்படியாவது வந்து சேர்ந்து கொள்கின்றன.


அது என்ன தெரியுமா? அதை நான் சொல்லிக் கொடுக்கவில்லை....பாரதி நமக்காக விட்டுச் சென்றது:


எண்ணிய முடிதல் வேண்டும், 

நல்லவே யெண்ணல்  வேண்டும்;

திண்ணிய நெஞ்சம் வேண்டும்,

தெளிந்த நல் லறிவு வேண்டும்;

பண்ணிய பாவமெல்லாம் 

பரிதி முன் பனியே போல,

நண்ணிய நின்மு னிங்கு 

நசித்திட வேண்டும்  அன்னாய்! 


முடிந்தால் நமது பிரார்த்தனையில் இதையும் இணைத்துக் கொள்ளலாமே...நல்லதை நாடு கேட்கட்டும்.


எத்தனையோ பேர் பாரதி என்று வைத்திருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம், பாரதின்னா அவன் ஒருத்தன் தான்.

எத்தனையோ பேர் காந்தின்னு இருக்கலாம் , பெயர் இல்லாமலும் இருக்கலாம் ஆனால் காந்தின்னா அவன் ஒருத்தன் தான்.


அனைவர்க்கும் எமது விழாக்கால வாழ்த்துகளும் வணக்கங்களும் நன்றிகளும்:


மறுபடியும் பூக்கும் வரை


கவிஞர் தணிகை.


(பி.கு: எனது வித்து ஒன்று நிறைய எழுதுங்கள் அப்பா என்றது...எனக்கு நினைவுக்கு வர இனி அவ்வப்போது எதையாவது எழுத முனைவதில் எனக்குப் பெருமகிழ்வு.)

No comments:

Post a Comment