Sunday, October 30, 2016

கொடி : கவிஞர் தணிகை

கொடி : கவிஞர் தணிகை

Image result for kodi


அரசியல் படம் என்றாலே அலர்ஜி ஆகிடும் நிலையில் துணிந்து இந்தப்படம் அரசியல் களங்களை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப் பட்டிருக்கிறது.சிறுவராக இருக்கும்போதே எதிர் எதிர் மேடைகளில் ருத்ராவும் கொடியும் பேச்சாளர்களாகிவிடுகிறார்கள். கொடி மற்றும் அன்பின் ஊமையான அப்பா கர்ணாஸ் தீக்குளித்து விடுகிறார் கட்சிக்காகவும் கட்சித் தலைமைக்காகவும்...

எனவே அடிப்படையில் வெறுப்புடனே பார்க்க ஆரம்பிக்கிறோம். அதில் பாதி நேரம் இடைவேளை வரை கற்பனையில் விளையாட்டுத்தனமாகவே கதை நகர்கிறது. பிடிப்பில்லாமல்.

ருத்ரா எனப்படும் நயவஞ்சகத் தனமான மேடைப் பேச்சாளராய் இருக்கும் பெண், சொந்தக் காதலை, காதலனை கத்தியில் குத்தி கொலை செய்து விட்டு கட்சித் தலைமை, பதவிச் சுவையை அனுபவிக்கத் துடிக்கும் கதாபாத்திரம் (ருத்ரா என்னும்) த்ரிஷா ஏற்றிருக்கும் பாத்திரம். அவர் உண்மையாகவே காதலித்து பதவியை அதன் போதையை.புகழை என்பது கதை சொல்ல முனைகிறது.


வெள்ளைக்கோழி முட்டைக்கு சாயம் ஏற்றி அதை நாட்டுக்கோழி முட்டையாக விற்கும் அனுபமா என்னும் நடிகை மாலதி முட்டைகளை கொடி தள்ளி விட்டுப் போனதால் அதன் விளைவுகளுடன் அவர்கள் குடும்பத்தோடு ஒன்ற நினைக்கிறார். ஆனால் கொடிக்குப் பதிலாக அன்பு எம்.எல்.ஏ வாக மாறிய பிறகு அவனுடன் சேர ஏங்குகிறார் அது என்னவாயிற்று என கதை சொல்லவில்லை.

ருத்ராவின் துரோகத்தை அன்புவின் உண்மை வீழ்த்தி விடுவதாகவும், கொடி தனது காதலியே தன்னை குத்தி விட்டதால் வெதும்பி வாழ விரும்பாமல் இறந்து விடுவதாகவும் கொடி,அன்பின் தாய் விளக்கி முடிக்கிறார்கள் . அதிகம் ஒட்டியும் ஒட்டாமலும் இந்தப் படம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

எஸ்.ஏ .சந்திரசேகருக்கு கட்சித் தலைவர் பாத்திரம். சரண்யாவுக்கு கொடி, அன்பு ஆகியோரின் தாயாக,இப்படி நிறைய பாத்திரங்கள் இருந்தாலும் படம் நிறைவாக இல்லை.

இரு வேடங்களில் தனுஷ் தோன்றி இருக்கிற போதிலும் இரண்டிலுமே பெரிதாக கொடி நாட்டவில்லை.திரிஷாவுக்கு வில்லி ரோல். எல்லா கதாநாயகிகளுமே தமது நடிப்புலக வாழ்வு முடிந்து போகும் நேரத்தில் வில்லியாக, ஜோதிகா, ரம்யா கிருஷ்ணன், இப்படி நடித்திருப்பது போல திரிஷாவும். இதன் பிறகு குணச் சித்திர நடிகையாக எதிர்பார்க்கலாம். என்ன இருந்தாலும் நடிகைகளுக்கு வயது கூடினாலே மதிப்பு குறைந்து விடுவது என்பது புதிதல்லவே.

இன்றைய அரசியல் களத்தைப் பற்றி விளக்கினாலும் ஒன்றும் லயிக்கும்படி இல்லை. ஏன் எனில் அரசியல் களமே அப்படித்தான். வெளியில் கட்சிகள் நாட்டை ஆள்வதாக முக்கிய முடிவுகள் எடுப்பதாகத் தோன்றினாலும் அதில் ஈடுபடும் தனி நபர்களின் ஆசா பாசங்களையும் தனி மனித வேட்கைகளையும் பொறுத்தே ஒரு நாட்டின் அரசியல் தீர்மானிக்கப்படுகிறது என்று சொல்ல முனைந்துள்ளார்கள். ஆனால் அது எத்தனை பேருக்கு சென்றடைந்திருக்குமோ? சென்று சேருமோ?

மிகவும் ரஸமல்லாத வறட்சியான தயாரிப்பு. ஆனால் இது போன்ற தயாரிப்புகள் செய்ய துணிச்சல் வேண்டும். நூற்றுக்கு 40 மதிப்பெண் கூட எட்ட முடியாது ஏன் எனில் படம் நிதர்சனமான உண்மைகளை அப்படியே தருவதால் அதிக மதிப்பெண் தரத் தோன்றவில்லை. எந்த வித கவர்ச்சியும் இல்லை.

காற்றில்லாததால் கொடி பட்டொளி வீசி பறக்கவில்லை. தொங்கிக் கிடக்கிறது. பார்ப்பதும் பார்க்காததும் உங்கள் விருப்பம். பார்க்காததால் நஷ்டமில்லை. பார்த்தால் கஷ்டம் இருக்கிறது. இப்படித்தான் நாட்டின் நடப்பும், கட்சிக்காரர்களும் இருக்கிறார்கள் என்ற  வேதனை தொற்றிக் கொள்கிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment