Saturday, August 6, 2016

அரும்பாகி மொட்டாகி பூவாகி: கவிஞர் தணிகை.

அரும்பாகி மொட்டாகி பூவாகி: கவிஞர் தணிகை.
அப்போதெல்லாம் பிரதோஷ தினத்தில் மேட்டூர் சுப்ரமணிய சாமி கோவிலில் சேவை செய்வதும், ஆன்மீக இறைப் பணிகளிலும் பங்கெடுத்துக் கொள்வதும் தவறாது. அந்தக் கோவில் ஒரு வகையில் பார்த்தால் எனக்கு மிகவும் நெருங்கியது.எனக்கு அங்குதான் பெயர் வைத்தார்கள் என்று எனது தாய் கூறுவார்.தாய் இறந்தே இப்போது 10 ஆண்டு ஓடி விட்டது நாளையுடன்.எம் வீட்டுக்கும் அந்தக் கோவிலுக்கும் 8 கி.மீ தொலைவு.

எங்கள் குடும்பத்தில் 5 பெண்களும், என்னுடன் சேர்த்து 3 ஆண்களும் மக்கள். எனவே பெண்சார் பிறப்பே அதிகம் எல்லாருக்கும்.பெண்களுக்கு எல்லாம் ஆளுக்கொரு ஆண் குழந்தையுண்டு.ஆனாலும் பெண்கள் அதிகம். எனவே எனக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும் என உலகு எதிர்பார்த்தது. மனைவி பிரசவத்துக்காக தனது தாயின் இல்லம் சென்றிருந்தார்.

கர்நாடகாவில் உள்ள துக்ளாபுரம் என்ற ஊருக்கு. அவர்களது பெரியப்பா ஊர் லக்குவல்லி. அது ஷிமோகா மாவட்டத்தில் உள்ளது. இவர்கள் ஊர் துக்ளாபுரா தறிக்கெரே தாலுகாவில் சிக்மகளூர் மாவட்டத்தில், என்றாலும் இரண்டு ஊருக்கும் இடையே ஏழெட்டு கி.மீ மட்டுமே.

எனவே லக்குவல்லியில் உள்ள மருத்துவமனையில் மனைவி பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். பெரியப்பாவின் ஈடுபாட்டில். தலைப்பிரசவம். (மட்டுமல்ல ஒரே பிரசவம் என்பதும் இன்று வரை நிரூபணம்)

நான் எனது 36 ஆம் வயதில் திருமணம் டிசம்பர் 4ல் இந்தியாவின் சுதந்திரப் பொன் விழா ஆண்டில் 1997ல் செய்து கொண்டேன்.அப்போதே நூல்கள் எல்லாம் வெளியிட்டு இருந்தேன். போதுமானவரை நாட்டுக்கும் வீட்டுக்கும் என்னால் செய்ய முடிந்ததை செய்து விட்டதாகவே உணர்கிறேன். இனி எப்போது இறந்தாலும் எனக்கு சந்தோஷமே என முதல் புத்தகத்தின் முன்னுரையிலேயே குறிப்பிட்டு விட்டேன். தந்தை இறந்து அப்போது 11 ஆண்டுகள் ஓடி விட்டன. அவர் 1986 நவம்பர் 18ல் உயிர் நீத்தார்.

தாய் என்னுடனே அதன் பின் 20 ஆண்டுகள் உடனுறைந்தார். இல்லை நான் அவர்களுடன் இருந்திருக்கிறேன். இந்தச் சூழலில்தான் நான் மேட்டூர் சுப்ரமணிய சாமி கோவிலில் பிரதோஷ பூஜையன்று ஆர்வமுடன் இறைச் சேவை புரிந்து வந்தேன். அப்போது ஒரு நாள் வீட்டுக்கு போய்ப் பார் நல்ல செய்தி காத்திருக்கிறது என ஒரு வாக்கு கிடைத்தது. ஒலியற்ற வார்த்தை.

வீடு வந்தேன் மகன் பிறந்த செய்தி காத்திருந்தது.எனது  சேவைப்பணி பொருட்டு நிறைய கற்றேன் பெற்றேன் உற்றேன் அனுபவங்களை நிறைய. அதில் ஒன்று ஆண் பெண் பாலுறவு பற்றிய தெளிவான இயற்கை முறைகளை, மற்றும் ரிதம் மெத்தேட், வாத்ஸ்யானர் காம சூத்திரம், கொக்கோகோ முனிவரின் காம சாத்திரம் அறிவியல் மருத்துவம் சார்ந்த முறைகள் எல்லாம் . அதை ஒரு சேவையாக அனைவர்க்கும் ஈந்தேன் மகிழ்ந்தேன் மணத்துக்கும் முன்பே.

அப்படி இருக்கும் போது அதை நான் கடைப் பிடிக்காமல் இருப்பேனா?  கடைப் பிடித்தேன் அதன் விளைவாக 1998 டிசம்பர் 16 அன்று மகன் ஈன்றேன். மகிழ்ந்தார் மகிழ்ந்தார், சிலர் வழக்கப் படி முதல் பிரசவமே மகனாய் ஈன்று விட்டானே என இருண்டார்.

பூம்பிஞ்சை 3 மாதம் தொடுகையில் கர்நாடகாவிலிருந்து ரயில் மூலம் பெங்களூரிலிருந்து பேருந்து மூலம் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தும் முன் அந்தக் குழந்தை பேருந்தின் ஓட்டுனர் அடித்த ‍ஹாரன் சத்தம் கேட்டு வீர் வீர் என்று அழுதபடியே வந்தது. எத்தனை இருக்கைகள் பின் சென்ற போதும் அதன் அதிர்ச்சியும் அழுகையும் ஓயவில்லை.

அந்த ஆண் மகவு பிறந்த பின் அப்போது சென்னைக்கு செல்ல வேண்டிய பணி இருந்ததால், அதை எல்லாம் முடித்து ஒரு வாரம் சென்ற பின் தான் தகப்பன் சென்று  கர்நாடகாவில் பார்த்தேன். ஆனால் அப்போதே அது  தனது பிஞ்சுக் கை விரல்களால் எனது கையைப் பிடித்துக் கொண்டது.

அந்த அரும்பு மொட்டாகி பூவாகி இன்று தானே கல்லூரிக்கு செல்வதாக புறப்பட்டது டிசம்பர் 16 வந்தால் அதற்கு வயது 18.

அந்த பெங்களூரிலிருந்து வந்த பயணம், பேருந்து ஓட்டுனரின் ஒலிப்பான் சத்தம் கேட்டு வீறிட்டதும், எனது விரல்களை தனது விரல்களுடன் சேர்த்து இறுக்கிப் பிடித்துக் கொண்டதும் நேற்று நடந்தது போல் இருக்கிறது. அட...18 ஆண்டுகள் ஓடிவிட்டன...

பெண் பிள்ளையும் நதி நீரும் வளர்வது தெரியாது என்பார்கள், ஆனால் ஆண் பிள்ளையும் கூட‌ அப்படித்தான் என்பதை எம்மால் காண உணர முடிந்திருக்கிறது...

 2015 16 ஆம் ஆண்டின் மேனிலைப் பள்ளிகளிடை நடைபெற்ற போட்டியில் வென்ற அந்த வினாடி வினா மாநில வெற்றியாளர் ‍ அட அவருடன் தாம் எத்தனை அனுபவங்கள், பெற்ற இன்ப துன்பங்கள்..

ஆமாங்க கல்யாணம் பண்ணிக்க வேண்டும்தான்...ஆ.ப.ஜெ அப்துல்கலாம் கூட கட்டைப் பிரமசாரி அவர் கூட கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்றுதான் சொன்னார். காந்தியும் குடும்பஸ்தர், மதர் தெரஸா விலக்கு. இந்த‌ எனது 3 வழிகாட்டிகளில் இருவர் மணமிலார். மணம் காணார். ஆனால் இந்த வகையில் நாம் காந்திய வழியில்...

பொறுப்புகளில் இருந்து தப்பிக்கும் சாதி எமதல்ல. முடிந்தவரை போராடுவோம். இயற்கை துணை இருக்கும் என நம்புகிறோம். புத்தர் கூட இந்தக் கேள்விகளில் சிக்குண்டே பிறவாத வீடு  உண்டு இறவாத வீடு ஏது என போதனை செய்தார்... பிறப்பே இல்லை என்றால் இறப்பு ஏது? இருப்பை மழையாக்குவோம். அனைவர்க்கும் பயன்படும் வழியாக்குவோம்.

ஆயிரம் பிள்ளைகளை விட ஒரு பிள்ளை சிறந்தது‍  பைபிள்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

4 comments:

 1. அரும்பாகி மொட்டாகி பூவாகி: கவிஞர் தணிகை.= மிகவும் மகிழ்ச்சி. எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. thanks for your feedback on this post sir. vanakkam. please keep contact

  ReplyDelete
 3. வாழ்க! வளர்க!

  ReplyDelete
  Replies
  1. thanks for your wishes Youngsun.And your voice mail is not properly working so I am unable to hear it.

   Delete