Thursday, August 18, 2016

ஜோக்கர் : தமிழ் திரைப்படம் விமர்சனம்: கவிஞர் தணிகை

ஜோக்கர் : தமிழ் திரைப்படம் விமர்சனம்: கவிஞர் தணிகை


ஜோக்கர் படம் தமிழ்ப் பட வரலாற்றில் மீண்டும் ஒரு நல்ல முயற்சி. இது போன்ற திரைப்படங்கள் தமிழ்ப் பட பாலாபிஷேக இரசிகர்களை நோக்கி அதிரடியாக இறங்கி உண்மையின் அருகே வாழ்வின் அருகே அவர்களை எல்லாம் அழைத்துச் செல்ல வேண்டும் எனவே இந்தப் பதிவு எனக்கு மகிழ்வூட்டும் பதிவு. முடிந்தால் இதைப் படிக்கும் அனைவரும் இந்தப் படத்தை ஒரு முறை பார்த்து விடவும். பார்ப்பதற்கு கண்ணீர் மல்க இருக்கும்தான்.ஆனாலும் இந்த நிதர்சனத்தை எவருமே மறுத்துவிட முடியாது மறந்து விடவும் முடியாது.

உண்மை ஒன்றுதான் மாறாதது. அந்த உண்மை தெளிவாக இதில் சொல்லப் பட்டிருக்கிறது. எனவே இது படமல்ல பாடம்.

இந்தப் படம் மூன்று வகையில் எனக்கு மிகவும் நெருக்கமாகவும், மிகவும் என்னுடன் ஒன்றுவதாகவும் இருக்கிறது. முதலில் நாங்கள் பல மேடைகளில் எண்பதுகளிலேயே வாக்களித்து பதவிக்கு சென்றவர்கள் ஊழல் செய்வார் எனில் திரும்ப அழைக்கும் உரிமை ரீ காலிங் பவர் வேண்டும் என்று கூவியுள்ளோம். அதை எமது தெய்வா பதிப்பக வெளியீட்டில் "ஜனநாயக மறுசீரமைப்பு" என காந்தி கைத்தடியுடன் நடந்து வரும் சிறு படத்தைப் முன் அட்டையில் போட்டு அச்சிட்டு வெளியிட்டிருந்தோம்.

இரண்டு: சேலம் மாவட்ட யுனிசெப் நிறுவனத்தின் கன்வீனராக ஓராண்டுக்கும் மேல் தொண்ணூறுகளில் பணி புரிந்தபோது பல கிராமங்களுக்கும் சென்று குறைந்த செலவிலான கழிப்பறை கட்ட ஒரு திட்டம் தீட்டினேன் ஆனால் அதற்கு யுனிசெப் வெறும்: 150 ரூபாய் மட்டுமே கொடுப்பதாக சொல்லியதால் திட்டத்தை கை விட்டேன். அதனால் எனது கடும் உழைப்பு நஷ்டம், அனைவருக்கும் கொடுத்த வாக்குறுதியின் வீணாயிற்று.மூன்றாவதாக பல மேடைகளில் சேலத்திலும் மற்றும் பல ஊர்களுக்கும் உரை நிகழ்த்த சென்ற போதெல்லாம் நண்பர்களுக்குள் நாங்கள் பகிர்ந்து கொள்வோம் எங்களை நாங்களே பைத்தியக்காரர்கள் என்றும் எம்மை மக்கள் அப்படித்தான் எண்ணுகிறார்கள் என்றும் சசி பெருமாள், சின்னபையன், கொ.வேலாயுதம் என்னும் சிற்பி, எஞ்சினியர் மணி, அடியேனாகிய நான் எல்லாமே கலந்து பேசியதுண்டு. உடன் சேக்ஸ்பியர், அருணாச்சலம், கண்ணன், போன்ற நண்பர்களும் இருக்க.

இந்தப் படத்தில் இந்த மூன்றுமே சொல்லப் பட்டிருக்கிறது. எழுதி இயக்கிய ராஜு முருகன் மன்னர் மன்னனாக நடித்த குரு சோமசுந்தரம் ஆகியோரை மட்டுமல்ல மல்லிகா,இசை, ராமசாமி, பாவா செல்லதுரை ஆகியோரை நாம் பாராட்டியே ஆகவேண்டும். வாழ்ந்திருக்கிறார்கள் நடித்த சுவடே இல்லாமல்.

எளிய முறையில் சொல்லப் பட்ட குறைந்த செலவில் எடுக்கப் பட்ட படம் கூட. இவரது குக்கூ படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. பார்க்கத் தூண்டுகிறது இந்த ஜோக்கர். முதலில் 20 முதல் 40 நிமிடம் வரை அமர முடியவில்லை நெளிந்து கொண்டே பார்க்க வேண்டியதாயிருந்தது. எப்படி இப்படி ஓர் படத்தை நல்ல படம் என்கிறார்கள் என அடுத்த நாள் இந்தப் படத்தை நேரம் ஏற்படுத்திக் கொண்டு கட்டாயமாக பார்க்க ஆரம்பித்தேன். வியந்தேன்.

தமிழ்ப் பட சினிமா வரலாற்றில் இந்த அளவு மக்களின் பிரச்சனையின் மிக அருகே வந்த சினிமாக்கள் வெகு சிலவாகவே இருக்கும் எடுக்க தயாரிக்க உதவிய நண்பர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, பிரபு ஆகியோரை பாராட்டியே ஆக வேண்டும் நல்ல நோக்கம். நன்முயற்சி. என்ன வசூல் எனத் தெரியாது. ஆனால் இந்தப் படம் தேசிய விருதுகளை வென்று எடுக்கும் என நம்பலாம்.

தர்மபுரி பாப்பிரெட்டிப் பட்டியை மையமாக வைத்து மிகவும் பிற்பட்ட கிராமம் ஒன்றை மையமாக வைத்து பயமில்லாமல் ஒரு சினிமாவாக இல்லாமல் எடுத்து உலவ விட்டிருக்கின்றனர். வாழ்க.இவர் முயற்சி.

நான் பார்ப்பதற்கு எப்படி ஒரு வாரம் ஆகியது என்றே தெரியவில்லை. நேற்றுதான் பார்த்தேன். முந்தா நாள் பார்க்க அரம்பித்தேன் 40 நிமிடத்திற்கு மேல் பார்க்க இயலா பணிச் சுமை.

தற்காலத்துக்குத் தக்கபடி மாமனாருக்கு கட்சிக் கூட்டத்தில் பிரியாணிப் பொட்டலமும், கோர்ட்டரும் வாங்கிக் கொடுத்து கூட்டத்தில் இருந்து தாம் மணக்க வேண்டிய மல்லிகாவை  ரம்யா பாண்டியனை தக்க வைத்துக் கொள்கிறார் இந்த ஜனாதிபதி என்னும் மன்னர் மன்னன். ஆனால் மல்லிகா கழிப்பறை இல்லாமல் மணம் வேண்டாம் என மறுக்கிறார் ஒரு வட நாட்டுப் பெண் மறுத்தது போல...கழிப்பறை பற்றி மத்திய அரசு தரும் விளம்பரம் போல கழிப்பறையின் முக்கியத்துவம் உணர்த்தும் அடிப்படைக் கதை.


அதன் பின் ஜனாதிபதி வருகையும், கழிப்பறை திட்டம் துவங்கி வைக்க அவர் வரும்போது மன்னர் மன்னன் மற்றும் மல்லிகா படும் அவஸ்தை கண்ணில் நீர் வர வைப்பது. ஆனால் அதுதான் உண்மையான நாட்டு நடப்பு. பிரசவத்துக்கு பெண் துடித்துக் கொண்டிருக்கையில் கட்சித் தலைவர், மந்திரிகள், வி.ஐ.பிக்கள் நகர் வலம் சென்று கொண்டிருப்பது போல.

கோமாவில் இருக்கும் மல்லிகாவை கருணைக் கொலை செய்ய உரிமை கேட்டு நீதிமன்றம் செல்வதாகட்டும், அடிபட்ட ஆட்டுக்கு நீதி கேட்பதாகட்டும் எல்லாமே  நன்றாக நம்பும்படியாக செய்யப்பட்டிருக்கிறது. ஒரு உயிருக்கும் தீங்கு நினைக்காத அப்பிராணி ஜனாதிபதியின் வாழ்வு எப்படி முடிந்து போகிறது ,மல்லிகாவின் கழிப்பறைக் கனவு என்னவெல்லாம் எப்படி எல்லாம் ஆகி சிதைந்து போகிறது என்பதெல்லாம் கண்ணீரை வரவழைக்கும் காட்சிகள்.

இப்படித்தான் பெரும்பாலும் அரசின் நிறையத் திட்டஙக்ள் போய் விடுகின்றன. எல்லாவற்றையும் சொல்ல இயலாது. ஏன் எனில் படம் பார்க்கும் ஆர்வம் உங்களுக்குள் அற்று விடும். எனவே இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

முத்தாய்ப்பாக ஒன்றே ஒன்று : அந்தப் பெரியவர் மன்னர் மன்னன், ஜனாதிபதி உடலைப் பார்த்து வந்த பின் ஒரு கதறு கதறுகிறார் பாருங்கள் அங்கே பெருத்த உண்மை ஒளிந்து கிடக்கிறது. இந்த தேசம் இப்படித்தான் எவருடைய அக்கறையுமின்றி அழிந்து வருகிறது.

ஜனாதிபதிதான் இந்தியாவின் உச்ச சக்தி, அவரின் கையெழுத்தின்றி எதுவும் நடக்காது என்ற போதிலும் பிரதமர் சதி, முப்படை, சர்வாதிகாரம், ஜனாதிபதி ஆட்சி போன்றவை ஆங்காங்கே மன்னர் மன்னன் ஜனாதிபதியால் தெளித்து விடப் பட்டுள்ளன.

நிறைய சொல்லவே விரும்புகிறேன். அதன் சுருக்கமாக ஒரே சொல் முடிந்தால் ஒரு முறை பார்த்து அந்த வேதனையை பகிர்ந்து கொள்ளுங்களேன். நம்து தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப் பட்டியில் எடுக்கப் பட்ட படம் நாடு முழுதும் பேசப்படட்டும்.
பரவட்டும் இதன் ஒளி.
ஆனால் இதை எல்லாம் பார்த்தால் இவர்கள் எல்லாம் திருந்தி விடுவார்களா என்று எமது குடிமகன்கள் பயணிகள் ரயிலில் பேசி வருவதும் காதில் விழாமல் இல்லை. மொத்தத்தில் ஒரு சினிமாத்தனம் துளியும் இல்லா கிராமிய மேம்பாட்டுக்கு ஏழைக்கு, வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள வாழ்வை சித்தரிக்கும் சினிமா. அரசின் திட்டங்கள் கடைசியில் ஏழைக்கு என்று போடப்பட்டு கடைசியில் வெறும் மலத்தொட்டி ஒன்றுதான் கழிப்பறைத் திட்டத்தின் மூலம் கிடைத்தது என்றும், ஜனாதிபதி உரை ஒரு புறம் நிகழ்ந்து கொண்டிருக்க இங்கே மல்லிகா உயிர் போய்க் கொண்டிருந்தும் உடல் மரண அவஸ்தையில் இருந்தும் காவலர் அந்த மல்லிகாவின் உயிரைக் காப்பாற்ற மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் காவல் காப்பதும் உண்மையின் உச்சம்.Definitely This Site giving  60+ for this movie.

மறுபடியும் பூக்கும் வரை
 கவிஞர் தணிகை.

3 comments:

 1. அனைவருக்கும் வணக்கம்

  புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .

  நன்றி

  நமது தளத்தை பார்க்க Superdealcoupon

  ReplyDelete
 2. ஜோக்கர் : தமிழ் திரைப்படம் விமர்சனம்: கவிஞர் தணிகை - நிறைய சொல்லவே விரும்புகிறேன். அதன் சுருக்கமாக ஒரே சொல் முடிந்தால் ஒரு முறை பார்த்து அந்த வேதனையை பகிர்ந்து கொள்ளுங்களேன். நம்து தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப் பட்டியில் எடுக்கப் பட்ட படம் நாடு முழுதும் பேசப்படட்டும்.
  பரவட்டும் இதன் ஒளி.- எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Tanigai Ezhilan Maniam

  ReplyDelete
  Replies
  1. thanks for your feedback,sharing and comment on this post sir. vanakkam.

   Delete