Friday, November 13, 2020

மாதவன் எனை மாற்றினார்/மாதவம் எனை மாற்றியது: கவிஞர் தணிகை

 மாதவன் எனை மாற்றினார்/மாதவம் எனை மாற்றியது: கவிஞர் தணிகை



தமிழில் நிறைய மருத்துவ முறைகள் என நல் வாழ்வுக்கு வழி காட்ட‌ உண்டு. உடலை தூய்மைப்படுத்த, உணவு உட் கொள்ள,என எல்லாப் பக்கங்களுக்கும் தமிழ் வழியில் கொட்டிக் கிடக்கும் வழிகாட்டும்  வழி நிறை முறைகள் ஏராளம்.  இன்று இப்போது நாம் சொல்ல முயல்வது உணவு உண்ணும் முறை பற்றி மட்டுமே.


பற்களை சில வகையில் மனித உடல் கொண்டிருப்பது கடித்து உண்ண, அரைத்து உண்ண, கொறித்து உண்ண இப்படி சில வகையான வேலைகளை அவை செவ்வனே செய்ய .அதன் பின் உமிழ் நீர் கலந்து உணவை நீராகாரமான பின்னே அப்படியே விழுங்க வேண்டும். கட்டியாக உணவே உள்ளே போகக் கூடாது. இதையே நொறுங்க பிசைந்து தின்றால் நூறு வயது வாழலாம் என்ற பழமொழியும் வாய்க்கு உணவு செல்வதற்கு முன்பே அதை நொறுங்க பிசைந்து அனுப்ப வேண்டும் என்கிறது.


குழந்தையாய் இருக்கும் போது தாய் தனது குழந்தைக்கு எப்படி ஊட்டுகிறார் என்பதை கவனித்தால் அது எளிதில் விளங்கும். உணவை நன்கு பிசைந்து மைய வைத்து உருட்டி உருண்டையாக கொடுப்பார்.


நாம் பசியாக இருக்கும் போது இப்படி எல்லாம் ஆற அமர உண்பது சாத்தியமா என்றால் பழக்கத்தால் எல்லாம் சாத்தியமே, சொல்வதை அப்படியே கடைப் பிடிப்பது என்பது கடினம் தான் ஆனால் ஒரு திண்ணமான தீர்மானத்துக்கு வந்து அதை பல நாட்கள் கடைப் பிடிக்க ஆரம்பித்து அது ஆண்டுக் கணக்காக மாறி விட்டதென்றால் எதுவும் கை கூடும்.


கெட்ட பழக்கங்களை கைக் கொள்ளும் மனிதரால் ஏன் நல்ல பழக்கங்களைக் கைக் கொள்ள முடியாது. தினமும் இரண்டு வேளை பல் துலக்குவது என்பது கூட ஆரம்பத்தில் இரவில் உணவை முடித்து உடன் செய்வது சிறிது காலத்துக்கு விட்டு விட்டு அல்லது தொடர்ந்து செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால் அது அப்படி பழக்கமாகிவிட்டால் என்னே ஒரு சுகம். அதனால் கிடைக்கும் பலனோ உடல் நலத்துக்கு மிக அதிகம்.


சரி மாதவன் சொல்வதை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் சொல்ல வேண்டுமென்று தோன்றியது:அவர் ஒரு பன்மொழி நடிகர் மட்டுமல்ல, நல்ல பயிற்சியாளர் பாதுகாப்பு படைக்கு என்றும், ஒரு நல்ல மனிதர் என்றும் அவரது காணொலிகளைக் காணும்போது தெரிய வந்தது.


முதலில் ஹார்வேட் பல்கலைக் கழகத்தில் பேசி இருந்ததைக் கேட்டேன் .சிறிது காலத்துக்கும் முன் உணவைக் குடியுங்கள், நீரை மெல்லுங்கள் என்ற ஒரு காணொலி கண் கொள்ளாக் காட்சியாகி விருந்தானது எனக்கு. அதை நானறிந்த அனைவர்க்கும் பயனடைய அனுப்பி பகிர்ந்தேன்.எனக்கு அது க்ளோஸ் யுவர் ஐஸ் ஷீ த வேர்ல்ட்: கண்களை மூடிக் கொண்டு உலகைப் பார், ஓபன் யுவர் ஐஸ் ஃபர்கெட் த வேர்ல்ட்...கண்களைத் திற உலகை மற என்ற தியான வாசகத்தை நினைவு படுத்தியது.


ஹீலர் பாஸ்கர் கூட நன்றாக அரைத்து உணவை மென்று உண்ணுங்கள் எனப் பேசி இருந்ததைப் பார்த்திருக்கிறேன். வடையில் உண்ணும் போது பருப்பு, வெண்டைக் காய் போன்றவற்றில் உள்ள விதைக் கொட்டைகள் போன்றவை மலத்தில் சென்றால் நீங்கள் சரியாக உணவை மென்று உண்ணவில்லை என்பதை தெரிவிப்பது என கூச்சமில்லாமல் சொல்வார். இதை எல்லாம் பேச நாம் கூச்சப் படத் தேவயில்லை. பேசாமல் இருப்பதற்குத் தான் உண்மையிலேயே கூச்சப் பட வேண்டும்.


மாதவன் இந்தக் காணொலியிலும் அப்பண்டிக்ஸ்( குடல் வால் நோய) இரு மனைவி மனோஜ்  டாக்டர் பற்றி பேசி இரண்டாம் முறை திருப்பி பார்ப்பவரை தனது பேச்சை கவனிக்க வேண்டும் என நகைச்சுவை என்ற பேரில் பேசி இருக்கிறார். ஆனால் அவர் சொல்லி இருந்த மற்ற எல்லா கருத்துகளும் முத்துகள் மனித குலத்துக்கு தேவையான மணிகள் வைரங்கள்.


மிகுந்த தசை வலிமையுடைய உயிரினம் எருது அது உண்பதோ பச்சைப் புல் என்னும் இவர் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க யானைக்கு உள்ள உயிரியில் மூலக்கூறு டி.என்.ஏ ஒற்றுமை 98க்கும் மேல் என்பதும் ஆனால் சிம்பன்ஸி குரங்குக்கும் மனிதர்க்கும் உள்ள டி.என்.ஏ  உடல் மூலக் கூறு ஒற்றுமை 99.2 என்கிறார். எனவே உண்பது உறங்குவது கலவி எல்லாமே இரண்டு வகையான உயிரிக்கும் பொதுவாகவே இருக்கிறது என்று குறிப்பிடும் மாதவன்...


ஆஸ்திரியா மிகுந்த பொருட் செலவு செய்து சென்று அங்கு கொடுக்கும் பயிற்சி பெறச் சென்றதாகவும் ஆனால் அங்கே பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்கள் தாம் அதை இந்தியாவில் இருந்தே கற்று எடுத்து வந்து உலகிற்கு பயிற்சி அளிப்பதாகவும் சொல்லி உள்ளதைக் குறிப்பிட்டு


நீங்கள் என்ன சிற்றுண்டு சாப்பிடுவீர் என்பதற்கு இட்லி தோசை ஆம்லெட் என்றாராம், சரி என அடுத்த நாள் காலை இவரைப் போல் பயிற்சிக்கு சென்றவரை எல்லாம் ஒரு சேர அமரச் செய்து 4 ரொட்டித் துண்டுகள் மற்றும் ஒரு கிண்ணம் சூப் அளித்தனர் என்றும் இதுவே உங்களுக்கு 3 நாளுக்கு போதுமானது என்றும், நீங்கள் இந்த ரொட்டியை நன்கு கடித்து மென்று நீராகும் அளவுக்கு வாயில் வைத்திருந்து அதன் பின் உள் அனுப்ப வேண்டும் என்றனராம். 


அப்படி உண்ணும் போது அதன் சுவை அதிகமாகிறது என்றும்  மற்றும் பெரும் அளவில் நம்மால் உணவை உண்ண முடிவதில்லை என்றும் சுமார் 15 நிமிடம் உணவை மென்று உண்டால் போதும் என மூளை நமக்கு உணர்த்தி விடும் என்றும் சுவையாகக் கூறினார். அதே போல நாம் குடிக்கும் நீரை சிறிது சிறிதாக வாயில் வைத்து சில நிமிடம் மென்று வாயில் வைத்திருந்து விழுங்கும்போது அதில் உள்ள தனிமங்கள், கனிமங்கள் எல்லாம் நமக்கு சக்தியாக மாறும் என்றும் இதுவே நமது இளமையை தக்க வைக்கும் என்றும் வயிறுதான் நமது இரண்டாம் மூளை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


நமது உடற்பயிற்சியின் போது இரத்த ஓட்டம் நடைபெறுவதற்கும் இருதயம், நுரையீரல் ஆகியவற்றை விட நமது வயிறுதான் பெரும் பங்கு வகிக்கிறது என்றும் அடி வயிறுதான் நமது இரத்த சக்தியை தோற்றுவிக்கும் இடம் என்றும் குறிப்பிடுகிறார்.


இதில் சொல்லப் பட்டுள்ள கருப்பொருள் புதிதல்ல என்ற போதிலும் சொல்லிய‌ விதமும், அதைக் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியத்துவமும் இந்தக் காணொலியை நாம் அறிந்த அனைவரும் பார்த்து பலன் பெற வேண்டும் என்ற எண்ணத்தை நமக்குள் விளைத்து விடுகிறது. விதைத்து விடுகிறது.


நன்றி மாதவன்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




Sunday, November 8, 2020

Drink your food, chew your water: R. Madhavan at the RWC16

பெரும் முதலாளி டொனால்ட் ட்ரம்ப் வீழ்ந்தார்: கவிஞர் தணிகை

 பெரும் முதலாளி டொனால்ட் ட்ரம்ப் வீழ்ந்தார்: கவிஞர் தணிகை



ஆஹா என்று எழுந்தது பார் புரட்சி என்றான் ரஷ்யாவில் ஜாரின் வீழ்ச்சியின் போது பாரதி. அப்படி ஒன்றும் பெரிதாக சொல்ல முடியாவிட்டாலும் அமெரிக்க பெருமுதலாளி ட்ரம்ப் ஹிலாரி கிளின்டனை வீழ்த்தி கடந்த முறை அமெரிக்கத் தேர்தல் முறை ஆட்சியாளானாக்கியது அமெரிக்க அரசியல் விதி. அந்த மனிதரை இந்த முறை ஓட ஓட விரட்டி அடித்திருக்கிறது அதே அமெரிக்க தேர்தல் முறை. ஜோ பைடனுக்கு வரலாறு காணாத அளவு வாக்கு விழுந்திருப்பதாக புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.


தோல்வியை ஏற்றுக் கொள்ளவே மாட்டேன் என்ற ட்ரம்ப் எந்த நீதிமன்றத்திற்கு சென்றாலும் அவர் தோற்பது உறுதியாகத் தெரிகிறது. அவர் பதவி விட்டு வெளியேறியே ஆகவேண்டும்...அத்துடன் அவர் மேல் நிறைய வழக்குகள் அதன் பின் செயலாக்க நடவடிக்கையில் இறங்கும் என்ற தகவலும் இருக்கிறது.


அவர் மனைவி மெலினாவே அவரை பதவி இறங்கும் வரை காத்திருந்து விவாகரத்து செய்ய இருப்பதாகவும், பெண்ணை பொது இடத்தில் வைத்து விரும்பத் தகாத முறையில் முத்தமிட்டதாகவும் ஹோட்டலில் அவர் அனுமதியின்றி அவரது உடலை தடவி அழுத்தி இறுக்கியதாக எல்லாம் செய்திகள் மேலும் விபச்சார அழகியுடன் இருந்ததற்கு இழப்பீட்டுத் தொகை வழங்கிய விவகாரத்தில் வழக்கும்  வருவாய்க்கு வருமான வரி கட்ட நேர்ந்ததில் தவறுகள் இப்படி பலப் பல குற்றங்கள் அந்த மனிதரைப் பற்றி அம்பலமாகி உலகை வலம் வர ஆரம்பித்துள்ளன. இவரிடம் எல்லா அயோக்யத்தனங்களும் இருந்தன. ஆனால் அதெல்லாம் அமெரிக்காவில் சகஜமப்பா...இங்கு தான் ஒரு தலைவர் என்பவர் அவசரத்திற்கு ஒரு அசுத்தமான இடத்தில் சிறு நீர் கழித்தால் கூட அது தப்பு...இங்கு உள்ள தலைவர் எல்லாம் கலாமாக, காமராசராக, காந்தியாகவே இருக்க வேண்டும் என இந்தியக் கலாச்சாரத்தில்  கருதப் படுகிறது. ஆனால் அதை எல்லாம் இன்றைய தலைவர்கள் அப்படியே தலைகீழாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் மேலை நாட்டுக் கலாச்சாரத்தின் மூலம் என்பது வேறு...


இந்த மனிதனுக்கு இந்தியாவில் ஏதோ ஒரு பதர் கோவில் கட்டி வழிபட்டதாகவும் குஷ்புவுக்கு தமிழகத்தில் கோவில் கட்டியதும் ஏனோ இதை எழுதும்போது என் நினைவிலாடுவதை தவிர்க்க முடியவில்லை. வேல் பிடித்தால் முருகன் எல்லாம் தமிழ்க் கடவுள் வேலனாகி விடலாம் என்ற தோற்றம் வைத்து மத்திய ஆளும் கட்சி தமிழகத்தில் விளையாட்டை ஆடலாம் என்று பார்க்க கோவிட் 19 காரணம் சொல்லி தமிழக அரசு பிடித்து உள்ளே வைப்போம் என்று செயல் பட்டிருக்கிறது. தனது தோழமை கட்சி என்ற போதிலும் இப்போது அந்த ஜெ அம்மா இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என நினைத்துப் பார்க்கிறேன்..


 சரி நாம் அரசியல் பேசினால் நமது நண்பர்களுக்கே பிடிக்காது அதனால் அகில உலக அரசியலையே பேசுவோம் அது ஆபத்து அதிகமற்றது. ட்ரம்ப் என்னும் மனிதன் பெரும் முதலாளித்துவ சிந்தனையில் ஊறிய எந்த விதிகளுக்கும் உட்படாத ஆண் பெண் சமத்துவம் பற்றி சிறிதும் கவலைப்படாத ஒரு ஆணவத் திமிர் படைத்த அமெரிக்க குடியரசுத் தலைவராக விளங்கியவர். பெரும் முதலாளி. கோவிட்19 பற்றி ஏதும் கவலைப்படாமல் அவரது வெள்ளை மாளிகையிலேயே பலருக்கும் பரவ காரணமாக இருந்து விட்டார். தலைவர் எவ்வழி அந்த நாடும் அவ்வழி என்று இந்த அமெரிக்க நாடு 4 வருடமாக தடம் புரண்டு போய்க் கொண்டிருந்தது.இந்த மனிதரை இங்கு உள்ள பிரதமர் கட்டித் தழுவி சுற்றுச் சுவர் எழுப்பி நமது மக்கள் நிலை மறைத்து விருந்து வைத்து கொண்டாடியதை எவரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது .கேட்டால் இதெல்லாம் இன்டர்நேசனல் டிப்ளமசி என்பார்கள்...இவரும் உலகை சுற்றி அவரும் உல்லாச வாசி கேட்பானேன்


இதில் சொல்லத் தக்க இரண்டாம் பகுதி என்ன வெனில் : கமலா ஹாரிஸ் என்ற இந்திய வம்சாவளிப் பெண் முதல் பெண் துணைக் குடியரசுத் தலைவராகியதும், முதல் கறுப்பினப் பெண் அப்படி துணை குடியரசுத் தலைவர் ஆனதும் அதுவும் ஆசிய இந்திய வம்சாவளி ஆகி உள்ளதும் நாமெல்லாம் பெருமைப் படத்தக்கது. 


அது மட்டுமல்ல இப்போது 46 வது குடியரசுத் தலைவராகி இருக்கும் ஜோ பைடன் (ஜோ பிடன் என்றும் சொல்லலாம்) 78 வயது முதியவர் குடியரசுத் தலைவரன அமெரிக்க வரலாற்றிலேயே அதிக வயதில் இந்த பதவிக்கு வந்திருக்கிறார்.


இவரின் முதல் வார்த்தை பொன் எழுத்துகளால் பொறிக்கப் பட வேண்டியது: நீங்கள் எதிர்க் கட்சிகளில் இருக்கலாம் ஆனால் நீங்கள் என் எதிரிகள் அல்ல...அனைவரும் சேர்ந்து செயல்பட்டு நல்லவைக்கு செயலாக்கம் தருவோம் என்பதாகச் சொல்லி இருக்கிறார். அனுபவம்..


ஆனால் இப்படி ஒரு மாறுதல் வருவதாலே உலகே மாறி விடப் போகிறதா? சட்டாம்பிள்ளை அண்ணண் அமெரிக்கா உலகு நாடுகளுக்கு வழி விடப் போகிறதா? வழிகாட்டப் போகிறதா? என்பதெல்லாம் அவர்கள் ஆள்வதைப் பொறுத்தே...ஆனால் அந்த அநியாயக் காரன் ஆணவக்காரன் என அனைவராலும் கருதப் பட்ட‌ ட்ரம்ப் அளவுக்கு மோசமாக இருக்காது என நம்புவோமாக...

இந்நிலையில் ரசியாவின் புடினுக்கு பர்கின்ஸன் நோய் இருப்பதாகவும் அவருக்கு மாற்றை கூடிய விரைவில் அறிவிப்பார் என்றும் புடின் மனைவி, குழந்தைகள், குடும்பம் அவர் உடல் நிலை கருதி விரைவில் பதவி விட்டு இறங்குங்கள் என வலியுறுத்தி வருவதான செய்திகளும் இன்று...


இத்தோடு நிறுத்திக் கொள்வோம்...ஏனெனில் இந்திய , தமிழக அரசியல் என்று நாம் பேச ஆரம்பித்தால் சேவை செய்யத் தான் உனக்கு அனுமதி அங்கீகாரம் எல்லாம் அதெல்லாம் கேட்கக் கூடாது என்ற எனது நண்பர்களே கேட்க ஆரம்பித்து விடுவார்கள்...



நீண்ட காலம் ஆகிவிட்டது எழுதியே...


நாட்கள் அப்படித்தான் சென்று கொண்டிருக்கின்றன‌


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.





Monday, November 2, 2020

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி நானறிந்த வரையில்: கவிஞர் தணிகை

  ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி நானறிந்த வரையில்: கவிஞர் தணிகை



சென்னை அடையாறு தியாசிபிகல் சொசைட்டியில் வளர்ந்த சிறுவன், முறையாக கல்வி படிக்காமல் தனிக் கல்வி வழியே விழிப்புணர்வு பெற்று உலகெலாம் விரிந்திருந்த அமைப்பை எல்லாம் கலைத்து விட்டு தான் ஒரு குரு அல்ல, தான் ஒரு வழிகாட்டி அல்ல, தமக்கென்று சீடர் எவருமே இல்லை தான் ஒரு தோழர்தாம், எவர் வந்தாலும் வாருங்கள் கலந்து பேசி நாம் உண்மையைக் கண்டறிவோம் என்ற நிலைப்பாட்டிலே உலகெங்கும் சென்று ஆங்கிலத்தில் உரையாற்றியவர்.


இவரை ஆரம்பத்தில் கடவுள் என்று வருவார் என்று எதிர் பார்த்தனர் இவரை வளர்த்திய பெருமக்கள் எல்லாம்.


நான் அதுவாக இருக்கிறேன், நீ தான் உலகம், புத்துணர்வு, இளமை,அறியாமை ஆகியவை மேலும் மேலும் கற்றுக் கொள்ள ஏணிப்படிகளாகும் என்ற மையப் பொருளுடன் பின்னிப் பிணைந்த வாழ்வின் ஓட்டத்தில் இணைந்தவர்.


இவரை ஞானி என்று குறிப்பிடலாம்.இவரைக் கற்றவர் எல்லாம் நல்ல மேதமை உடையவராக இருக்க வேண்டும் ரஜினிஸ் என்னும் ஓஷோ நறுக்கென்று சொல்வார் : சாதி இருக்கும் வரை கடவுள் இருப்பார், சாதியை ஒழிக்க மாட்டார்கள் கடவுளையும் என்பது போல வார்த்தைகளை வீசி விடுவார் வாளின் கூர்மையுடன். இவரைக் கிழவர் அப்படித்தான் சொல்வார் என்றெல்லாம் குறிப்பிட்டு விடுவார்.


ஆனால் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து பயணம் செல்ல முயன்றால் இப்படிப் பட்ட வார்த்தை ஒன்று கூட இல்லை என்பதைக் காணமுடியும்.


நீ யார் என்று கேட்டால் நீ ஒரு மனிதம் என்று உணர், சொல், செயல்படு என்பார். நாட்டின் கோடுகள் கூட மனிதரைப் பிரிக்க முடியாது என்பார். அப்புறம் எப்படி சாதி, மதம், இனம்,மொழி என்ற கோடுகள் பிரிக்க முடியும். 


இந்த சிகரமேறுதல் நமக்கு இராமலிங்க வள்ளலார், கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர்,

போன்றோரை நினைவுக்கு அழைத்து வரும். அப்படிப் பட்ட மனிதம் ஆக நாம் மாற ஆரம்பித்தால் புவி உயிர்கள் எவற்றுக்குமே  தீங்கு செய்யா மனம் நமக்குள் வந்து விடும். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் மிக வாடினேன் என்பதும் பசிக்கு உணவளிப்பதே சீவ காருண்யங்களில் தலையாயனது என்பதெல்லாம் விளங்க ஆரம்பிக்கும்.


கடவுள் என்ற பிரபஞ்சப் பொருள் மனிதரால் ஆக்கப் பட்டதே என்றும் தியானம் மூலம் நினைவைக் கழித்து விட முடியும் என்றும் கூறுவதுடன் தியானம் என்பதன் பாற்பட்டு அதற்கு அடிமையாகும் நிலை வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


அதை இதை எல்லாம் தேடிப் படித்து நம்மை நாமே கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்பார். எதுவாக இருப்பினும் அத்துடன் முற்றிலும் இணைந்து உணரும் போது வேறுபாட்டை நம்மால் உணரமுடியாது என்பார். ஒரு கணத்தில் நாம் பார்க்கும், கேட்கும், உணரும் அறியும் தெரியும் காட்சிகளை அப்படியே மறுபடியும் எதிர்பார்க்கும் மனப்பிணியிலிருந்து விடுபட்டால் நமது செயல் படாத மூளைப் பிரதேசங்கள் நன்கு செயல்பட்டு மூளையின் அதிகபட்ச செல்கள் செயல்பட்டு அறிவு அகண்டமாகி நாமும் அறிவை விருத்தி செய்து ஞானம் பெறலாம் என்பது இவரது வாழ்வின் போக்கில் நமக்கு சொல்லாமல் சொல்லும் சேதி.


இவரது பேச்சு உரைகளை பல்வேறுபட்ட நாடுகள், நகரங்கள், இடங்களில் செய்ததை 80க்கும் மேற்பட்ட தொகுப்புகளாக ஜெ.கெ.பவுண்டேசன் என்ற இவரது ஆர்வலர்கள் நடத்தி வரும் நிறுவனத்தால் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். உலகின் பல இடங்களிலும் இந்த நிறுவனம் சொல்லுமளவு பல பணிகளை செய்து வருவதாகவும் செய்திகள் இருக்கின்றன.


இவர் மரணம், பிறப்பு, மதம், கடவுள், தற்போதைய பிரச்சனைகள்,  மனிதப் பழக்க வழக்கங்கள், இப்படி தத்துவார்த்தமாக எல்லா தலைப்புகளிலும் கலந்துரையாடல் செய்துள்ளார்.  அது அனைவர்க்கும் பயன் அளிக்கும் என்பதுவும் எனது கருத்தும்



மறுபடியும் பூக்கும் வரை:

கவிஞர் தணிகை.




Saturday, October 31, 2020

நீ தான் உலகம்....கவிஞர் தணிகை.

 இயற்கையை இயற்கையின் இயல்புடனே இரசிக்க வேண்டும். அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து பார்த்தால் இரசிக்க முடியாது. அது மட்டுமல்ல மனிதர்க்கு வேண்டுமென்ற கோணத்துடன் மட்டுமே இயற்கையை பயன்படுத்திக் கொள்ளவும் கூடாது.



திருவண்ணாமலையின் கிரி வலம் இரத்து

தாரமங்களம் கையிலாய நாதர் ஆலயத்தில் அண்ணாபிசேகம் மக்கள் கூடத் தடை.

 சிறு சிறு கோவில்கள் எல்லாம் அண்ணாபிசேகம் செய்தன. சோறு கண்ட இடம் சொர்க்கமாமே...அதாவது சோற்று அலங்காரத்துடன் இருக்கும் சிவத்தைக் கண்டவர்க்கு சொர்க்கம் உண்டாம்.


அது அப்படி என்றால் விவிலியம், முகமதியம், புத்தம், ஜைனம்,போன்ற மதங்கள் எல்லாம் என்ன சொல்லும்? ஏன் அதே வைணவம், கௌமாரம், சௌரம், காணபத்யம், சக்தேயம் எல்லாம் என்ன சொல்லும்?



எல்லாம் இரண்டுள் அடக்கம். அதாவது உடல் உயிர். உடல் சக்தி உயிர் சிவம்.

எனவேதாம் திருமூலர் போன்றோர் உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே...

உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாயதுவே கோபுர வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்கு சீவனே சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே!


கட உள் கடவுள்...


புளூ மூன்  பார்க்க புறப்பட்டேன். நிலா நான் பார்க்க புறப்பட்டு கிழக்கு நோக்கி முன்னேறியதைப் பார்த்து பயந்து ஓடி ஒளிந்து கொண்டதோ...

கருப்பு ரெட்டியூர் சென்று மேடு ஏறும் போது மஞ்சள் நிலா பெரு வட்டமாக கீழ் வானில்.

முழு நிலவும், சூரியனும் உதிப்பது கிழக்கில் இருந்துதானே.



துணைவியை அழைத்து அருகிருக்கும் வீட்டு மாடி ஏறி கீழ் வானில் மஞ்சள் நிலா காணச் சொன்னேன் செல்பேசியில்

துணி துவைத்துக் கொண்டிருக்கிறேன்...சிவா குடும்பம் பேசியபடி இருக்கிறார்கள்...தொந்தரவு செய்யாதீர் , நான் பார்த்துக் கொள்கிறேன்...



தங்கையை அழைத்தேன், மாடியில் நடமாடிக் கொண்டே பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன். புளூமூன் என்றால் ஒரே மாதத்தில் இரண்டு முழு நிலாக் காட்சி வருவதுதானே...(அதில் என்ன என்பது போன்ற பதிலுடன்)



எனக்கு என்னவோ மிக அற்புதமான நாளாக நேரமாக இருந்தது. அந்த நேரத்துக்காகவே இரவில் டார்ச் விளக்கை எடுக்காமலே கூட நடைப்பயிற்சிக்கு சென்றிருந்தேன்.



காண்பதெல்லாம் காணும் காட்சி எல்லாம் மகிழ்வாக இருந்தது. விளக்கில் இருந்து பரவும் கதிர், மின் கம்பம் மேல் செடிகொடிகளின் நிழல்,பாலத்தின் மேல் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்...ஒரு வீட்டில் சண்டை, வாகனங்கள் எல்லாம் அதி வேகமாக விரைந்து கொண்டிருக்க நான் சிறிது நேரம் அந்த சாலையோர பாலச்சுவர் மேல் அமர்ந்தபடி இருந்தேன்...எல்லாம் ஏன் இந்த அளவு வேகமாக இருக்கிறார்கள்...காலத்தை நேரத்தை இயற்கையை இரசிக்க சிறிது நேரம் ஒதுக்குவார்களா?

நிலா காய்கிறது நிதம் தேய்கிறது யாரும் இரசிக்க வில்லையே...என் கண்கள் மட்டும் அதைக் காணும்...

பொருளின்றி போகலாம் பொருள் செலவின்றி போகலாம் உங்களுள் இருப்பதுதானே சாந்தி, மகிழ்வு, நிம்மதி யாவுமே...

நீ தான் உலகம்.



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.






Thursday, October 15, 2020

OCTOBER 15

 அறிவொளியாய் அப்துல் கலாம்

அப்துல் கலாம் 89 வது பிறந்த நாள் கவிதை
அக்டோபர் 15.











காலம் புறம் தள்ள முடியா பெயர் கலாம்
காலப் புத்தகத்தில் கலாமின் பக்கத்தை படிக்காமல்
ஒதுக்கி விட்டு அடுத்த பக்கத்திற்கு செல்லவே முடியாது
ஏனெனில் அது காலத்தால் அழிக்க முடியாத கவிதை
அறிவின் இலக்கணம், இலட்சியச் சிகரம் தொட்ட கதை.

அன்றும் இன்றும் என்றும் இந்தியாவின்
மக்கள் குடியரசுத் தலைவர்(என்றால் அது கலாம் மட்டுமே)

அக்டோபர் 2ல் மகாத்மா காந்திக்கு 151 வது பிறந்த நாள்
விழா கண்டோம்.
அக்டோபர் 15ல் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமுக்கு
89 வது பிறந்த நாள் விழா காண்கிறோம்.

காந்தியும் கலாமும் ஒன்றுதான் என முன்னுரைத்தேன்
என் கவிதை வரலாற்றுப் பதிவுகளில்

இந்து மதச் சின்ன குத்து விளக்கை
கிறித்தவ மதச் சின்ன மெழுகுவர்த்தியால்
முகமதிய அப்துல் கலாம் ஏற்றுகிறேன் என்ற போது
அவர் காந்தியானார்.
மத நல்லிணக்கமே இந்த தேசத்தின் மகாத்மியம் என்ற‌ வழியில்.

அமெரிக்கப் பாதுகாவலர்கள் இவர் காலணியின் உள்ளுறை முதல்
ஆடை வரை ஒரு முறையல்ல  இரு முறை துகிலுரிந்த போதும்.போதும்
சிரித்தபடியே அவர் பணியை அவர் செய்கிறார் என
காந்தியின் சகிப்புத் தன்மையுடன் ஒன்றி இவரும் மகாத்மாவானார்.

எனவே காந்தியும் கலாமும் ஒன்றுதான்
நமக்கென்றும் கண்கள் இரண்டுதான்
காட்சி ஒன்றுதான்.
இருவருமே இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே வழிகாட்டிகள்

அரை நிர்வாணப் பக்கிரி என்ற வின்ஸ்டன் சர்ச்சிலை விட‌
அறிவாளி காந்தி, எனது ஆடையையும் சேர்த்து
நீ அணிந்திருக்கிறாய் என்று சொன்ன போது
வின்ஸ்டன் சர்ச்சிலை விட அறிவாளியானாலும் காந்தி
அரை நிர்வாணப் பக்கிரியாகவே சாகும் வரை வாழ்ந்தார்.

பொக்ரான் அணுவெடிப்பால்  அமெரிக்க அண்ணனை
அண்ணாந்து பார்க்க வைத்தார் இந்தியாவை
எதற்கும் அசராத‌ கலாம்

மேடைகளீல் கால் மேல் காலிட்டு ஒருபோதும் அமராத கலாம்
எளிமைக்கோர் அடையாளம்
கவிஞர் நிற்கக் கூடாது நாற்காலியில் அமருங்கள் அமருங்கள்
எனும் மக்கள் தலைவன் அற்புதக் கலைஞன்
அவரை நமது நாடு இன்னும் பயன்படுத்தி இருக்கலாம்
மேம்பட்டிருக்கலாம்.

பிழைப்புக்காக விமானியாக முயன்று தோற்றவர்
உழைப்பினால் நாட்டின் முப்படைகளுக்கும் தளபதியாகி
சரித்திரமானார் சரித்திரமானாலும் இந்தியாவின் தரித்திரம் போக்க‌
எண்ணியபடியே பள்ளிக் குழந்தைகளிடையே சங்கமமானார்.

டிசம்பர் 28 2002ல் இராமமூர்த்தி நகரில் நிம்ஸ் பள்ளியில்
 எனது நதிகள் இணைப்புக் கவிதை புகழ்க் கொடி நாட்டியது
அதற்காக கன நீராய் இருந்த நான் வேண்டுகோளின் படி
மிக இலேசாயிருந்தேன் அது போலவே இன்றும்....

அன்று நதிகள் இணைந்தால் மின் சார மீன் பிடிக்கலாம்
பயிர்களை வானம் பார்க்காது வளர்க்கலாம்
குடிநீரை பாக்கெட்டிலும் பாட்டிலிலும் அடைக்காதிருக்கலாம்
இந்தியத் தலைமுறைகளை இனி வரும் பரம்பரையில்
அமெரிக்கருக்கும் சீனருக்கும் முன் வைக்கலாம்
என்றெல்லாம் வேண்டிய கவிதை கண்ட
பொறியாளர் சி. மணி மேடையென்றும் பாராமல்
ஆணென்றும் கருதாமல் எனக்கிட்ட முத்தம்
அன்று கூச்சமாக இருந்தது இன்று ஏக்கமாக இருக்கிறது
அவர் மறைந்து விட்ட போதும் என்னுள் மறையாதிருக்கிறது
அந்த அன்பின் மொழி...

கலாம் தோல்விக்கு தோல்வி கொடுத்தவர்
சவால் வாய்ப்பென்பவர் கலாம் ஒரு முழுமை பெற்ற அறிவொளி
அன்பின் சுடர் இது போன்ற அறிவாளிகளிடம் மட்டுமே
அவ்வளவு எளிமை வரும்...




நாட்டில் இலஞ்ச ஒழிப்பு எண்ணம் செயலாக மாற வேண்டும்
அத்தகைய குடும்பங்கள் பெருகப் பெருக இலஞ்ச் ஔஉழல்
நாட்டில் ஒழியுயும் என எனைத் தனியாக நின்று போராடுவதை
தடுத்து புத்தி புகட்டியவர்...அவர் தம் கடித்தத்தின் முதல் வரியை
தம் கைப்பட எழுதி ஆரம்பித்திருந்தார் அந்த ஒரு கடிதம்
எனக்கு ஒரு உத்வேக முகவரி தந்தது. டிசம்பர் 23 2004 முதல்.
அப்போது அவர் குடியரசுத் தலைவர் நானோர் அடித்தட்டுத் தொண்டன்

எனது நூல்கள் அவரின் கைகளிலும் தவழ்ந்ததையும்
என் கைகளில் தவழ்ந்த புதல்வர் அவரின் ஒளியை
விவரமறியாத போது ஒரு முறையும்
விவரமறிந்த போது மறு முறையும் உணர்ந்தான்
அடுத்த ஆணிடில் நமது கலாமெனும் கால ஒளி
கவிதை மொழி அறிவொளி நம்மிடமிருந்தெலாம் உதிர்ந்தது
செய்தி கேட்ட அகிலமெ அதிர்ந்தது

ஆட்டோ ஸ்டேன்ட்களிலும் ஆங்காங்கே மூலை முடுக்குகளிலும்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலகெங்கும் ஒலித்த குரல்
அவருக்குப் பிடித்தமான திருக்குறள் போல எங்கெங்கும்....

யாரையுமே வெறுத்து ஒதுக்கி ஏசாத குணம்
எதிர்த்துப் பேசாத இனம்.
பெற்றோர் ஆசிரியர் மாணவர் சேர்ந்த தங்க முக்கோணமே
நற்சமுதாயக் கட்டமைக்க வழி என்ற பாதை அமைத்தவர்

யாரையும் குறை சொல்வதை விட இருள் காட்டிலும்
ஒரு விளக்காக இருங்கள் ஒளி விளக்கு ஒரு விளக்கு
திருவிளக்கு எண்ணற்றா தீபங்களாகி
அறிவொளியாக சுடர் விட்டு நாடெங்கும் பரவட்டும்
நல்லோர் மணம் பரப்பட்டும் அல்லவை தேய அறம் பெருகட்டும்

மாணவர்களின் முக்கிய இலக்கணம் கேள்வி கேட்பதே என்றவர்
அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் அதுவே அடித்தளம் என்று வென்றவர்.
வாரத்தின் 5 நாட்களை சேர்ந்திருக்கும் நிறுவனத்துக்காக உழையுங்கள்
மற்ற 2 நாட்களையும் நாட்டு முன்னேற்றத்திற்காக விதையுங்கள்
என்ற இலக்கணம் வகுத்தவர் தம் சீடர்களுக்கு



ஓய்வு என்பதற்கு மாற்றாக வேறு ஓர் ஆக்கபூர்வ உழைப்பை
விதைத்து மடை மாற்றம் செய்து பாருங்கள் என விழிகாட்டி
வழி காட்டியவர்
சுருங்கச் சொல்கிறேன்:
கலாம் ஒரு நல்ல மாணவர், கலாம் ஒரு உயர்ந்த ஆசிரியர்
கலாம் ஒரு உன்னதத் தலைவர், கலாம் ஒரு மனிதச் சிகர‌ம்
கலாம் ஒரு பிழையிலா மொழி கலாம் ஒரு விலையிலா வழி
கலாம் நமது வாழ்வில் என்றும் சுடர் விடும் அறிவொளி...

                       என்றென்றும்
                      அன்புடன்
  தமிழ் நாடு அன்பு வழி அறப்பணி மன்றத்திற்காக‌
                      கவிஞர் சு. தணிகை....



Thursday, October 8, 2020

ஓசூர் திருப்பூர் ஆகிறதா? கவிஞர் தணிகை

 ஓசூர் திருப்பூர் ஆகிறதா? கவிஞர் தணிகை

Hosur - Wikipedia

திருப்பூர் ஒரு பனியன் தயாரிப்பு பின்னலாடையில்  உலகளாவிய புகழ் பெற்ற நகராக இருந்தது மட்டுமல்ல குற்றப் பின்னணியிலும் தமிழகத்திலேயே முன்னணியில் இருந்தது. ஒரு காலம்.
 அது போல ஓசூரும் இருக்கிறது தொழில் வளர்ச்சிப் பின்னணியில் முன்னேறும் நகரில் எல்லாம் குற்றமும் பெருகி வருகிறது என்பதை செய்திகள் மற்றும் நடைமுறை வாழ்வுகள் தெரிவிக்கின்றன.

 புதிதாக அங்கு பணிக்குச் செல்லும் இளைஞர்களை வழிமறித்து தனியாகச் செல்பவர்களிடம் உள்ள பொருட்களை பிடுங்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் மிகவும் இயல்பாகி விட்டன.

ஒரு உண்மைச் சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள்:

வெளியூரிலிருந்து ஒரு தற்காலிக பணியாளராக சில இளைஞர்கள் ஒரு  தொழிற்சாலையில் சேர்க்கப் படுகின்றனர். அதற்காக அந்த இளைஞர்கள் அளவை மீறிய வாடகையையும் முன் தொகையையும் கொடுத்து வீட்டை ஏற்பாடு செய்து தங்கி பணிக்குச் செல்ல ஆரம்பிக்கின்றனர்.

வந்தியத் தேவன் நம்ம கதாநாயகனும் அப்படித்தான் சபரியுடன் அங்கு சென்ற புதிது.

இச்சூழ்நிலையில் ஒரு நாள் அதிகாலை வந்தியத் தேவன் அதிகாலை 5 மணி சுமாருக்கு எழுந்து கதவைத் திறந்து சற்று காற்று வாங்கி விட்டு மாடி முதல் தளத்தில் அவருடைய அறை இருந்ததால் சற்றே கதவைத் தாளிடாமல் சாத்தி விட்டு கழிப்பறைக்குச் செல்லலாம் என சற்று நடக்கிறார்.

இவரின் இன்னொரு அறைப் பங்காளரும் நண்பருமான  சபரி தூங்கிக் கொண்டிருக்க, கதவு சற்று திறக்கப் படுகிறது...நாம் நமது ஆவியுலக நடப்பை எடுத்துக் கொண்டு ஆவிகள் வந்து கதவைத் திறந்ததோ என கற்பனைக்குச் செல்ல வேண்டாம்...ஏன் எனில் இந்த சம்பவத்தை நான் கேள்விப்பட்டபோது கதவு சற்று திறந்தது என்னும் போது ஒரு வேளை காற்று வேகமாக அடித்து திறந்திருக்கலோமே என்றும் சிந்தித்தேன்...

ஆனால் கதவைத் திறந்தது ஒரு சிவப்பு பொட்டு எல்லாம் வைத்துக் கொண்டிருந்த ஒரு நபர்...அறையில் கழிப்பறைக்குச் செல்லலாம் என சென்ற  வந்தியத் தேவன் திரும்பி வந்து என்ன யார் என கேட்க...அந்த விடியற்காலை ஐந்தரை மணியளவில்: தண்ணீர் கேன் போட வந்தேன் என அந்த நபர் சொல்லித் தடுமாற, என்ன இந்நேரத்தில் தண்ணீர் கேனா, எனக் கேட்க  நாங்கள் கேட்கவில்லையே என்று சொல்ல வந்த அந்த விடியல் கால அழையா விருந்தாளி திணறியபடி உளறிக் கொண்டே இவர் ஒவ்வொரு அடியாய் கேட்டுக் கொண்டே முன்னே வர அவர் பேசிக் கொண்டே பின் செல்ல...இவர் நிலையை உணர்ந்து கொண்டு அவரைப் பிடிக்க ஆவலுற்ற வண்ணம் விரைவாக நடக்க அவரோ ஓட ஆரம்பிக்க,

 உடனே வந்தியத் தேவன் திருடன், திருடன் எனக் கூச்சலிட அந்நேரத்தில் கீழ் தரைத் தளத்தில் பணிக்குச் செல்ல தயாராகி தனது இரு சக்கர வாகனத்தை இறக்கிக் கொண்டிருந்தவர் இந்த திருடன் ஓடி வருவதைப் பார்த்து காலை விட அவன் குப்புற விழுந்தடித்து முகமெல்லாம் காயம் பட்டதாக அந்நேரத்தில் தேநீர்க்கடையில் வெளியே தேநீர் அருந்த அமர்ந்திருந்தவர் சொல்லி இருக்குமளவு எழுந்தோடி தப்பித்து சென்றிருக்கிறான்...

ஆனால் அவனுக்கு நல்ல அடி முகமெல்லாம் என பார்த்தவர்கள் சொல்கிறார்கள்...

வெளிநாட்டு ஆர்டர்கள் அதிகரிப்பு ...

;;;;;வந்தியத் தேவன். சொல்லக் கேட்டது


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை