Sunday, July 26, 2026

உமிழ் நீர் ஒரு சிறந்த மருந்து: கவிஞர் தணிகை

 உமிழ் நீர் ஒரு சிறந்த மருந்து: கவிஞர் தணிகை



அறு சுவை உணவை உட்கொண்ட நமது முன்னோர் கொடுத்து வைத்தவர்கள். அன்றாடம் நமது உணவில் அறுசுவை உணவு இருக்கும் பட்சத்தில் நோய் நொடிகள் அண்டாது என்பது பேருண்மை


உணவை எவ்வளவு கடினமானதாக இருந்த போதும் அதை நன்றாக கடித்து மென்று உமிழ் நீருடன் கலந்து உள் செலுத்தும் போது செரிமானம் சார்ந்த நோய்கள் வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏதும் நேராது என்பதும் உண்மை அது அனைவரும் அறிந்ததே.


முன் சொன்னவற்றில் எல்லாம் உமிழ் நீருக்கு பெரும் பங்குண்டு.


அடுத்து நான் அனுபவித்ததை கற்றுக் கொண்டதை தாயிடமிருந்து அறிந்ததை தற்போதும் அது எனக்கு உதவிகரமாக மருந்தானதை சொல்கிறேன்.நம்பிக்கையிருப்பின் நீங்களும் பின் பற்ற.


எமது அன்பின் மருத்துவர் அரவிந்தசாமி அவர்கள் மகனது ஒரு பிரச்சனைக்கு சில காரணிகளைச் சொல்லும் போது சர்வாங்காசனம் செய்யுங்கள் நல்லது என்றார்.


சர்வாங்காசனம் இரத்த அழுத்தம் இருப்பார் செய்யக் கூடாது. மகனது மருத்துவ யோசனைகளில் இதை மீண்டும் அடியேனும் பின் பற்றலாமே என சுமார் ஒரு வார காலம் தியானம் முடிந்த பின் தியானம் முடித்த பின் சில நிமிடங்கள் செய்து வரலானேன்


அதன் விளைவாக அல்லது கடுமையான வெயிலின் உஷ்ணத்தின் விளைவாக காதருகே தலையில் ஒரு சிறு கொப்புளம், தலையில், மற்றும் மூக்கின் நுனியில் ஒரு கொப்புளம் உருவாகி இருந்தது.


காதருகே மற்றும் தலையில் உள்ளதை எண்ணெய் போன்றவற்றால் குளிர்படுத்தியதால் தணிந்தது என எண்ணுகிறேன் அதைப்பற்றி சொல்ல ஒன்றுமில்லை.


மூக்கின் நுனியில் நன்றாக பெரிதான கொப்புளத்தின் மேல் இடது கை மோதிர விரலில் சிறிய அளவில் உமிழ் நீரை எடுத்து ஓரிரு நாட்கள் சில முறை தடவி வந்தேன். அப்படியே அது பொடிந்து போய்விட்டது எந்தவித சுவடும் செய்யாமல். பொருக்கை எடுத்து விட்டேன்.


பொதுவாகவே முகம் தொடர்பான முக்கிய இடங்களில் ஏதாவது கட்டிகள், ,

 கொப்புளங்கள், கண்கட்டிகள் வரும் போது தாய் எச்சில் தொட்டு வையுங்கள் சரியாகிவிடும் என்பார் அது நூற்றுக்கு நூறு சரியாகிவிட்டது. இதற்காக வேறு ஆங்கில மருத்துவம் ஏதாவது செய்திருந்தால் வீண் செலவும் வேறு விளைவும் ஆகி இருக்கலாம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Friday, July 24, 2026

அறிவியல் ஆசிரியர் சந்திரசேகரன் சாரின் புகழுடம்பு இருக்கிறது: கவிஞர் தணிகை

 அறிவியல் ஆசிரியர் சந்திரசேகரன் சாரின் புகழுடம்பு இருக்கிறது: கவிஞர் தணிகை



உயர் பள்ளி வகுப்புகளுக்கு அறிவியல் சொல்லித் தந்த ஆசிரியர். எளிமையாகவே இருப்பார் இந்த ஜென்டில்மேன்.

மாணவர்களின் மனதை (அதிகம்) பேசாமலே புரிந்து கொள்ளும் ஞானம் பெற்றிருந்தார்.பார்த்தவுடன் இவரின் பூஞ்சிரிப்பு எங்கள் உள்ளத்தில் ஒரு இனிய மலரின் பூப்பு, தூண்டு உணர்வின் நெருப்புப் பொறி.


மெதுவாகவே நடந்து செல்வார், எவரையுமே கடிந்து பேச மாட்டார், சிரித்துக் கொண்டேதான் பேசுவார். ஓய்வறியா ஒரு நல்லாசிரியர். ஓய்வுக்கும் பின்னும் ஆசிரியப் பணியைத் தொடர வாய்ப்பு பெற்றிருந்தார் கற்றவர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பேயல்லவா! தோழர் ராஜு சொன்னது போல இது ஒரு மேல் தூக்கி விடும் சக்தி.


அனேகமாக 9 ஆம் வகுப்பு என்றே நினைக்கிறேன் புதிதாக ஒரு அறிவியல் பாடம் புகுத்தப்பட்டு தேர்வு வினாத்தாள் மாதிரிகள் மாற்றப்பட்டு திறனாய்வு செய்யும் வண்ணம் இருந்தன. அதாவது ஒரு மதிப்பெண் கேள்வுகள் 40, இரண்டு மதிப்பெண் கேள்விகள்:15 ஐந்து மதிப்பெண் கேள்விகள் 6 என. அதில் பின் இரண்டுக்கும் சாய்ஸ்கள் அதாவது தெரியாததை விட்டு விட்டு அல்லது தெரிந்ததை மட்டுமே எழுதமளவு கூடுதல் கேள்விகள் 15 என்றால் 20, 6 என்றால் 10.


எனக்கு நன்கு நினைவிருக்கிறது அத்தனையும் சரியாக எழுதி விட்டேன், ஆசிரியருக்கு ஒரே புளகாங்கிதம். அது முதல்தாம் அறிவியல் போன்ற பாடங்களுக்கும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் போடலாம் என்ற நிலை அந்த ஆண்டு முதல் அமல்படுத்த நேர்ந்திருக்கலாம் என நினைவு.


சரித்திர பூகோளம், தமிழ், அறிவியல் , ஆங்கிலத்தின் முதல் தாள், இரண்டாம் தாளின் சாதனைக் கட்டுரைகள்,போன்றவை இவர் போன்ற ஆசிரியர்களாலே தாம் எமக்கு பிடித்துப் போய் வாழ்வில் ஒன்றாகிவிட்ட ஒன்றாய் இணைந்திருந்தன.


வி.ஹெச்.எஸ்.எஸ் VHSS பள்ளிக் குழுவினர் அவரின் பூத உடலுக்குத் தகுந்த மரியாதை செய்வார்கள் என நம்புகிறேன். எனக்கும் உடல் நிறைய உபாதை, மற்றும் செய்ய வேண்டிய முக்கிய கடமைக்காக காத்திருப்பு இருக்கிறது.எனினும் எவராவது கலந்து கொள்வதை தெரிவித்தால் அவர்களுடன் நானும் ஒருவனாக இணைந்து கொள்ள அவா.


ஆசிரியர்கள் முன் செல்வார்கள், நாமும் ஒரு நாள் பின் செல்வோர்தாமே! அதற்கிடையே புகழுடம்பு அகலாதிருக்க எதையாவது செய்து வைப்போம். இந்தப் பதிவு இந்தியாவில் இருந்து படிப்பாரை விட  உலகெங்கும் உள்ள மற்ற நாடுகளில் படிப்பார் அதிகம் உள்ள வலைப் பூ. 


இந்த செய்தியை எனக்குத் தெரியப்படுத்திய தோழன் ராஜீ, மற்றும் பள்ளி வாட்ஸ் அப் குழு நண்பர்களுக்கு எனது நன்றிகள்.இவர் மறைந்த செய்தி எனை முதியவனாக்கிவிட்டது.


அய்யாவுடைய ஆன்மா எப்போதும் அவருக்கு நாம் செய்யும் அஞ்சலிகளை ஏற்றுக்கொள்ளும், ஆசீர்வதிக்கும் என்று உளமார உண்மையாகவே நம்புகிறேன்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Wednesday, July 22, 2026

அன்னை தெரஸாவின் அடுத்த வாரிசு: கவிஞர் தணிகை

 அன்னை தெரஸாவின் அடுத்த வாரிசு: கவிஞர் தணிகை



ஸ்விட்சர்லாந்து‍‍‍ ‍- துபாய் -கார்ப்ரேட் - சான்ட்ரா...மேற்கு வங்க மாநில குக்கிராமம் - பள்ளிகள்-- குழந்தைகள் மேம்பாடு



ஸ்விட்சர்லாந்தில் பிறந்து வளர்ந்து படித்து துபாயில் பல ஆண்டுகள் கார்ப்ரேட் கம்பெனிகளில் பணி புரிந்து விட்டு வாழ்க்கையில் இலட்சியம் என்பது வேண்டும் என்ற முடிவில் வேலையைத் துறந்து இரண்டு மேல் சட்டைகள், இரண்டு கால்சட்டைகளுடன் புறப்பட்டு வந்து தீர்மானத்திலிருந்து பின் வாங்காமல் மேற்கு வங்கத்தில் சாகர் என்ற ஒரு தீவுக் கிராமத்தை தேர்ந்தெடுத்து அங்கு சுமார் 350 பள்ளிக் குழந்தைகளுக்கு பெறாத தாயாக விளங்கும் இந்த மங்கை இன்னொரு தெரஸா.



குழந்தை மணத்தை தடுப்பது, குழந்தைகளைக் கடத்துவதை தடுப்பது, மற்றும் குடும்ப வன்முறைகள் சமூக வன்கொடுமைகளைத் தடுப்பது ஆகியவற்றை இந்தப் பள்ளிகள் மூலம் கொண்டு செல்கிறார்.


பொருளாதாரங்களை சம்பாதிப்பதும் குவித்துக் கொள்வதும், அதை சொந்தமாக்கிக் கொள்வதும் வாழ்வின் இலக்கல்ல. எனது வாழ்வின் இலக்கு கிராமிய மேம்பாடும் பள்ளிக் குழந்தைகளின் படிப்புமே  என்று இவர் இந்தியப் பள்ளித் திட்டம் என்று ஒரு திட்டத்தை ஆரம்பித்து இங்கு மேற்கு வங்காளத்தில் எவரும் எளிதில் சென்றடைய முடியாத ஒரு குக்குராமத்தை தேர்ந்தெடுத்து அங்கு குழந்தைகளை என் பள்ளியில் சேருங்கள் என்று கோரிக்கை செய்ய இவரை அப்போது எவருமே நம்பவில்லை என்றும் இப்போது இவரை நம்பி சுமார் 350 குழந்தைகளின் வளர்ச்சியும் அவர் குடும்ப வாழ்வும் உள்ளன என்று ஆங்கில பத்திரிகைகள் எழுதியுள்ளன. 



இது போன்ற நல்ல செய்திகளை தமிழில் செய்தி ஏடுகளில் எங்கும் படித்த நினைவில்லை.இவர் அந்தக் குழந்தைகளுக்கு கற்பிக்கிறார், அவர்களுடனேயே உண்டு உறங்கி தமது வாழ்வை அர்ப்பணித்து வருவது மிகவும் நல்ல விதையாக விருட்சம் எழுவதன் அறிகுறியாகத் தெரிகிறது.


2012 ஆம் ஆண்டு முதலில் இவரது  சொந்த சுய சேமிப்பை இந்த திட்டத்துக்கு செலவிட்டார் என்பதும் குறிப்பிடப்படுகிறது.



இது போல சில ஆசிரியர்களும், சில நல்ல உள்ளங்களும் தங்களது வாழ்வை சமுதாய மேம்பாட்டுக்கு செலவிடுகிறார்கள் என்றாலும் வெளி நாட்டிலிருந்து சுக போக வாழ்வைத் துறந்து இந்த வாழ்வுக்கு அடித்தளமிட்டதற்காக சாண்ட்ரா லவி கோஜ்கோவிக் என்னும் இலட்சுமியை நாம் போற்றுகிறோம் வாழ்த்துகிறோம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Friday, July 17, 2026

SPOTIFY.COMல் தணிகையில் குரலில் மாக்ஸிம் கார்க்கியின் தாய்: கவிஞர் தணிகை

 ஸ்பாட்டிவை டாட் காமில் தணிகையில் குரலில் மாக்ஸிம் கார்க்கியின் தாய்: கவிஞர் தணிகை



600 பக்கமுள்ள மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவலில் 400 பக்கங்களுக்கும் மேல் படிக்கப் பட்டு ஸ்பாட்டிவை டாட் காமில் சேர்க்கப்பட்டுள்ளது.


கேட்டுப் பாருங்கள்.


உலக இலக்கிய வரிசையில் மிக முக்கிய இடத்தில் இருக்கிற இந்த நாவலை இப்படிச் செய்ய வேண்டுமென ஒரு இளைஞரின் வேண்டுகோள் எனைச் செய்ய வைத்துள்ளது.


படிப்பதுதான் குறைந்து விட்டது கேட்டாவது பாருங்களேன்., பொன்னியின் செல்வன், வேள்பாரி இப்படிப்பட்ட வீரம் செறிந்த நாவல்களை ஒலி வடிவத்தில் கேட்டு வருகிற சமுதாயத்தில் இந்த மாக்சிம் கார்க்கியின் தாய் சற்று வித்தியாசமானது.


மேலை நாட்டு இலக்கியங்கள், மொழி பெயர்ப்புகள், உள் நாட்டு வேறு மொழி இலக்கியங்களின் மொழி பெயர்ப்புகள் போன்றவற்றை வெகுவும் அதிகமாக படித்து நுகர்ந்து அனுபவித்த காரணத்தினால் இதை இப்போது செய்து வருகிறோம்.


ஒரு இளைஞர் தமது வேண்டுகோளாக கவிஞர் தணிகையின் புத்தகங்களையுமே இப்படி செய்யக் கூடாதா ? என விரும்பிக் கேட்டிருக்கிறார். அதன் முயற்சி இனி தொடரலாம். டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு, மகாத்மாவின் சத்தியசோதனை, இப்படி செல்லலாம் என நினைத்த எமக்கு இதுவும் கூட ஒரு நல்ல யோசனையாக இருக்கவே அதையும் போதிய அளவு அல்லது தேவையான அளவு செய்து விட்டு அதன் பின் உலக இலக்கிய நூல்களுக்குள் செல்லலாம் என்ற அவா.


இறந்த பின்னும் சாதனை செய்யும் குரல்கள் ஜீவிதம் செய்கின்றன.அப்படி கூட இந்த முயற்சியும் இருக்கட்டுமே..


இந்த குரல் பதிவுகளை தினமும் ஸ்பாட்டிவை டாட் காமில் ஏற்றிய இணைப்பை வாட்ஸ் அப் இணையத்தின் வழியே தொடர்பில் உள்ள சில குழுக்களுக்கும் தெரியப்படுத்தி வருகிறோம். ஆர்வம் உள்ளார் இணைந்து கொள்ளலாம். இணைப்பு உங்களுக்கும் அனுப்பி வைக்கப் படும் . கேட்டுப் பாருங்கள் நன்றாக தமிழ் இருக்கும். நன்றி. வணக்கம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Friday, July 3, 2026

கூ(ட்)டு கண்டேன்: கவிஞர் தணிகை

 கூ(ட்)டு கண்டேன்: கவிஞர் தணிகை



அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடு விண்ணில் வீசு!


திரு விளக்கை ஏற்றுவதை விட தெரு விளக்கு ஏற்றுவது சிறந்தது!


பயன்படுத்தா பொருள் பரண் மேலே ...பழமொழி

பயன்படுத்தா பொருள் வண்டிக்காரருடன் ...புது மொழி


ஒழுக்கமிலா ஆட்சியின் கீழ் ஒழுக்கமிலா மக்களுக்கு வாழ்வது பிடிக்கும்


சேற்று நிலத்தில் பட்ட மயிலின் தோகையை கழுவி விட ஆசை...


குயிலுக்கு மனிதர் மேல் நம்பிக்கையில்லை


மயிலுக்கு மனிதர் மேல் நம்பிக்கையில்லை


பறவைகளுக்கு மனிதர் மேல் நம்பிக்கையில்லை


விலங்குகளுக்கும் மனிதர் மேல் நம்பிக்கையில்லை


மனிதர்களுக்கும் மனிதர் மேல் நம்பிக்கையில்லை


மனிதர்களுக்கு கடவுள் மேல் நம்பிக்கை...


நம்பிக்கை வை நம்பி கை வை...

நம்பியவர்க்கு நடராஜன் நடராஜன் தான்

நம்பாதவ‌ர்க்கு எமன் ஒரு தூதுவன் தான்

நம்பாதவ‌ர்க்கு எமன் ஒரு தூது வந்தான்

நம்பாதவர்க்கும் நம்புபவர்க்கும்

கவிஞர் மகிழ்வதற்கும் கோபத்திற்கும் காரணங்கள் வேண்டியதில்லை

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை