Thursday, September 19, 2019

என் நட்பின் நனி சிறந்தவர்கள்: 5. அழகு என்கிற அழகிரிசாமி: கவிஞர் தணிகை.

என் நட்பின் நனி சிறந்தவர்கள்: 5. அழகு என்கிற அழகிரிசாமி: கவிஞர் தணிகை.



அழகிரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போது எனது விடுதி அறைத் தோழன். அவன் மேல் கட்டிலைத் தேர்வு செய்து கொண்டான். என்னுடையது கீழ்க் கட்டில்.பத்தாம் வகுப்பு படித்த இந்த சின்னப்பயல்களையும் எங்களோடு  அதாவது பதினோராம் வகுப்பு படித்த எங்களோடு காலம் இணைத்து விட்டது. அப்படி பத்தாம் வகுப்பு முடித்து எங்களுக்கு சமமாக படிக்க வந்தவர்களில் இந்த அழகிரி, இளங்கோவன் இப்படி இன்னும் பல பேர். இவனும் பாலுவும் சேர்ந்து சிறந்த கல்லூரியின் டேபுள் டென்னிஸ் ஆட்டக்காரர்கள். அப்போது காமன் ரூம் விளையாட்டு அறையின் பொறுப்பாளன் நான் . அது வேறு அவனுக்கு பெரிய ப்ளஸ் பாய்ண்ட்  எப்போது வேண்டுமானாலும் ஆடுவதற்கு. ஆனாலும் அதிலும் நான் விதிமுறைகளின் படி நேரம் ஆகிவிட்டால் போங்கடா என வெளியில் துரத்திவிடுவேன்.

அழகிரியின் திருப்பூர் வீட்டுக்கு பல முறை சென்றிருக்கிறேன். அப்போது அவனது தந்தை ஒரு மில்லில் பணி புரிந்து வந்தார். அம்மா வீட்டில் வேஸ்ட் காட்டன் என்றும்  மற்ற வீட்டில் செய்யும் பணிகளையும் செய்து வந்தார். அவனது தந்தை, தம்பி சிவான் என்னும் சிவகுமார்....இவரை சமீபகாலத்தில் நடந்த  அழகிரியின் ஒரே மகன் திருமணத்தின்போதுதான் நீண்ட காலத்துக்கும் பின் பார்த்தேன் நெற்றியில் விபத்து நடந்த அடையாளமான பெரிய தலைக் கட்டுடன்.

தாத்தா, அப்பா, அம்மா, தம்பி ஏன் அவனது முறைப்பெண்ணாக இருந்து துணைவியாக வாழ்ந்துவரும் அவர்கள் குடும்பம் எல்லாமே எனக்கு அறிமுகமாகி மிகவும் அன்புடன் நடந்து கொண்டது இனிய நினைவுகளாகவே இன்றும்.

அழகிரியின்  மகன் பாலாஜியின் திருமணத்திற்கு நான் சென்று கலந்து கொண்டது நீண்ட காலம் கழித்து. எனவே அவனின் தாய் என்னை உச்சி மோந்து கன்னத்தில் கன்னம் வைத்து முத்தமிட்டு என்னை அன்பின் உச்சி எது என்று கொண்டு சென்று காண்பித்து விட்டார்கள் .அப்படிப்பட்ட தருணங்களுக்காகவே அந்த திருமணத்திற்கு சென்று வேலுசாமி வீட்டில் தங்கி இருந்து மறு நாள் முகூர்த்தம் முடிந்து அதன் பின் தான் வந்து சேர்ந்தேன் வீட்டுக்கு எனது வழக்கத்துக்கும் மாறாக. மேலும் அப்போதைய அன்பின் பூரிப்பினால் நினைவு மறதி வந்து எனது செல்பேசியை மின்னூட்டம் செய்ய வைத்ததை அப்படியே கல்லூரியில் விட்டு விட்டு சென்றதும் திருமணம் முடிந்ததும் உடனே கல்லூரிக்கு வந்து அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வரவேண்டி நேர்ந்ததும் இன்னும் நினைவகலாமல் உள்ளது.

அழகிரியின் மருமகளும் ஒரு முதுகலை பல் மருத்துவம் படித்த பல் மருத்துவர்.

அழகிரியின் தாய் சேமித்துக் கொடுத்த பணத்தை வைத்துத்தான் முதன் முதலாக அழகிரி வெளிநாட்டுக்குப் போனதாக அவனே சொன்னான். அந்த இராசிதானோ என்னவோ அவன் ஆண்டில் பாதி நாட்களை சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் வணிகம், தொழில் என சுற்றி வருகிறான்.

அதற்கு எல்லாம் முன்னால் அவன் எல்.ஜி.பி  உரிமையாளர் ஒருவருக்கு தனிப்பட்ட உதவியாளராக இருந்தபோதும் அங்கே சென்று அவனது பணியிடத்தில் அவனை சந்தித்து வந்திருக்கிறேன்.

திருப்பூரும் பொள்ளாச்சியும் அருகே என்பதால் அவனைத் தேடி அவன் குடும்பத்தினர் அடிக்கடி இல்லை என்றாலும் அவ்வப்போது எங்கள் விடுதிக்கு வந்து அவனை பார்த்துச் செல்வார்கள். எங்கள் வீட்டில் இருந்து எவரும் வருவதான சூழல் இல்லை. எனவே அவனது குடும்பம் கூட எனது குடும்பமாகவே இருந்தது.

அவனது இளமைக் கால முறைப்பெண்ணுடனான மணத்திற்கு நான் மட்டுமே நண்பர் என்ற பிரதிநித்துவத்தில் கூட இருந்து சிறப்பு செய்தேன். அதே போல் அவனது மகனது திருமணத்திலும் நான் கலந்து கொண்டிருந்தது இன்னும் வெகுசிறப்பு.

அவனும் நானும் திருப்பூர் செல்லும்போது சில சினிமாக்கள் பார்த்ததுண்டு அப்படிப் பார்த்ததில் இன்னும் மறக்க முடியாத படம் தமிழ் மொழிபெயர்ப்பில் "பேய்க்கார்" எனப்படும்" கார்" என்னும்  ஆங்கிலப்படம் மறக்க முடியாததாயிருக்கிறது.

அவன் காங்கேயத்தில் ஒரு விசைத்தறிக்கான லெதர் உபரிப் பொருட்கள் தயாரிக்கும் அகியோடெக்ஸ் என்னும் கம்பெனியை நண்பர்களை பங்குதாரராக்கி நடத்தி வந்து அப்போது தனிக்குடித்தனம் நடத்தி வந்தான். அப்போதும் நான் அங்கு சென்று வந்தேன் அப்போது அவனது குழந்தையாயிருந்த மகன் பாலாஜியை ஸ்கூட்டரில் முன்னும் என்னை பேருந்து நிலையத்துக்கு கொண்டு விட பின் இருக்கையிலும் ஓட்டி வந்தது இன்னும் நினைவில்...

எப்போதும்  நகைச்சுவை உணர்வுடன் கேலிப்பேச்சு பேசிக் கொண்டு இன்னும் குழந்தை மனப்பான்மையுடன் அவன் இன்னும் வாழ்ந்து வந்தாலும் இன்று அவன் தாத்தா ஆகப்போகிறான் ஏற்கெனவே முழுச்சொட்டை விழுந்த தாத்தா அவன். அவனது தாய் கூப்பிடுவது போல ஒரு நாள் கூப்பிட்டு ஏதோ எழுதப்போய் இப்போது அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவன் இல்லை என்பதை அவனது இடவெளி ஏற்படுத்தி இருந்தது.

அப்போதெல்லாம் வருடத்திற்கு ஒரு முறை திருப்பூர் சென்று அந்த அந்த காலக் கட்டத்திற்குரிய பனியன் டிசைன்களை அவனிடமிருந்து பெற்றுக் கொண்டு வந்து அதை அணிந்து கொண்டு பார்ப்பவர்களை எல்லாம் மிரள வைத்த காலம் இளமையில் உண்டு.இவனுக்கும் எனக்கும் பெரிய ஒட்டுதல் இல்லாதது போன்ற வெளித் தெரியாத அளவிலேயே நட்பு இருந்த போதும் நான் சொல்லி விட்டால் அவன் கேட்பான் என்று அவன் தந்தை சொல்லியதும் நான் குடித்துவிட்டு கீழே கிடக்கும் குடிகாரர் பற்றி திட்டி எழுதியபோது அதனால் தான் உன்னுடன் பேசவே பயம் கொள்கிறேன் என்று பிதற்றியவன்

அவனும் நானும் ஒரே அறையின் பங்காளர்களாக இருந்தபோதே அவனுடைய சட்டை போன்றவற்றை நான் போட்டுக் கொண்டு கல்லூரிக்குச் சென்ற அனுபவங்களும் உண்டு.
 அதில் ஒரு சில்க் சட்டை போன்றது சிவப்பு நிறப் பின்ணணியில் சிறு பிறை போன்ற கறுப்புக் கோடுகளுடன் இருந்த சட்டை இன்னும் என் நினைவில் உள்ளது ஆண்டுகள்  40 ஆகும் தருவாயில் கூட...

நினைவுகள் மறக்கவில்லை அதில் பொலியும் இனிமையும் மாறவில்லை...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

4 comments:

  1. உங்கள் நண்பன் அழகு எனது பொள்ளாச்சி பாலிடெக்னிக் வாழ்க்கையில் என் மனதில் எனக்கு இருந்த முதன்மையான நண்பன். அவன் பெயருக்கேற்றாற் போல் நல்ல அழகன். சுருள் சுருளான முடியுடன் குழந்தை போன்ற முகத்துடன் இருந்த அவனை யாருக்குத்தான் பிடிக்காது? எனக்கு கிரிக்கெட் பிடிக்கும். அவன் கிரிக்கெட் வீரன். ஓடிவந்து பந்துவீசும் அழகு இன்னும் என் மனக்கண்ணில் உள்ளது. நீங்கள் பேய் கார் பார்த்த போது நானும் உங்களுடன் இருந்தேன். நான் அவன் இல்லத்திற்கு அப்போது ஒருமுறை தான் வந்தேன். அவ்வப்போது ஜோக் சொல்லி சந்தோஷப்படுத்தும் சூழலை எப்போதும் மகிழ்வாக வைத்திருக்கும் அவனின் இயல்பு மிகவும் பிடிக்கும்! அவனுக்கு பல நண்பர்கள். அவன் உள்ளத்திலும் எனக்கு என்று ஒரு இடம் இருந்தது என்று தான் நினைக்கிறேன். இருப்பினும் அவனுக்கு நிறைய நெருங்கிய நண்பர்கள். அதில் எனக்கொன்றும் வருத்தமில்லை. என்றும் எப்போதும் நலமாக வளமாக இருக்கட்டும்!

    ReplyDelete
  2. Thanks for your comment on this post.vanakkam pl.keep contact

    ReplyDelete