Monday, September 2, 2019

என் நட்பின் நனி சிறந்தவர்கள் 1. குகன்: கவிஞர் தணிகை

என் நட்பின் நனி சிறந்தவர்கள் 1. குகன்: கவிஞர் தணிகை


Image result for gugan meaning in tamil

அவர்கள் வீட்டிற்கு நான் சென்றபோது அவருடைய புத்தகங்களை கீழே தரையில்தான் வரிசையாக வைத்திருந்தார்.அவர், அவன், பெயர் சொல்லி அழைப்பது மரியாதைக்குறைவாகப் பேசுவது சில சமயங்களில் எல்லாம் என்னிடம் உண்டு. ஆனால் இன்று அவர் சமூகத்தில் எல்லாரோலும் மதிக்கத் தக்க ஒரு கனவான்.  இன்று சட்ட நீதி நூலக அடுக்கில் அதன் இடையே வாழும் வாழ்வாக இயற்கை பணித்திருக்கிறது.

அவர் தனது தந்தையின் பெயரின் முதல் எழுத்தையும் தனக்கு வைக்கப்பட்ட முதல் எழுத்தையும் கோர்த்து ஒரு விகுதி எழுத்தையும் ஆண்பால் எழுத்தாக சேர்த்து குகன் என்று வைத்துக் கொண்டதும் கூட அவருக்கு மிகவும் பொருத்தமானதாகவே இருக்கிறது. அவருயை சிந்தை திறனை அது காண்பிக்கிறது.

அவர் குஹன் என்றால் நான் ராமனா?... இருக்கலாம் சந்தேகப்படுவதில்...குஹனொடு ஐவரானோம் என்னும் இராமாயணம். இவரும் நட்புக்கு இலக்கணம்தான்.
Image result for gugan meaning in tamil
கோபப் பட்டு பேசிய பின்னும் கூட சில நட்புகள் பிரிவதேயில்லை அதென்னவோ பூர்வ ஜென்ம வினை போல...பட்டும் படாத பற்சக்கர சுழற்சியில் ஒன்றை மற்றொன்று பற்றிக் கொண்டே சுழல்வது போல காலச் சூழலில் இவர் என்னை விடவே இல்லை. இவருடைய தகுதி மிகுதியாக வளர்ந்து விட்டபோதும்.

பழ(ம்) நட்பை
கடைசி வரை
உதிர விடா அன்பன்
நண்பன்


என நான் ஒரு முறை எழுத்தில் வடித்தது போல மரமாகி நிற்கிறான் கனி கொடுக்கிறான் பறவைகள் தங்க இடம் அளிக்கிறான்.

இவனுக்கு வாய்த்த துணைவியார் பற்றி நான் எனது திருமண வாழ்த்தில் தேக்கம்பட்டியில் நடந்த மணவிழாவில் வாழ்த்து அன்பளிக்கும்போது குறிப்பிட்ட படி இரட்டைக் கிளவிகள் ஒன்றை ஒன்று பிரிந்தால் பொருள் இல்லை. இரண்டும் இணையும் போது அதை விட வேறு சிறந்த அழகும் இல்லை. பொருள் தருவதும் பயன்பாடும் அளவில்லை.

ஒரு வேளை கற்பனையில் நான் ஓர் மார்க்ஸ் ஆக இருந்திருந்தால் இவர் எனது ஏங்கெல்ஸாக இருந்திருக்கலாம்....ஏன் எனில் எழமைக்காகவும் தற்போதைய வசதி வாய்ப்புக்காகவும் அப்படி குறிப்பிடுகிறேன் மற்றபடி நான் மார்க்ஸ் அல்ல  அவரும் ஏங்கெல்ஸ் என்றும் சொல்லிக் கொள்ள விரும்ப மாட்டார். ஏன் எனில் அவர்கள் சரித்திர நாயகர்கள் நாங்கள் வெறும் தோழர்கள். தோழமையை பெருமைப்படுத்தவே அப்படிக் குறிப்பிட்டிருக்கிறேன்.
Image result for marx and engels
எனது நண்பர்களிடம் எல்லாம் பெரும் திறம் ஒளிந்து கிடக்கிறது ஆனால் அதை எல்லாம் ஒருங்கிணைத்து என்னை ஒரு நாள்  நாட்டின் தலைவனாக்கினாலும் இந்த நாட்டுக்கு விடிவுதான். ஆனால் அதை எல்லாம் எனது நண்பர்கள் சொல்லாமல் செய்யாமல் இருப்பதுதான் அவர்களது வாழ்க்கை.

பிடல், சே வின் வாழ்வுதான் ஒரு நாட்டுக்கே விடிவு ஏற்படுத்தியதாகவும், ஹோசிமின் வாழ்வு தனி மனித வாழ்வு ஒரு நாட்டின் ஆட்சி முறையை மாற்றிக் காட்டியதாகவும் சரித்திரம் சொல்லும்போது இந்த நாட்டின் அது எத்தனை பெரிய நாடாக இருந்த போதும் அதன் சரித்திரத்தை மாற்றி எழுத முடியும் என்ற மாபெரும் காலக் கனவு என்னிடமும் இருக்கிறது இருந்தது. (சிரிக்குமளவு இது ஒன்றும் வடிவேலு காமெடி அல்ல)

இது போன்ற கனவுகள் காண ஒவ்வொரு உண்மையான இந்திய மகனுக்கும் உரிமை உண்டு.

சரி நான் வேறுதடம் மாறிப் போகிறேன். நண்பர் பற்றி எழுத வந்து விட்டு நாட்டைப் பற்றியும் அதன் தலைமை பற்றியும் யோசிப்பது எப்படி பொருந்தும்.

நானும் அவரும் சந்தித்துக் கொண்டது 1978 ஏப்ரல் மே மாதங்களில்.அப்போதிருந்தே எங்களிடையே எவ்வளவு வேறுபாடு இருந்தபோதும் எழுத்து என்ற ஒரு ஒற்றுமைப்பொருள் எங்களிடம் ஒரு தோழமையை உண்டு பண்ணி இது வரை வளர்த்து வந்து கொண்டிருப்பதுதான் உண்மை.

 30 ஆண்டுக்கும் மேல் ஓடிவிட்டது முதல் 3 ஆண்டுகள் மட்டுமே அது கல்லூரி வாழ்வு என்பதால் அடிக்கடி முகம் பார்த்து தோழமை செய்து கொண்டதும் வேறுபாடு இருந்தாலும் விலகிச் செல்லாமலும் இருந்ததும் ...அதன் பிறகு இருவர் வாழ்வும் மிக மிக தொலைவுகளில்...இருந்தபோதும் எப்போதாவது ஒரு முறை என்னை தனது விடியல் சந்திப்புக்கு பேச அழைப்பார் அப்போது எனது பேச்சுக்கு ஒரு தொகை இருக்கும். அது எனக்கு உதவிகரமாகவும் இருக்கும் எனது நூல்களும் வந்திருந்த அனைவர்க்கும் அவருடைய சொந்த செலவில் அல்லது வந்திருந்தவர்கள் வாங்கிக் கொள்ளும்படியான பெருமிதப் பேச்சு இருக்கும்.

இப்போது இன்றும் கூட அவர் உண்மையான ஒரு எழுத்தாளன் என்ற கட்டியம் கூற தனது இயலாமையை பற்றி உயிர் உறும் வேதனையைப் பற்றி சொற்களில் கொண்டுவந்திருந்தார். நான் என்ன நினைக்கிறேன் எனில் வேறு எவரிடமும் கூட முழுதாக சொல்லி ஆறுதல் பெற முடியாத கருப்பொருளை உருக்கொடுத்து வார்த்தைகளாக சொற்களாக வெளிப்படுத்த கை வரும்போதுதான் உண்மையான  எழுத்துகளும் வடிவம் பெறுகின்றன ஒரு உண்மையான எழுத்தாளரும் உருவாகிறார்.

உண்மை அதில் அடி நாதம், வார்த்தைகள் வெறும் நகாசு வேலையை மட்டுமே செய்யும். கதை,கவிதை, நாவல், கட்டுரை இப்படி அதற்கு எப்படி வேண்டுமானாலும் எத்தனை வடிவம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதன் உயிர் நாளத்தில் உண்மை இருக்க வேண்டும் அது உயிர் துன்புறும் வேதனையை மாற்ற முனையும் செயல்பாட்டை முயற்சியுடையதாய் வைத்திருக்க வேண்டும்.

நான் ஏற்கெனவே சில பல சமயங்களில் சொல்லியபடி எனது ஒவ்வொரு முக்கியமான கட்டத்திலும் ஒன்று அவராக தன்னிச்சையாகவே அல்லது நான் எனது நிலையை சொல்லிய நிலையில் அதற்காகவே மார்க்ஸ் ஏங்கெல்ஸ் பெயர்களைக் குறிப்பிட்டேன். அப்படிப்பட்ட நிலைகளில் உதவ மறுத்ததே இல்லை. அப்படி உதவியதானால் அந்த உதவி எனை அடிமைப்படுத்தும் உதவியாகவும் அமைந்ததில்லை.

நான் எவை எப்போது எனப் பட்டியல் போடப்போவதில்லை. அது என்னையும் அவரையும் சிறுத்துப் போகச் செய்துவிடும். சுருக்கமாகச் சொல்லப்போனால் எனது கண்களில் உள்ள பார்வையில் கூட சிலருடைய பெயர்கள் எழுதப்பட்டிருக்கின்றன அதில் இவருடையதும் இருக்கிறது.

என்னைப்போல நிறைய பேருக்கு தன்னால் ஆன உதவியை செய்து வருவதையும் அறிகிறேன். இருவருமே ஓய்வு பெறும் வயதில் இருந்தபோதும் ஓய்வு என்பது இருவருக்குமே இல்லை என்பதுதான் உண்மை எங்கள்  வாழையின் பக்க கன்றுகள் முளைத்து ஆறடிக்கும் அதிகமாகவே வளர்ந்து நிற்கின்றன....இனி கன்றின் கன்று எதிர்க்கும் நாட்டில் நிலவும் புலைத்தனங்களை.

நிறைய எழுத வேண்டும் எனத் தான் தோன்றுகிறது அது மேலும் மேலும் எழுதிச் செல்லும் கைகள் என்னைப்பற்றி நானே எழுதிச் செல்வது போல ஆகிவிடுமோ என அச்சத்துடன் கூச்சத்துடன் கட்டுப்பாடு செய்து கொள்கிறது.

இப்போதும் அந்த குழுவாக நின்ற புகைப்படத்தைப் பார்க்கிறேன் எல்லா முகங்களும் ஒரு தெளிவாக அடையாளத்துடன் இருக்க எனது முகம் மட்டும் அந்த பிஞ்சிலிருந்து இளைஞராக மாறாமல் அடையாளம் பதியாமலே இருப்பதைக் காணமுடிகிறது... இளைஞராக மாறாத இளம்பருவ முகத்துடனேயே...

அவரது பெற்றோர், தனயன், தங்கை அனைவரையும் நான் அறிவேன் அதேபோல அவரும் எங்கள் குடும்பம் அறிவார் இருவரும் ஒருவர் குடும்பத்தையும் ஊரையும் தேடிச் சென்றதுண்டு. ஆனால் அடிக்கடி இல்லை எப்போதோ சில முறை. வாழ்க்கை எப்படி எல்லாமோ மாறி மாறிப் போய்க்கொண்டே இருக்கிறது அவரிடமிருந்த அவருடைய உழைப்பும் அவரது குடும்பம் அவருக்கு செய்த ஊக்கமும் அவரை சமுதாயத்தில் ஒரு மதிப்பு மிக்க நபராக ஒரு மதிக்கத்தக்க நல்ல மனிதராக உயர்த்தி இருக்கிறது.

மேலும் மேலும் மனிதம் உயர வேண்டும் அதுதானே கல்வியின் பெருமை. அதைத்தானே கல்வியின் பொருள் என்றும் கல்வியின் கடமையாற்றல் என்றும் சான்றோர் சொல்கிறார்கள்...

 மகன் தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்...

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

இரண்டு குறளுமே இங்கு பொருந்தும்...

கவிஞர் தணிகை



2 comments:

  1. என்ன சொல்வது என்று தெரியவில்லை! என்னைப் பற்றி உயர்வாக சொல்வதன் மூலம் நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்! இறைவனின் இயக்கத்தில் எல்லாவற்றுக்கும் ஏதேனும் ஒரு காரணம் அல்ல தொடர்பு இருக்கும் என்று தான் தோன்றுகிறது! நமது வாழ்க்கையில் நடந்த பல நல்ல நிகழ்வுகளில் நாம் ஒன்றுபட்டு நின்றதற்கு நமது நட்பு தான் காரணம் அல்லவா? நாம் முதலில் சந்தித்துக்கொண்ட போது நாம் இப்படிப் பலமுறை சந்தித்து கொள்வோம் என்று நினைத்ததுண்டா? எதிர்காலம் எப்படி இருக்கும் என்னவெல்லாம் வழங்கும் என்று யாருக்கு தெரியும்? இன்னும் நாம் பல உயரங்களுக்கு செல்ல இடம் இருக்குமா என்பது அந்த இறைவனுக்கு தானே தெரியும்! நல்லது பல நடக்குமென்று நம்பிக்கையோடு நடை போடுவோம்! உங்கள்இதயத்தில் எனக்கு ஒரு உயர்ந்த இடம் தந்துள்ள தற்கு தங்களுக்கும் இறைவனுக்கும் மிகுந்த நன்றியை உரித்தாக்குகிறேன்!

    ReplyDelete
  2. நன்றி சொல்வது நாட்டுக்கு மரபு மரபை வெல்வது நமது புதிய வரவு என்றும் இதயத்தில் பதித்துக் கொள்வோம் வெறும் ஏடுகளிலும் சொற்களிலும் புதைத்து விடாமல் என்ற அதே பதிலை இப்போதும் நினைக்க தோன்றுகிறது நன்றி வணக்கம் அடிக்கடி எனது எழுத்து பிரதேசத்துடன் நீங்களும் பயணம் வாருங்கள் இலக்கை எட்ட செய்யும்

    ReplyDelete