Tuesday, September 17, 2019

என் நட்பில் நனி சிறந்தவர்கள்: 4. சி.பி.கிரிதரன் எலக்ட்ரிகல்

என் நட்பில் நனி சிறந்தவர்கள்: 4. சி.பி.கிரிதரன் எலக்ட்ரிகல்


Image result for nachimuthu polytechnic college


 எப்போதும் குறு நகை தவழும் முகமும் கலகல என சிரிக்கும் குணமும் எப்போதும் கிரிதரனுக்குச் சொந்தம்.

.    1978ல் நாங்கள் அறிமுகமானபோதே  கிரிதரனுக்கு தந்தை கிடையாது. தங்கை உண்டு. தாயுடன் உக்கடத்திலிருந்து ஒரு வலுவான பரிந்துரையின் பேரில் கல்லூரி சேர்ந்து மின்னியலை படித்தவன். எனக்கும் அவனுக்கும் எப்படி நட்பு உருவானது என்றே தெரியவில்லை .ஆனால் அது 1978 முதலே ஆரம்பித்து விட்டது.

அவனுக்கு என்னிடம் என்ன அப்படி ஒரு ஈர்ப்பு என்பதோ எனக்கு அவனிடம் என்ன ஒரு பிடிப்பு என்பதோ வார்த்தையில் சொன்னால் முடியாது.
அந்தக் காலத்திலேயே ஒரு வெள்ளை வேட்டையை மடித்துக் கட்டிக் கொள்வான், மேலே காக்கி சட்டையை போட்டுக் கொண்டு இருப்பான். அந்தக் காட்சி இன்னும் என்னுள் அப்படியே இருக்கிறது.

அவன் தான் என்னை இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்கு அழைத்துச் செல்லப் பழக்கியவன் என்று சொல்லலாம். அவனுடன் பொள்ளாச்சியில் ஊருக்குள் இருந்த ஒரு பெயர் மறந்து போன தியேட்டரில் மலையாள படங்கள் அதிகம் பார்த்தோம். ஓமன், சீமா நடித்தது, ஜெயன் நடித்தது  ஜெயப்ரதா நடித்தது கமல் நடித்த ஈட்டா என்னும் படம் ஈட்டா என்றால் மூங்கிலாம்.

பெரும்பாலும் அவனே அந்த டிக்கட் செலவை எல்லாம் ஏற்றுக் கொண்தாக நினைவு. பகலில் விடுமுறை நாளில் மேட்னி பார்த்துவிட்டு பெயர் மறந்து போன ஒரு பிரபலமான கடையில் தேங்காய் பன்னும், ஏலக்காய் தேநீரும் உண்டது இன்னும் மணமாக இருக்கிறது.அதுதான் அங்கே அதிகம் அனைவர்க்கும் பிடித்த வகை உணவு. கல்லூரி மாணவர் அனைவருமே அங்கு அதையே விரும்பு உண்ணச் செல்வர்.

அவன் நல்ல பொறுப்புடன் இருப்பான். அவனுடைய குடும்ப கஷ்டத்தை வெளியே எவரிடமும் காண்பிக்கவே மாட்டான். ஏன் என்னிடம் கூட சொன்னதில்லை அப்போது அவன் அப்படி நினைத்துக் கொள்ளும்போதெல்லாம் அவன் அறை உள் தாளிடப்பட்டு இருக்கும் என்ன நாம் முயற்சி செய்து தட்டினாலும் காட்டுக் கத்து கத்தினாலும் கிரிதரா கிரிதரா என உருகினாலும் கதவை பிடிவாதமாகத் திறக்கவே மாட்டான். அப்படி அவன் கதவைத் திறக்காமல் நான் காய்ந்ததெல்லாம் உண்டு.

அவனது சொந்தக்கார விரிவுரையாளர் நாச்சி முத்து என  நினைக்கிறேன் எங்களுக்கு வணிகவியல் பாடம் எடுக்க ஒராண்டு ஒரு பாடத்துக்கு வந்து சுருக்கமாக விரிவுரை செய்த நினைவு. அவனின் சொந்தக்காரப் பெண் துளஸிமணி கூட அங்கேயே வந்து படிக்க சேர்ந்தது.

எப்படியோ படிப்பு முடித்து எங்களுடைய செட்டில் முதன் முதலாக குவெய்த் சென்று பணியில் அமர்ந்தவன் அவன் தான். அவனுடைய கடிதம் வரும்போதெல்லாம் மனம் மிகவும் மகிழும். அப்போதெல்லாம் தொலைத் தொடர்புதான் அவ்வளவு இல்லையே. அந்தக் கடிதத் தொடர்பு கொஞ்ச நாள் இருந்தது அதன் பின் என் போதாத நேரம் எனக்கு ஏதாவது வேலை கிடைக்குமாடா எனக் கேட்டது முதல் நின்று போயிருந்தது.

அதன் பின் வெகு காலம் கழித்து சிங்கப்பூரில் ஹனீபா டெக்ஸ்டைல்ஸ் மூலம் நிர்வாக அலுவலர் பணிக்கு அவர்கள் அழைத்து என்னிடம் பாஸ்போட் இருந்தும் தாய் தனியாக இருப்பவரை ஒருவர் மட்டுமே அப்போது என்னிடம் இருந்தவரை பிரிந்து செல்லக் கூடாது என அந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் நான் பாதை மாறிப்போனதெல்லாம் வேறு.
Image result for nachimuthu polytechnic college
முதலாண்டு அவனுடன் வள்ளியப்பன் டெக்ஸ்டைல்ஸ், மேட்டுப்பாளையச் செல்வன் மெக்கானிக்கல்  மற்றும் ஒரு நண்பர் பெயர் மறந்துபோனது ஆகியோர் அவனது அறைப் பங்காளர்கள். அவர்கள்  ஒரு முறை எல்லாம் சேர்ந்து என்னைப் பிடிக்க முயற்சிக்க அத்தனை பேரையும் வலுவாக இடித்துத் தள்ளி என்னை எனது பலத்தை நிரூபித்து ஜெயித்த நிகழ்வெல்லாம் அவனுடைய அறையில் நடந்த உண்மைக்கதை அதை எல்லாம் சொல்லில் சொல்லி சிரிப்பார்கள் மகிழ்வில் மாய்வார்கள்

அதை அடுத்து அவனும் நானும் ஒரு முறை மெஸ்ஸில் சாப்பிடாமல் அனைத்து மாணவர்களும் ஸ்ட்ரைக் செய்த இரவு இருவரும் மட்டும் சென்று சாப்பிட்டு விட்டு வந்த போது எங்கள் இருவரையும் அனைத்து சீனியர் மாணவர்களும் வளைத்துக் கொண்டு எதிர்த்துக் கேள்விகள் கேட்டபோது எங்களிடம் வீட்டில் இருந்து கொடுத்த காசு பணம் ஏதும் இல்லை. பசிச்சிது...போய் சாப்பிட்டோம்...என நான் பதில் சொன்னதைக் கேட்ட சீனியர் மாணவர்கள் ஒன்றும் செய்யாமல் சரி விடுங்கள் அவர்கள் போகட்டும் என விட்டு விட்டார்கள் ரூமுக்கு. அதை  கிரி எப்போதும் உனக்கு எவ்வளவு துணிச்சல் எத்தனை பேர் இருந்த போதும் கொஞ்சம் கூட சீனியர் ஜூனியர் பயமில்லாமல் எப்படி பேசினாய் ... என்பான்...
Image result for nachimuthu polytechnic college
அன்பு கிரிதரா இப்போது நீ எப்படி இருக்கிறாய்...தாய், தங்கை நலமா, உனது குடும்பம் எப்படி, நீ எங்கே இருக்கிறாய் என்றெல்லாம் கேட்க எப்போதும் ஆவலாய் இருக்கும் உன் அன்பு தணி.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: