Wednesday, May 1, 2019

உழைப்பு என்பது குருதியில் ஊறி விளைவது: மேதினச் செய்தி: கவிஞர் தணிகை.

உழைப்பு என்பது குருதியில் ஊறி விளைவது: மேதினச் செய்தி: கவிஞர் தணிகை.

Image result for world workers day



உழைப்பு என்றவுடன் மூலதனம் கார்ல் மார்க்ஸ், சிகாகோ, 8 மணி நேர வேலை, மேதினம், போன்ற எண்ண அலைகள்...

எனது நினைவலைகளை சற்று சுருக்கி சிறிய வட்டத்தில் பார்க்கும்போது மேதினமான இன்று உலக உழைப்பாளர் தினம் விடுமுறை தினமான போதிலும் கட்டடப் பணியாளர்கள் தம் பணியைச் செய்தபடிதான் இருக்கின்றனர்.

மூளை வேலை, உடல்வேலை ஆகிய பிரிவுகளில் உடல் உழைப்பு சார்ந்ததாகவே பெரிதும் மேதினம் குறிப்புகள் இடம் பெறுகின்றன.

இன்று உலகும் இந்தியாவும் தமிழகமும் இருக்கும் காலக்கட்டம் ஒரு தீர்மானத்துக்கு வர முடியாக் காலமாக இருக்கிறது

கட்டட, மர, மற்ற உடல் உழைப்பு வேலைகளுக்கு போதிய ஊதியம் இருப்பதாகவே சொல்லலாம். அவர்களுக்கு நிரந்தரபணி இல்லாத போதும் அரசும் அதன் சங்கங்களும் ஏதோ அவர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதாக நம்பிக்கையூட்டிக் கொண்டிருக்கின்றன

விவசாயமும் அதைச் சார்ந்த பணிகளும் மிகவும் நலிவடைந்து இருக்கின்றன‌

எல்லாத் தொழிலாளருமே பெரும்பாலும் பாதிக்கும் மேல்  மது அடிமைகளாக மாறி விட்டனர். எல்லாம் கழக ஆட்சிகள் தந்த பரிசு. ஆனால் அதற்கு முன்பும் கூட கள், சாராயக் கடைகள் இருந்தன என்றாலும் குடிகாரரை இழிவாகப் பார்த்த சமுதாயம் இப்போது குடிக்காதவரை தனிமைப்படுத்தி கேவலமாக பார்க்கும் நிலையில் உள்ளது. மேலும் சைவ வழி வாழ்வு முறை அறவே அழிந்து வருகிறது. எல்லாருமே ஊன் தின்னும் உணவு முறையில் பெரும்பாலும் வந்து விட்டனர்.

பத்து ரூபாய்க்கு 3 நுங்குகள் ...எல்லா பனை மரங்களும்  பயந்து கொண்டு இருக்கின்றன. ஏன் எனில் பெரும்பாலான பனை மரங்கள் கொஞ்சம் கூட தொலைநோக்கின்றி செங்கல் சூளைக்காகவும் பிற காரணங்களுக்காகவும் வேரோடு வெட்டி சாய்க்கப்படுகின்றன. பனை என்ற தமிழகத்தின் சொத்து அடியோடு அழிக்கப்படுகிறது. இது ஒரு எடுத்துக்காட்டு இது போல ஆயிரக்கணக்கான சொல்லத் தக்க விவசாய அழிவுகள் உண்டு.

பனை வெல்லம் ஆலை வழியே தயாரிக்கப்படும்போது வெறும் சுண்ணாம்பே அதிகம் கலக்கப்பட்டு நாக்கு உரிந்து எதைத் தின்றாலும் எரிச்சல் ஆகி விடுமளவு. குடிசைத் தொழில் யாவும் நலிவடைந்து விட்டன‌

குயவர்களின் சூளை காணப்படுவதில்லை. மட்பாண்டங்கள் பயன் அறவே அழிக்கப்பட்டுள்ளன...

இப்படி நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று யாவும் அடியோடு துர்செயல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ஆண்டு புவிச் சூடு 5 டிகிரி அதிகமாகி இருக்கிறது. ஒரிஸ்ஸாவில் 115 டிகிரிவரை..இப்போது பானி புயலும் அங்கேதான்.

எல்லாம் உலக மயம். ஹல்திராம் கடலைபர்பி ரூ5  ரூபாய்க்கு தயாரிக்கப்பட்டு விற்பனை மயமாகி இருக்கிறது.

இச்சூழலில் படித்த பையன்களுக்கு  ரூ. 8000 கூட  மாத ஊதியம் கிடைக்க வழியில்லாமல் எங்கள் மேட்டூர் கெம்ப்ளாஸ்ட் நிறுவன வாசலில் தொடர் உண்ணாவிரதம் இளைஞர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தக் காலக் கட்டத்தில் தனியார் நிறுவனங்களில் ரூ. 2000க்கும் கூட ஆசிரியர்கள் கிடைக்க பல தொழில்கள் செய்ய ஆள் இல்லாமல் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன.

அரசுப்பணிகள் பெற வேண்டுமானால் 5 ஆம் வகுப்பு படித்தவர் போதுமென்றால் முனைவர் பட்டம் பெற்றவர் கூட விண்ணப்பிக்கும் சூழல் இருக்கிறது.

இது போன்ற ஒரு காலக்கட்டத்தில் இந்த மேதினம் 2019. இதைப் பற்றி பதிவு செய்ய எனக்கு எல்லாத் தகுதியும் உண்டு.

ஏன் எனில்: எனது பெற்றோர் நெசவுத் தொழில் சார்ந்த குடும்பத்தில் இருந்து உருவான நல்ல உழைப்பாளிகள்

என் தந்தை மேட்டூர் பியர்ட்செல் அன்றிருந்தது இன்று இல்லை அதில் 4 விசைத்தறி இயக்கி இரவு பகலாக 3 வேலை முறைகளில் அன்றைய காலக் கட்டத்தில் ஒரு வாரத்திற்கு ஒரு வேலை முறை. புல் நைட், ஆப் நைட், டே சிப்ட் என்று...

வீட்டில் கதர் வாரியத்தில் பதிவு செய்து கொண்டு கை ராட்டை நூல் நூற்று அதை கதர் வாரியத்தில் கொடுத்து சிறு சிறு செலவுக்கெல்லாம் ஊதியம் செய்து கொள்வார்கள் எனது தாயும் சகோதரிகளும்.

அதை அடுத்து தோட்டவேலையில் மிக்க ஆர்வம். எல்லா பூச்செடிகளும்,கனிமர வகைகளும், காய் கனிகளும் ஒரே சொல்லில் சொல்ல முடியாது.அதை தமது பயன்பாட்டுக்கு மட்டுமல்ல பிறர்க்கும் விற்பனை செய்து பொருள் ஈட்டுவர்.

வீட்டில் ஒரு நல்ல குடி தண்ணீர்க் கிணறு...மிக அரிய வாழ்வு. காவிரியில் சென்று குளித்து துணிகளை துவைத்து வந்த வாழ்வு அவர்களுடையது. அவர்கள் அனைவர்க்கும் நீச்சல் தெரியும் உடல் நல்ல ஆரோக்கியம் இருந்தது.

எங்கள் வீட்டில் தொழில் செய்து அதன் வாழ்வின் முறையில் இருந்தவர்களின் புதல்வர்கள் வியாபாரம், ஆசிரியப்பணி,  இலக்கியம்,சேவை என்ற முறைகளுக்கு மறுபடியும் பூத்துள்ளனர்.

ஒரு மனிதர் உழைப்பில் உருவான எங்களது பத்து பேர் அடங்கிய குடும்பம் பெற்றோரை இழந்த பின்னே 8 குடும்பங்களும் அதன் துளிர்களுமாக தலை முறை தலைமுறையில் உழைப்பின் கனிகளை, பூக்களைப் பெற்று காலம் காலமாக வளர்ந்து வருகிறது நல்லோரின் குடும்பம் வாழையடி வாழையாக.

அவர் அறுந்து போன நூலிழையை திரும்பவும் எடுத்து கோர்த்து வாழ்வை செப்பனிட பயன்படுத்திய நூலிழை வாங்கிய ஊசி இன்னும் நினைவுப் பொருளாய் வணங்கத் தக்கதாய் இருக்கிறது

உழைப்பின் கருவிகளே வணங்கப்படத்தக்கதாய் இருக்கும்போது உழைப்பு எத்தனை மடங்கு வணங்கத்தக்கதாய் இருக்கும்...

முதலாளித்துவம் என்பது பணம் சொத்து மட்டுமல்ல, முதலாளித்துவ சிந்தனை என்பதுதான் அது கீழிருந்து மேல் வரை ஊறுக் கிடக்கிறது எல்லா தளங்களிலும்...அவை மாறினால் ஒரு வேளை உழைப்பாளர்களுக்குரிய தினமும் சிறப்புகளும் உருவாகலாம்...இந்தியாவில் முதலில் குறைந்த பட்ச கூலியே முதலில் எவருக்கும் இல்லை...மேலும் சார்பு, மதம், ஆண் பெண் பால் , இனம் எப்படி எத்தனையோ பிரிவினங்கள்...அவற்றுக்கு யாவுமே காரணம்தான்  ஊடகம், அரசியல் ,ஆட்சி, யாவுமே..

மறுபடியும் பூக்கும் வரை...
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment