காவிரிக்கரையில் பிறந்து வாழ்ந்து வரும் நாம் அதைப்பற்றி எழுத முனையாதபோது அமெரிக்காவின் வட கரோலினா மேகலா இராமமூர்த்தி ஆடி பதினெட்டாம் பேர் என்று ஒரு பதிவை இட்டு அதை நமக்கும் பகிர்ந்துள்ளார்.
அது பதினெட்டாம் பேர் அல்ல அம்மா, பதினெட்டாம் போர் என்று சொல்வார்கள். அதாவது மஹாபாரதத்தின் பதினெட்டு நாள் போர்க்களம் முடிந்து அதில் ஈடுபட்ட அனைவரும் தமது ஆய்தங்களை நீர்க்கரைகளுக்கு சென்று கழுவி எடுத்து வந்து வைக்கும் தினமாகவும், கிராமங்களுக்குள்ளாக விளங்கும் கடவுள் சிலைகளை எல்லாம் கூட எடுத்து வந்து கழுவி எடுத்து சென்று வைப்பார்கள்.
பொதுவாகவே ஆடி மாதங்களில் நீர்ப்பெருக்கு உள்ள கரைகளெங்கும் விழாக்கோலமே காணப்படும். அதிலும் மேட்டூர் அணைக் காவிரிக்கரைக்கு தென்னகத்தின் எல்லா சாலைப் போக்குவரத்தும் வந்து குவிந்த குவித்த மக்கள் வெள்ளம் சொல்லி மாளாது...
இப்போது குடும்ப சகிதமாக தானியங்களினால் போடப்படும் முளைப்பாரி எல்லாம் வளர்க்கப்பட்டு காவிரியில் சென்று விடப்படும் அற்புத நிகழ்வெல்லாம் காணாமல் போய்விட்டது. அவை மட்டுமல்ல...அணை மேல் நடந்து அக்கரைக்கு செல்வது எல்லாம் இனி கனவிலும் காணமுடியாததாகிவிட்டது.
மேட்டூர் பதினாறு கண்மாய் வரை தேக்கி வைத்த நீரை உண்மையில் சிறை வைத்திருந்தது போல் கம்பி வேலியும் கற்சுவருமாய், இரும்புக் கதவும், இயற்கைக் குன்றும், செயற்கை வளைவுக்குள்ளுமாய் அடக்கி விட்டார்கள்.
மனிதர்கள் எவருமே எக்காரணம் கொண்டும் நீர் அருகே போக முடியாதபடி.
ஆனாலும் திப்பம்பட்டி அருகே மனிதர்கள் சென்று தங்கள் ஆசையை தீர்த்தபடி இருந்தார்கள் என்பது உண்மைதான்.அது மட்டுமல்ல நீரை கால்வாய் வழியாக வெளி அனுப்பிய கீழ் மேட்டூர் பகுதிகளில் ஒரே மக்கள் வெள்ளம் ஒதுக்க முடியாதபடி, ஒதுங்க முடியாதபடி...குளியலும், மீனிறைச்சி உணவுமாக....ஒரே கோலாகலம்...மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் வேறு அலங்கார பூஜைகளுடன் கம்பீரமாக இருக்க ஆங்காங்கே நேர்த்திக் கடன் செய்வார்கள் சாரி சாரியாக...
குடும்பக்கட்டு கொஞ்சம் கொஞ்சமாக தொலைந்தபடி போய்க்கொண்டிருப்பதையும் நன்னோக்கம் மனிதரிடை மறைந்திருப்பதையும் அங்கே காவல் துறை விதித்திருந்த கட்டுபாடுகள் மூலம் அறிய முடிந்தது. அணையருகே எவரும் நெருங்கி விட முடியாது.
இன்றைய ஆண்டில் ஆடி 18 வரும் முன்பே நீர் வரத்து அதிகம் இருந்த காரணத்தால் அன்றாடம் மக்கள் வெள்ளம் வந்து காட்சியை கண் குளிர இரசித்தது மட்டுமல்லாது அறிவியல் புரட்சியால் விளைந்த செல்பேசி மூலம் ஆள் ஆளுக்கு போட்டோக்களை எடுத்து தள்ளி அனைவர்க்கும் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தது. அன்று போட்டோகிராபர் ஒரு சிலர். இன்றோ ஒவ்வொருவருமே போட்டோகிராபர்கள் மட்டுமல்ல வீடியோகிராபர்களாகவும் மாறி நிற்க இந்த செல்பேசிகள் துணையாக நிற்கின்றன.
ஆனால் ஆடிப் பட்டம் தேடி விதைத்ததும், காளைகள், கருப்பு மண்சட்டிகள், பேரிக்காய்கள், நாட்டு விதைகள், நல்ல காய்கறிகள், நல்ல எண்ணங்கள் எல்லாம் காணாமல் போய்விட்டன.
நிறைய மனிதர்கள் மறைந்து விட்டார்கள்.
எல்லாமே களை இழந்த கோலத்தில் நிற்கிறது...
ஐந்து ஆண்டுகள் கழித்து இந்த பாறைகள் நீர் கண்டு குதூகலித்தன....ஆனால் ஆடி 18 அந்த வெளிப் போந்த நீரும் நிறுத்தப்பட்டது. எனவே காட்சிகள் கட்டப்பட்டன. எல்லைக்குட்பட்டன.
விரயம் ஆன நீர், கடல் போந்த நீர் பல டி.எம்.சி : க்யூபிக் மெட்ரிக் டன்...பல்லாயிரம் கோடி கன அடிகள் என எல்லா மக்களும் அங்கலாய்க்க அவற்றை சேமித்து வைக்க தமிழகத்தில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதை காலத்தின் பதிவுடன் அவசியம் இட்டு வைக்க வேண்டும்.
சொல்லப்போனால் 92 டி.எம்.சிக்கு அதிகமான நீர்த்தேக்கத்தில் 20க்கும் அதிகமான டி.எம்.சி. நீர் தூர் வாரப்படாததால் குறைவாகவே தேக்கி வைக்கப்பட்டிருக்கும் என்ற அளவீடுகளும் சொல்லப்படுகின்றன.
காது ஓலைக் கருகமணி, குருத்தோலைகள், பாலிகள், வெற்றிலைப் பாக்கு கற்பூரங்கள் காவிரி அன்னைக்கு காணிக்கை ஆக்குவோர் எண்ணிக்கையும் குறைந்திருக்க, அவற்றை எங்கு வைத்து எப்படி காவிரிக்கு அர்ப்பணிப்பது என்ற இடமும் இல்லாதிருந்தது...கன்னி மார் கும்பிடும் வழக்கம் இனி இருக்க வாய்ப்பு மனிதர்க்கு இல்லாமல் போகிறது. பாதுகாப்பு என்ற பேரில் ஒரு பண்பாட்டுக் கலாச்சாரம் அழிக்கப்பட்டிருக்கிறது...
ஆனால் ஒரே ஒரு அடிப்படை மட்டும் மாறாதது அது: இந்த ஒரே ஆடிப்பதினெட்டுத் திருவிழா மட்டுமே மேட்டூரின் மாபெரும் விழா. அது மட்டுமல்ல எந்த மதமும் எந்த சாதியும் இடையுறாத ஒரே சமத்துவ விழா என்றால் அது மேட்டூர் அணை காவிரி அன்னையின் ஆடிப் பதினெட்டாம் பெருக்கின் ஒரு விழாதான்.
இந்த விழாவின் போது இரு சக்கர வாகனங்கள் பாலங்களிலும், காவிரிக்கரையருகே மக்கள் வெள்ளம் செல்லும்பகுதிகளிலும் தடைப்படுத்தப்படல் வேண்டும்...இதை அடுத்த ஆண்டிலிருந்து செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என நம்புவோமாக...
ஒரு வழியாக ஆடி பதினெட்டு கன்னிமார் கும்பிடும் விழா இனிதே நிறைவடைந்தது..இது மணமாகா கன்னிகளுக்கும், இளைஞர்களுக்கும் ஒரு வேண்டல் விழா என்பதையும் எவரும் மறந்து விடக்கூடாது. மறுத்து விடவும் முடியாது...
பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் இப்படி காவிரிக்கரை நீர்ப்பெருக்கின் விழாவைக் குறிப்பிட்டுக் கொண்டேதான் காவிரிக்கரையின் ஓரமாகவே தமது குதிரைப்பயணத்தை நடத்துவான்...அது கற்பனை.
தொட்டியம் முசிறி, திருச்சி, கொள்ளிடம், திருவரங்கம் பக்கம் அகண்ட காவிரியாய் இப்போதும் சென்று கொண்டிருப்பது...இது உண்மை.
நீர் நிறைந்த தமிழகத்தை வெறும் வாயில் விளம்பரத்தில் உருவாக்குகிறார்கள் தொலைக்காட்சி விளம்பரத்தில்...அது வெற்று வேட்டு.
மது விற்பனையை விட குடி நீர் விற்பனை என்பது பேரபாயகரமானது .
இது உண்மையின் கீற்று.
நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்ற 5 ஐம்பெரும் பூதங்களுக்கு சொந்தம் கொண்டாடும் தனியார் மயத்தை அழித்தொழிக்கா அரசுகளை ஆள்வதிலிருந்து புறக்கணிப்போம்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment