Friday, August 17, 2018

கால வெள்ளத்தின் ஒரு அரும்பாக : கவிஞர் தணிகை.

கால வெள்ளம் காவிரியின் கரை புரண்ட வெள்ளத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கு நோக்கினும் வெள்ள‌க் காடு. கண்ணுக்கெட்டிய வரையிலும் நீர்க்கடல்...அத்துடன் குடிக்க இன்னும் நீர் விட வில்லை என்ற மக்களின் உண்மைக்குரலும் சேர்ந்து கொள்ள...எல்லாம் காணாமல் போய்விடும் மறுபடியும் கால வெள்ளம் வேறு காட்சியைக் கண்களுக்கு காண்பிக்கும்.

Related image

எல் நினோ விளைவு என்கிறார்கள், இல்லை இல்லை 5 ஆண்டுக்கு ஒரு முறை இப்படித்தான் காலம் தமது ஆடையை மாற்றிக் கொள்ளும் என்கிறார்கள், இல்லை இது போல வெள்ளமும் மழையும் வந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன என்கிறார்கள். கேரளம் உச்ச நிலையில் நீரில் மூழ்கி தத்தளிக்க கர்நாடகத்தின் குமாரசாமி (முதல்வர்) கர்நாடக மக்களின் வரிப்பணத்தின் மூலம் கட்டப்பட்ட அணைகள் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடத்தானா? என சமயமறியாத ராக்கோழியாகக் கூவியிருக்கிறார் கர்நாடகமாய்...

கர்நாடகம் என்றால் மிகவும் ஏற்றுக் கொள்ள‌ முடியாப் பழசு  என்று தமிழில் பொருள். கர்நாடக சங்கீதம் மிகவும் பழைய காலத்திலிருந்து தொடர்ந்து பாடப்படுவது ...இதன் இழுவை ஒரு குறிப்பிட்ட சாரரை மட்டுமே புரியவைத்து மகிழ வைக்கிறது இன்றும்...பிழைப்புக்கு இரை தேடும்  எவரும் இந்தக் கலையை கற்றுக் கொள்வதில்லை பெரும்பாலும்.

அத்துடன் இன்று வாஜ்பேயின் 93 வயதுக்கும் மேல் உடலை கொண்டுத் தள்ளி மேல் ஏறிச் செல்ல முடியாப் பயணம்...விண்ணகம் நோக்கி....
Related image

இவற்றுடன் நமது பயணமும் சென்று கொண்டிருக்கிறது...இவற்றைப் பதிவு செய்தாக வேண்டியதாகிறது...

கடந்த ஜூன் மாதம் 24 தேதி முதலே நான் சரியாக எதையும் எழுதி உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இல்லை. அப்படி இருந்திருந்தால்...ஏன் அந்த நாளை நினைவு வைத்திருக்க வேண்டியிருக்கிறது எனில் அன்று விடியல் அமைப்பின் சார்பாக நண்பர் குகன், இரண்டாம் இளங்கோ ஆகியோர் திண்டுக்கல் அமைப்புக்கு எனை அழைத்து ஒரு உரை வீச்சை செய்யச் சொல்லி கேட்டுக் கொண்டார்கள். அத்துடன் " வாழ்வியல் வழிகாட்டி" என்ற விருது ஒன்றையும் என்னுடன் ஒட்ட வைத்தார்கள்.
Related image
அட ஏம்பா என்னை பிழைக்கத் தெரியாதவர் என்று சொல்லித்தானே பழக்கம் இப்படி தூக்கி வைக்கிறீர் ஒரேயடியாக கீழே போட்டுவிடாதீர் உடைந்து போகுமளவு என்று நினைத்தேன்.

அன்றைய எனது " புறம் கட உள் பார்க்க, புறம் கட கடவுள் பார்க்க" என்ற தலைப்பிலான் உரை அனைவரையும் வெகுவாக கவர்ந்து மகிழ‌ வைத்தது என அனைவருமே ஏகோபித்த குரலில் பாராட்டி மகிழ்ந்தார்கள்.

அது முதல் நிறைய எழுதாமல் விட்டுப் போனதன் காரணம்: ஜூன் 11 முதல் ஜுலை 11 வரை நான் ஏற்றுக் கொண்ட தூய்மை பாரதத் திட்டத்தின் கோடை உறைவிடப் பயிற்சி என 20 பல் மருத்துவர்களை பாலமலைக்கு அழைத்துச் சென்று வழி நடத்தி அங்குள்ள மலை வாழ் மக்களுக்கு பணிச்சேவை ஆற்றியதன் உடல் சோர்வுதான். மிகவும் கடினமான காலக்கணக்கு பார்க்க முடியாத பணி.

Related image


Related image

எனது வாழ்வு 3 ஆம் சுழற்சியில் இருக்கிறது என்பதை இப்படி பாலமலைக்கு விட்ட குறை தொட்ட குறையாகச் சென்று சேவை ஆற்றியதையும், திண்டுக்கல் சென்று அந்தத் தலைப்பில் உரையாற்றியதன் மூலத்தையும் வைத்துச் சொல்லலாம்.

ஏன் எனில் 1986ல் இதே போல பால மலைக்கு 3 மாதம் சென்று அங்கு மலைமேல் மக்களுடன் ஒருவனாகத் தங்கி அங்குள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பை செய்து சிறிய அளவில் அதாவது அங்குள்ள பள்ளி மாணவ மாணவியர்க்கு இரவு நேரப் பாடம் சொல்லிக் கொடுத்து, இளைஞர்க்கு விளையாட்டுப் போட்டி நடத்தி பரிசளித்து,( அதில் முதல் பரிசு பெற்ற தபால் விநியோகம் மற்றும் தபால் கீழ் இருந்து மேலும் மேல் இருந்து கீழும் எடுத்துச் செல்லும் மணி நல்ல உயரம், நல்ல திடகாத்திரமான உருவம் உயிர் இழந்து ஆண்டுகள் பல ஆகிறதாம்...இந்த முறை செல்லும்போது விசாரித்தறிந்தேன்..). கீழே கொளத்தூர் பாரதிய வங்கியின் அலுவலர்களை அழைத்து வந்து இராமன் பட்டியில் ஒரு வங்கி செயல்பாடு பற்றிய கூட்டம் நடத்தி....இதன் தொடர்ச்சியாக மக்களின் செல்வாக்கு பெற்று...தம் சுயநலத்துக்காக ஊராட்சியிலிருந்து பொதுவுக்காக ஊருக்காக கொடுக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கி அமைப்பை தம் சொந்த வீட்டு உபயோகத்துக்கு வைத்திருந்த ஒரு ஊராட்சி உப தலைவரை எதிர்த்து கூட்டம் போட்டு அதைப் பெற்று ஊருக்கே அதை உபயோகப்படுத்து என் கையில் இன்னொரு வழியில் கிடைத்த( அது பற்றி பின்னர் ஒரு நாள் சொல்வேன்...) ஹார்னின் யூனிட்டை அதற்கு வழங்கி அனைவர்க்கும் பயன்படச் செய்தேன்.

மேலும் அரசின் 8 துர்ந்து போயிருந்த பள்ளியின் அருகில் இருந்த கழிப்பறைகளை சுத்தம் செய்து, அதை தூய்மைப்படுத்தும் பணியில் அந்த ஊர் மக்களை பயன்படுத்தி அவர்கள் தயக்கம் தீர்க்க எனது கையினாலேயே அதிலுள்ள கற்களை அகற்றி...அப்போது கையுறை எல்லாம் இல்லை..அப்படி நான் அகற்றியதைப் பார்த்த அன்றைய மக்கள் அதிலிருந்து எனது பக்கம் சேர...அந்த ஊராட்சி மன்ற உப தலைவரின் வன்மம் பகையும் சேர ஒரு வெளிவரா பகையும் போரும் எனது இடத்தை பாலமலையிலிருந்து கல்ராயன் மலைக்கு மாற்றியது. அதனிடையே மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கதுரை, பாலமலையின் கீழ் உள்ள வருவாய் ஆய்வாளர் அரசுக் குடியிருப்பிலேயே தங்கிக் கொள்ளலாம் எனக் கேட்டுக்கொண்ட கோட்டாட்சியர் மலையாளம், கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள், அன்று மிகவும் எளிமையாக இருந்த கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பெருந்தலைவர் கோ.க மணி ஆகியோரை எல்லாம் சந்தித்தேன்.

அதே போலவே 1983 என நினைக்கிறேன் அப்போது நேரு யுவக் கேந்திராவின் தேசியச் சேவைத் தொண்டர் பயிற்சியின் கீழ் கிராமியப் பல்கலைக்கழகம் காந்திகிராமம்..வழி பேராசிரியர் ரங்கராஜன்...இவர் அந்தப் பகுதிக்கு இந்திரா காந்தி வந்து உரை நிகழ்த்தும்போது மொழிபெயர்ப்பாளராக இருந்தவர். அப்போது பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் மு. அறம். அறக்கட்டளையின் தலைவர்: டி.வி.ஸ். சௌந்தரம் அம்மையார்...

திண்டுக்கல் ஜேசீஸ் ...ஜூனியர் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் சார்பாக ஃபெயித் இன் காட்  என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் ...சென்று முடிவடையும் தருவாயில் இருக்க நான் அப்போதே எழுதிய அந்த இடத்திலேயே எழுதி அதை அப்போதே சுடச் சுட அரங்கேற்ற வேண்டும் என பேராசிரியரை அனுமதிக் கேட்க...அவரோ முடியப் போகும் நேரம் இடையுறல் அவ்வளவு நன்றாக இருக்காதே எனத் தயங்க, அவரையும் மீறி அங்கிருந்த மேடையில் வீற்றிருந்தவர்களை நானே அணுகி..கேட்டு அவர்களும் மறுக்க முடியாமல் தட்ட முடியாமல் அந்த " கடவுள்" என்ற தலைப்பில் முதல் இரண்டு வரிகளாக புறம் கட உள் பார்க்க, புறம் கட கடவுள் பார்க்க ....எழுதியிருந்த கவிதையை அரங்கேற்றி புளகாங்கிதமடைந்தேன் புகழ் பெற்றேன்.

அப்போது எனது வயது: சுமார் 21. இப்போது 57 இப்போது 36 ஆண்டு கழித்து அதே திண்டுக்கல்லில் அதே தலைப்பில் உரை நிகழ்த்தி பரிசையும் விருதையும் வாழ்வியல் வழிகாட்டி என்ற பட்டமும் பெற்றிருக்கிறேன்.  அதே போல பாலமலைக்கும் 3 ஆம் சுற்றில் இந்திய அரசு மற்றும் கல்லூரி சார்பாக அந்த முகாமின் பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு விட்ட குறை தொட்ட குறையை நிறைவு செய்யச் சென்று இரவும் பகலும் பாராமல் இரவில் கூட கூட்டம் நடத்தி பல்வேறு நிகழ்வுகளை அங்குள்ள மக்களுக்காகச் செய்து ...இதை எல்லாம் பார்த்தால்...இதெல்லாம் சொல்லி வைத்து நடப்பதல்ல...நிகழ்கின்றன. கால ஓட்டத்துடன் இணைந்தே இயைந்தே ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தனிக்குதிரை. இது தணிகைக் குதிரை.

Related image


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

கால வெள்ளத்தின் ஒரு அரும்பாக : கவிஞர் தணிகை.





No comments:

Post a Comment