கோரக்பூர் மருத்துவமனையின் துயரம்: மரு. கபீல் சிறையில் இருந்து எழுதியுள்ள கடிதம்...
உண்மையிலேயே நான் குற்றவாளியா? - சிறையிலிருந்து மரு. கபீல் கான்
கோரக்பூர் மருத்துவமனையின் துயரம்: மரு. கபீல் சிறையில் இருந்து எழுதியுள்ள கடிதம்...
(கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-11 நடுப்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் உத்திரபிரதேச பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக பரிதாபமாக 30 உயிரிழந்த துயரமான வேளையில் உயிருக்கு ஆபத்தான பல குழந்தைகளின் உயிர்களை காப்பாற்ற விடாது போராடியதால் "ஹீரோ" என பொதுமக்களால் போற்றப்பட்டவர் மரு. காபீல் அகமது கான் ....
இந்நிலையில் குறித்த குழந்தைகளின் உயிர் இழப்பு - ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் காரணமாக அங்குள்ள அதிகாரிகளால் காட்டப்பட்ட அவர் மீது குற்றச் சதித்திட்டம் - 120B, கொலை செய்ய முயற்சி 308 மற்றும் அரசின் பொதுத்துறையின் பொது ஊழியர் மீதான மக்களின் நம்பிக்கையை சீரழித்தது போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து செப்டம்பர் 2 ஆம் திகதி கைது செய்து கோரக்பூரில் சிறையில் அடைத்தனர்.
கடந்த 8 மாதங்களாக கோரக்பூரில் சிறையில் உள்ளவருக்கு அவர் கீழ் நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ள நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும் ஏதொரு விளக்கத்தையும் செவியுறாது ஒரு காரணத்திற்காகவோ அல்லது மற்ற சொல்லப்படாத காரணத்தால் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
தனது கைதானது அநியாயமானது என்பதை ஆதாரபூர்வமாக குறித்த இளம் மருத்துவர் சிறையில் இருந்து எழுதியுள்ள 10 பக்கக் கடிதத்தில் ஊடகத்திற்கு விளக்கியுள்ளார்.)
அந்த ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு கணமும் என் கண்கள் முன்னால் நடப்பதைப் போல் இன்னும் உயிரோடு இருக்கிறது. 8 மாதங்கள் தாங்கொணாத சித்திரவதைக்கு பிறகு, பார்வைக்கு பின்னால் அவமானம் அடைந்தபோதும் சில நேரங்களில், என்னை நானே கேட்கிறேன், " உண்மையில் நான் குற்றவாளியா ...? " பதில் என் இதயத்தில் இருந்து வெளியே மேல்தோன்றும் - ஆம் உறுதியாக நான் குற்றவாளி இல்லை ...
அந்த தருணத்தில் அந்த நொடியில் அந்த வாட்ஸாப் செய்தி கிடைத்த துயரமான அந்த 10 ஆகஸ்ட் 2017 நள்ளிரவில் நான் எல்லாவற்றையும் செய்தேன். ஒரு மருத்துவராக, ஒரு தந்தையாக, ஒரு பொறுப்புமிக்க குடிமகனாக செய்ய முடிந்ததை / செய்ய வேண்டியதை எல்லாம் செய்தேன்.
திரவ ஆக்ஸிஜன் திடீரென நிறுத்தப்பட்டதால் ஆபத்தில் இருந்த ஒவ்வொரு உயிரையும் நான் காப்பாற்ற முயன்றேன்.
ஆக்ஸிஜனின் பற்றாக்குறையால் இறக்கும் அந்த அப்பாவி பச்சிளம் குழந்தைகளை காப்பாற்ற என் நிலையில் என்னால் முடிந்ததை செய்தேன். நான் சோர்வுறாமல் அனைவரையும் அழைத்தேன், நான் மன்றாடினேன், நான் பேசினேன், நான் ஓடினேன், ஓட்டிச் சொன்னேன், நான் கட்டளையிட்டேன், நான் கதறி அழுதேன், நான் ஆறுதல் அடைந்தேன், நான் ஆலோசனை சொன்னேன், நான் செலவு செய்தேன், நான் கடன் வாங்கினேன், நான் அழுதேன். மனித நேயத்தால் சாத்தியபடுத்தக்கூடிய அனைத்தையும் நான் செய்தேன்.
நான் துறையின் தலைவரை அழைத்தேன். என் சக மருத்துவ ஊழியர்களை, BRD முதல்வரை, தற்காலிக நியமன முதல்வரை, கோரக்பூர் மாவட்ட நீதிபதியை, கோரக்பூர் மாவட்ட மக்கள் சுகாதார நலன் கூடுதல் இயக்குனரை, கோரக்பூர் CMS மருத்துவ & மருத்துவ சேவைகளுக்கான மையத்தை, BRD மருத்துவ & மருத்துவ சேவைகளுக்கான மையத்தை அழைத்து ஆக்ஸிஜனை வழங்குவதில் திடீரென்று ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை மற்றும் திடீரென ஏற்படும் ஆபத்து காரணமாக குழந்தைகளின் உயிர்கள் எப்படி ஆபத்தில் உள்ளன என்பதையும் அவர்களுக்கு தெரிவித்தேன். (நான் அனைத்து தொலைபேசி அழைப்பு பதிவுகளையும் சேமித்து வைத்துள்ளேன்.)
மோடி கேஸ் ஏஜென்சி , பாலாஜி கேஸ் ஏஜென்சி , இம்பீரியல் கேஸ் ஏஜென்சி, மயூர் ஏஸ் கேஸ் ஏஜென்சி உள்ளிட்ட கேஸ் ஏஜென்சிகளை - BRD மருத்துவக் கல்லூரியைச் சுற்றிலும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிடமும் - நூற்றுக்கணக்கான அப்பாவி குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றுவதற்காக ஜம்போ சிலிண்டர்களுக்கு தங்களின் தொடர்பு எண்களை ஏற்பாடு செய்த பிறகு ஆக்ஸிஜன் விநியோகங்களை கேட்டு நான் மன்றாடி வேண்டினேன்.
ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகத்திற்கு நான் அவர்களிடம் முன்பணம் கொடுத்தேன், மீதமுள்ள தொகையைச் செலுத்த உறுதியும் அளித்தேன். (திரவ ஆக்ஸிஜன் தொட்டிகள் வரும் வரை நாங்கள் நாளொன்றுக்கு 250 உருளைகளை ஏற்பாடு செய்தோம். ஒரு ஜம்போ சிலிண்டர் விலை ரூ. 216 /-)
நான் ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்கு, அதாவது 100 வது வார்டில் இருந்து 12 வது அவசர வார்டுக்கு ஓட்டப்பந்தய வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தேன். ஆக்ஸிஜன் வழங்கல் நிலையிலிருந்து தடையற்ற ஆக்ஸிஜன் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம்.
அருகிலுள்ள மருத்துவமனைகளில் இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பெற்றுவர நானே என்னுடைய காரை ஒட்டி சென்றேன். என்னுடைய கார் அதற்கு போதுமானதாக இருக்காது என்பதை உணர்ந்த போது, உடனடியாக நான் இந்திய அரசின் மத்திய ஆயுதக் காவல் படைகளில் ஒன்றான சிறப்பு சேவை பணியகத்திற்கு (SSB - Seema Suraksha Bal) விரைந்து சென்றேன், அங்கே அதன் டி.ஐ. ஜி அவர்களை சந்தித்து முன்னெப்பொழுதுமில்லாத இந்த துயரமான நிலைமையை குறித்து அவரிடம் விளக்கினேன். அவர்களின் பதில் மிக விரைவாகவும் ஆதரவளிப்பதாகவும் இருந்தது.
BRD யில் இருந்து காலி ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு ஆக்ஸிஜன் ஏஜென்சியிடம் கொண்டு செல்லவும் அங்கே சிலிண்டர்களில் ஆக்ஸிஜன் நிரப்பி மீண்டும் அதை மருத்துவ பயன்பாட்டிற்காக BRD க்கு கொண்டு வரவும் சிறப்பு சேவை பணியகம் ஒரு பெரிய டிரக் & படையினர் அடங்கிய குழு ஒன்றை ஏற்பாடு செய்து தந்தது
அவர்கள் தொடர்ச்சியாக 48 மணி நேரம் பணிபுரிந்தனர். ஓயாத கடமையாற்றிய அவர்களது பணி எங்களை ஊக்குவித்தது.நான் SSB யை வணங்குகிறேன் மேலும் அவர்களின் தக்க நேரத்து உதவிக்காக நான் அவர்களுக்கு மிகவும் நன்றி கடன்பட்டிருக்கிறேன்.
ஜெய்_ஹிந்த்
நான் என் இளைய / மூத்த மருத்துவர்களிடம் பேசினேன், நான் என் சக ஊழியர்களிடம்,"பீதி அடையாதீர்கள்... மனச்சோர்வு கொள்ளாதீர்கள்... தங்களது குழந்தைகளுக்காக மனசோர்வில் நம்மிடம் கோபம் கொள்ளும் பெற்றோருடன் எக்காரணம் கொண்டும் கோபம் கொள்ளாதீர்கள்... நீங்கள் யாரும் ஓய்வு எடுக்கவேக் கூடாது. ஒவ்வொரு குழந்தையின் உயிரும் முக்கியம், அந்த பிஞ்சு உயிர்களின் வாழ்க்கையை காப்பாற்ற திறம்பட சிகிச்சையளிப்பதற்காக நாம் ஒரு குழுவாக கடமையாற்ற வேண்டும். " என உத்தரவிட்டிருந்தேன்.
தங்களது குழந்தைகளை இழந்த பெற்றோர்களின் துயரங்களை கண்டு நான் சொல்லொணாத வருத்தத்தை கொண்டேன். தங்களின் குழந்தைகளை இழந்தபின் மனம் உடைந்த நிலையில் கோபமடைந்த அந்த கஷ்டமான பெற்றோரிடம் நான் நிலவரத்தை விவரித்தேன். மருத்துவமனை மேற்கொண்ட பணிகளை கூறினேன். ஆலோசனை செய்தேன். அங்கே அப்பொழுது நிலவரம் மிகவும் குழப்பமாக இருந்தது.
நான் அவர்களுக்கு விளக்கினேன் - திரவ ஆக்ஸிஜன் O2 தீர்ந்துவிட்டது... ஆனால் நாங்கள் எங்களால் முடிந்த அளவிற்கு ஜம்போ சிலிண்டர்களை கொள்முதல் செய்துக்கொண்டிருப்பதை அவர்களுக்கு விளக்கினேன்.
எல்லோரும் உயிர்களை காப்பாற்ற கவனம் செலுத்த வேண்டும் என நான் இறைஞ்சினேன்... அழுதேன் / கதறினேன்.
நான் அழுதேன், ஆக்ஸிஜன் சப்ளையர்களுக்குக் கட்டணம் செலுத்தாத "நிர்வாகத் தோல்வி" மூலம் உருவாக்கப்பட்ட ஓர் பெரும் அழிவைப் பார்த்து உண்மையில் மருத்துவக் குழுவில் உள்ள அனைவருக்கும் அழுவதைத் தவிர்த்து வேறெதுவும் செய்ய முடியாத நிலை - ஒரு பயங்கரமான இருள் சூழ்நிலையை விளைவித்தது.
13-08-2017 அன்று 1:30 மணியளவில் திரவ ஆக்ஸிஜன் தொட்டிகள் BRD வரும் வரை நாங்கள் முயற்சி செய்வதை நிறுத்தவில்லை.
ஆனால், 13-08-2017 அன்று உத்திரபிரதேச முதல்வர் யோகிஜீ மகராஜ் அடுத்த நாள் காலை வந்தபோது என் வாழ்க்கை தலைகீழாக மாறியது.
அவர் கேட்டார் : எனவே நீதான் அந்த மரு.காபீல் !? நீ தான் சிலிண்டர்களை ஏற்பாடு செய்தது ?
நான் போயிருந்தேன் - ஆம் ஐயா...
அவர் மிகுந்த கோபம் மிக்கவராக என்னை பார்த்து கேட்டார் - அப்படின்னா சிலிண்டர்களை ஏற்பாடு செய்து நீ ஹீரோவா ஆயிடுவ...? இரு ...! நான் அதை கவனிக்கிறேன் ...
யோகிஜீ கோபமாக இருந்ததற்கு காரணம் ... இந்த சம்பவம் ஊடகங்களில் எப்படி வந்தது... நான் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றேன், அந்த இரவில் எந்த ஊடகவியலாளருக்கும் நான் இது குறித்து எதுவுமே தெரிவிக்கவில்லை. முன்னதாகவே அன்றைய இரவு அவர்கள் அங்கேயே இருந்தனர்.
அதை தொடர்ந்து காவல்துறையினர் என் வீட்டிற்கு வர தொடங்கினர் - படுகொலை அச்சுறுத்தல், சித்திரவதை செய்தல் என எனது குடும்பத்தை சித்திரவதை செய்தனர்.
அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள் என மக்கள் என்னிடம் எச்சரிக்கை தெரிவித்தனர். என் குடும்பம், என் அம்மா, என் மனைவி, என் குழந்தைகள் மிகவும் அச்ச உணர்வில் இருந்தார்கள் அதனை விளக்க எனக்கு வார்த்தைகள் இல்லை.
என் குடும்பத்தை அவமானம், துன்பம் ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவதற்கு நான் சரணடைந்தேன் - நான் தவறொன்றும் செய்ததில்லை என்பதால் நிச்சயமாக நான் நீதியை பெற வேண்டும்.
ஆனால் டிசம்பர் 2017 முதல் ஏப்ரல் 2018 வரை நாட்கள், வாரங்கள் மற்றும் மாதங்கள் ஓடின. ஹோலி வந்தது, தசரா வந்தது, கிறிஸ்துமஸ் போனது, புத்தாண்டு வந்தது, தீபாவளி வந்தது - ஒவ்வொரு தேதியும் - டேரீக் பாத் தெய்வ்ஹ் (தேதியிட்ட தேதிகள் கழித்தது ) பிணை எடுப்பர் என நம்பிய நாட்கள் கழிந்தன. பின்னர் நீதித்துறை மேலும் அழுத்தத்தின் கீழ் செயல்படுகிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம். (அவர்கள் கூட அதை ஒப்புக்கொண்டனர்.)
ஒரு தடுப்பு முகாமில் கட்டாந்தரையில் 150 க்கும் மேற்பட்ட சிறைவாசிகளுடன் இரவில் மில்லியன் கணக்கான கொசுக்களுடனும் பகலில் ஆயிரக்கணக்கான ஈக்களுடனும் தூங்கிக்கொண்டிருக்கிறேன். உண்டு உணவை விழுங்குவதற்கு முயற்சி செய்து, வயலில் குளிக்க அரை நிர்வாணமாகவும், உடைந்த கதவு கொண்ட ஒரு கழிப்பறைக்குள் உட்கார்ந்து கழிக்கிறேன். ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் என் குடும்பத்தை சந்திக்க காத்திருக்கிறேன்.
வாழ்க்கையே நரகமாக எனக்கு மட்டுமல்ல என் முழு குடும்பத்திற்கும் சேர்த்தே துன்பகரமானதாக உள்ளது. பொலிஸ் நிலையத்திலிருந்து நீதிமன்றம் வரை கோரக்பூரிலிருந்து அலாகாபாத் வரை நீதிக்கான நம்பிக்கையில் ஒரு தூணிலிருந்து மற்றொன்றை இயக்க வேண்டியிருந்தது - ஆனால் அனைத்தும் வீண்.
என் மகளுடைய முதல் பிறந்தநாளைக் கூட நான் அவளோடு இருந்து கொண்டாட முடியவில்லை இப்பொழுது அவளுக்கு 1 வயது 7 பழைய மாதங்களாகிறது. கூடுதலாக ஒரு குழந்தை மருத்துவர் என்ற வகையில் எனக்கு அது மிகவும் வேதனையாக இருக்கிறது, தனது குழந்தையை தவழ்வதை வளர்வதை சிரிப்பதை பார்க்க ஆவலுடன் இருக்கும் என்னை இதயமற்ற நிலைக்கு தள்ளுகிறது. இதயத்தை அது நொறுக்குகிறது.
ஒரு குழந்தை மருத்துவராக, ஒரு குழந்தை வளர்ப்பின் மிக முக்கியமான பொழுதுகளை குறித்து நான் இதுவரை கூறியவைகளில் நடைபயில தொடங்கியது, மழலை மொழி பேசுவது ஓடுவது ஆடுவது என என் குழந்தை குறித்து எனக்கு எதுவுமே தெரியாது.
எனவே இப்போது மீண்டும் அந்த கேள்வி என்னை வருத்துகிறது - நான் உண்மையில் குற்றவாளியா ? இல்லை... இல்லை... இல்லைவே இல்லை ...
நான் ஆகஸ்ட் 10, 2017 அன்று விடுமுறையில் இருந்தேன். (என் துறையின் தலைமை மூலம் முன்னதாகவே அனுமதிக்கப்பட்டது). ஆனாலும், நான் என் கடமைகளைச் செய்ய விரைந்தேன் - அது தான் தவறா ?
கோரக்பூர் துயரம் என்பது உயர் அதிகார மட்டத்தின் மொத்த நிர்வாகத் தோல்வி ஆகும், அவர்கள் அந்த மட்டத்தின் தன்மையை உணரவில்லை என்பதோடு தங்களை காப்பாற்ற எங்களை பலிக்கடாவாக்கி சிறைக் கதவுகளுக்கு பின்னால் நிறுத்திவிட்டு அதன் மூலமாக உண்மையை கோரக்பூர் சிறைச்சாலையில் உள்ளே இருத்தி வைக்க எண்ணுகின்றனர்.
100 படுக்கைகள் கொண்ட கடுமையான மூளையழற்சி சிண்ட்ரோம் (AEH) வார்டு என்ற பிரிவின் துணைத் தலைவராகவும், BRD இன் துணைத் தலைவராகவும் எனக்கு தலைமை பதவி தந்தார்கள். இங்கு நான் ஒரு இளநிலை மருத்துவராகவே இருந்தேன். 08-08-2016 அன்று தான் ஒரு நிரந்தர ஊழியர் கூட ஆனேன். என்.ஆர்.ஹெச்எம்யில் நோடல் அதிகாரியாகவும், குழந்தை மருத்துவ பிரிவில் விரிவுரையாளராகவும் பணிபுரிந்தேன். என் முழு வேலையும் மாணவர்களுக்கு கற்பிப்பதும், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதும் ஆகும். எனக்கும் திரவ ஆக்ஸிஜன் / ஜம்போ சிலிண்டர்கள் வாங்க / டெண்டர் எடுக்க / ஆர்டர் குடுக்க / பராமரிப்பு / சப்ளை / கட்டணம் செலுத்தம் விஷயங்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.
ரூ.68 இலட்சம் புஷ்பா சேல்ஸ் நிறுவனத்தில் இருந்து நிலுவைத்தொகையை திரும்பச் செலுத்துமாறு 14 முறை நினைவூட்டப்பட்டபோதும், அதைக் கண்டுகொள்ளாமல் இருந்த மாவட்ட கலெக்டர், DM கோரக்பூர் (மருத்துவக்கல்விக்கான பொது இயக்குனர்), டி.ஜி.எம்.இ. மருத்துவக் கல்விக்கான பொது தலைவர் போன்றோர்தான் உண்மையான குற்றவாளிகள்.
புஷ்பா சேல்ஸ் (the official supplier) திரவ திரவ ஆக்ஸிஜன் விநியோகத்தை நிறுத்தினால் , அதற்க்கு நான் எவ்வாறு பொறுப்பாளியாக முடியும் ?
மருத்துவத் துறைக்கு தொடர்பில்லாதவர்கள் கூட 'மருத்துவர்களுடைய வேலை என்பதானது சிகிச்சை செய்வது தானேயொழிய ஆக்ஸிஜனை வாங்குவதில்லை' என்று சொல்ல முடியும் .
மணீஷ் பண்டாரி (புஷ்பா விற்பனை இயக்குனர்) ஜாமீன் பெற்றபோது, நாங்களும் அதே வெளிச்சம் எங்கள் மீதும் இப்போது பாய்ந்து நீதி கிடைக்கும் என் குடும்பத்துடன் வாழ மறுபடியும் முடியும் என்றும் மீண்டும் மருத்துவ சேவை செய்ய முடியும் என நம்பி இருக்கிறேன்.
ஆனால் இல்லை - நாங்கள் இன்னும் காத்துக்கொண்டே இருக்கிறோம்
உச்ச நீதிமன்றம் கூறுகிறது - பிணை என்பது உரிமை, சிறை என்பது விதிவிலக்கு. இது நீதி கருச்சிதைவுற்றதற்கான ஒரு உன்னதமான உதாரணம்.
நான் நம்புகிறேன் நேரம் வரும் நான் விடுபடுவேன் சுதந்திரமாக என் குடும்பத்தாரோடு என் மகளோடு இருப்பேன். உண்மை எப்போதும் நீடித்திருக்கும். நீதி வழங்கப்படும்.
இப்படிக்கு,
என்ன செய்வது என்று அறியாத ...
ஒரு உதவியற்ற, மனம் உடைந்த தந்தை, கணவன், சகோதரன், மகன் & நண்பர்
மரு. கபீல் கான்
18-04-2018
தமிழில் மொழியாக்கம் : செம்பியன்
No comments:
Post a Comment