Monday, April 23, 2018

புத்தரைப் போல ஒர் நாள்: கவிஞர் தணிகை

புத்தரைப் போல ஒர் நாள்: கவிஞர் தணிகை
Related image


இரண்டு நாளுக்கும் மேல் ஆகிவிட்டது வீட்டை விட்டு வெளி சென்று.சற்றேறக்குறைய போக வர 2 கி.மீக்கும் மேல் இருக்கும்.நடந்தேன் குடையும் தலைமேல் தொப்பியுமாக... சரியான 11 மணி வெயில்

அது ஒரு சிறு தொழில் நகரத்தின் வழி. ஒரு வேப்பமரத்தினடியில் ஒரு ஆணும் பெண்ணும் பொறுக்கிக் கொண்டிருந்தார்கள்...அட, இது போல வேப்பங்கொட்டைகளுக்காக கீழ் விழுந்து கிடக்கும் வேப்பம் பழங்களைப் பொறுக்குவதைப் பார்த்து எவ்வளவு நாளாகிறது...அருகே சென்றால் தான் தெரிகிறது அது ஓர் சிறு பட்டறை தொழில் புரியும் இடம், அனேகமாக வெல்டிங் செய்யும் இடமாகவும் இருக்கலாம். வாயிலில் கதவு மூடப்பட்டிருந்தது. இவர்கள் பொறுக்கியது கீழே புழுதி மண்ணில் விழுந்து கிடந்த ஆணிகளை... வேப்பமரத்தை அண்ணாந்துப் பார்த்தேன் அதில் பழங்கள் ஏதும் இல்லை..இப்போதுதான் பச்சையாக இலைகள் இருந்தன.

எனைக் கடந்து ஒரு சரக்குந்து சென்றது வெகு வேகமாக... சரியாக ரயில் பாலத்தினடியில் எந்த வண்டியும்  செல்லாத பாலத்தின் பக்கம் நிறுத்திக் கொண்டார்கள் எதிரே வந்த இருசக்கர மொபைக்கும் அந்த வண்டி அருகே மிக நெருங்கி சென்றது. அந்த வண்டி பின்னால் ஆங்கில எழுத்துகள் கேஎஸ்பி என ..முன்னால் பேரை நான் சரியாக கவனிக்கவில்லை...அந்த முன்று எழுத்துகளில் ஆங்கில ஜே இருந்ததாக நினைவு..

திரும்பி வருகையில் அந்த டேங்கர் லாரியின் மூடியைத் திறக்க முயன்று மேல் ஒருவன்...என்னைப் பார்த்தவுடன் நிறுத்திக் கொண்டான். நான் ஒன்றும் செய்ய மாட்டேன் நீ நடத்துவதை நடத்து என மனதுக்குள் பேசியபடி மறுபடியும் அவனை அந்தக் காட்சியைத் திரும்பிப் பார்க்காமல் நடந்தேன்...ஆக்சிட் திருடி ட்யூப் வைத்து அந்த பைக் பேர்வழி கொண்டு வந்த கேனில் இறக்கிக் கொண்டிருக்கிறார்கள் என பார்க்காமலே எனக்க்குப் புரிந்தது அதைப் பார்த்தும் உறுதி செய்து கொண்டேன். எவ்வளவு கன கச்சிதமாக அந்த இடத்தில் நிறுத்தி அந்த திருட்டு வேலையை செய்து கொள்கிறார்கள்...

திரும்பி வருகையில் அந்த ஆணி பொறுக்கிய பெண்ணும், அந்த சும்மா அவளுடன் நின்று கொண்டிருந்த ஆணும்...ஆணியை இரகம்  வாரியாக பிரித்து கூறு போட்டு சேர்த்தபடி இருந்தனர். ஒரு வேளை இதை விற்றால்தான் மதியம் சோறு என்றும் கூட இருக்கலாம்.


பாலத்தடியில் விநாயகரும், அம்மனும் வீற்றிருந்தார்கள்...எல்லா இந்துக் கடவுள்களும், இந்த விநாயகர், ரெண்டுப் பெண்டாட்டிக்கார முருகன்,அவனது தாய்,தந்தை சக்தி, சிவன், திருமால், இப்படி அவர்கள் அனைவருமே அந்த முகமதிய அல்லா கடவுளுக்கு ஆசிஃபா சித்ரவதையில், கொடுங்கொலைக்கு பதில் சொல்லியாக வேண்டியபடி நிலை ஏற்பட்டுவிட்டதே என எண்ணம் என்னுள் துளிர்விட்டது...

அந்தப் பாதையில் இருக்கும் இந்த சினிமா தியேட்டரை என்னவாக்குவது எனத் தெரியாமல் இன்னும் வீம்புக்கு தி புரொடக்டர் என்னும் ஆங்கிலப் படம் காட்டுவதாக சினிமா போஸ்டர் சொல்லியது... கதவுகள் திறந்து கிடந்தன...

புதிதாக சில ஜோதிட நிலையங்களும், கடைகளும்,பியூட்டி பார்லர்களும், பெட்டிக்கடை போல இன்னும் சில எம்.பி.பி.எஸ் படித்த டாக்டர்களின் புது போர்டுகளும் காட்சி அளித்தன... அதில் ஒரு மூடப்பட்ட ஜோதிட நிலையத்தில் பேரே வித்தியாசமாக இருக்க...விதி இருந்தால் நீ என்னிடம் இங்கு வந்துதான் ஆக வேண்டும் என ஒரு வாசகம் மிரட்டியது, தமிழனாயிருந்தால் ஷேர் செய் என்னும் வாட்ஸ் அப் செய்தி போல, மனிதராய் இருந்தால் கை தட்டு எனத் தம் பேச்சுக்கு மிரட்டி கேட்டு கை தட்டல் பெரும் முயற்சிக்கும் அசிங்கம் போல...

15.03. 2018ல் கால் வலி என ஒரு ஊசி போடச் சென்று மறைந்து போன சுசீலாவின் தே.மு.தி.க  மேற்கு மாவட்ட கிளை போட்ட ஒரு அடிக்கு ஒரு அடி நோட்டீஸ் வழி எங்கும் ஒட்டியிருந்தது...இன்னும் கிழிபடாமலே, உதிராமலே...

அதில் ஒன்று அம்மா முகத்தின் மேலே ஒட்டப்பட்டிருந்தது...எடப்பாடி கீழே ஏதோ எழுதியதன் அருகே அத்தனை பற்களையும் காட்டியபடி இருந்தார். உண்மையிலேயே அந்த சுசீலா நேரில் இருப்பதை விட இருந்ததை விட அந்த கருப்பு போட்டோ போட்ட‌  போஸ்டரில் நன்றாக சிரித்தபடியே தத்ரூபமாக உண்மை சொரூபமாக சரியான முறையில் இருந்தார். அவரது வீடு எது என அடையாளம் தெரியாமல் இருந்தது...

எதை எழுதினாலும் எனக்கு ஒரு முறை படித்துக் காண்பியேன் எனச் சொன்ன அப்பு முதலியாரின் வீடு இல்லை இல்லை பங்களா அவரில்லாமல் அப்படியே இருந்தது. எனது எழுத்துகளை பெரும்பாலும் வடிவமைத்துக் கொடுத்த செல்வன் பிரஸ் வெறும் பேரை மட்டும் சுவரில் வைத்துக் கொண்டிருந்தது.. மணியை செல்வன் பிரஸ் பணி முடிந்ததா போய்ப் பார்டா என்றால் சைக்கிள் இருந்தும் பல முறை போப்பா எத்தனை முறை போய் பார்ப்பது என சலித்துக் கொண்டது எல்லாம் நினைவுக்கு வந்தது...

அந்த தோழர்.ம.துரைசாமி, அவரது துணைவி, அவரது மகன் செல்வன் என்னும் நாகராஜ் அவரது குடும்பம் இருக்கும் சுவடே இல்லை. எல்லாம் வாடைகைக்கு விட்டு விட்டு வேறு எங்கோ சென்னையோ, பெங்களூரோ, வெளிநாடோ சென்று விட்டார்கள்...

நான் எழுதியதை அழித்திருக்க மாட்டார்கள் என இருந்தேன் பொதுமுனைய போர்டில்... புவி தினம் ஏப்ரல் 22..என்பதில் பு காணோம் மேலும் வேண்டுமென்றே கை வைத்தே கடைசி எழுத்துக்கும் முதல் என்பதில் இடை எழுத்தான த வை அழித்து முல் என அர்த்தமற்றதாக மாற்றுவதாக எண்ணி அர்த்தமற்ற செயல்களைப் புரிந்திருந்தார்கள் எவரோ, சிறுவரோ, கொழுப்பு எடுத்த நபரோ...

எங்கோ ஒரு கிளைப் பாதையில் இருந்து ஒரு உடன்பிறப்பு இரு சக்கர வாகனத்தில் வருவது போல இருந்தது அது அவரோ, வேறு எவரோ, நான் அந்தக் கிளைப்பாதையையும் கடந்து நேர்வழியில் மேட்டில் ஏறி சென்று கொண்டிருக்கிறேன் இலக்கு நோக்கி...

உலகு கை நழுவி, கால் நழுவி போய்க் கொண்டே இருக்கிறது. இப்போது நான் உணர்வது போல ஒவ்வொருவரும் ஒரு நாள் உணர்வார்கள்...எல்லாம் என்னால் கட்ட முடியாத பெரும் கட்டடங்களாய் மாறி இருக்கின்றன..என்னை விட சிறியவர்கள் வாழ வந்தவர்கள் எலலம் மாபெரும் கட்டட சாதனைகள் புரிந்திருக்க, நான் எனது இளமையைப் போலவே இப்போதும் தனியே நடந்தபடி இருக்கிறேன்... அதில் ஒரு கடையில் கொச்சையாகிப் போன பழம் நட்பு ஒன்றும் எனது பார்வைச் சூடு தாங்கமாட்டாமல் தலையை அப்புறம் திருப்பி பார்த்தபடியே இருந்தது...அதனுடன் தான் எத்தனை சுற்றல், எத்தனை திரிதல், எத்தனை அலைதல்....

Image result for buddha images


உறங்கும் போது மரணம் மிக இயல்பானதாக ஒரு பழுத்த இலை உதிர்வது போல இருக்க வேண்டும் என்கிறார்கள் வலி இல்லா நிறைவாக..புவி எங்கும் காற்று நிறைந்திருக்கிறது. அதில் இருந்து சிறு அளவு தனக்கென எடுத்து சுவாசிக்க முடியாமல் உறுப்புகள் , உடற்கருவிகள் பயனற்று, பலனற்று போக...செயல்புரிந்த புலன்கள் மந்தமாகி  பழதாகி, பழமாகி இற்று சிதைந்து, மாற்றவே முடியாமல் செயல்பாடுகளை எல்லாம் நிறுத்தும் முன் ஒரு சவத்தின் ஊர்வலம் அதுவே சிவத்தின் வலம்...என்கிறார்கள்

இருந்தும் இல்லாதிருப்பது போல...என்கிறார்கள் யோகியை...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment