Monday, April 18, 2016

சசி பெருமாளை விட "சின்ன பையன்"வெளித் தெரியாத பெரியத் தியாகிதான்: கவிஞர் தணிகை.

சசி பெருமாளை விட "சின்ன பையன்"வெளித் தெரியாத பெரியத் தியாகிதான்: கவிஞர் தணிகை.
 5 மாநிலத் தேர்தலில் நாடே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்க இவன் என்னடா எழுதுகிறான் என நினைக்கலாம், இந்த நாட்டின் அடிப்படையில் பணி செய்த தியாகசீலர்களுக்கு நேர்ந்த கதி பற்றி பதிக்கிறேன்.

அன்பு மணி பென்னாகரம், ஜி.கே.மணி மேட்டூர் ( நான் ஏற்கெனவே எழுதியபடி)விஜய்காந்த் உளுந்தூர்ப் பேட்டை இப்படி நாளொரு மேனியும் தேர்தலின் பொழுது விடியாக் காட்சிகளாக தெரிந்து கொண்டிருக்க உண்மையான உழைப்பைப் பற்றி எழுதுகிறேன். அதற்கு நேர்ந்த கதி பற்றி எழுதுகிறேன். இந்த நாடு எப்படி விளங்கும்? நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த ஆட்டம் கட்டிக் கொண்டிருக்கும் பேர்வழிகளுக்கு எல்லாம் எந்த தகுதியுமே இல்லை. ஆனால் எல்லாத் தகுதிகளும் இருந்த கன்னங்குறிச்சி காமராசர் சுமார் 74 வயதில் சில மாதங்கள் முன் இறந்து போன " சின்ன பையன்" சேலம் வடக்குத் தொகுதியில் மது விலக்கு வேட்பாளராக தமிழக இலட்சியக் குடும்பங்கள் சார்பாக நிறுத்தப் பட்டு 800க்கும் சற்று அதிகமான வாக்குகள்  சொற்பமாக பெற்று படு தோல்வி அடைந்தார். இல்லை நாங்கள் படுதோல்வி அடைந்தோம்.அவருக்காக சில நாட்கள் அடியேனாகிய நானும் சென்று பிரச்சாரம் செய்தேன்.

சசி பெருமாளை விட வயதில், சேவையில், பழகும் முறைகளில் எல்லாவகையிலுமே இந்த " சின்ன பையன்" என்னும் பெரியவர் சிறந்தவர். எனது வீட்டிற்கும் சில முறை வந்திருக்கிறார். இனி வரமுடியாது.

எமது இயக்கம் சார்பாக இவரையே மக்களை சந்திக்கும் முதல் வேட்பாளராக களம் இறக்கினோம். முடிவு முன்பு சொன்னதுதான். ஆனால் இவரை விட எந்த வகையிலும் உயர்ந்திடாத‌ எமது இயக்க நண்பர் ஒருவரே ஒரு சாதிய பிடிப்பு மிக்க கட்சியில் நின்று எம்.எல்.ஏ வாக ஒரு முறை இருந்து விட்டார். அவரும் எமது பாசறையில் வளர்ந்து திசை மாறிய வெள்ளாடுதான்.
சசி பெருமாளை விட இவர் எப்படி உயர்ந்த தியாகி என்னும் கேள்விக்கு வரும் பதில்கள்: இவர் திருமணமாகா என்றும் இளையவராகவே இருந்தவர். சின்ன பையன் என்னும் பேருக்கேற்றபடி சிட்டு மாதிரி பறந்து திரிந்தவர், காலில் செருப்பணியாமலே வாழ்ந்தவர். இவரை மதுவிலக்கு வேட்பாளராக சேலம் வடக்குத்தொகுதியில் நிறுத்தியபோது கடந்த தேர்தலில் எல்லா இடங்களுக்கும் காலில் செருப்பு கூட அணியாமல் வலம்வந்த‌ தியாகி.

கடைசியில் எல்லாம் ஈடு கொடுத்து நடக்கவே முடியவில்லை அவ்வளவு உடல் தளர்ந்த போதும் சிரித்த முகம் மாறாமல் மக்களுக்கு சேவை என்றால் எங்கிருந்தாலும் ஓடி வருபவர்.

இவரின் நடவடிக்கைகளும் சிரிப்பும் ஓட்டமும், ஆடை அணியும் முறைகளும் குட்டையான கட்டையான உருவமும், சுருள் முடியும் பெரு நெற்றியும் கை மடிப்பு வரை போடும் சட்டையும் எப்போதும் வெள்ளை வேட்டி சட்டையும், குரலும் எல்லாமே என்னுள் அப்படியே இருக்கிறது. ஆனால் அவர் இல்லை.இதைத்தான் இதனால்தான் வாழ்வே மாயம் என்கிறார்களோ!


பூர்வீகத்தில் காங்கிரஸ்/என்றும் காங்கிரஸ் கட்சிதான் எமது கட்சி என்பார். கதர் அல்லது வெண்ணிற வேட்டிசட்டைதான். இத்தனைக்கும் இவர் பெரிய கைப்பந்து கற்றுக் கொடுப்பாளராக விளங்கியவர்  கன்னங்குறிச்சி ஊரில் நிறைய இளைஞர்களுக்கு கைப்பந்து கற்றுக்கொடுத்து நாடெங்கும் அனுப்பி விளையாடி போட்டிகளில் பரிசு ஈட்ட உறுதுணையாக இருந்தவர்.

மேட்டூருக்கும் கூட சில முறை அப்படி வந்தவர் எனை வீட்டில் வந்து சந்தித்திருக்கிறார். இவர்கள் ஊரில் கன்னங்குறிச்சியில் 7 நாட்களும் வார முழுதும் ஒரு நாடகக் கலை விழா நடத்தினோம். அதன் ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தேன் அப்போது ஆண்டு 1983 என நினைக்கிறேன்.அதிலிருந்து எனது மிக நெருங்கிய நண்பராகவே இருந்தவர். முகம் கோணாதவர். எதற்குமே கலங்காதவர்.

வயதில் என்னை விட 20 வயதுக்கும் மேல் மூத்தவராக இருந்த போதும் என்னை சார் சார் என அன்பொழுக அழைப்பார். மரியாதை கொடுப்பார். ஏன் அனைவரையுமே தோளில் தட்டி, கரம் கொடுத்து குலுக்கி சிரித்து சிரித்து பேசி இந்த மனிதர் இன்னும் கொஞ்சம் நேரம் நம்மோடு இருக்க மாட்டானா என நேசிக்கும் வண்ணம் இருந்தவர் இன்று இல்லை. இந்த மனிதன் இன்னும் நம்மோடு பல ஆண்டுகள் இணைந்து வாழ்ந்திருக்கக் கூடாதா இயற்கையே இறையே உனக்கும் நல்லவர்கள் என்றால் அதிகம் பிடிக்குமா? எடுத்துக்கொண்டாயே சுமார் 74 வயதுக்குள் அவரை...

சொன்னால் சொன்ன படி கேட்பார். சசி பெருமாள் மாதிரி தன்னை பிரமாதப்படுத்திக் கொண்டு இயக்கத்துக்கு கட்டுப்படாமல் நடக்கவே மாட்டார்.குடிகாரர் காலில் விழுந்ததும், சேலம் ரெயில் நிலையத்தில் பிச்சை எடுத்ததும், செல்பேசி மின் அலைக் கோபுரங்க‌ளில் ஏறியதும் எங்களை மீறிய செயலாகவே நாங்கள் அறிவுறுத்தினோம் சசி பெருமாளுக்கு.இயக்கத்தை மீறி வழி நடந்தார் எங்கோ அந்த வழி கூட்டிச் சென்று விட்டது. இந்த வைகோவும் திருமாவும் இந்த தேர்தல் நேரத்தில் சசியை நினைக்கவும் முடியுமா? அன்று அவர்கள் தான் சவத்துக்கு தோள் கொடுத்து தூக்கிச் சென்றவர்கள். நாங்கள் எல்லாம் யார் என்றே உலகுக்குத் தெரியாது. எப்போதும் வேர்கள் வெளித் தெரிவதில்லை. தெரியாதிருப்பதும் நல்லதும் கூட.

எனது பேச்சென்றால்சின்ன பையனுக்கு  அவ்வளவு இஷ்டம். சசியும் கூட அப்படித்தான் விரும்புவார் என்ன இருந்தாலும் தணிகை யிடம் ஈடு கொடுக்க முடியுமா என்ற சசியின் சொல் இன்னும் என் காதில் ஒலித்த வண்ணம் இருக்கிறது அந்த நபர்கள் இருவருமே இன்று இல்லை. சின்ன பையன்  பல்வேறுபட்ட நிகழ்வுகளிலும் அவரது ஊரான கன்னங்குறிச்சியில் என்னை அழைத்து பேச வைப்பார். கன்னங்குறிச்சி பேருந்து நிலையம் அந்த மாரியம்மன் கோவில் அருகே எல்லாம் அவர் மூலமாக எனது உரை வீச்சு மக்களுக்காக நிகழ்த்தப் பட்டது இன்றும் பசுமரத்தாணி போல நினைவுள்ளது.

உண்மையான பெரிய தியாகத்துக்கு மதிப்பே இல்லை. இந்த ஏழைத் தியாகி வாழ்ந்த முறைக்கு எதுவுமே கிடைக்கவில்லை. அதுதான் தியாகமே. ஏழையாகப் பிறந்து ஏழையாக வாழ்ந்து ஏழையாக அனைவர்க்கும் சேவை செய்து ஏழையாகவே போய்விட்டார். இவருடைய உடல் தெருவில் கிடத்தப்பட்டிருந்தது. இயக்க நண்பர்கள்  இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர்.நேரு யுவக் கேந்திரா பணிகளை கையில் எடுத்துக்கொண்டு ஓடி ஆடி அவ்வளவு அழகாக செய்வார். அதற்காக நிறைய பயணம் செய்தும் இருக்கிறார். இளைஞர் அமைப்பும் கைப்பந்துக் கழகமும் இவரது மூச்சு. ஆனால் இப்போது இவரது மூச்சடங்கி விட்டது.

சசிபெருமாள் அலை பரப்பி இறந்தார். நாடே செய்தி கேட்டது. ஆனால் இவர் எல்லாம் பற்றி எனைப்போன்றவர்தான் நினைக்கிறோமே தவிர வேறு யார்? அப்புறம் எப்படி இந்த நாடு விளங்கும்?

முதலில் சசிபெருமாள்
அடுத்து சின்ன பையன்
தம்பி சிவ ராம சுப்ரமணியம் ‍ இவரும் நமது இயக்க நண்பரே ஆனால் இவர் இவர் வீட்டருகே சாலையில் வாகனப் போக்குவரத்து விபத்தில் இறந்திருக்கிறார். நெடிதுயர்ந்த உருவம் எப்போதும் சிரிப்பு,இந்த  நண்பரையும் நான் பார்த்து பல்லாண்டு ஆகிவிட்டது.

சின்ன பையனைக் கூட எப்போது கடைசியாக பார்த்தேன் என எனக்கு இப்போது நினைவில்லை.ஆண்டுகள் சில இருக்கலாம்.

சசி மதுவிலக்குப் பிரச்சாரத்தில் வீட்டுக்கு வந்து  2 நாள் இருந்தார்.

எங்கள் இயக்கத்தின் நண்பர்கள் ஒவ்வொருவராக இழந்து வருகிறோம். கடைசியில் நாங்களும், வேலாயுதம், சேக்ஸ்பியர் என்னும் விவேகானந்தன், அடியேன் அனைவருமே அப்படித்தான் உலகின் அலைபரப்பில் இருந்து கூட விடைபெறுவோமோ?

முதன் முதலில் மதுவிலக்குக்காக 5 இலட்சம் கையெழுத்து பெற்று முதல்வர் செயலலிதாவிடம் அளித்தது எமது தமிழக இலட்சியக் குடும்பங்கள் என்ற அமைப்புதான். பா.ம.க மதுவிலக்கு பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் அதுவும் எங்கள் இயக்கத்துக்கு பின் வந்து சொல்லியதுதான். அதே போல ஒஹேனக்கல் கூட்டு குடி நீர் திட்டத்துக்கு முதலில் போராடி சிறை சென்றது எங்கள் பெண்கள் அணிதான். அதன் பின் தான் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க எல்லாம் திட்ட நடவடிக்கை மேற்கொண்டது. கர்நாடகாவிட காவிரி நீர் கேட்டு நடத்திய ஒவ்வொரு போராட்டமும் சேலம் மாவட்டத்தில் எங்களிடம் இருந்தே முதலில் துவங்கியது. அனைத்துக் கட்சியினரையுமே வைத்து எல்லாம் தலைவர்கள் பயிற்சி முகாம்கள் நடத்தினோம் வெட்டப்பட்ட ரமேஷ் ஆடிட்டர், பீட்டர் அல்போன்ஸ் போன்றோர் எல்லாம் அதில் கலந்து கொண்டிருந்தனர்.

இன்னும் எங்களிடம் என்ன இருக்கிறது இத்துப் போன இந்த உடலும் அதில் ஓடிக் கொண்டிருக்கும் அந்த உடலை இயக்கிக்கொண்டிருக்கும் இந்த  உயிரும்தானே? அதையும் குறிக்கோளை  நோக்கி, இலட்சியம் நோக்கி கொடுக்கத்தானே போகிறோம்? அதற்கும் மேல் என்ன இருக்கிறது?
மல்லையாக்களும்,மோடிகளும் செயலலிதாக்களும், கலைஞர்களும், இன்னும் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும்
 உங்கள் மனதில் செய்தியில் இடம் பெற ஊடகம் உதவுகிறது.

அந்த ஊடகத்தில் ஒரு நல்ல போராளிக்கு எவ்வளவு இடம் எனக் கேட்டுத்தான் சசி பெருமாள் தனக்குத் தானே உருவத்தை போட்டுக்கொண்டு என்றும் செய்தியில் இடம் பெறவேண்டி மாறுபட்ட கோணங்களில் நல்லதுக்காக எவ்வளவோ கோணங்களில் யுத்திகளில் கொள்கை மீறி செயல் பட்டு உயிரைப் போக்கிக்கொண்டார்

ஆனால் "சின்ன பையன்" மிக உயர்ந்த மனிதராகவே ஏழ்மையும் எமனும் அரவணைக்க வெளித்தெரியாமலே சென்று விட்டார். அவருக்கு இந்தப் பதிவின் மூலம் என்றும் அழியாத அஞ்சலிகளை மறுபடியும் பூக்கும் தளம் உரித்தாக்கிக் கொள்கிறது.

தேர்தல் நேரம் இதெல்லாம் உங்களில் எத்தனை பேருக்கு பிடிக்கும்? படிக்க, கேட்க பிடிக்கும் காதுகளில் ஏறும் எனத் தோன்றவில்லை. எனினும் இந்த நாட்டின் ஆணிவேராக விளங்கிய சேவையாளர்களுக்கு எல்லாம் இது போன்ற இழிந்த நிலைதான் பரிசாக கிடைக்கும் என்னும்போது இந்த நாடு எப்படி உய்யப் போகிறது? இன்னும் மக்கள் எல்லாம் கூடிக்கொண்டு அந்த ஏமாற்றுப்பேர் வழிகள் பின்னெதான் போவோம் என்னும் போது எவர்தான் இப்படி சேவைக்கு தியாகத்துக்கு முன் வருவர்?

இந்த நாட்டுக்காக என் உடலுக்கு ஏற்படும் எந்த வித துன்பத்தையும் தாங்கிக் கொள்வேன் என வலது கரம் நீட்டி உறுதி மொழி எடுத்தபடியே சசியும் சின்னபையனும் தங்களைக் கொடுத்து விட்டனர் அடுத்து எவரது சுற்றோ? சுதந்திரப் போராட்டத் தியாக வாழ்வை விட இந்த வாழ்வு மிகவும் கடினமானது. இந்த தியாகிகளுக்கு எந்த மதிப்பும் இல்லை அங்கீகாரமும் இல்லை என்பதுதான் இதன் சாபம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment