Thursday, August 18, 2016

ஜோக்கர் : தமிழ் திரைப்படம் விமர்சனம்: கவிஞர் தணிகை

ஜோக்கர் : தமிழ் திரைப்படம் விமர்சனம்: கவிஞர் தணிகை


ஜோக்கர் படம் தமிழ்ப் பட வரலாற்றில் மீண்டும் ஒரு நல்ல முயற்சி. இது போன்ற திரைப்படங்கள் தமிழ்ப் பட பாலாபிஷேக இரசிகர்களை நோக்கி அதிரடியாக இறங்கி உண்மையின் அருகே வாழ்வின் அருகே அவர்களை எல்லாம் அழைத்துச் செல்ல வேண்டும் எனவே இந்தப் பதிவு எனக்கு மகிழ்வூட்டும் பதிவு. முடிந்தால் இதைப் படிக்கும் அனைவரும் இந்தப் படத்தை ஒரு முறை பார்த்து விடவும். பார்ப்பதற்கு கண்ணீர் மல்க இருக்கும்தான்.ஆனாலும் இந்த நிதர்சனத்தை எவருமே மறுத்துவிட முடியாது மறந்து விடவும் முடியாது.

உண்மை ஒன்றுதான் மாறாதது. அந்த உண்மை தெளிவாக இதில் சொல்லப் பட்டிருக்கிறது. எனவே இது படமல்ல பாடம்.

இந்தப் படம் மூன்று வகையில் எனக்கு மிகவும் நெருக்கமாகவும், மிகவும் என்னுடன் ஒன்றுவதாகவும் இருக்கிறது. முதலில் நாங்கள் பல மேடைகளில் எண்பதுகளிலேயே வாக்களித்து பதவிக்கு சென்றவர்கள் ஊழல் செய்வார் எனில் திரும்ப அழைக்கும் உரிமை ரீ காலிங் பவர் வேண்டும் என்று கூவியுள்ளோம். அதை எமது தெய்வா பதிப்பக வெளியீட்டில் "ஜனநாயக மறுசீரமைப்பு" என காந்தி கைத்தடியுடன் நடந்து வரும் சிறு படத்தைப் முன் அட்டையில் போட்டு அச்சிட்டு வெளியிட்டிருந்தோம்.

இரண்டு: சேலம் மாவட்ட யுனிசெப் நிறுவனத்தின் கன்வீனராக ஓராண்டுக்கும் மேல் தொண்ணூறுகளில் பணி புரிந்தபோது பல கிராமங்களுக்கும் சென்று குறைந்த செலவிலான கழிப்பறை கட்ட ஒரு திட்டம் தீட்டினேன் ஆனால் அதற்கு யுனிசெப் வெறும்: 150 ரூபாய் மட்டுமே கொடுப்பதாக சொல்லியதால் திட்டத்தை கை விட்டேன். அதனால் எனது கடும் உழைப்பு நஷ்டம், அனைவருக்கும் கொடுத்த வாக்குறுதியின் வீணாயிற்று.



மூன்றாவதாக பல மேடைகளில் சேலத்திலும் மற்றும் பல ஊர்களுக்கும் உரை நிகழ்த்த சென்ற போதெல்லாம் நண்பர்களுக்குள் நாங்கள் பகிர்ந்து கொள்வோம் எங்களை நாங்களே பைத்தியக்காரர்கள் என்றும் எம்மை மக்கள் அப்படித்தான் எண்ணுகிறார்கள் என்றும் சசி பெருமாள், சின்னபையன், கொ.வேலாயுதம் என்னும் சிற்பி, எஞ்சினியர் மணி, அடியேனாகிய நான் எல்லாமே கலந்து பேசியதுண்டு. உடன் சேக்ஸ்பியர், அருணாச்சலம், கண்ணன், போன்ற நண்பர்களும் இருக்க.

இந்தப் படத்தில் இந்த மூன்றுமே சொல்லப் பட்டிருக்கிறது. எழுதி இயக்கிய ராஜு முருகன் மன்னர் மன்னனாக நடித்த குரு சோமசுந்தரம் ஆகியோரை மட்டுமல்ல மல்லிகா,இசை, ராமசாமி, பாவா செல்லதுரை ஆகியோரை நாம் பாராட்டியே ஆகவேண்டும். வாழ்ந்திருக்கிறார்கள் நடித்த சுவடே இல்லாமல்.

எளிய முறையில் சொல்லப் பட்ட குறைந்த செலவில் எடுக்கப் பட்ட படம் கூட. இவரது குக்கூ படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. பார்க்கத் தூண்டுகிறது இந்த ஜோக்கர். முதலில் 20 முதல் 40 நிமிடம் வரை அமர முடியவில்லை நெளிந்து கொண்டே பார்க்க வேண்டியதாயிருந்தது. எப்படி இப்படி ஓர் படத்தை நல்ல படம் என்கிறார்கள் என அடுத்த நாள் இந்தப் படத்தை நேரம் ஏற்படுத்திக் கொண்டு கட்டாயமாக பார்க்க ஆரம்பித்தேன். வியந்தேன்.

தமிழ்ப் பட சினிமா வரலாற்றில் இந்த அளவு மக்களின் பிரச்சனையின் மிக அருகே வந்த சினிமாக்கள் வெகு சிலவாகவே இருக்கும் எடுக்க தயாரிக்க உதவிய நண்பர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, பிரபு ஆகியோரை பாராட்டியே ஆக வேண்டும் நல்ல நோக்கம். நன்முயற்சி. என்ன வசூல் எனத் தெரியாது. ஆனால் இந்தப் படம் தேசிய விருதுகளை வென்று எடுக்கும் என நம்பலாம்.

தர்மபுரி பாப்பிரெட்டிப் பட்டியை மையமாக வைத்து மிகவும் பிற்பட்ட கிராமம் ஒன்றை மையமாக வைத்து பயமில்லாமல் ஒரு சினிமாவாக இல்லாமல் எடுத்து உலவ விட்டிருக்கின்றனர். வாழ்க.இவர் முயற்சி.

நான் பார்ப்பதற்கு எப்படி ஒரு வாரம் ஆகியது என்றே தெரியவில்லை. நேற்றுதான் பார்த்தேன். முந்தா நாள் பார்க்க அரம்பித்தேன் 40 நிமிடத்திற்கு மேல் பார்க்க இயலா பணிச் சுமை.

தற்காலத்துக்குத் தக்கபடி மாமனாருக்கு கட்சிக் கூட்டத்தில் பிரியாணிப் பொட்டலமும், கோர்ட்டரும் வாங்கிக் கொடுத்து கூட்டத்தில் இருந்து தாம் மணக்க வேண்டிய மல்லிகாவை  ரம்யா பாண்டியனை தக்க வைத்துக் கொள்கிறார் இந்த ஜனாதிபதி என்னும் மன்னர் மன்னன். ஆனால் மல்லிகா கழிப்பறை இல்லாமல் மணம் வேண்டாம் என மறுக்கிறார் ஒரு வட நாட்டுப் பெண் மறுத்தது போல...கழிப்பறை பற்றி மத்திய அரசு தரும் விளம்பரம் போல கழிப்பறையின் முக்கியத்துவம் உணர்த்தும் அடிப்படைக் கதை.


அதன் பின் ஜனாதிபதி வருகையும், கழிப்பறை திட்டம் துவங்கி வைக்க அவர் வரும்போது மன்னர் மன்னன் மற்றும் மல்லிகா படும் அவஸ்தை கண்ணில் நீர் வர வைப்பது. ஆனால் அதுதான் உண்மையான நாட்டு நடப்பு. பிரசவத்துக்கு பெண் துடித்துக் கொண்டிருக்கையில் கட்சித் தலைவர், மந்திரிகள், வி.ஐ.பிக்கள் நகர் வலம் சென்று கொண்டிருப்பது போல.

கோமாவில் இருக்கும் மல்லிகாவை கருணைக் கொலை செய்ய உரிமை கேட்டு நீதிமன்றம் செல்வதாகட்டும், அடிபட்ட ஆட்டுக்கு நீதி கேட்பதாகட்டும் எல்லாமே  நன்றாக நம்பும்படியாக செய்யப்பட்டிருக்கிறது. ஒரு உயிருக்கும் தீங்கு நினைக்காத அப்பிராணி ஜனாதிபதியின் வாழ்வு எப்படி முடிந்து போகிறது ,மல்லிகாவின் கழிப்பறைக் கனவு என்னவெல்லாம் எப்படி எல்லாம் ஆகி சிதைந்து போகிறது என்பதெல்லாம் கண்ணீரை வரவழைக்கும் காட்சிகள்.

இப்படித்தான் பெரும்பாலும் அரசின் நிறையத் திட்டஙக்ள் போய் விடுகின்றன. எல்லாவற்றையும் சொல்ல இயலாது. ஏன் எனில் படம் பார்க்கும் ஆர்வம் உங்களுக்குள் அற்று விடும். எனவே இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

முத்தாய்ப்பாக ஒன்றே ஒன்று : அந்தப் பெரியவர் மன்னர் மன்னன், ஜனாதிபதி உடலைப் பார்த்து வந்த பின் ஒரு கதறு கதறுகிறார் பாருங்கள் அங்கே பெருத்த உண்மை ஒளிந்து கிடக்கிறது. இந்த தேசம் இப்படித்தான் எவருடைய அக்கறையுமின்றி அழிந்து வருகிறது.

ஜனாதிபதிதான் இந்தியாவின் உச்ச சக்தி, அவரின் கையெழுத்தின்றி எதுவும் நடக்காது என்ற போதிலும் பிரதமர் சதி, முப்படை, சர்வாதிகாரம், ஜனாதிபதி ஆட்சி போன்றவை ஆங்காங்கே மன்னர் மன்னன் ஜனாதிபதியால் தெளித்து விடப் பட்டுள்ளன.

நிறைய சொல்லவே விரும்புகிறேன். அதன் சுருக்கமாக ஒரே சொல் முடிந்தால் ஒரு முறை பார்த்து அந்த வேதனையை பகிர்ந்து கொள்ளுங்களேன். நம்து தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப் பட்டியில் எடுக்கப் பட்ட படம் நாடு முழுதும் பேசப்படட்டும்.
பரவட்டும் இதன் ஒளி.




ஆனால் இதை எல்லாம் பார்த்தால் இவர்கள் எல்லாம் திருந்தி விடுவார்களா என்று எமது குடிமகன்கள் பயணிகள் ரயிலில் பேசி வருவதும் காதில் விழாமல் இல்லை. மொத்தத்தில் ஒரு சினிமாத்தனம் துளியும் இல்லா கிராமிய மேம்பாட்டுக்கு ஏழைக்கு, வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள வாழ்வை சித்தரிக்கும் சினிமா. அரசின் திட்டங்கள் கடைசியில் ஏழைக்கு என்று போடப்பட்டு கடைசியில் வெறும் மலத்தொட்டி ஒன்றுதான் கழிப்பறைத் திட்டத்தின் மூலம் கிடைத்தது என்றும், ஜனாதிபதி உரை ஒரு புறம் நிகழ்ந்து கொண்டிருக்க இங்கே மல்லிகா உயிர் போய்க் கொண்டிருந்தும் உடல் மரண அவஸ்தையில் இருந்தும் காவலர் அந்த மல்லிகாவின் உயிரைக் காப்பாற்ற மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் காவல் காப்பதும் உண்மையின் உச்சம்.



Definitely This Site giving  60+ for this movie.

மறுபடியும் பூக்கும் வரை
 கவிஞர் தணிகை.

Tuesday, August 16, 2016

விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியில் சுதந்திர தின விழா: கவிஞர் தணிகை

விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியில் சுதந்திர தின விழா: கவிஞர் தணிகை




இந்தியக் குடியரசின் 70வது சுதந்திர தின விழா விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியில் இனிதே நடைபெற்றது.

இதில் பல் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள்(சி.ஆர்.ஐ) கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கல்லூரி வளாகத்தில் முகப்பில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.பேபிஜான் அவர்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் தமது குழந்தைகளை நல்ல முறாஇயில் சோம்பலின்றி சுறுசுறுப்புடன் நல்ல இந்தியக் குடிமக்களாக வளர்க்க வேண்டும் என்றும் இலஞ்சம், ஊழல், சுரண்டல் போன்றவைக்கு அவர்கள் இரையாகாமல் நேர்மையாக வளர்க்கப்பட்டால் நல்ல சமுதாயம் அமையும் என்றும் சுதந்திர தினச் செய்தி வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் எல்லா மருத்துவர்களும் தமது கடமையில் தவறாமல் நெறி முறையிலிருந்து பிறழாமல் எல்லா நோயாளிகளையும் கவனித்து சேவையாற்றுதல் பற்றியும் வலியுறுத்தினார்.

விழாவில் வாய் மற்றும் தாடை பல் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் ரீனா பேபிஜான், டாக்டர் சரவணன், டாக்டர் கண்ணன், டாக்டர் அருண் Doctor Naren, Doctor Thangavel,  and others with-நிர்வாக அலுவலர்கள் பாபு முரளிதரன், நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் அனைத்துத் துறை  சார்ந்த மருத்துவர்களும் கலந்து கொண்டனர்.



டாக்டர் சாயிகணேஷ் அனைவர்க்கும் இனிப்பு வழங்கினார்.விழாவின் ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமார் ஒருங்கிணைத்தார்.

இது நமது பதிவில் வெளியாகும் ஒரு அறிக்கை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Monday, August 15, 2016

விருது வழங்கும் விழா இனிதே நிறைவேறியது: இந்திய சுதந்திரம் ‍ 70க்கு விடுதலையும் அடிமையும் பிப்டி பிப்டி.(50க்கு 50):கவிஞர் தணிகை.

விருது வழங்கும் விழா இனிதே நிறைவேறியது: இந்திய சுதந்திரம் ‍ 70க்கு விடுதலையும் அடிமையும் பிப்டி பிப்டி.(50க்கு 50):கவிஞர் தணிகை.




 உலகின் மக்கள் பெருக்கத்தில் முதல் நாடு, ராக்கெட் ஏவுகணையில்  , இலஞ்ச ஊழலில், சுரண்டிலில்,அசுத்தத்தில், வாழ்க்கைத் தரமின்மையில், மாசுபடுதலில், நகரமயமாதலில்,உடல் ஆரோக்கியமின்மையில்,கற்பழிப்பில் கொலை கொள்ளையில்,வேலை இல்லாத் திண்டாட்டத்தில் முன்னணியில் உள்ள நாட்டில் விளையாட்டில் மட்டும் என்றும் பின்னணியே.நமது பொருளாதார உதவி பெறும் பிஜி நாடெல்லாம் ஒரு தங்கமாவது ஒலிம்பிக்கில் பெற நாம் சைபராக இருக்கிறோம். நமது பிரதமர் மோடி விளையாட்டில் வெற்றி தோல்வி எல்லாம் சகஜமப்பா என்கிறார்.




ஒரு நாள் லீவு, ஒரு கோட்டை கொத்தளப் பேருரை,ஒரு விருதுவழங்கும் விழா ஆகியவற்றுடன் இன்றைய 70 ஆம் சுதந்திர தின விழாவும் இனிதே நிறைவு பெற்றது.

என்ன சுதந்திரம் இங்கு இருக்கிறது என்றே தெரியாமலே 70 ஆண்டு ஓடி விட்டது. முன் உள்ள கட்சிக்காரர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் ஏமாற்றத் தெரிந்தோர்க்கும் இருக்கும் சுதந்திரம் ஏழைக்குத்தான் இல்லவே இல்லை.

ரிலையன்ஸ் அம்பானிக்கு ஒன்னேகால் இலட்சம் கோடி கடன் வங்கி கொடுக்கும், லலித் மோடிகளை தெரிந்தே விட்டு விடும் நாடோடியாக வேறு நாட்டில் தங்கச் சொல்லி பாதுகாப்பளிக்கும்.

விஜய் மல்லையாக்களை தெரிந்தே விட்டு விட்டு வங்கிப் பணத்தை வசூல் செய்ய முடியாமல் அவன் சொத்தை சொத்தை ஏலம் விட்டு எவருமே எடுக்கவில்லை என்னும் அதே நாட்டின் மிகப்பெரும் தேசிய வங்கி ஸ்டேட் பேங்க் ஆப் இண்டியா கல்லூரியில் படிக்கும் இளைஞர்க்கு படிக்க கொடுத்த சில இலட்சங்களை ரிலையன்ஸ் போன்ற தனியார் கம்பெனிகளிடம் விட்டு வசூலிக்க வைக்கும்...கல்லூரிக்கு படிக்க கடன் வாங்கும்போது அது தேசிய வங்கி வசூலிக்க  ரிலையன்ஸா? அடியாளா? குண்டர் படையா?

என்ன நாடு இது? எத்தனை விவசாயிகள் நாசமுற்றனர்? எத்தனை தொழிலாளர்கள் மடிந்து போயினர்?ட்ராக்டருக்கு கடைசி தவணை கட்ட முடியாதவனை மயிரைப் பிடித்து அடித்து இழுத்துச் செல்லும் நாட்டில் கடன் வாங்கி விமானக் கம்பெனி நடத்தியவனை மயிரைக்கூட தொட முடியவில்லை என்பது உண்மைதானே?

எந்த எந்த துறையில் நாடு முன் இருக்கிறது ? எதில் எல்லாம் பின் இருக்கிறது? இதை எப்படி சீரமைப்பது முன்னேற்றுவது என இன்னுமா எமது நாடோள்வாருக்குத் தெரியவில்லை 70 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது எனும்போதும்...

யார் முன் இருக்கிறார்களோ அவர்களுக்கான நாடு, வசதி, வாய்ப்பாகவே நாட்டின் எல்லா வளங்களும், நலங்களும் போய் விடுகின்றன. போய் விட்டன. இங்கு இல்லை என்றுமே சமத்துவம்.

பல 5 ஆண்டுத் திட்டங்கள், வரி விதிப்புகள், எல்லாமே எதற்கென்று தெரியாமலே காலம் போய் விட்டது. இப்போதுதான் ரெயில்வே வரவு செலவுத் திட்டம் இப்போதுதான் நாட்டின் தேசிய வரவு செலவுத் திட்டத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது என செய்திகள்.

நாட்டில் ஒரு ரயிலை உரிய காரணங்களோடு நிறுத்த வேண்டுமென்றால் கூட அதற்கு குடியரசுத் தலைவருக்கு, பிரதமருக்கு எழுத வேண்டிய நிலை , நாட்டின் தலைநகருக்கு உரிய துறை சார்ந்தவர்களுக்கு என்னதான் எழுதினாலும் அரசு அசைந்து கொடுப்பதாகத் தெரியாத அசையாத அசைந்து கொடுக்காத அருகதையற்ற மக்களுக்கு சேவை நினைக்காத அரசுகள்.

குடிமகன்களாக டாஸ்மாக் என அரசே மதுபானக் கடை நடத்தி மக்களை மாற்றும் நாடு ப்யூஸ் மானுஸ் போன்ற ஒரூ சாமானியன் அல்லது சமூகப்பணியாளன் ஏன் இதை இப்படி செய்யக் கூடாதா ? நில அளவை செய்து பாலம் கட்டக் கூடாதா என்றால் அதற்கு எதிராக, மக்களுக்கு அவர் தம் நலனுக்கு எதிராக பணி செய்ய வந்த எந்திரஙக்ளை இயங்க தடை செய்ய முயன்றால் அவருக்கு சிறை அடி, மேலும் அவரை குண்டர் சட்டத்தில் போட வேண்டும் என அறிக்கைகள்




மதுவிலக்குப் போராளி சசி பெருமாள் போன்றோர் குடும்பத்துக்கு நிதி உதவி இலட்சங்களில் அடித்து வாயடக்கம், கோவன் போன்ற பாடகர்களுக்கு சிறை, ஊடகங்களை திசை திருப்பி தாம் நினைத்தை மதுபான அடிமைகளை வைத்து சிறிதளவு வாக்குகளை  அதிகம் பெற்று அரசை நிலை நிறுத்திக் கொள்ளும் அரசுகள்,இனி உச்ச நீதிமன்றம் தமிழக முதல்வருக்கு எதிரான தீர்ப்பு வருவாய்க்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் வழங்கும் என்கிறீர்கள்?

 மேலும் ஆள்வோருக்கும், பணத்தை ஆள்வோருக்கும் எப்படி வேண்டுமானாலும் நாட்டின் நீதியை மாற்றிக் கொள்ளும் நியதிகள் இலாகவங்கள்...இதைத்தான் நாம் சுதந்திரம் என்கிறோமா? பேசுகிறோம் உறைக்கச் சொன்னால் இருக்கும் சுதந்திரம் பறிக்கப் பட்டு அடிமைநாடாக இந்தியா ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டுக் கிடந்ததாக மாறி விடும். நமக்கும் எமக்கும் உமக்கும் இதுதான் என்றும் இங்கு சுதந்திரம்....எனவேதான் சொன்னோம் சுதந்திரம் 70லிம் இந்த இந்தியாவில் விடுதலை 50% அடிமையாய் இருக்க வேண்டியது 50% என.



மக்களுக்கு இன்னும் அடிப்படை வசதிகளான, உணவு, உடை, குடிநீர், மருத்துவம், உறையுள் , சுகாதாரம் போன்றவை வந்து சேரவே இல்லை.

எந்த எந்த துறைக்கு எப்படி முன்னற்றப் பணி செய்து நாட்டை முன்னேற்றம் செய்வது என செய்யாத நாடு. அப்படி சிந்திப்பாரை கருவறுக்கும் நாடு.

தனித் தனியாக ஒவ்வொரு துறையை தேர்ந்து பணி செய்திருந்தாலும் இன்று எல்லாத் துறைகளுமே தன்னிறவடைந்திருக்கும். நாட்டு மக்களும் நலம் பெற்றிருக்கும் உலகின் உன்னத நாடாக முதல் நாடாக மாறியிருக்கும். அப்படிப் பட்ட தியாகம் செய்த நாடு இன்று இது வரை துரோகிகளால் சோரம் போய்க் கொண்டிருக்கிறது.

நதி நீர் இணைப்பு பற்றி வெறும் வாயளவில் பேசி காலம் கெடுத்து வருகின்றன. மோடி குஜராத்தை 3 முறை ஆண்டவர், இந்தியாவின் ஆண்டவர் என்றெல்லாம் சொன்னார்கள். இவர் இப்போது அதெல்லாம் சகஜமப்பா, இதெல்லாம் சகஜமப்பா என்று வெறும் வார்த்தையாடி வெறும் பட்டியலை சுதந்திர தின உரையாக வாய் வீசிக் கொண்டிருக்கிறார்.

இன்றைய நாளில் ஒன்றே மட்டும் நாம் எப்போதும் சொல்வது அது: முன்னால் குடியரசுத் தலைவரும் தத்துவ மேதையுமான டாக்டர்.எஸ். இராதாகிருஷ்ணன் சொன்னது:

கட்டுப்பாடு இல்லாத விடுதலையும்
ஒழுக்கமில்லாத சுதந்திரமும்
தியாகமில்லாத சாதனையும்

ஒரு போதும் நன்மை விளைக்காது.

THERE IS NO FREEDOM WITH OUT RESTRICTION
THERE IS NO INDEPENDENCE WITH OUT DISCIPLINE
THERE IS NO ACHIEVEMENTS WITH OUT SACRIFICE
   BY: DR. S.Radha Krishnan
   Philosopher and the then President Of India.

இந்த மேற்சொன்ன வார்த்தைகள் இந்தியாவுக்கு இன்னும் பொருந்த...நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டே இருக்கிறது என சொல்லிக் கொண்டே...சென்று கொண்டே...


மறுபடியும் பூக்கும் வரை
 கவிஞர் தணிகை.

Sunday, August 14, 2016

தணிகையின் பார்வையில் தலையாய குறள்கள் :100,




தணிகையின் பார்வையில்
தலையாய குறள்கள்
         100




பதிப்பாசிரியர்;
கவிஞர் சு. தணிகை



உரிமை:
பதிப்பாசிரியர்க்கே



வெளீயீடு:
தெய்வா பதிப்பகம்
11‍ 125 புதுசை
மேட்டூர் அணை  636 403


பிறர்க்குதவிடும்
செய்கையே
எல்லாக் கவிதைகளிலும்
சிறந்தது.




                                                      




                                                                                           
                                                                     
                                 
A.P.J.Abdul Kalam                                       Rashtrapati Bhavan
                                                                       New Delhi..110 004.
மேதகு குடியரசு தலைவர்                டிசம்பர் 23, 2004.


திரு தணிகாசலம் அவர்களுக்கு,
வணக்கம்.

நாட்டில் லஞ்ச ஒழிப்பு, எண்ணம் செயலாக மாறவேண்டும்( இது அவரின் சொந்த கையெழுத்தில் எழுதி துவக்கிய கடிதம்) இலஞ்சத்தை நம் நாட்டிலிருந்து ஒழிக்க நான் பரிந்துரைத்த வழி, ஒவ்வொரு  தனிமனிதனின் மாற்றத்தின் மூலம், ஒவ்வொரு இல்லத்திலும் ஆரம்பமாக வேண்டிய ஒன்று. நல்லொழுக்கத்தோடும், இலஞ்சமில்லா மனப்பான்மையோடும் வாழ முற்படுபவர்கள் நிறைந்த குடும்பங்கள் பெருகப் பெருக, இலஞ்சமில்லா தேசம் தானாகவே உருவாகும். ஆகவே ஒவ்வொருவரும் தத்தமது இல்லங்களில் இலஞ்சம் கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் எதிரான அணுகுமுறையை அவரவரது குடும்பத்தினரிடம் ஏற்படுத்த வேண்டும்.

உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

 அன்புடன்
 ஆ .ப.ஜெ அப்துல் கலாம்
(கையெழுத்து)

தணிகையின் பார்வையில்
தலையாய குறள்கள்
   100

தமிழ் கூறும் நல்லுலகில் வள்ளுவனை தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு இன்று  (எய்ட்ஸ் நோயில்) முதலிடம் மற்றும் இலஞ்ச ஊழலில் முன்னிடம்.

உலகப் பொதுமறையை ஈந்து உலகின் வழிகாட்டியான இந்தியா, தமிழகம் என்றும் தரணிக்கு தாய்வீடு. இனியும் விழிக்கவில்லையெனில் நல்லவைக்கெல்லாம் சாவுமணிதான்.

பட்டுக்கோட்டை பதைத்தபடி:
சித்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞானியரும் புத்தரும் யேசுவும் உத்தமராம் காந்தியும் எத்தனையோ உண்மைகளை எழுதி எழுதி வைச்சாங்க, எல்லாந்தான் படிசீங்க, என்ன பண்ணி கிழிச்சீங்க? என்பதற்கேற்ப, குறள் ஒன்றே போதும் உலகு உய்ய வழி!

இதில் உள்ள 1330 குறள்களை எல்லாம் மனப்பாடம் செய்து பரிசு வாங்க வேண்டுமென்பதில்லை, ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு குறளை பற்றிக் கொண்டால் போதும்.

ஒரு குறளுக்கு அர்த்தமாகி வாழ்ந்தாலே போதும் அரிச்சந்திரன் கதையைப் பார்த்து மோகன் தாஸ், மகாத்மா ஆனது போல.

எனவே 1330 குறள்களிலிருந்து ஒரு 100 குறள்கள் மட்டுமே இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.பள்ளிப் பிள்ளைகளுக்கு, இளஞ்சிறார்களுக்கு, இளைஞர்களுக்கு, பல்வேறுபட்ட தரப்பினருக்கும் பயன்படும் வண்ணம்.

பாராட்டோ, பெருமைகளோ இந்நூலின் எதிர்பார்ப்பல்ல, மாறாக இது போல பல நூல்கள் வழி வர வெளியிட உதவிடுங்கள்!

தயாரிப்புச் செலவில் பங்கு கொள்வீர், பிரதியாக நூலைப் பெற்றுப் பயனுறுவீர்!

தரித்திரமாற்றி
சரித்திரம் படையுங்கள்
ஒவ்வொருவரிலிருந்தும் அற்புதங்கள் நிகழும்

அவை
அற்பங்களை அகற்றி
பேரொளியுடன் மிளிரும்.

ஒரு காந்தி, ஒரு யேசு, ஒரு புத்தன், ஒரு வள்ளுவர், ஒரு நபி,ஒரு பாரதி,அப்படிப்பட்ட ஒரு..............நீங்களாகவும் ஆகலாம்.அப்படிப்பட்ட ஒரூ ................ உங்களுள்ளும் இருக்கலாம். கண்டு கொள்ளும் தூண்டுகோலாய் இந்த குறள்களுள் ஏதாவதொன்று இருக்கும்.

நீங்கள் சாக்காடாய் இருக்கும்
புவியை
பூக்காடாய்
மாற்றலாம்
நன்றி!.                         வணக்கம்.
                                 மறுபடியும் பூக்கும் வரை
                                 அன்புடன் தணிகை.

பக்கம் எண் 10.

1. தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று.

2. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
   தொகுத்தவற்றுள் எல்லாந் தலை

3. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
   செயற்கரிய செய்கலா தார்.

4. அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
   செந்தண்மை பூண்டொழு கலான்.

5. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
   ஆகுல நீர பிற.

பக்கம் எண்: 11.

6. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
   என்னோற்றான் கொல் எனுஞ்சொல்.

7. மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
   நன்கலம்  நன்மக்கட் பேறு.

8. அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
   என்பும் உரியர் பிறர்க்கு.

9. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
   செய்ந்நன்றி கொன்ற மகற்கு

10. கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
     கோடாமை சான்றோர்க் கணி.

பக்கம் எண்:12

11. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
    செல்வர்க்கே செல்வம் தகைத்து.

12. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
    பொறுத்தாரை பொன்போற் பொதிந்து.

13. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
    தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

14. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
    வீயாது அடிஉறைந் தற்று.

15. ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்
    பேரறிவாளன் திரு.

பக்கம் எண்: 13.

16.வறியார்க் கொன்றீவதே ஈகை மற்றெல்லாம்
   குறியெதிர்ப்பை நீர துடைத்து.

17. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்பொருட் செல்வம்
    பூரியர் கண்ணும் உள.

18. தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
    விலைப்பொருட்டால் ஊன் தருவார் இல்.

19. உற்றநோய்நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
    அறே தவத்தின் குரு.

20. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற‌
    செய்யாமை செய்யாமை நன்று.

பக்கம் எண்: 14

21 .நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
   பகையும் உளவோ பிற.

22. பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
     பிற்பகல் தாமே வரும்.

23. இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
    துன்பத்துள் துன்பங் கெடின்.

24. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
    உண்மை அறிவே மிகும்.

25. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
    மாடல்ல மற்றை யவை.

பக்கம் எண்: 16.

26. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
    கற்றாரொடு ஏனையவர்.

27. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
    ஆன்ற பெருமை தரும்.

28. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
     மெய்ப்பொருள் காண்ப தறிவு.

29. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
    வைத்தூறு போலக் கெடும்.

30. நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
    இனத்தியல்ப தாகும் அறிவு.

பக்கம் எண்: 16.

31. செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
     செய்யாமை யானும் கெடும்.

32. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல‌
     இல்லாகித் தோன்றாக் கெடும்.

33. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
    உண்பதூஉம் இன்றிக் கெடும்.

34. ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
     கருதி இடத்தாற் செயின்.

35. கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
    நாவாயும் ஓடா நிலத்து.

பக்கம் எண்: 17.

36. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல்.

37. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
    அதனை அவன்கண் விடல்.

38. வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
     உள்ளத்தனையது உயர்வு.

39. முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
    இன்மை புகுத்தி விடும்.

40. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க‌
     சொல்லிற் பயனிலாச் சொல்.

41. சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
    வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

42. கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
    கற்ற செலச் சொல்லுவார்.

43. நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
    முந்து கிளவாச் செறிவு.

44. ஈன்றாள் படிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க‌
    சான்றோர் பழிக்கும் வினை.

45. குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
    வடுவன்று வேந்தன் தொழில்.

பக்கம் எண்: 19.

46. கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
    அருவினையும் மாண்டது அமைச்சு.

47. எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
    திண்ணிய ராகப் பெறின்.

48. இடுக்கண் வருங்கால் நகுக அதனை
     அடுத்தூர்வது அஃதொப்பது இல்.

49. அன்புடைமை ஆன்றகுடிப் பிறத்தல் வேந்தவாம்
    பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

50. அகலாது அணுகாது தீக்காய்வர் போல்க‌
    இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார்.

பக்கம் எண்: 20

51.நீர் இன்று‍அமையாது உலகெனின் யார்யார்க்கும்
   வான்‍இன்று அமையாது ஒழுக்கு.

52. உறுபசியும் ஓவாப்பிணியும் செறு பகையும்
    சேராதி யல்வது நாடு.

53. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
    காடும் உடையது அரண்.

54. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
    பண்புடை யாளர் தொடர்பு.

55. ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
     தான் சாந்துயரம் தரும்.

பக்கம் எண்: 21.

56. தொழுத கையுள்ளும் படையொடுக்கும் ஒன்னார்
     அழுத கண்ணீரும் அனைத்து.

57.உடம்பாடு இலாதார் வாழ்க்கை குடங்கருள்
   பாம்போடு உடனுறைந் தற்று.

58. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
    ஏதில் பிணந்தழீஇ யற்று.

59. உண்ணற்க கள்ளை உணில்‍உண்க சான்றோரான்
    எண்ணப் படவேண்டா தார்.

60. வேண்டற்க வென்றிடுனும் சூதினை வென்றதூ‍உம்
    தூண்டிற்பொன் மீன் விழுங்கியற்று.

பக்கம் எண்: 22,

61. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
    கள்ளத்தால் கள்வேம் எனல்.

62. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
    அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.

63. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
     என்றும் இடும்பை தர்ம்.

64. மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
    வளிமுதலா எண்ணிய மூன்று.

65. நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும்
     வாய்நாடி வாய்ப்பச் செயல்

பக்கம் எண்: 23.

66. நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
    குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்.

67. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய‌
     சுருக்கத்து வேண்டும் உயர்வு.

68. பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
    அருமை உடைய செயல்.

69. இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
    என்ன பயத்ததோ சால்பு.

70. அரம் போலும் கூர்மையரேனும் மரம்போல்வர்
    மக்கட்பண்பு இல்லா தவர்.

பக்கம் எண்: 24.

71. நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
    நச்சு மரம் பழுத்தற்று.

72. இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
    இன்மையே இன்னா தது.

73. இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
    நிலமென்னும் நல்லாள் நகும்.

74. அறன்‍ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
    தீதின்றி வந்த பொருள்.

75. பேதமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
     ஊதியம் போக விடல்.

பக்கம் எண்: 25.

76. அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
    அவாஉண்டேல் உண்டாம் சிறிது

77. அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
    கடுத்தது காட்டும் முகம்.

78. மோப்பக் குழைய அனிச்சம் முகந்திரிந்து
     நோக்கக் குழையும் விருந்து.

79. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப்படும்.

80. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
     இறைவனடி சேரா தார்.

பக்கம் எண்:

81. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
     பழித்தது ஒழித்து விடில்.

82. உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
    விழிப்பது போலும் பிறப்பு

83. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு.

84. பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
    செம்பொருள் காண்பது அறிவு.

85. கான முயலெய்த அம்பினில் யானை
    பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

பக்கம் எண்: 27.

86. இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
     கைகொல்லும் காழ்த்த விடத்து.

87. எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
    பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

88. பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
    உறைபதி என்னும் உலகு.

89. கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
    என்ன பயனும் இல.

90. மதியும் மடந்தை முகனும் அறியா
    பதியிற் கலங்கிய மீன்.

91. நீரும் நிழலும் இனிதே புலவியும்
    வீழுநர் கண்ணே இனிது.

92. உடம்பொடு உயிரிடை என்ன மற்றன்ன‌
    மடந்தையொடு எம்மிடை நட்பு.

93. உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
    கள்ளினும் காமத்திற்கு உண்டு.

94. உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
    கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு.

95. ஊடல் உணர்தல் புணர்தல்‍‍இனிது காமம்
    கூடியார் பெற்ற பயன்.

பக்கம் எண்: 29.

96. ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
    கூடி முயங்கப் பெறின்

97. நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
   யாருள்ளி நோக்கினீர் என்று.

98. மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்
    செவ்வி தலைப்படு வார்.

99. முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
    நகைமொக்குள் உள்ளதொன்று ஒன்று.

100. காலை அரும்பி பகலெல்லாம் போதாகி
      மாலை மலரும் இந்நோய்.
********************************************************************

புது மொழி:
```````````````````

அவ்வப்போதே அப்புறப்படுத்தாத‌
       குப்பை
உங்களையும் சேர்த்து எரிக்கும்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நேற்றைய அசட்டை
இன்றைய கஷ்ட நஷ்டம்.

```````````````````````````````````

வாழ்வதற்கு
பொருள் வேண்டும்
வாழ்வதிலும்!
__________________________________________


எனக்குப் பின்
நானாக இருக்கும்
த.க.ரா.சு. மணியத்துக்கு.



^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

மரங்கள்
-------------------

மழையாக‌

பழமாக‌
                                                                   
இலையாக‌

விறகாக‌


நீங்கள்?

  சு. தணிகை.         இது
                                  ஒரு
                                  தெய்வா வெளியீடு.



       மறுபடியும் பூக்கும் வரை
       கவிஞர் தணிகை.
   
   
   


   


சுதந்திர தினச் செய்தி: கவிஞர் தணிகை.

இந்தியா ‍ 70, 31 ஆம் ஒலிம்பிக்கில் இந்தியா இது வரை வென்ற பதக்கம் 0. இந்நிலையில் விகடனுக்கு நன்றி சொல்லி இந்த சுதந்திர தினச் செய்தியை பதிவாக்கியுள்ளேன்.

லஞ்சம் தராததால் சிகிச்சை தாமதம்: உ.பி.யில் 10 மாத குழந்தை பலியான அவலம்!



லக்னோ: உத்தரபிரதேசத்தில் தாமதமான சிகிச்சையால் 10 மாத குழந்தை உயிரிழந்த விவகாரத்தில்  அம்மாநில அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் சுமிதா-ஷிவ் தத் தம்பதி. இவர்களின் 10 மாத ஆண் குழந்தைக்கு, திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனே குழந்தை கிருஷ்ணாவை பஹ்ரைச் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு, குழந்தையை பரிசோதித்த மருத்துவர், உடனடியாக குழந்தையை உள்நோயாளியாக அனுமதிக்கும்படி கூறி இருக்கிறார்.

ஆனால், குழந்தைக்கு மருத்துவமனையில் படுக்கை வசதி செய்துதர அங்கிருந்த நர்ஸ் மற்றும் துப்புரவு தொழிலாளியும், சுமிதா-ஷிவ் தத் தம்பதியிடம் லஞ்சம் கேட்டுள்ளனர். அதேபோல், முக்கியமான ஊசி ஒன்று போடுவதற்கு மருத்துவ உதவியாளர் ஒருவரும் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் கேட்ட தொகையை கொடுக்க சுமிதா-ஷிவ் தத் தம்பதியிடம் பணம் இல்லாததால் பணத்தை உடனடியாக தங்களால் தர இயலவில்லை, ஆனால் தருகிறோம் என்று கூறி இருக்கின்றனர். ஆனால் அதை ஏற்காத மருத்துவ உதவியாளர், குழந்தைக்கு போடவேண்டிய அவசியமான  ஊசியை தாமதமாகத்தான் போட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகதான் குழந்தை கிருஷ்ணா பரிதாபமாக உயிரிழந்ததாக சுமிதா-ஷிவ் தத் தம்பதியினர் கண்ணீர் மல்க குற்றஞ்சாட்டி உள்ளனர்.

''நீங்கள் கேட்கும் பணத்தை தர இப்போது எங்களிடம் பணம் இல்லை. ஆனால் நீங்கள் கேட்ட லஞ்ச பணத்தை நாங்கள் தந்துவிடுகிறோம் என்று எவ்வளவே கெஞ்சியும் கேட்கவில்லை. அதனால்தான் அவர் தாமதமாக என் குழந்தைக்கு அந்த முக்கிய ஊசியை போட்டார். உரிய நேரத்தில் அந்த ஊசியை போட்டு இருந்தால் எங்கள் குழந்தையை காப்பாற்றி இருக்க முடியும். தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்" என்று கண்ணீர்விடுகின்றனர் சுமிதா-ஷிவ் தத் தம்பதி .

இந்த சம்பவம் குறித்து பேசிய மருத்துவமனையின் பொறுப்பு மருத்துவர் கூறும்போது, ''குழந்தைக்கு தாமதமாக ஊசி போடப்பட்டதால்தான் உயிரிழந்தது என்று கூறுவதை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் லஞ்சம் கேட்டதாக கூறப்பட்ட துப்புரவு தொழிலாளி உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அந்த நர்சும் வேறு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது" என்றார். 
இந்நிலையில், தாமதமான சிகிச்சையால் 10 மாத குழந்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உத்தரபிரதேச அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், 4 வாரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு, மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தால் பல மனித உயிர்கள் காக்கப்படும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்க வழியில்லாத ஏழைகளின் நிலைமையை கேள்விக்குள்ளாக்கி விடும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

லஞ்ச விவகாரத்தால் குழந்தை இறந்துபோன சம்பவம், உத்தரப்பிரதேச மக்களிடம் மட்டுமல்லாது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, August 7, 2016

அரும்பாகி மொட்டாகி பூவாகி: கவிஞர் தணிகை.

அரும்பாகி மொட்டாகி பூவாகி: கவிஞர் தணிகை.




அப்போதெல்லாம் பிரதோஷ தினத்தில் மேட்டூர் சுப்ரமணிய சாமி கோவிலில் சேவை செய்வதும், ஆன்மீக இறைப் பணிகளிலும் பங்கெடுத்துக் கொள்வதும் தவறாது. அந்தக் கோவில் ஒரு வகையில் பார்த்தால் எனக்கு மிகவும் நெருங்கியது.எனக்கு அங்குதான் பெயர் வைத்தார்கள் என்று எனது தாய் கூறுவார்.தாய் இறந்தே இப்போது 10 ஆண்டு ஓடி விட்டது நாளையுடன்.எம் வீட்டுக்கும் அந்தக் கோவிலுக்கும் 8 கி.மீ தொலைவு.

எங்கள் குடும்பத்தில் 5 பெண்களும், என்னுடன் சேர்த்து 3 ஆண்களும் மக்கள். எனவே பெண்சார் பிறப்பே அதிகம் எல்லாருக்கும்.பெண்களுக்கு எல்லாம் ஆளுக்கொரு ஆண் குழந்தையுண்டு.ஆனாலும் பெண்கள் அதிகம். எனவே எனக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும் என உலகு எதிர்பார்த்தது. மனைவி பிரசவத்துக்காக தனது தாயின் இல்லம் சென்றிருந்தார்.

கர்நாடகாவில் உள்ள துக்ளாபுரம் என்ற ஊருக்கு. அவர்களது பெரியப்பா ஊர் லக்குவல்லி. அது ஷிமோகா மாவட்டத்தில் உள்ளது. இவர்கள் ஊர் துக்ளாபுரா தறிக்கெரே தாலுகாவில் சிக்மகளூர் மாவட்டத்தில், என்றாலும் இரண்டு ஊருக்கும் இடையே ஏழெட்டு கி.மீ மட்டுமே.

எனவே லக்குவல்லியில் உள்ள மருத்துவமனையில் மனைவி பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். பெரியப்பாவின் ஈடுபாட்டில். தலைப்பிரசவம். (மட்டுமல்ல ஒரே பிரசவம் என்பதும் இன்று வரை நிரூபணம்)

நான் எனது 36 ஆம் வயதில் திருமணம் டிசம்பர் 4ல் இந்தியாவின் சுதந்திரப் பொன் விழா ஆண்டில் 1997ல் செய்து கொண்டேன்.அப்போதே நூல்கள் எல்லாம் வெளியிட்டு இருந்தேன். போதுமானவரை நாட்டுக்கும் வீட்டுக்கும் என்னால் செய்ய முடிந்ததை செய்து விட்டதாகவே உணர்கிறேன். இனி எப்போது இறந்தாலும் எனக்கு சந்தோஷமே என முதல் புத்தகத்தின் முன்னுரையிலேயே குறிப்பிட்டு விட்டேன். தந்தை இறந்து அப்போது 11 ஆண்டுகள் ஓடி விட்டன. அவர் 1986 நவம்பர் 18ல் உயிர் நீத்தார்.

தாய் என்னுடனே அதன் பின் 20 ஆண்டுகள் உடனுறைந்தார். இல்லை நான் அவர்களுடன் இருந்திருக்கிறேன். இந்தச் சூழலில்தான் நான் மேட்டூர் சுப்ரமணிய சாமி கோவிலில் பிரதோஷ பூஜையன்று ஆர்வமுடன் இறைச் சேவை புரிந்து வந்தேன். அப்போது ஒரு நாள் வீட்டுக்கு போய்ப் பார் நல்ல செய்தி காத்திருக்கிறது என ஒரு வாக்கு கிடைத்தது. ஒலியற்ற வார்த்தை.

வீடு வந்தேன் மகன் பிறந்த செய்தி காத்திருந்தது.எனது  சேவைப்பணி பொருட்டு நிறைய கற்றேன் பெற்றேன் உற்றேன் அனுபவங்களை நிறைய. அதில் ஒன்று ஆண் பெண் பாலுறவு பற்றிய தெளிவான இயற்கை முறைகளை, மற்றும் ரிதம் மெத்தேட், வாத்ஸ்யானர் காம சூத்திரம், கொக்கோகோ முனிவரின் காம சாத்திரம் அறிவியல் மருத்துவம் சார்ந்த முறைகள் எல்லாம் . அதை ஒரு சேவையாக அனைவர்க்கும் ஈந்தேன் மகிழ்ந்தேன் மணத்துக்கும் முன்பே.

அப்படி இருக்கும் போது அதை நான் கடைப் பிடிக்காமல் இருப்பேனா?  கடைப் பிடித்தேன் அதன் விளைவாக 1998 டிசம்பர் 16 அன்று மகன் ஈன்றேன். மகிழ்ந்தார் மகிழ்ந்தார், சிலர் வழக்கப் படி முதல் பிரசவமே மகனாய் ஈன்று விட்டானே என இருண்டார்.

பூம்பிஞ்சை 3 மாதம் தொடுகையில் கர்நாடகாவிலிருந்து ரயில் மூலம் பெங்களூரிலிருந்து பேருந்து மூலம் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தும் முன் அந்தக் குழந்தை பேருந்தின் ஓட்டுனர் அடித்த ‍ஹாரன் சத்தம் கேட்டு வீர் வீர் என்று அழுதபடியே வந்தது. எத்தனை இருக்கைகள் பின் சென்ற போதும் அதன் அதிர்ச்சியும் அழுகையும் ஓயவில்லை.

அந்த ஆண் மகவு பிறந்த பின் அப்போது சென்னைக்கு செல்ல வேண்டிய பணி இருந்ததால், அதை எல்லாம் முடித்து ஒரு வாரம் சென்ற பின் தான் தகப்பன் சென்று  கர்நாடகாவில் பார்த்தேன். ஆனால் அப்போதே அது  தனது பிஞ்சுக் கை விரல்களால் எனது கையைப் பிடித்துக் கொண்டது.

அந்த அரும்பு மொட்டாகி பூவாகி இன்று தானே கல்லூரிக்கு செல்வதாக புறப்பட்டது டிசம்பர் 16 வந்தால் அதற்கு வயது 18.

அந்த பெங்களூரிலிருந்து வந்த பயணம், பேருந்து ஓட்டுனரின் ஒலிப்பான் சத்தம் கேட்டு வீறிட்டதும், எனது விரல்களை தனது விரல்களுடன் சேர்த்து இறுக்கிப் பிடித்துக் கொண்டதும் நேற்று நடந்தது போல் இருக்கிறது. அட...18 ஆண்டுகள் ஓடிவிட்டன...

பெண் பிள்ளையும் நதி நீரும் வளர்வது தெரியாது என்பார்கள், ஆனால் ஆண் பிள்ளையும் கூட‌ அப்படித்தான் என்பதை எம்மால் காண உணர முடிந்திருக்கிறது...

 2015 16 ஆம் ஆண்டின் மேனிலைப் பள்ளிகளிடை நடைபெற்ற போட்டியில் வென்ற அந்த வினாடி வினா மாநில வெற்றியாளர் ‍ அட அவருடன் தாம் எத்தனை அனுபவங்கள், பெற்ற இன்ப துன்பங்கள்..

ஆமாங்க கல்யாணம் பண்ணிக்க வேண்டும்தான்...ஆ.ப.ஜெ அப்துல்கலாம் கூட கட்டைப் பிரமசாரி அவர் கூட கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்றுதான் சொன்னார். காந்தியும் குடும்பஸ்தர், மதர் தெரஸா விலக்கு. இந்த‌ எனது 3 வழிகாட்டிகளில் இருவர் மணமிலார். மணம் காணார். ஆனால் இந்த வகையில் நாம் காந்திய வழியில்...

பொறுப்புகளில் இருந்து தப்பிக்கும் சாதி எமதல்ல. முடிந்தவரை போராடுவோம். இயற்கை துணை இருக்கும் என நம்புகிறோம். புத்தர் கூட இந்தக் கேள்விகளில் சிக்குண்டே பிறவாத வீடு  உண்டு இறவாத வீடு ஏது என போதனை செய்தார்... பிறப்பே இல்லை என்றால் இறப்பு ஏது? இருப்பை மழையாக்குவோம். அனைவர்க்கும் பயன்படும் வழியாக்குவோம்.

ஆயிரம் பிள்ளைகளை விட ஒரு பிள்ளை சிறந்தது‍  பைபிள்.




மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Tuesday, August 2, 2016

மடமை ஓவியம்: பாரதி தாசன்

மடமை ஓவியம்: பாரதி தாசன்







பார்த்ததைப் பார்ப்பதும், கேட்டதைக் கேட்பதும்
               படத்தின் நோக்கமெனில்
போர்த்த அழுக்குடை மாற்றமும், வேறு
                 புதுக்கலும் தீ தாமோ?

காத்தது முன்னைப் பழங்கதை தான் எனில்,
                கற்பனை தோற்றதுவோ?
மாத்தமிழ் நாட்டினர் எந்த புதுக்கதை

                 பார்க்க மறுத்தார்கள்?

பாமர மக்கள் மகிழ்ந்திட வைத்தல்
            படங்களின் நோக்கமெனில்
நாமம் குழைத்திடவோ அறிவாளர்கள்
            நற்கலை கண்டார்கள்!
தூயமைத் தமிழ்ப்படம் செந்தமிழ் நாட்டில்
            தொடங்கையில் செல்வரெலாம்
தாமறிந்துள்ள தமிழ்ப்புல வோர்களைச்
           சந்திப்பதேனும் உண்டோ?

நேர்மை இலாவகை இத்தனை நாளும்
          நிகழ்ந்த படங்களெல்லாம்
சீர்மிகு செந்தமிச் செல்வர்கள் பார்வைத்

           திறத்திற் பிறந்தீருந்தால்

ஓர் தமிழ்நாட்டில் சமத்துவ நாட்டையும்
          உண்டாக்கித் தீர்த்திடலாம்
ஆர் செய்யும் பூச்சாண்டி இங்குப் பலித்திடும்?
          அடிமையும் தீர்த்திடலாம்!


பாதி தளபதி பாதி நாயகன் பற்றி எல்லாம் பாரதி தாசன் சொல்லவே இல்லை....

 மறுபடியும் பூக்கும் வரை
 கவிஞர் தணிகை.