Monday, August 4, 2025

களை இல்லாத இந்த‌ ஆடி 18 (2025): கவிஞர் தணிகை

 களை இல்லாத இந்த‌ ஆடி 18 (2025): கவிஞர் தணிகை



வழக்கம் போல் 3 நண்பர்கள் நடைப் பயிற்சிக்கு செல்லும் நேரத்தில் 16 கண் மதகு வரை சென்று ஆடி 18ஐ கொண்டாட சென்றோம். உபரி நீர் ஏதும் 16 கண் மதகு வழி வெளி அனுப்பப் படவில்லை. அணை நிரம்ப கதவு முடிவு வரை நீர் நிரம்பி இருந்தது.ஆண்டுக்கு ஆண்டு கூட்டம் களை கட்டும் அணை மேல் மேட்டூரின் எல்லீஸ் டங்கன் பாலம் வெறிச்சோடிக் கிடந்தது. ஒரு வேளை நாங்கள் போகும் வழக்கமில்லாத கீழ் மேட்டூரில் கூட்டம் இருந்திருக்கலாமோ? காலை முதல் நிறைய வந்து சென்றிருக்கலாமோ? எல்லா நீர் நிலைகளிலும் நீர் நிரம்பி உள்ளதால் மக்கள் ஆங்காங்கு தங்கள் விழாவை நடத்திக் கொண்டு விட்டனரோ? நீர் வெளியே வராததால் புதிய பாலத்திலும் எவருமே இல்லை மக்களும், கடைகளும். 


இந்த நாள் வருமுன்பே சில முறை நீர் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப் பட்ட நீர்த் திரள் காட்சிகளை கண்டு விட்டதால் ஆர்வம் இழந்து விட்டனரோ...எப்படியோ மொத்தத்தில் கூட்டம் மிகக் குறைவே... மாலை சுமார் 6 மணி அளவில் உள்ளூர் மக்கள் வாகனங்களில் கொஞ்சம் வர ஆரம்பித்தனர், சிறு தூறலும் வர ஆரம்பித்திருந்தது.


நாங்கள் வழக்கம் போல கம்பி வேலி ஓரம் கடைசி வரை நடந்தோம். முடிவில் ஒரு விளக்கேற்றும் மாடம் புதிதாக இருந்தது. கொண்டு சென்ற காது ஓலைக் கருகமணி,கறுப்பு வளையல் வெற்றிலைகள், எல்லாம் வைத்து ஒரு கற்பூரக் கட்டி எங்கள் வீட்டில் கொடுத்திருந்ததை ஏற்றி வைத்தேன். கொளுத்தி வைத்தேன்.(உள்ளூர எப்போதோ: எம் மக்களால் இதுகாறும் கற்பூரத்துக்கு செலவளித்த காசு சேர்ந்திருந்தால் நதிகளை இணைத்திருக்கலாம் கங்கை காவிரியை இணைத்திருக்கலாம் என்று எழுதியது ஏனோ நினைவிலாடியது காரணமின்றி)


ஒரு இராட்டின தூரியுடன் வழக்கத்தை விட மிகக் குறைவான கடைகளே இருந்தன. ஞாயிற்றுக் கிழமையாதலால் அருகிருக்கும் வாரச் சந்தையில் கூட அவ்வளவு நெருக்கமான கூட்டம் காணப்படவில்லை. காலம் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி முன்னேறிச் சென்றபடியே இருக்கிறது.


நமைக் கடந்து போகும்  ஒவ்வொரு மணித் துளியும் நாம் மறுபடியும் திரும்பப் பெற முடியாததாய் மாறி விடுகிறது. வளர்ச்சி வண்ணங்களை இழக்க வைக்கிறது.சிறுவராய் இருந்த போது இரவெல்லாம் உறக்கம் வராமல் இருந்து சாலையில் செல்லும் மாட்டு வண்டிச் சத்தங்களும், கறுப்பு சட்டிகளும், சகோதர சகோதரி கைகளைப் பிடித்துக் கொண்டு அணை மேல் நடந்து  கடைசி வரை சென்று வந்ததும், அந்த ருசியான பொறி கடலை, பேரிக்காய்களுடன், ஏதோ ஒரு பலூனோ, விளையாட்டுச் சாமானோ, ஊதலோ, உண்டி வில்லோ, புல்லாங்குழலோ வங்கி வந்த அந்த இனி வராத காலத்தின் நினைவின் வாசம் மட்டுமே காலிப் பெருங்காய டப்பாவாக வாசனை பலமாக வீசியபடியே இருக்கிறது.


ஆற்று நீரில் காலை நனைத்து அந்தப் பழைய புண்களை மீன்கள் வெடுக் வெடுக் என பிடித்து இழுத்து அழுக்கை சுத்தம் செய்து புண் ஆற வத்த காலமும், நவ தானிய பாலிகை எல்லாம் மிக அழகாக பெண்கள் எல்லாம் எடுத்து ஆற்று நீரில் அலையோடு விட்டு வணங்கி வந்ததும், கன்னிமாரும், கன்னிப் பெண்கள் வேண்டுதலும் எல்லாப் புனிதமும் எங்கோ சென்று விட்டன... அட அங்கே இங்கே ஓரிரு கழிப்பறை கட்டி வைக்கலாமே... அதை மக்களை சரியாக பயன்படுத்த கற்று கொடுக்க வைக்கலாமே...அந்த துர் நாற்றம் மட்டும் தவறாமல் வீசியபடியே இருக்கிறது. மறக்க முடியாமல்.


மறுபடியும்  பூக்கும் வரை

கவிஞர் தணிகை.



No comments:

Post a Comment