Saturday, March 23, 2019

மார்ச் 23 2019 தனியா தணியா தணிகையா மீச்சிறு மானிடமா கொள்கைக் குன்றா?

தனியா தணியா தணிகையா மீச்சிறு மானிடமா கொள்கைக் குன்றா?
 மார்ச் 23 2019
இரண்டாம் வகுப்பு குழந்தை திரேசா என்னும் ஆசிரியைதான் தனிகாசலம் என்று இரட்டை சுழி போடக் கூடாது. தணிகாசலம் என்று மூன்று சுழி .ணா தான் போட வேண்டும் என்று அறிவுறுத்தினார். தனி தனி எனக் கூப்பிட்டு கூப்பிட்டு தனியாகத் தெரிகிறேன் மாபெரும் மனிதக் கடலில் கூட.

யுனிசெப் மாதவி அசோக் ஆங்கிலத்தில் எழுதும்போது எனது  பேரை ட்டி ஏ TANIKACHALAM என்று போடலாம்   ஆரம்பத்தில் இருந்து THANIKACHALAM THA  ட்டி ஹெச் ஏ என்றுதான் முதல் எழுத்தை ஆரம்பித்து வந்ததை ஆங்கில மொழி மரபில் H ஹெச் தேவையில்லை  TA டி ஏ என்றே ஆரம்பிக்கலாம் என மாற்றினார்.

ஆனால் கல்லூரி நிர்வாகம் வங்கிக் கணக்கை ஆரம்பிக்கும்போது கல்லூரியில் THA ட்டி ஹெச் ஏ  என முதல் எழுத்து குறிக்க  உள்ளதால் அப்படியே இருக்கும் கணக்கு எண் கொடுத்தால் மட்டுமே அந்த வங்கிக் கணக்கை ஏற்போம் எனச் சொல்லிவிட்டது.


தனி, தணி, தணிகை, தணிகை எழிலன், தணிகாசலம் என்று எப்படிவேண்டுமானலும் அழைத்து வரும் இந்த பேருடனான இயக்கம் ஆரம்பித்தது தாய் உண்ட உணவுக் கரைசல் உருவாக்கிய உயிருடன் ஒர் பிண்டம் வெளிவந்ததன் பின் சில மாதங்கள் கழித்தே பேரும் ஊரும் உறவும் கூடிப்போனது.

பாரதி சொன்னபடி எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவ அதில் ஓர் விந்தின் துளி அண்டத்து சினை முட்டையுள் புக உயிர்... சிறு விதையிலிருந்தா இவ்வளவு பெரிய அரச மரமும் ஆலமரமும்...

இயற்கையை என்றும்  நேசித்து வாழும் வாழ்வு எவ்வளவு இனிமையானது அதிகாலை சுமார் 6 மணி இருக்கும் சிறு மேல் காற்று இப்போதுதான் கொழுந்து விடும் சிறு அரச இலைகள் வானாளவ வளர்ந்து நிற்கும் அரசின் கிளைகளில் கல கல என  பேசுகின்றன‌

காற்று, நீர், நிலம், நெருப்பு, ஆகாயம் இதற்கு மேல் என்ன...

என்னதான் செயற்கையுடன் மனிதம் வாழ்ந்தாலும் இயற்கையை என்னதான் செய்ய முடியும்? மணல் அப்படியே இருக்கிறது மனிதரால் தயாரிக்கப்பட்ட சிமென்ட் கலவை கொஞ்ச காலத்தில் தனது தன்மையை காற்றில் மாறி பயன்படாததாகி மாறிவிடுவதை சிமென்ட் சட்டாகிவிட்டது இறுகி கட்டியாகிவிட்டது என்கிறார்கள். அதே போல இவ்வளவு காற்று இருக்கும்போதும் அந்த சிறு இதயம் அதை எடுத்துக் கொள்ளாது துடிக்காது, அந்த நுரையீரல் அந்தக் காற்றை எடுத்து சுவாசிக்காது கட்டையாகிப் போகும் இந்த உடலுக்கு இயக்கம் இருக்கும் வரை எத்தனையோ பேர், எத்தனையோ நட்பு, எத்தனையோ உறவு, உலகெலாம் தொடரும் தொடர்பு...

மதுவிலக்குக் கொள்கைக்காக உயிரை விடாத குறைதான். ஏன் தோழன் சசிபெருமாள், சின்னபையன் ஆகியோரை விதைத்தோமே...என்றாலும் நீங்கள் என்ன சாதித்திருக்கிறீர் அதனால் மதுவை சமூக அரங்கிலிருந்து உங்களால் ஏதாவது செய்து மாற்றி இல்லாமல் செய்ய முடிந்ததா என்ற நியாயமான கேள்விகள்...

அரசு ஒரு பக்கம் கள் விற்பாரை சிறைப்பிடித்தபடி, மதுக்கடைகளை சாலையெங்கும் நடத்தியபடி மதுவிலக்குச் சேவைக்கான விருது வேறு காவல் துறை அன்பர்களுக்கே வழங்குகிற நிலை ....

என்றாலும் நான் நானாகவே...

இலஞ்ச ஊழல் ஒழிப்பு போராட்டத்திலும் அப்படித்தான்..

நண்பர்கள் குகன், சிற்பி மேலும் பலரும் கூட சிறிதும் நெக்குவிடாத எனது கொள்கை நெறி கண்டு சற்று பயமே கொள்வார்கள் என்ன நேரத்தில் எங்கே மேடையில் எதைப் போட்டு உடைத்து விடுகிறாரோ என என்னை...

 கவிஞராக, எழுத்தாளராக, சமூக செயல்பாட்டாளாராக,இதழியலாளாரக திட்ட ,அலுவலராக, பொது உறவு அலுவலராக  தேசிய சேவைத் தொண்டராக இப்படி பல முகங்களின் அடையாள மாறுதல்கள் உடன் தம்பியாக அண்ணனாக நல்மகனாக நண்பராக இப்படி சில உருவங்களுடனும்..

கெட்ட பழக்கம் ஏதுமே அண்ட  விடக்கூடாது என்பதில் நெருப்பாகவும் அன்பு நட்பு காதல் இவைகளிடத்தில் தணிக்கும் நீராகவும் அடக்கம் பொறுமையில் நிலமாகவும் கொடுமையைக் கண்டு எரிவதில் பொங்கி எழும் புயல் காற்றாகவும்  கற்பனை வான மனோ உலகில் அகண்ட ஆகயாத்துடன் தொடர்பாகவும் எப்போதும் வாழ்ந்து வர... இடையில்

அப்துல்கலாம் தொடர்பும் உச்ச நீதிமன்ற நீதிபதி அவையில் பேசிய அனுபவமும் போனஸாக கிடைத்தன... கேட்காமலேயே...அதெல்லாம் அப்படி என்ன பெரிதா என்றும் நண்பர்கள் கேட்பர். அது பெரிதுதான். என்னைப் பொறுத்த வரை...

போராட்டம் போராட்டம் போராட்டக் களமே வாழ்வாக... நேர்மையான வழிச் செல்வம் மட்டுமே வாழ்வுக்கு வழி கூட்ட ...ஒரு வீடு கூட கட்ட முடியாத குறைக்காக  என்ன வாழ்க்கை நீ வாழ்ந்தாய் என ஒரு பக்கம் கூற...

ஒரு ரூபாய் கூட பேருந்து நடத்துனருக்கும் விடக்கூடாத மனது வராத வாழ்வு... அவ்வளவுதான் பொருளாதார பலம்.

 ஒரு நண்பர் வாருங்கள் என 4 பேருடன் சென்று ஒரு எலுமிச்சை இரசம் அருந்தியே ஆக வேண்டும் என நிர்பந்தித்து வாங்கிக் கொடுத்து விட்டார். இவை எல்லாம் எனக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் கிடைக்கும் என்றே தெரியவில்லை...

இன்று ஒரு மாண்பு மிகு மனிதர் 100 ரூபாய்க்கு டைரிமில்க் சாக்லெட்கள் வாங்கி அவர் கையால் கொடுத்து வாழ்த்திவிட்டார் இன்றைய ஒரு நாளின் குறிப்புக்கு...அதாவது இன்று தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்த ஒரு நாளின் குறிப்பும், சூரியனை கலாம் சொல்வது போல அரை நூற்றாண்டுக்கும் மேலாக சுற்றி வருகிற பூமியின் போக்கும் அதில் இருக்கும் எனது உயிர்ப்புமாக‌...

அன்பு நண்பரே: எனது ஆயுள் 86 என தியான வழி மூலம் நான் அறிந்திருக்கிறேன்...ஆனால் அதில் இன்னும் எத்தனை ஆண்டுகள் உங்கள் தொடர்பில் எல்லாம் அந்த இனிமையாபன‌ கல்லூரி வளாகத்தில் இருப்பேனோ என்பதற்காகவே இன்று சற்று சிரமம் மேற்கொண்டாலும் கல்லூரிக்கு அந்த சனிக்கிழமையிலும் அரை நாள் பணி  நேரம் வந்து பேருந்தில் நின்றபடியே திரும்பி வந்ததுமாக‌...

இன்றைய நாளைக் கழித்திருக்கிறேன். மிகச் சிலருக்கே இந்த நாள்பற்றி பகிர்ந்து கொண்டேன். ஆனால் இளைய தலைமுறை நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இணையத்திலும் முகநூலிலும் வலைப்பூவிலும் இந்த நாளை பதிக்கிறேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment