ஆக்கபூர்வமாக உருவாக்கும் செயல்களே அழகின் வடிவாகும்: கவிஞர் தணிகை
இடைவெளித் தோற்றங்கள் எப்போதும் அக்கரை பச்சையாகி கவர்ச்சியூட்டுபவையாகவே இருக்கும். அந்த இடைவெளியைக் கடந்து மிக அருகிருந்து பார்க்கும்போதுதான் அதன் கோணங்கள் மாறி அதன் உண்மைத் தன்மை நமக்குள் உணர்வலைகளை ஏற்படுத்தும்.
மிக அழகான தோற்றங்கள் உடையவராக சிலர் இருப்பார். ஆனால் அவர்களின் அழகில்லாத செயல்பாடுகள் அவர்களை அன்னியப்படுத்தி விடும்.
பிறரைக் கெடுக்காமல் வாழத் தலைப்படும் நாகரீகம் அறிந்த மனிதம் எப்போதாவது வெளிப்பாடு பெற்று அனைவராலும் பாராட்டப்பட வில்லை என்றாலும் கூட அமைதிப்படுத்தும், சாந்தப்படுத்தும்...
ஒரு பயன்படுத்தப்பட்ட காகிதத்தை எங்கே எப்படி அவர் போடுகிறார் என்பதை வைத்தே அவர் எப்படி சமூகத்திற்கு பயன்படுவார் அல்லது சமூகத்தை பாழ்படுத்துவார் என்பவை விளங்கிவிடும். அவரை பார்த்த மாத்திரத்தில் இவருடன் சேர்க்கை அவசியமா அலல்து இவரை எப்படி பண்படுத்துவது என்ற எண்ண அலைக்குள் நல்லவர்கள் இயங்க ஆரம்பிப்பார்கள் அதுவும் முடியாதபோது அவரிடம் எதுவும் முடியாதபோது அவரை விட்டு எப்படி எப்போது பாதிப்பின்றி விடுபடுவது அல்லது விலகி நிற்பது என்ற யோசனை வரிகள் ஓட ஆரம்பிக்கும்.
உடலை , உடையை, சுற்றுப்புறத்தை, இருப்பிடத்தை, தாம் இருக்கும் இடத்தை தாம் தொடர்பு கொள்ளும் இடத்தை எல்லாம் தூய்மையாக தாய்மை உணர்வுடன் வைத்திருக்க முனையும் மனிதரை எல்லாருமே விரும்புவார்
நான் பேருந்தில் பயணம் செய்யும் போது கவனித்தேன் அசிங்கமான உடையணைந்த சுத்தமில்லாத குளிக்காத நபர்களை தம்மருகே அமரக்கூட எவரும் அனுமதிப்பதில்லை. அமர இடமளிக்கவே இல்லை...ஆனால் அதுவே சுத்தமாக சுத்தம் செய்யப்பட்ட உடையுடன் இருப்பாரை அமர அனுமதிக்கிறார்கள்...
தியாகம் கூட அழகுதான், வீரம் தியாகமாக மாற்றப்படும்போது அது அழகாகிவிடுகிறது...மாபெரும் பணக்காரர்கள் எல்லாம் அசிங்கமானவர்கள்தாம் தம் பணத்தை, வசதி வாய்ப்புகளை சுயநலம் தவிர வேறு எதற்குமே அர்ப்பணிக்காதபோது...
பொய் சொல்வார் எவ்வளவு அழகானவராய் இருந்தபோதும் எப்படிப்பட்ட வாழ்வின் நிலையில் இருந்தபோதும், எப்படிப்பட்ட பதவி பெருமைகளில் திளைத்தபோதும் அழகற்றவர் ஆகிறார்.
சிலர் ஒருவர் செய்யும் தவறுகளுக்கு கண்,காது,மூக்கு எல்லாம் வைத்து வரைந்து அந்த நிறுவனத் தலைமையிடம் அதை பெரிதாக்கி தாம் நல்ல பேர் எடுப்பதற்காக பிறரை இழிவு படுத்தி வைப்பார் பாருங்கள் அப்போது அவர் அசிங்கமாக மாறிப்போகிறார்.
பொதுவாக புறம் பேசித் திரிவார், பொல்லாங்கு செய்வார், பொய், புனை சுருட்டு செய்வார் யாவருமே அசிங்கமான முகவரிக்கு சொந்தக்காரர் ஆகிவிடுவார்...
பணக்காரர் இறையருள் பெறுவதென்பது ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது என்கிறது ...விவிலியம்...
பிச்சைக்காரர்களை எல்லாம் எப்போதும் ஏன் அனைவரும் வெறுக்கிறார்கள்..பிச்சை இடுவது கூட இரண்டாம் பட்சம்தான்...அவர்களின் தூய்மையின்மை அவர்களை ஓரங்கட்டி விடுகிறது...
ஒரு நகரில் தினமும் ஒரு மிகவும் வலுவான தேகமுடைய 40 முதல் 50 வயது மதிக்கத் தக்க நபர் கை சொம்பில் வேப்பிலை செருகி மேல் மருவத்தூர் செவ்வரி வண்ண வேட்டி கட்டி பிச்சை கேட்கிறார்.
ஏற்கெனவே மிகவும் நைந்து போன கிழவி ஒருவர் வழக்கமாக ஒரு பக்கமாக இருந்து கடைசி வரை பிச்சைக் கேட்டுக் கொண்டே தினமும் போவார் அவரை இப்போது காணவில்லை...
புரிந்து கொள்ளல், தெரிந்து கொள்ளல், அறிந்து கொள்ளல் இவற்றில் எல்லாம் கூட அழகு மிளிர்கிறது என்பது உண்மைதான் வார்த்தை சொல்வதை விட உணர்வுகள் சொல்வதென்னவோ உவப்பானதுதான்...ஆனால் அவை அந்த அந்தக் காலக்கட்டத்தில் புரியாமல் போய்விடுவதுதான். வாழ்க்கையின் சூட்சுமம், புதிர்.
இன்னும் ஒன்றிரண்டு மாடுகள்
வண்டி இழுத்துக் கொண்டுதான் இருக்கின்றன
காட்சிப் பொருளாக...
தொழிலாளி என்ற பேரில்தாம் தமிழின் முக்கிய எழுத்துகளான ழகரம், லகரம் மற்றும் ளகரம் எல்லாம் சேர்ந்திருக்கிறதாம்...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment