சொந்த உள் நாட்டிலேயே தம் மக்களுக்கே எதிரான போராகவே இதைக் காணலாம். 100 நாட்கள் வரை மக்கள் போராடும் வரை தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு வேறு என்ன அத்தியாவசிய வேலை இதைத் தீர்த்து வைக்காமல் ....
தவிர்க்க முடியாத காரணத்தால் இப்படி நேர்ந்தது என ஒரு மந்திரி கூற, நிலை கட்டுக்குள் அடங்கி இருக்கிறது மக்கள் பீதி வேண்டாம் என காவல்துறைத் தலைவர் தெரிவிக்க, இறந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குகிறோம் என ஆட்சியாளர்கள் அறிவித்திருக்க...
வன்முறை சரியான வழி அல்லதான். ஆனால் அதற்காக தம் மக்களையே சுட்டு வீழ்த்துவதும், அடித்து நொறுக்குவதும் ஒரு சரியான மக்களாட்சிக்கு அடையாளமல்ல..
இருக்கும் கொஞ்ச நஞ்சம் செல்வத்தையும் அடித்தட்டு மக்களிடம் இருந்து பெரும் பணக்காரர்களாக இருக்கும் இது போன்ற வேதாந்தா குழுமம், ஸ்டெரிலைட் ஆலை முதலாளிகளுக்கு விற்றுக் கொடுத்து...நிலம், நீர் , கனிமம் எல்லாமே அந்த முதலாளிகள் கைக்கு சென்று விட பதிலாக உடல்பிணி பெற்று கொஞ்சம் கொஞ்சமாக சாவதை விட இப்படி போராடி சாகவும் தயார்தான் என்ற முடிவு இந்த சம்பவத்திலிருந்து அறிய முடிகிறது.
இது வரை 9 பேர் இறந்தும் அதில் ஒருவர் நாளை வர விருக்கும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவைக் காணமல் போயிருக்கும் மாணவி என்பதும் 65 பேருக்கும் மேல் படுகாயமடைந்து கிடப்பதும் கேட்கக் கூடாத செய்திகள்.
எடப்பாடி அரசுக்கு இது ஒரு இழுக்கு...நடப்பது மக்களாட்சியா இல்லை முதலாளித்துவ கேலிக் கூத்தா என கேள்விகள் எழுப்பாமல் எவருமே இருக்க முடியாது...எப்படி வன்முறையாளர்கள் உருவாகிறார்கள் எனில் அரசின் காதுகள் எப்படி கோரிக்கை எழுப்பினும் கேட்காதபோதுதானே...
இப்போது அவர்களை வன்முறையாளர் எனக் கொன்று குவித்திருக்கும் அரசுக்கு ஏற்கெனவே இந்தப் பிரச்சனையின் தீவிரம் தெரியவில்லையா...அப்போதே அதை முடித்து வைக்க வேண்டும் என எந்த அரசியல் ஆளும் கட்சி மந்திரிமார்கள் எவரும் தலையிட்டுத் தீர்த்து வைத்தார்களா? இந்தியாவிலும், தமிழகத்திலும் இதே போன்றுதான் எந்தப் பிரச்சனையுமே நடந்து முடிந்தபின் தாம் முக்கியத்துவம் பெறும்...அதன் முன் எவருமே எதைப்பற்றியுமே சிந்திப்பதில்லை, நாடாளும் மஹாராஜாக்களுக்கு மலர்கண்காட்சிகள் திறந்து வைக்கவும், சாலைப்பணிகள், மேம்பாலப்பணிகளுக்கு அடிக்கல் செய்யவுமே நேரம் சரியாக இருக்கும்போது இது பற்றி எல்லாம் என்ன...கட்சிகளாக மக்கள் கூறு பிரிக்கப்பட்டு இருக்கும்போது சில பல இலட்சங்களை வாயடைக்க நிவாரணமாக வழங்கி விட்டால் போயிற்று... என்ற வழக்கமான இவர்களின் அழுகுணி பாணி இனியும் எடுபடாது என்ற அடையாளமே இந்த செய்திகள் போராட்டங்கள்...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment