Sunday, June 18, 2017

நேசமுடன் ஒரு நினைவதுவாகி: கவிஞர் சு. தணிகை.

நேசமுடன் ஒரு நினைவதுவாகி: கவிஞர் சு. தணிகை.





நல்வழி : நதிகள் இணைப்பு

கன நீராய் இருந்த நான்
வேண்டுகோளின் படி:‍‍  மிக‌
லேசாயிருக்கிறேன்.

பிதாமகர் சர் ஆர்தர் காட்டனுக்கும்
தமிழ்த் தாயின் தலைமைக் கவி பாரதிக்கும்
முதல் வணக்கம்.

வழித் தோன்றல்கள்:
டாக்டர் கே.எல்.ராவி, கேப்டன் தின்ஸா தஸ்தூர்
சில்வர் டங் சீனிவாச ஐயங்கார், சர்.சி.பி.ராமசாமி ஐய்யர்
போன்றோர்க்கு மறு வணக்கம்

பொள்ளாச்சி நா.மகாலிங்கம்
போன்றவர்க்கும் எங்கள் கூர் வேல் ஆய்தத்துக்கும்
ஒரு வணக்கம்.

****************************************************************************

நதிகளைத் தாய் என்கிறோம்
பூமிக் குழந்தைக்குப் பாலூட்டுவதால்

நதிகளைத் தாய் என்கிறோம்
புவி மாந்தர்க்குச் சோறூட்டுவதால்

நதிகளைத் தாய் என்கிறோம்
உடல் கழுவி தாலாட்டுவதால்.

நதிகளைப் பெண் என்கிறோம்
புத்துணர்வூட்டுவதால்

நதிகளை குழந்தை என்கிறோம்
கை கொட்டி கலகலவென சிரித்து
ஓயாமல் மழலை மொழிவதால்!

நதிகள் புனிதமானது
நீர் ஜீவனானது

சிந்தித்துப் பாருங்கள்
பாரதியும் கலாமும் ஒன்றுதான்

காற்றும் நீரும் ஒன்றுதான்

நதிக்கரையோரமே நாகரீக வரலாறு.
மனிதப் புற்கள் முளைத்திட்ட மகத்துவப் பண்பாடு.

மனிதர்கள் நதிக்கரைகளையே நாடுவர்
ஆடுவதற்காகவும், ஆடி விதி/ஆயுள் முடிந்ததும்

பயிர்கள் முறுவலிடும் நீரின் சிலிர்ப்புடன்
மிகையான நீரால் ஆறு
அடிக்கடி தன் பாதை மாற்றிக் கொள்ளும் அன்று

நமது கட்சிகளைப் போல்

இன்று பாளம் பாளமாக வெடிப்புகளுடன்
குளிர் காலப் பனி உதடுகளாக தமிழக மேனி
தம்பி நீர் கொண்டு வா நீ!
நெற்களஞ்சியம் பேணி.

ஐம்பூதங்களையும் அழிக்கிறோம்
அதற்குண்டானதை அனுபவிக்கிறோம்
நீரில் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன்
ஜீவ ராசிகள் பிழைக்க‌
ஹைட்ரஜன் குண்டுகள் நாம் செய்கிறோம்
ஜீவன்கள் அழிக்க‌
ஆக்ஸிஜன் அழித்து ஓசோனைக் கிழிக்க‌

ஜீவ நதிகள் இணைக்கும் கனவு
இன்று நேற்றா வந்தது?
சர் ஆர்தர் காட்டனிடமிருந்தது
பாரதியிடம் இருந்தது போல‌
பல அறிஞரிடமும் இருந்ததே
அது ஓர் 200 ஆண்டுக் கனவு.

சிதறிப் போயிருந்த நிலத் (தீவு) துண்டுகளை
தீபகற்பமாக்கினர்
இந்திய தீபம் கர்ப்பமானது
முகலாயரால், ஆங்கிலேயரால், படேலால்
இன்றுமோர் இரும்பு மனிதன் தேவை.

ஏன்? எதற்கு?
கலாம் சொல்லியும்
அரசு சொல்லியும்
உச்ச நீதிமன்றம் சொல்லியும்
மலையாளம் தடுக்கிறது
ஒரிஸ்ஸா மௌனமாய் எதிர்க்கிறது
கர்நாடகம் கர்நாடகமாய்
தேசிய மயம் வேண்டாம்
இணைப்புக்கு கை கொடுப்பாம் என்கிறது

இப்படி பல எதிர்ப்புப் புள்ளிகள்
தேசப் படத்திலிருந்து
துடைத்தெறியப்பட வேண்டியவைகளாக‌


போர்க்கால அடிப்படை
என்ற மைய அரசு
காந்தி தேசத்தை தக்க வைத்துக் கொண்டது
போர்க்கால விரைவுடன்

எங்கும் போர்க்களக் குறிகள்
ஜாதி,மத,மொழி, இன வெறியால்

நதிகள் இணைப்பு இவை நீக்கும்
பொருளாதாரக் குறைகள் போக்கும்

ஒருமித்த குரலாய், உன்னத ஒலியாய்
ஒன்றென ஆக்கும், இப்பணி முடிந்தால்
இந்தியா உலகையே தோள்மேல் தூக்கும்


கங்கையங்கு அழுகிறது
சுத்தம் செய்யும் நீரெல்லாம் அசுத்தமாகிப் போனதால்
காவிரியால் அழவும் முடியவில்லை
கண்ணீரும் வற்றிப் போனதால்!

பரவெளியிலிருந்து விழும் நீர்
நெருப்பு கோபமழிக்கும் நீர்
நிலத்துக்குத் துணை சேர்க்கும் நீர்
வெள்ளமாய் வெகுண்டெழும் ஒரு புறம்
வேணிலாய், வீணிலாய் மறுபுறம் மாறும்
சரித்திரம் மாற்றுவோம்.

***********************************************************

இணைக்கும்போது நடைமுறை வழிகளில்
சேதமும் நேரும்தான்
காடு காணாமல் போகலாம்
மலை உடைத்தெறியப்படலாம்
ஊர்கள் பிய்த்தெறியப்படலாம்
அணைகள் பூகம்ப அசைவுக்கு அடிப்படைகள்
என்ற பாடமும் கற்கலாம்

இணைப்பு நேராதிருப்பினும் இவை நடக்கும்தான்


ஒரு நாடு செழிக்க‌
களப்பலிகளும், தியாகமும் தேவையே!
நடந்தேறிவிட்டால்
வறட்சி, வெள்ளம் , சேதம், நிவாரணச் செலவு
யாவும் போகுமே!

மின்சார மீன் பிடிக்கலாம்
நீர் வழியே போக்குவரத்து செய்யலாம்
பயிர்களை வானம் பார்க்காது வளர்க்கலாம்
குடிநீரைப் பாக்கெட்டிலும்
பாட்டிலிலும் அடைக்காதிருக்கலாம்

இந்தியத் த‌லைமுறைகளை
இனி வரும் பரம்பரையில்
அமெரிக்கருக்கு முன் வைக்கலாம்
எனவே ஒரே குரலில் முழங்குவோம்
நதிகள் இணைப்பு வேண்டும்
அவசியமாய் வேண்டும், தலைவர்களே நீர்
அவசரமாய் வேண்டு(ம்)

நீரில் நனைந்த காற்று பதமாகும்
நீரில் நனைந்த நெருப்பு கரியாகும்
நீரில் நனைந்த நிலம் கவிபாடும்
ஈரத் துளியுடன் இருந்தால்தான்
வெளியும், விண்வெளியும்
வர்ண ஒளியாகும் வானவில்லாகும்

ஜீவ நதிகள் இணையட்டும்
பிரம்மபுத்திரன் கங்கையுடன்
கங்கை, காவிரி, சிந்து, கிருஷ்ணா, நர்மதை
கோதாவரி அனைத்தும் இணையட்டும்


அதற்காக அதற்கும் முன்
பாலையாய் இருக்கும்
இந்திய மனங்கள் இணையட்டும்
சோலைகளாய் விளங்கட்டும்

மனமிருந்தால் மார்க்கமுண்டு
இங்கு இலட்சியம் உண்டு
மனமார்க்கம் உண்டு...ஒன்றாய்
இந்திய நதிகள் இணைந்தே தீரும்
இது காலத்தின் கட்டாயம்.

இந்தியா உலகில் நிமிர்ந்தேயாக வேண்டும்
இது ஓர் பூகோள பூபாளம்

சுற்றும் வரை புவிக்கழகு
பாடும் வரை கவிக்கழகு
ஓடும் வரை நதிக்கழகு
நதிகள் இணைந்தால் மட்டுமே
இந்தியாவுக்கு விடிவு.....


 ‍‍‍‍      கவிஞர் தணிகை

நதிகள் இணைப்பு என்ற இந்த மேடைக்கவிதை 28.12.2002ல் இராம மூர்த்தி நகரில் நடைபெற்ற தமிழக இலட்சியக் குடும்பங்கள் நடத்திய மாநிலத் தலைமைப் பொறுப்புப் பயிற்சி முகாமில் அரங்கேறிய கவிதை.

No comments:

Post a Comment