340 பயணிகள் உயிரை காத்தவர் : இந்தியாவும் பாகிஸ்தானும் கொண்டாடிய வீர மங்கை!#Neerja Bhanot
வீரதீரச் செயல்களுக்கு வழங்கப்படும் 'அசோகச் சக்ரா' விருதை இளம் வயதிலேயே வென்றவர் பஞ்சாப்பை சேர்ந்த நீர்ஜா பனோத். இந்த விருது அளிக்கப்படும் போது 23 வயது நீர்ஜா உயிருடன் இல்லை. அண்டை நாடான பாகிஸ்தானும் தம்ஹா இ இஷானியத் என்ற கவுரவமிக்க விருதை இந்த வீர மங்கைக்கு வழங்கியிருக்கிறது. இந்த இரு தேசங்களும் ஒரு பெண்ணை கொண்டாடுகின்றன என்றால் அதன் பின்னணி என்னவாக இருக்கும்?
கடந்த 1986ம் வருடம் செப்டம்பர் 5-ம் தேதி மும்பையிலிருந்து நியூயார்க் நோக்கி அமெரிக்காவைச் சேர்ந்த பான் ஆம் விமானம் பறந்தது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் இறங்கி எரிபொருள் நிரப்பப்பட வேண்டும். விமான ஊழியர்கள் தவிர, 361 பயணிகளும் விமானத்தில் இருந்தனர். மாடலாக இருந்து விமானப் பணிப் பெண்ணாக மாறிய, நீர்ஜா பனோத்துக்கு இன்னும் 2 நாட்களில் 23வது வயது பிறக்கிறது. அந்த உற்சாகத்தில் அவர் இருந்தார்.
கராச்சி விமான நிலையத்தில் அந்த விமானம் இறங்கியது. அப்போது, கராச்சி விமான நிலைய பாதுகாப்பு படையினர் உடையில் அவர்கள் பயன்படுத்தும் வாகனம் ஒன்று பான் ஆம் விமானத்தின் அருகே வந்து நின்றது. அது வழக்கமான ஒன்றுதான் என்பதால் யாருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை. அந்த வாகனத்தில் இருந்து குதித்த சிலர் திடீரென்று துப்பாக்கி சகிதமாக பான்ஆம் விமானத்தின் படிக்கட்டுகளில் ஏறினர்.விமானத்தின் கதவை சராமரியாகச் சுட்டுத் திறக்க முயற்சித்தனர். துப்பாக்கி சத்தம் கேட்டதுமே நீர்ஜா உஷாராகி விட்டார். உடனடியாக இன்டர்காமில் பைலட்டுக்குத் தகவல் தெரிவித்து உஷார் படுத்தினார். அவர்களை விமானத்தில் இருந்து வெளியேறுமாறும் கூறினார். பைலட்டுகள் விமானத்தில் இருந்து குதித்து தப்பி விட்டனர்.
விமானத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள், விமானம் கடத்தப்படுவதாக அறிவித்தனர். 'பயணிகளை இருக்கைகளை விட்டு நகரக் கூடாது. நகர்ந்தால் சுட்டு பொசுக்கி விடுவோம்' என எச்சரித்தனர். பெண்கள் குழந்தைகளின் கண்களில் மரண பீதி. விமானத்தில் மயான அமைதி நிலவியது. லிபியாவை சேர்ந்த, 'அபு நிதால்' என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த நான்கு பேரின் கட்டுப்பாட்டில் அந்த அமெரிக்க விமானம் வந்தது. சைப்ராஸ் நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தங்கள் கூட்டாளிகளை விடுவிக்க வேண்டும் என்பது தீவிரவாதிகளின் கோரிக்கை. விமானத்தில் இருந்த அமெரிக்கப் பயணிகளை இனம் கண்டு சுட்டுக் கொல்ல வேண்டும் என்றும் தீவிரவாதிகள் வெறி கொண்டிருந்தனர்.
இதற்கிடையே, விமானத்தின் காக்பிட்டில் பைலட்டுகள் இல்லை என்பதை அறிந்தும் தீவிரவாதிகளின் கோபத் தலைக்கேறியிருந்தது. விமானத்தை சைப்ரஸ் நாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்பதால், முதலில் பைலட்டுகளை விமானத்திற்குள் வரவழைக்கத் தீவிரவாதிகள் திட்டமிட்டனர். பாகிஸ்தானுக்கான பான் ஆம் விமான நிறுவனத் தலைவருடன் இதற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அடுத்த, பதினைந்து நிமிடங்களுக்குள் பைலட்டுகள் விமானத்திற்குள் வரவில்லை என்றால் குமார் என்பவரை சுட்டுக் கொல்லப் போவதாக தீவிரவாதிகள் எச்சரித்தனர்.
விமானத்தின் கதவு அருகே குமார் முழங்காலிடப்பட்டு நிறுத்தப்படிருந்தார். கைகளை மேலேத் தூக்கியவாறு குமார் முழங்காலிட்டிருந்தார். அவரது கண்களில் மரணபீதி. பேச்சுவார்தையில் பலன் கிடைக்கவில்லை. ஆத்திரமடைந்த தீவிரவாதிகள் பயணிகள், பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் கண் முன்னரே குமாரை தலையில் சுட்டுக் கொன்றனர். பின்னர் விமானத்தில் இருந்து அவரது உடல் வெளியே வீசப்பட்டது. இதனை பார்த்த பயணிகள் பயத்தில் வெட வெடத்து போனார்கள். பயணிகள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடுநடுங்கினர்.
ஒரு கட்டத்தில் தீவிரவாதிகளில் ஒருவன் நீர்ஜாவை அழைத்தான். அனைத்து பயணிகளிடம் இருந்தும் பாஸ்போர்ட்டுகளை வாங்கி வர உத்தரவிட்டான். புத்திசாலியான நீர்ஜா, தீவிரவாதிகளின் நோக்கத்தை அறிந்து கொண்டார். பாஸ்போர்ட்டை வாங்கிய அவர், அமெரிக்க குடிமகன்கள் என்றால், அந்த பாஸ்போர்ட்களை சீட்டுக்கு கீழே ஒளித்து வைத்தார். அப்படி 41 பாஸ்போர்ட்களை நீர்ஜா விமானத்துக்குள் ஆங்காங்கே ஒளித்து வைத்திருந்தார். இதனால் தீவிரவாதிகளுக்கு அமெரிக்கர்கள் யார் மற்றவர்கள் யார் என வேறுபடுத்திப் பார்க்க முடியாததால் பல அமெரிக்கர்கள் உயிர் பிழைத்தனர்.
இதற்கிடையே பாகிஸ்தான் அரசும் தீவிரவாதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. பதினேழு மணி நேரப் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. ஒரு கட்டத்தில், கோபமடைந்த தீவிரவாதிகள், விமானத்தினுள் கண்டபடி சுப்பாக்கிச் சூடு நடத்தினர். தீவிரவாதிகள் சுட்டதில் 20 பயணிகள் இருக்கையிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இறந்தவர்களில் 12 பேர் இந்தியர்கள். இந்த சமயத்தில், நீர்ஜா சமயோசிதமாக செயல்பட்டு, விமானத்தின் எமர்ஜென்சி கதவை கண்ணிமைக்கும் நேரத்தில் திறந்தார். அவர் நினைத்திருந்தால், முதலில் வெளியே குதித்து தப்பியிருக்க முடியும். உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையிலும் நீரஜா தனது கடமையில் இருந்து நழுவவில்லை.
கதவைத் திறந்த நீர்ஜா, அவசர அவசரமாக விமானத்தில் இருந்து பயணிகளை வெளியேற்றத் தொடங்கினார். பயணிகள் உயிர் பிழைத்தால் போதுமென்று குதித்து தப்பி ஓடினர். தன்னால் முடிந்த வரை, விமானப்பயணிகளை காப்பாற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில் நீர்ஜா படு வேகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்து விட்ட தீவிரவாதி ஒருவன், நீர்ஜாவை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டான். அப்போது நீர்ஜாவிடம் 3 அமெரிக்க குழந்தைகள் இருந்தன. தீவிரவாதி சுடத் தொடங்கியதுமே அந்த குழந்தைகளை கட்டியணைத்து தழுவிக் கொண்டார் நீர்ஜா. நீர்ஜாவின் உடலை துப்பாக்கிக் குண்டுகள் சல்லடையாகத் துளைத்தன. ரத்த வெள்ளத்தில் நீர்ஜா சரிந்து கிடக்க, அவரது அரவணைப்பில் மூன்று அமெரிக்க குழந்தைகள் உயிருடன் இருந்தன. அந்த வீரமங்கைக்கு இன்று 53வது பிறந்த நாள். வீரமங்கைகளை தேசம் மறந்து விடக் கூடாது!
thanks: vikatan
dedicated by
Kavignar Thanigai.
No comments:
Post a Comment