Sunday, September 29, 2019

மரகதப் பொண்ணு சபிதா மறைந்தாள்: கவிஞர் தணிகை

மரகதப் பொண்ணு சபிதா மறைந்தாள்: கவிஞர் தணிகை





நேற்று அதிகாலை 28.09.2019 அன்று  5.45 மணி அளவில் சபிதா என்னும் 33 வயதுடைய பெண் என வளராத ஒன்றுமறியாமல் ஒரு குழந்தையாகவே இருந்து வாய் பேச முடியாமல் வாழ்ந்த ஒரு எங்கள் குடும்பத்தில் இருந்து எனது மூத்த சகோதரிகளில் ஒருவரானவருக்கு பிறந்த 3 ஆம் பெண் இயற்கையோடு இணைந்து விட்டாள்.

அப்படி என்ன பெரிய விடயம் அப்படி என்ன சிறப்பு இதில் இதைப் பதிவு செய்யுமளவு என்கிறீர்களா?

இவள் ஒரு தெய்வப் பிறவி என்று சொல்வார்களே அது போல ஸ்பெஷல் சைல்ட். மன வளர்ச்சி குன்றியவர் என்று முழுதும் சொல்லி விட முடியாது. ஏன் எனில் இவளுக்கு நன்றாகப் புரியும் ஆனால் பேச வராது. கைகள் எல்லாம் பென்சில் கூடப் பிடிக்க வலுவில்லாதிருக்கும் எனவே எழுதவும் முடியாது. பற்கள் துருத்தியபடி முன்னும் பின்னுமாக இருக்கும். ஆனால் மிகவும் கூர்மையான அறிவுடையவளாகவே இருந்தாள்

பிறவியிலேயே வாய் பேசவும் வராது. இவற்றுக்கு எல்லாம் ஆதி முதல் அடிப்படைக் காரணம் எது எனில் இவள் 3 ஆம் குழந்தையாக தாயின் வயிற்றில் இருக்கும்போது இவளது தாய்க்கு கொடுக்கப்பட்ட தீவிரமான மாத்திரகைள் உண்மையில் சொல்லப்போனால் மூன்றாவதும் பெண்குழந்தையாக இருப்பதை ஒரு வாறாக யூகித்த இவளின் பெற்றோர் இவள் வேண்டாம் என்று காலங்கடந்த எடுத்த முடிவால் விளைந்த விளைவு. இவள் பிறவி இப்படி ஆகிப்போனது.

மற்றபடி எல்லாக் குழந்தைகளோடும் அதாவது அப்போது அவளை விடக் குறைவான வயதில் இருந்த எனது தங்கை மகள் , மகன், எனது மகன், மற்ற உறவினர்களின் குழந்தைகள் அங்கே தெருவில் உள்ள அண்டை அயலாரின் குழந்தைகள் யாவருடனும் நட்பு பாராட்டி வருவாள். குழந்தைகளை நேசிக்கத் தெரிந்தவளாகவே இருந்தாள்.

இவளை இதற்காகவே இருக்கும் பள்ளியிலும் ஒரு முறை சேர்த்தியும் பார்த்தேன் தாய்க்கு மகளை விட்டு இருக்க முடியாமல் இவளுக்கும் குடும்ப சூழல் மறக்க முடியாமல் இருக்க திரும்பவும் வீட்டுக்கே வந்து சேர்ந்தாள். தலையில் பேன்கள் எல்லாம் பிடித்த நிலையில்.

அது மட்டுமில்லாமல் இவளுக்கு தந்தை கிடையாது. இவள் கைக்குழந்தையாக இருக்கும்போதே இவளது தந்தை மாரடைப்பால்  அகால மரணமடைந்தார். இவளும் இவளது மூத்த சகோதரிகளும் இவளது தாயும் அவர்களது வாழ்வை எங்களோடு பிணைத்துக் கொண்டிருந்தனர். ஒரு குறிப்பிட்ட காலம் வரை அதாவது அவளது மூத்த சகோதரிகள் மணக் காலம் வரை. அதாவது 1985 முதல் 2006 எங்களது தாயின் மரணம் வரை அவர்கள் எங்களோடுதான் எங்களைச் சார்ந்துதான் வாழ்ந்து வந்தனர் என்றும் சொல்லலாம். சுமார் 20 ஆண்டுக்கும் மேல். அதன் பின் சுமார் பத்து ஆண்டுகள் அவர்கள் வாழ்வு வேறாகிப் போனது எங்கள் வேர் இடைவெளியானது.

அதன் பின் பல ஆண்டு ஓடியது...கிளிகள் இறகு முளைக்க கிளைகள் தாவ சமூக சாதிபேத வேற்றுமை பகைமை படர வாழ்வு எப்படி எப்படியோ தடம் மாறிப்போக பல ஆண்டு காலம் இவளது தாயின், சகோதரிகளின் அரவணைப்பில்  வாழ்ந்தாள்.

நேற்று முடிந்து போனாள். முன் சென்று வழி நடத்தினேன் இறுதிக் காரியங்களை எப்படி ஆரம்பத்தில் அவர்களுக்கு உற்ற துணையாக விளங்கினோமோ அப்படியே...அதற்குள் புரட்டாசி சனிக்கிழமை என்கிறார்கள், அமாவாசை கோவில் பூஜை என்கிறார்கள் விரைவாக எடுத்து விடுங்கள் என பார்ப்பனியக் கோவில் கொட்டம் .... அமைதியாக நிறைவாக நிதானமாக எல்லாம் செய்து முடித்து விட்டோம் ஒரு வாறாக.

மழை வேறு மாலையில்
அமைதி அறக்கட்டளையால் நடத்தப்படும் வாகனத்தின் மூலம் மேட்டூர் நகராட்சியின் நவீன எரிவாயு தகன மேடைக்கு கொண்டு சென்று சில நிமிடங்களில் காரியத்தை கணக்காக முடித்தபின் வீடு வந்து சேர்ந்தோம்.

எங்கள் குடும்பம் சார்ந்த  மற்றொரு சகோதரியின் மருமகனான பழனிவேல் இவர் நல்லாசிரியர் விருது பெற்றும்  உதவிக் கல்வி அலுவலர் பணியை வேண்டாம் என மறுத்தும் தற்போதும் தலைமை ஆசிரியராக இருப்பவர் தாரமங்கலத்தில் இருந்து வந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர் அழகாக சிவபுராணம் தேவாரப் பாடல்களைப் பாடி  தேவையான இடங்களில் சேர்த்து கோர்த்து பிரார்த்தனையை நடத்திக் கொடுத்து இறுதி யாத்திரையை நிகழ்த்திட உதவி புரிந்தார் இதைக் குறிப்பிடா விட்டால் இந்தப் பதிவு நிறைவுபெறாது.

4 comments:

  1. சபிதா ஆத்மா சாந்தி அடையட்டும்!

    ReplyDelete
  2. நேற்று மீண்டும் படித்தோம், எங்கள் தங்கை சபிதா நினைவு நாளில்.....

    ReplyDelete