Tuesday, September 17, 2019

மறுபடியும் புதர் அடியில் கிடந்த மூக்குக் கண்ணாடிப் பெட்டி கிடைத்துவிட்டது: கவிஞர் தணிகை

மறுபடியும் புதர் அடியில் கிடந்த மூக்குக் கண்ணாடிப் பெட்டி கிடைத்துவிட்டது: கவிஞர் தணிகை

Image result for again I got my spectacles with it box in muddy bushes in yesterday rain


நேற்றே கிடைக்கும் கிடைக்கும் என்ற வார்த்தை வந்து கொண்டுதான் இருந்தது. எனினும் நான் மிக்க கோபமும் விரக்தியிலும் இருந்ததால் நானே எனது கவனக் குறைவால் அது கீழே விழுந்ததை கவனிக்காது,அதை சரியான முறையில் வைக்காமல் தவறவிட்டது என்றாலும் கூட எனக்கு வழிகாட்டும் சக்தியை நான் கோபித்து அது சொல்வதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை.கிடைத்தாலும் கிடைக்கட்டும் கிடைக்காவிட்டாலும் போகட்டும் என வெறுப்பில் நம்பாமல் இருந்தேன்.

ஆனால் சரியாக அது தவறிப்போன 24 மணி நேரமுமே நான் என்ன செயலில் ஈடுபட்டுக் கிடந்த போதிலும் ஒரு ஓரத்தில் மெலியதாக இந்த எண்ணமும் ஓடாமல் இல்லை.

கனி கிடைக்காத ஆத்திரத்தில் பெற்றோரை கோபித்துக் கொண்ட குமரன் முருகன் பழநி சென்று நின்றதாக சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டதாலோ என்னவோ அதே கோபம் அப்படியே இருக்கிறது. என்னதான் தியானத்தில் பெரிதாக ஈடுபட்டு பயிற்சியாளராக இருந்தபோதும் எனக்கு கோபத்தை இன்னும் சரியாக விலக்கவே தெரியாமல் வாழ்ந்து வருகிறேன் என்பது இது போன்ற நிகழ்வுகள் மூலம் நிரூபணம் ஆகிறது.

நேற்று அந்த மழை ஈரத்திலும் தேடிக்கொண்டிருந்த போது: சீர்காழி குரலில் இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைகின்றார் ஞானத் தங்கமே என்ற பாடலின் வரி வந்து கொண்டிருந்தது. நான் அந்த புதர் சேறுஞ்சகதியுமான இடத்தை விட்டு மறுபடியும் அரை கிலோமீட்டருக்கும் மேல் சென்று அந்த மழை இரவில் தேடி முடித்துவிட்டு இந்தப் புதரிலும் டார்ச் அடித்துப் பார்த்துவிட்டு ஏமாந்தே வந்தேன்.

அப்போதெல்லாம் முனியப்பன் கோவிலில் நாம் மறந்து வைத்து விட்டு வரும் குடை,குளிர் கண்ணாடி  இப்படி என்ன பொருள் அங்கு வைத்தாலும் மறு நாள் போய்ப் பார்க்கும்போதும் அப்படியே வைத்த இடத்தில் இருக்கும் அப்படி மறந்து வைத்துவிட்ட பொருள்களை பல முறை நான் மறுபடியும் சென்று எடுத்துக் கொண்டது உண்டு.

அதே போல இன்றும் அமைந்தது. கல்லூரி முடிந்ததும் டாக்டர் குமார் வாருங்கள் போகலாம் என்று என்னைக் கொண்டு வந்து குரங்குச் சாவடி பேருந்து நிலையம் அருகே காரில் இருந்து இறக்கி விட்டபோது மணி 3.52. அதன் பின் பேருந்தில் ஏறி வீடு வந்த போது மணி 4.58. குளித்து முடித்து வெளிச்சத்திலேயே நடைப்பயிற்சிக்கு சென்ற போது மணி 5.20மாலை.

அதே இடம் சென்று தேடினேன். முதற்கட்ட தேடலில் தென்படவில்லை. பின் எப்படி நேற்று வீடு வரும்போது வந்தேனோ அதே போல சேற்று நீரை விட்டு விட்டு புதர் பக்கம் எப்படி நான் கால் வைத்து வந்தேனோ அதே போலத் தேடினேன் சில அடிகளிலேயே செடிகளின் புதர் அடியில் மண் கலரில் உள்ள எனது மூக்குக் கண்ணாடி பெட்டி அப்படியே கிடந்தது. எடுத்துக் கொண்டேன்.

இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்றும் நான் நம்பாமல் மீறிச் செயல்படும்போது அதன் வேதனை அனுபவங்களும் அதன் பின்னும் அந்த சக்தி எப்படி வழிகாட்டுகிறதோ அப்படியே நடக்கிறது அவை என்னுடைய போக்கில் போவதல்ல.
Image result for again I got my spectacles with it box
மறுபடியும் அதுவே வெல்கிறது. எனது மீறலுக்குரிய தண்டனையாக அனுபவித்த வேதனை பக்குவமாக.

நான் தோற்றவனாகவே நிற்கிறேன். ஆனால் தோற்பதில் உள்ள சுகம் அனுபவித்து வேதனைக்குப் பதிலாக வேள்வியை இன்னும் அதிகம் உறுதியாக மேற்கொள்ள வேண்டிய பாதையில் போக வேண்டிய படிகளில் மறுபடியும் ஒன்றை ஏறுபவனாக...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment