Wednesday, September 4, 2019

என் நட்பின் நனி சிறந்தவர்கள்: 2. கோவிந்தன் செம்பண்ணன் டி.எம்.இ; பி.ஈ.மெக்கானிகல்: கவிஞர் தணிகை

என் நட்பின் நனி சிறந்தவர்கள்: 2. கோவிந்தன் செம்பண்ணன் டி.எம்.இ; பி.ஈ.மெக்கானிகல்: கவிஞர் தணிகை

Image result for tharamangalam

அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது ஏன் எனில் அவனை பிலாய் இரும்பாலையில் இள நிலை மேலாளர் பதவியின் பயிற்சியில் சேர்ந்த புதிய நாட்களின் கடைசியாக அவனுடன் பிலாய் சென்று அவனை விட்டு விட்டு நான் வீடு திரும்பிய அன்று எனது தந்தை மறைந்தார். 1986. எனைப் பார்க்கவே அந்த உயிர் இருந்திருக்கும் போலும். அப்போதெல்லாம் இவ்வளவு சுலபமான தொடர்பு சாதனங்களே இல்லை. போனால் போனதுதான் வந்தால் வந்ததுதான் என்ற எனது போக்கும்

இந்தப் பதிவின் பின்னல் இழையே தொடர்பு இடைவெளியால் எப்படி ஒரு நட்பின் பாலம் உடைந்து போனது என்பதற்காகத்தான்.

அவன் பள்ளியில் படிக்கும்போதே தொழில் முறைக் கல்வியில் வொக்கோசனல் க்ரூப் படித்து முடித்து விட்டு மெக்கானிக்கல் பிரிவில் சேர்ந்தவன் 1978ல் ஆண்டுகளில் அறிமுகமான உறவு அவனது திருமணம் வரை நீடித்தது. திருமணத்திற்கும் பின்னும் சில ஆண்டுகள் பட்டும் படாமல் நீடித்தது.

அதுபோன்ற ஒரு உறவை நட்பை வார்த்தை மூலம் விளக்குவது இயலாதுதான். கட்டையன் எனச் சொல்லப்பட்ட இப்போது சேலம் பால்பண்ணையில் பணி செய்து ஓய்வு பெற்ற அல்லது ஓய்வு பெற இருக்கிற செல்வன் மூலம் தான் இந்த செம்பண்ணனும் எனக்கு அறிமுகமாகி இருக்கக் கூடும் என இப்போது நினைத்துப் பார்த்தால் தோன்றுகிறது...இதே செல்வனால்தான் எனக்கு நான் ஒரு கதாநாயகன் என்ற அங்கீகாரம் பெற்றது தெரியவந்ததும் எனது வாழ்வின் பாதையே மாறியதும் கூட அது வேறு கதை.
Image result for tharamangalam
இப்போது இது செம்பண்ணன் காதை. காசு பணம், ஆடை எதுவுமே எங்களைப் பிரிக்கவே இல்லை. சொல்லப் போனால் சேர்த்தே வைத்தது. எப்படி ஒன்றிணைந்தோம் என்றும் சொல்ல பெரிதாக ஒரு காரணமும் இல்லை. அவன் என்னைப் புரிந்து கொண்டதும் என்னை ஒரு பெரிய நபராய் அவன் கணக்கில் எடுத்துக் கொண்டதும் அவனுடைய அன்பின்  முன் நான் கரைந்து போனதும் அந்த இளமையில் நடந்தது.

மிக மெதுவாகவே படிப்படியாக வளர ஆரம்பித்த நட்பு அது ஒரு கட்டத்தில் உச்சியில் ஏறி நின்று கொண்டிருந்தது. எனது சகோதரிகளின் குடும்பங்களும், எனது பெற்றோரின் மூதாதையரின் குடும்பங்களும் தாரமங்கலம் என்ற சரித்திரப் புகழ் பெற்ற ஊராக இருந்ததால் அந்த ஊரின் இடுகாடு மற்றும் சுடுகாடு அருகே அல்ல சுடுகாட்டை ஒட்டியே அவன் வீடு இருந்தது மிக வித்தியாசமாக இருந்ததாலும் எனக்கு அவனது வீட்டுக்கு அடிக்கடி போக வழி வகுத்தது.

அவனும் எங்களது வீட்டிலும் வந்து தங்கி இருந்ததும் என் நினைவில் இருந்து விலகவே இல்லை. அவன் கருப்பூர் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு படித்தபோதும் நான் காடு மலை வனங்களில் அலைந்து திரிந்தபோதும் நடுவண் அரசின் நேரு இளையோர் மையத்தில் தேசியத் தொண்டராக பணி புரிந்து குறிக்கோள் இல்லாமல் வாழ்ந்து வந்த போதும் அவன் ஒரு இளைப்பாற ஒரு புகலிடமாய் இருந்தான்.
Image result for tharamangalam
அவனுக்கு ஒரு முறை குடல் வால் அறுவை சிகிச்சை செய்தபோது கிருஷ்ணன் செட்டி சேலம் மருத்துவ மனையில் அவர்களது வீட்டாரையோ பெற்றோரையோ கூட அருகு வைத்துக் கொள்ளாமல் என்னை மட்டுமே தன்னுடன் கவனித்துக் கொள்ள இருக்க வைத்துக் கொண்டான். அப்போது அவன் கருப்பூர் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான்.

அவனது நண்பரகளும் அறை நண்பர்களும் கூட எனக்கு மிகவும் பரிச்சயமாகிப் போனார்கள் விவேகானந்தன், செங்கோட்டுவேலு, ஜெய்சங்கர் இப்படி பல பேர்கள் இன்னும் என் நினைவில் இருக்க அவனுடைய சுந்தரம், உறவான மதியழகன் போன்றோரும் என் தொடர்பில் இருந்தார்கள் அவன் தூரம் தொலைவில் இருந்தபோதும்.

நாச்சிமுத்து தொழில் நுட்பக் கல்லூரியில் இருவரும் வேறு வேறு படிப்பில் இருந்தோம் என்றாலும் ஒரு நட்பின் குடையின் கீழ் மிகவும் நெருக்கமாக இருந்தோம் அந்தப் பட்டியலில் அவனுடைய பேர்தான் எனக்கு முதலாவதாக வரும் வண்ணம்.
Image result for tharamangalam
அவனது ஊரைச் சேர்ந்த செல்வனோ, இளங்கோவனோ கூட அவனை அடுத்துதான் எனக்கு நட்பாக இல்லாதபோதும் உறவாக இருந்தார்கள். அவன் வழி இராசேந்திரன் வனவாசி, ராமலிங்கம் போஸ்டல், குப்பண்ணன், நாச்சிமுத்து திருமூர்த்தி, நாராயண மூர்த்தி காளியப்பன் இப்படி பலருமே அவன் மூலம் எனக்கு பிரியமாக அவன் ஒரு நட்புப் பாலம் போட்டு என்னை அரிய நபராக ஆக்கி இருந்தான்.

அவனது சட்டையை நான் போட எனது சட்டையை அவன் விரும்பி நன்றாக அது இல்லாதிருந்த போதும் வாங்கி அவன் அணிய , நிறைய நிறைய வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் சினிமா, ஊர் பயணம், இப்படியாக...

ஒரு முறை ஹைத்ராபாத்திலிருந்து பெங்களூரு அவன் இருந்ததால் வந்தேன் மடிவாலா என நினைக்கிறேன் வழி தெரியாது அவனிருப்பிடம் செல்கிறேன் ஒரு ஆட்டோ பிடித்து அந்த ஆட்டோவோ சென்று கொண்டிருக்கிறது. சென்று கொண்டே இருக்கிறது அவ்வளவு தூரம் கடைசியில் 1985ல்  ஆட்டோ வாடைகை 100 ரூபாய்க்கும் மேல் ...அவன் எனக்காக  மனங்கோணாமல் கொடுத்தான் சொல்லப்போனால் அப்போது அவனுக்கு அந்தத் தொகையை இழக்க நான் காரணமாகிவிட்டேனே சொன்ன வழியில் சரியாக வந்து சேராமல் என்ற குற்ற உணர்வுடன் இருந்தேன்....

எனது நிறுவனத்தின் தலைவர் கூட ஒரு முறை நீங்கள் ஏன் ஹைத்ராபாத்திலிருந்து வீட்டுக்கு செல்லும்போது பெங்களூர் செல்கிறீர் எனக் கேட்டார் அதை ஒரு அன்பின் நிமித்தம் என்று சொல்லாமல் அங்கும் ஒரு திட்டப்பணி ஆரம்பிக்கலாமா எனத் திட்டமிடுகிறேன் கல்லுடைக்கும் தொழிலில் உள்ளார்க்கு என்றதும், அப்படித்தான் வருவது சேலம், மேட்டூர் போன்ற ஊர்களுக்கு குறுக்கு வழி என்றும் சொல்லியதெல்லாம் நினைவில் உள்ளது.
Image result for tharamangalam
மேலும் அவனது தந்தை வலது கையில் கல்லுடைக்கும் வேட்டுப் பணியில் சிக்கி சில விரல்களை ஏன்  உள்ளங்கைய்ல் பாதியே கூட போயிருக்கும். கல் காண்ட்ராக்ட் என்பார்களே அப்படி ஒரு தொழிலை செய்து வந்தார்.

இவன் ஒரே மகன் இவனுக்கு ஒரு தங்கையும் உண்டு. தங்கைக்கு இவனுக்கு முன்னதாகவே மணம் செய்வித்து குழந்தையும் குடித்தனமாக இருந்ததைப் பார்த்திருக்கிறேன்.

அவன், செல்வன், இளங்கோ, சுந்தரம், மதி இப்படி ஒரு செட் சேர்ந்து தாரமங்கலத்து கார்த்திகேயன், வெங்கடேசா தியேட்டர்களில் படத்துக்காக இல்லாமல் சேர்ந்து கலந்து மகிழ்வதற்காக நட்புக்காக நாங்கள் இணைந்து இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்கு பல முறை சென்றிருக்கிறோம். அமர்க்களமான நாட்கள் அந்த வட்டத்தில் மிக முக்கியமான நாயகம் என்னுடையதாகவே இருந்தது.

 அவன் என்னுடைய எழுத்தின் வாசகன், கவிதையின் இரசிகன், அனேகமாக கணையாழியில் வந்த கவிதைக்காக அந்தப் புத்தகத்தை அவனே வைத்துக் கொண்டிருந்தான் என நினைக்கிறேன்.  நிழல் வீறிடல் என்ற ஒரு கணையாழியில் அரைப் பக்க அளவில் அந்த கவிதை சுஜாதா , கா.நா.சு போன்றவர் , திருப்பூர் கிருஷ்ணன் போன்றோர் எழுதும்போது என்னையும் எழுத வைத்து வெளியிட்டது.
Image result for pollachi npt college
அனேகமாக சுமார் 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலும் நீண்டு கொண்டிருந்த நட்பை  முதலில் ஒரு முடிச்சிட்டது அவனுடைய நிச்சயதார்த்தம். அதில் அவனது பெற்றோர்க்கும் பெண்ணின் வீட்டார்க்கும் ஏதோ கொஞ்சம் நெருடல்கள். அவன் என்னிடம் தெரிந்தே சொல்லிவிட்டான் நீ நிச்சயத்துக்கு எல்லாம் வராதே என....அது என்னடா இவன் இவ்வளவு இருந்தும் இப்படி சொல்லி விட்டானே என ஒரு உட்குழிவு என்னுள் விழுந்து விட்டது.

ஒரு  வேளை நான் சென்றிருந்தால் அவனது பெற்றோரை ஆதரித்து அந்தப் பெண் வீட்டை மணம் செய்யாமல் தடுத்துவிடுவேனோ என்ற பயம் கூட இருந்ததோ என்னவோ. யாமறியோம் பராபரமே.

சரி அடுத்து திருமணம் எல்லாம் மகிழ்வுடன் செய்தோம் வாழ்த்தினோம், பிலாயில் ஒரு முறை ஸ்கூட்டர் சாய்ந்து காலை எல்லாம் ஒடித்துக் கொண்டிருந்தான். மணமாகி ஒரு பெண் பிள்ளைக்கும் தந்தையானான். தன் பெண் பிள்ளையை ஒரு மாவட்ட ஆட்சியராக்குவேன் என்றெல்லாம் சொல்லியதாக கேள்விப்பட்டேன்.

இன்னும் என்ன வெல்லாம் எழுத....அவன் திருமணம் முடிந்து ஊட்டிக்கு தேனிலவு செல்கிறேன் என என்னிடமிருக்கும் தொழில் முறைக் காமிரா அது எனது திட்டப்பணிக்காக வாங்கி இருந்ததைக் கேட்டான். நான் சாதாரணமாக இருந்திருந்தால் தந்திருப்பேன் ஆனால் அவன் என்னை நிச்சயத்திற்கு கூப்பிடாது விட்டமைக்காக தண்டனையாக அதை தர மறுத்துவிட்டேன்.நட்பில் இங்கொரு முடிச்சு விழுந்தது.

அடுத்து மிகவும் பொருளாதார கடினச் சூழலில் எனக்கும் பயிற்சிக்காலம் அல்லது கடினமான காலம் தான் அவனுக்கு ஒரு இரண்டாயிரம் தேவைப்பட எனது சகோதரி வீட்டில் குடியிருந்த ஒரு குடும்ப நட்பு பாராட்டியவரிடம் இரண்டாயிரம் வாங்கிக் கொடுத்து இருந்தேன். அதற்கு சரியாக வட்டி கட்டி வந்தான்.
Image result for friendship broken
அதன் பின் எனக்கு சற்று சுதாரித்தபின் அந்த தொகையை நான் கட்டி விட்டேன் நீ இனி வட்டி கட்ட வேண்டாம் எனக்கு அந்த தொகையைத் திருப்பி அசல் மட்டும் கொடுத்தால் போதும் என்றேன். நான் ஒரு பிடிவாதக்காரன் மனதில் ஏதாவது விழுந்து விட்டால் அதை செய்யாமல் விட மாட்டேன். என்ன இருந்தாலும் கடன் கடன் தானே என அப்போது மட்டுமல்ல இப்போதும் பொருளாதாரத்தில் நான் பெரும் நிலையை எட்டி விட வில்லை என்பதால் அதைக் கேட்டேன் பாதி கொடுத்தான் பாதியக் கொடுக்கவில்லை. நானும் அதன் பின் விட்டுவிட்டேன். ஆனால் நாங்கள் கேவலம் காசு பணத்துக்காக பிரிந்து போய் விட்டோமே ...என்ற நிலையும், நான் அவன் எனக்கு எவ்வளவோ செய்திருக்க கொடுத்த காசைத் திருப்பிக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்தை அவனுக்கு அவனது நிலையை அறியாமலே அவனை துன்பபடுத்தி விட்டேனே என்றெல்லாம் தோன்றச் செய்வது பொருளாதாரப் பிணிகள்.

எப்படியும் ஒரு நட்பு தொடர்பு இடைவெளியால் பிரிந்து போனது அல்லது:
மயிர் ஊடாடா நட்பில் பொருள்
ஊடாடிக் கெடும் என்ற பொருளுக்கேற்ப  விட்டுப் போனதுதான்.

அவன் கொடுத்த ஒரு ஆங்கில அகராதி இன்னும் அவன் நினைவு சொல்கிறது
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு என்பார்....

ஆனால் ஆரம்பம் முதல் இன்று வரை பொருளாதாரத்தில் சிக்கனம், தாராளமின்மை, போதிய வருவாய் இன்மை போன்றவற்றிலும், சரியான உணவு கூட அல்லது ருசியான உணவு கூட இல்லாதிருந்தே போதுமான அளவு  இல்லாதிருந்தே வளர்ந்த விதம் ஆகியவை பொருளாதாரத்திற்கு விட்டுக் கொடுத்து செல்லும் போக்கை என்னுள் வளரச் செய்யவில்லை. அந்த நட்பு குலைந்து போனதற்கு அவனை விட என்னையே நான் பெரிய காரணமாக வைப்பேன்.

அவன் என்னை வசந்தபவன் என்ற ஒரு சேலத்தில் அந்தக் காலத்தில் பிரபலமாக விளங்கிய உணவகத்துக்கு அழைத்துச் சென்று முந்திரி முறுகல் தோசை கேஷ்யூநட் ரோஸ்ட் வாங்கிக் கொடுத்தது கூட பல முறை உணவகங்களில் சேர்ந்து உண்ட நினைவுகளுடன் ....கடந்து போன நாட்களை முடிந்த வரை கரைக்க முயல்கிறன் ஆனால் அவை அவ்வளவு சாதாரணமாக கரைந்து போகக் கூடியதா என்ன...

இளையராஜாவும் பாலுவும் கட்டிப் பிடித்துக் கொண்டு இணைந்து போனார்களாம். அது போல செம்பண்ண்னை இணைத்துக் கொண்டு செல்ல ஆசைதான். ஆனால் அது முதல் அவனுக்கும் எனக்கும் எந்த தகவலுமே இல்லை. பரிமாற்றமே இல்லை. அவன் சொல்வான்: நீயெல்லாம் தணி காதலிக்கவே முடியாது என்பான். ஏன் எனில் உணர்ச்சி பூர்வமாக வெளிப்பாட்டுத் திறம் உள்ளார் காதலிக்க முடியாது என்பதைத்தான் அவன் அப்போதே உணர்ந்து சொல்லி இருக்கிறான். உண்மைதான் காதல் என்பது திருட்டு எண்ணமா அது வெளியே தெரிந்தால் அதன் புனிதம் கெட்டு விடுமா என்றெல்லாம் சிந்தித்த காலத்தில் தோன்றிய நட்பு உதிர்ந்த கதை இது.

அவனுங்களுக்கு எல்லாம் இறுதித்தேர்வு முடிந்து விட்டது. எங்களுக்கு மறு நாள் தேர்வு உண்டு எனத்தான் நினைக்கிறேன் என்னையும் அழைத்துக் கொண்டு பாலைவனச் சோலை என்ற படத்தைச் சென்று பார்த்ததாக நினைவு.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



No comments:

Post a Comment