Sunday, August 25, 2019

எங்கள் வீட்டின் மரங்களின் கதை: கவிஞர் தணிகை

எங்கள் வீட்டின் மரங்களின் கதை: கவிஞர் தணிகை
Image result for fruit trees in our homes back yards


அந்த மரத்துக்கு வயது 70 எஙகள் வீட்டில் இருந்த மிகவும் இளைய மரமே அதுதான். ஆனால் அது இன்று மிகவும் மூத்த மரமாகிவிட்டது நரை விழுந்துவிட்டது, வேர் எல்லாம் பெரிதாக இல்லை. மூத்த மரம் ஒன்று இன்று என்னால் முற்றிலும் காய்ந்து போய் உயிரற்று நின்று கொண்டிருந்த காரணத்தால் அப்புறப்படுத்தப்பட்டது. நமது சென்டிமென்ட் ராஜாக்கள் பட்டுப் போன மரத்தை காலையில் தூங்கி விழிக்கிற போது பார்க்கக் கூடாது என பாடம்  போட்டு அல்லவா வளர்த்துவிட்டனர்.

நானும் அது மறுபடியும் துளிர்க்குமோ, பூக்குமோ காய்க்குமோ என்று கொஞ்ச காலம் பார்த்தபடியே இருந்தேன். இருக்கட்டும் இருக்கட்டும் அப்பா பார்க்கலாம் என்றான் எனது 20 வயது மகனும்.

அது எப்போது வைத்த மரம் என்று எனக்கும் தெரியாது. ஆனால் அப்போது நிறைய மரங்கள் எங்கள் வீட்டில் இருந்தன. இப்போது ஒரே ஒரு சப்போட்டா, எப்படி வெட்டினாலும் துளிர்த்தபடியே இருக்கும் ஒரே ஒரு முருங்கை மரம் இவை மட்டுமே.
Image result for fruit trees in our homes back yards
கறிவேப்பிலை மரம் சாயந்தபடி எதற்கும் பயனாகாமல் இருந்ததை வெட்டி வீழ்த்தி கொஞ்ச காலம் தான் ஆகிறது. இப்போது இந்தக் கொய்யா மரம்.

அந்தக் காலத்தில் பள்ளத்தோரம் ஒரு பூவரச மரம், ஒரு கொடுக்காப்புளி மரம் , ஒரு கொய்யா மரம் உள்ளே அப்படியே ஒரு பலா மரம், ஒரு மாமரம், ஒரு புளியமரம்,ஒரு கொழிஞ்சிமரம், அதன் பிறகு ஒரு பார்க் கொய்யா மரம் இது குண்டு குண்டு  பழங்கள் தரும் அந்த பள்ளத்து ஓரம் இருந்த  கொய்யாமரம் பெரிய முந்திரிப்பழம் வடிவில் பழங்கள் தரும்
இப்போது இறந்திருந்து என்னால் இன்று வீழ்த்தப்பட்ட மரமும் நல்ல முதிர்கனியில் மிக்க  இனிப்பான சுவை உடைய சிவந்த பழங்கள் தரும். இப்படி வகைக்கொன்றாக மூன்று கொய்யாமரங்கள் இருந்தன. அதன் பின் சொல்ல வேண்டுமெனில் ஒரு சில அரப்பு மரங்களும் கல்கட்டில் வலது பக்கம் வளர்ந்து வந்திருந்தன.அவ்வப்போது தானாக முளைக்கும் பப்பாளி மரங்கள்,அதன் கனிகள்

Image result for fruit trees in our homes back yards
புளிய மரம் கூட இரண்டு இருந்ததாக நினைவு. அவை வீட்டில் இருக்கக்க் கூடாது என வெட்டுப் பட்டன. வெட்டுப்பட்டன. அங்கே அதன் அருகே இருந்த கறிவேப்பிலை மரத்தில் இருந்து சந்தை நாட்களுக்கு கறிவேப்பிலை வேண்டுமென்று துணிச்சலுடைய பெண்டிர் ஏறி பறித்து விலைபேசி எடுத்துச் சென்றதை நான் கண்டதுண்டு. நான் எங்கள் வீட்டின் பையன்களில் கடைக்குட்டி. பெண்களில் எனது தங்கைதான் எல்லோருக்கும் கடைக்குட்டி எனவே நான் கடைக்குட்டிக்கு மூத்த கடைக்குட்டி என்பதால் மற்றவர் யாவரையும் விட இந்த மரங்களில் எல்லாம் ஏறி விளையாடிய அனுபவம், பழம் பறித்த அனுபவம் ஏன் எவரும் அறியாமல் மரத்தின் மேல் ஏறி அமர்ந்துபுத்தகம் வைத்து கதை படித்த அனுபவம்.

கீழே சுதந்திரமாக கதை எல்லாம் படிக்க முடியாது. படிக்கற பையன் படிக்கற புத்தகத்தை விட்டு விட்டு கதைப் புத்தகம் படிக்கிறான் பார் எனக் கெடுத்து விட நிறைய மூத்த நபர்கள் எண்ணிக்கையில் என்னை விட 6 பேர் உண்டு .பெற்றோர் சும்மா இருந்தாலும் இவர்கள் அக்கப்போருக்கு ஒரு போதும் குறை இருந்ததில்லை.

மாலை வேளையில் பள்ளிக்கூடம் விட்டு முடிந்து வந்தவுடன் டிபன் கொடுப்பது போல சிவந்து மஞ்சளாக பழுத்திருக்கும் கொழிஞ்சிப் பழங்களை சுவையாக தினமும் ஒன்று சாப்பிட்டு மகிழ்ந்ததுண்டு. ஆனால் அந்த மரமும் ஒரு நாள் அப்படியே காய்ந்து பட்டுப் போய் நின்றதைப் பார்த்த சோகம் உண்டு.

அப்பப்பா எத்தனை விதமான அனுபவங்கள்;  கோணபுளியங்காய் மரத்தில் ஏறி கிளை ஒடிந்து பள்ளத்து நீர் ஓரம் வேலிக்காக போட்டிருந்த கோணபுளியங்காய் முள் மேல் விழுந்த கதை

மரத்தடியில் சகோதர சகோதரிகளுடன் கட்டில் போட்டு படுத்தபடி வெயில் காலத்தில் வேர்க்குருவை கணக்குப் போட்டு கீறிக் கொண்டு கிள்ளிக் கொண்டும் உடைத்து அதன் நீர் பட மேலும் வேர்க்குரு அதிகமாக நுங்கு வாங்கி தேய்த்த கதைகள், வேர்க்குருவுக்கென நைசில் பவுடர் என ஒன்று உண்டு என அதிகமாக அது இருக்கும்போது போட்டுக் கொண்ட அனுபவம்

பள்ளத்தோரம் இருந்த முள் மரத்தில் எதிர்வீட்டு சிறுவர்களுடன் தோழர்களுடன் தூரி ஆடி அதாவது ஒரு கயிறு அதில் ஒரு போர்வை வைத்து அதில் அமர்ந்தபடி தூரி  எண்ணிக் கொண்டு ஆட்டி விடுவதும், பள்ளத்துக்கும் மேல் அது போய் வந்தாலும் அதை அந்தக் கயிற்றை கெட்டியாகப் பிடித்தபடி துணிச்சல் காட்டிய அனுபவம்...

பச்சைப் பாம்புகள் தலைகீழாக தொங்கியபடி தேன்சிட்டை, ஊர்க்குருவியை வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக பிடித்து விழுங்க அதற்கு அந்த குருவி போடும் ஓலம் சில வேளைகளில் அதை தப்பித்து விட்ட அனுபவம்...

எல்லாம் போய்விட்டது.

மரங்கள் அதன் அடியில் எண்ணிறந்த பூச்செடிகள். அந்தி மந்தாரை, மைசூர் மல்லி, இருவாட்சி, கனகாம்பரம், குண்டு மல்லி இப்படி எத்தனை பூக்கள் வகைக்கொன்றாக....நான் எனப்ப்படும் இந்த ஜீவன் அந்த மல்லிப் பூத்திருந்த அருமையான ஒரு அதிகாலையில் தான் அந்த வீட்டில் தாயிடமிருந்து தனி உயிராக பிரிந்தது இன்றும் அந்த வீட்டில் ஒவ்வொரு மூலை முடுக்கும் ஒவ்வொரு மரத்தின் உயிரும் நினைவுப் பால் கொடுக்க..
Image result for fruit trees in our homes back yards
 மரங்கள் தாயின் பால் சுரக்கும் சுரந்த முலை மார்கள் , தாய் மடிகள்...எல்லாம் ஒவ்வொன்றாக நான் இழந்துதான் வருகிறேன். இன்று இறந்த இருப்பை தாள முடியாமல் 70 வயதுக்கும் மேலான ஒரு மரம் இருந்த இடத்தின் அடையாளமே தெரியாமல் அதை எடுத்து விட்ட பிறகும் இந்த நினைவை எடுத்து விட முடியாமல்....

நான் அதற்கு அடுத்த அடிப்படை ஒன்றை சொல்லவில்லையே....கெம்ப்ளாஸ்ட் கழிவு நீர் ஓடி எங்களது நன்னீர் ஓடை கழிவு நீர் ஓடையான கதையும், அதனால் வீட்டுக்கு ஒன்றாக இருந்த நன்னீர்க்கிணறுகள் பப்பாளித்தண்டு வாசம் போல அடிக்கிறது வழவழப்பாய் நீர் மாறி உதவாமல் போய்விட்டது. நிலமும் நிலத்தடி நீரும் கெட்டுப் போய்விட்டது என வீட்டின் ஒவ்வொரு கிணறும் மூடப்படும் காலத்தில் நான் சிறுவனாய் இருந்து சாட்சியாக பார்த்திருக்கிறேன். நான் சிறுவனாக இருக்கும்போதே எங்களது வீட்டுக்குப் பின் புறம் இருந்த ஓடை கழிவு நீர் ஓடையாகவே இருந்தது. பாழும் அரசியல் பிரமுகர்கள் கழிவு நீரை சிமெண்ட் குழாய் வைத்துக் கொண்டு செல்வதை கையூட்டு பெற்றுக் கொண்டு நன்னீர் ஓடையையே அதற்கு தாரை வார்த்து விட்ட்தன் விளைவு தலைமுறை தலைமுறையாய் மக்கள் இனம் தவித்து வருகிறது தண்ணீர்க்காக. அணை முழுதும் தண்ணீர் நிரம்பிய போதும். அதைச் செய்த தலைமுறையினர்க்குதான் அடுத்த தலைமுறைக்கென பிள்ளைகளே இல்லையே...

அதற்கும் பின் நான் நிறைய மரங்கள் வைத்துப் பார்த்தேன் மாமரம். பலா மரம் என்றெல்லாம் பயனில்லை. எல்லாவற்றையும் விட வாழை வைத்தோம் கொஞ்ச நாட்களில் அவை பிசு பிசுத்தபடி கொச கொசவென நச நசவென இலை சிறுத்துப் போய் வெட்டி வேலையானது என அதையும் விட்டொழித்தோம்.

தென்னை வைத்தால் அந்த வீட்டில் நிரந்தரமாக வாழமுடியாது என வைக்காமல் இருந்தோம் தந்தையின் சொல்படி. ஆனால் மாறாக அப்படித்தான் வைத்தவர்கள் இருக்கிறார்கள்...டெம்போவில் வந்து தேங்காய்கள் பறித்துச் சென்றபோதும், இளநீரை வாயில் வைக்க முடியாது என்றபோதும். அவர்கள் குடி இல்லைதான் ஆனாலும் ...
Image result for drumstick trees
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை




No comments:

Post a Comment