Sunday, August 4, 2019

50அடி நீருடன் மேட்டூர் அணையின் ஆடி 18 : கவிஞர் தணிகை

50அடி நீருடன் மேட்டூர் அணையின் ஆடி 18 : கவிஞர் தணிகை


Image result for 50 feet water stored metturdam adi 18 2019

வரலாறு காணாத அளவில் சென்ற ஆண்டு பொங்கி வந்த இலட்சக்கணக்கான கன அடி நீரை எல்லாம் கடலோட வழிந்து ஓட விட்டு விட்டு இன்று பரிதாபமாய்க் காட்சி அளிக்கிறது 50 அடி நீருடன் மேட்டூர் அணை.

சுமார் 50 ஆண்டுக்கும் மேலாக ஆடி 18 ஆம் பெருக்கில் அமைதியாக ஒரு நடைப்பயிற்சி மேற்கொண்டு மக்களின் உற்சாகத்தை மேம்போக்காக பார்வையிட்டு வருபவன் என்ற முறையில் சொல்ல வேண்டியது என்ன வென்றால்...

எந்த ஆண்டிலும் இல்லாத அளவு இந்த ஆண்டு மக்களின் கூட்டம் வெகுவாக குறைந்திருந்தது. மேலும் கார்களை, இரு சக்கர வாகனங்களை 16 கண் பாலத்திற்கு செல்லும் வழியில் நிறுத்தவும் இடம் அளித்திருந்தனர்.

நாங்கள் போன நேரம் மாலை சுமார் 6 மணி இருக்கும். கூட்டம் சாதரணமாக இருப்பதில் 10 மடங்கில் ஒரு மடங்கு மட்டுமே இருந்ததாகக் கொள்ளலாம்.

நீர் இருந்தால் அணைக்கு அழகு
பேர் வந்தால் மனிதர்க்கு அழகு

 கடந்த ஆண்டில் நீர் பொங்கும் பிரவாகமாய் சென்று ஓடுகையில் பாலமெங்கும் ஏகப்பட்ட வியாபாரிகள் அங்கு தினமும் திரண்ட கூட்டத்தால் பலனடைந்தார்கள்.

50 அடி நீரே இருந்த போதிலும் ஆடி 18 ஆடி 18 தான் என்ற பிடிவாத எண்ணத்தில் கொஞ்சம் கூட்டம் பொரித்த மீன் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தது
Image result for 50 feet water stored metturdam adi 18 2019
பெரிதான நெருக்கித் தள்ளல் ஏதும் இல்லை.

பழைய ஆண்டுகளில் வாகனம் செல்ல வழி இருக்காது, மக்கள் நடக்க இடம் இருக்காது சாலையின் இருமருங்கும் மக்கள் வெள்ளமாய் சென்று கொண்டிருப்பர்.

இப்போது பேருந்துகளில் கூட அப்படி ஒன்றும் நெருக்குதல் இல்லை.

எல்லாம் பெரும்பாலும் இரு சக்கர வாகனத்திலும் சொந்த கார் வாகனங்களிலும் வந்து சென்றதும் ஒரு காரணமாக இருக்கும்.


மொத்தத்தில் பரிதாபத்துக்குரிய, வருத்தப்படும்படியாக அனுதாபத்துடன் இருந்தது இந்த ஆடி பதினெட்டாம் பெருக்கு. பெருக்கு இல்லாமல்.

இந்த நிலையில் நீர் வரத்தும் பெரிதும் குறைந்துவிட்டதாக ஹொகேனக்கல் நீர் வீழ்ச்சிக்கு வரும் நீரின் அளவை தெரிவிக்கிறது.

இந்த ஆண்டு  இதே நிலை நீடித்தால், பெருமழை மைசூர் பகுதிகளில் இல்லை எனில் குடிநீருக்கேஎ அரோகராதான்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


ஒரு காலத்தில் இரவெல்லாம் உறக்கம் வராது, மாட்டு வண்டிகளில் எல்லாம் மக்களும் கறுப்பு சட்டிகள் மாட்டிய பயணமுமாக மக்கள் சாரி சாரியாக சென்ற வண்ணமாகவே இருப்பர்

கிராமங்களில் இருந்து எல்லா தெய்வங்களும் கத்தி கழுவ வந்து சேர்ந்திணைந்து கொள்வர்
Image result for 50 feet water stored metturdam adi 18 2019
இப்போது எவரும் நீர் அருகே செல்ல முடியா அளவில் பாதுகாப்பு.

பேரிகாய்களும் விதவிதமான தின்பண்டங்களும் விதவிதமான குழைந்தைகளுக்கான விளையாட்டுச் சாமான்களும் குவிந்து கிடக்கும் தண்ணீர்ப்பந்து, புல்லாங்குழல், சிறு சிறு வண்ண மயமான உண்டிகள், பொம்மைகள்,  ஊது குழல்கள், ராக்கெட், விமான நில ஊர்தி வாகனங்கள் இப்படி சொல்ல சொல்ல இனிக்கும் ஆடி 18ல் இந்த முறை சில கரும்புச்சாறு பிழியும் எந்திரஙகளும், சில கடைகளுமே இருந்தனர் அணையின் அடிப்பகுதியில் நீர் இருந்தது...128 அடி உயர அணையில் 50 அடி நீர் சுரங்கத்தை சுழியைத் தொட்டபடி...

இயற்கையை மனிதர் வஞ்சித்தால் இயற்கை மனிதரை வஞ்சிக்கும் என்ற சொல் எவ்வளவு பொருள் பொதிந்தது...

எனக்கு நான் சிறு வயதில் இருந்தபோது அக்கா தங்கைகளின் கைப்பிடித்துக் கொண்டு குடும்பத்தோடு மேட்டூர் அணையின் மேல் ஏறி இக்கரையிலிருந்து அக்கரை வரை சென்றதும் அக்கரையிலிருந்து இக்கரை வந்து வீடு வந்ததும் அப்படியே நினைவிருக்கையில் எப்படி இப்படி காலம் மாறிப் போயிருக்கிறது. அப்படி அணை மேல் செல்கையில் நொறுக்குத் தீனியாய் தின்ற வெறும் கடலை பொறி கூட அவ்வளவு சுவையாய் இருந்ததே இன்று அவை ஏதும் இல்லை அவற்றில் அப்படிப்பட்ட சுவையும் இல்லை.

No comments:

Post a Comment