Sunday, July 17, 2016

தமிழக அரசு கண் விழிக்குமா? அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் உடன் ஒத்துழைப்பார்களா? ‍போகிற போக்கில்... கவிஞர் தணிகை

தமிழக அரசு கண் விழிக்குமா? அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் உடன் ஒத்துழைப்பார்களா? ‍போகிற போக்கில்... கவிஞர் தணிகை
நீதி தேவதையின் கண்கள் தான் கட்டுடன் இருக்கும் கண் தெரியாமல்.இன்னும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு‍~~` வருவாய்க்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் இன்னும் வரவேயில்லை விசாரணை முடிந்த நிலையிலும்,அனேகமாக அது இன்னும் 5 ஆண்டுகள் தள்ளி வந்தாலும் அதில் வியக்க ஒன்றுமில்லை. மது போதையில் முழு வருவாய் கண்டு தள்ளாடும் அரசு ....பேருந்து, பயணிகள் ரயிலிலும் மக்கள் பிதுங்கி வழிந்து சென்றாலும் கண்டு கொள்ளாமலே இருக்கிறது

 இங்கு நான் சொல்ல வந்தது அன்றாடம் போக்குவரத்தில் ஈடுபட்டு வாழ்வு நடத்தி வரும் பொதுமக்களின் அல்லல் பற்றியது.ரயில், பேருந்து என வேறுபாடு இல்லாமல் எந்த போக்குவரத்தானாலும் நிலை ஒன்றாகவே காணப்படுகிறது.

இது பிரசவ வலியில் பிள்ளை பெற்ற கதை போல் அல்ல.அன்றாடம்
இந்த போக்குவரத்து நெரிசலில் வாழ்க்கை நடத்தி வரும் பொது மக்களின் அவலம் பற்றியது.போக்குவரத்து என்பதே வேண்டாம் என அமைதியான சூழல் வாழ்வை தேர்ந்தெடுத்து பல்லாண்டுகள் வாழ்ந்து வந்த எனக்கு மறுபடியும் போக்குவரத்தை நம்பிய வாழ்வை எனது கடமையை செய்ய இயற்கை பணித்து விட்டது. எனவே நானும் அன்றாடம் பயணிகள் ரயில் மற்றும் பேருந்துகளை பயன்படுத்தும் பட்டியலுக்குள் வந்து விட்டேன்.

ஆனால் இதெல்லாம் கூட பரவாயில்லை கடந்த ஒரு வாரத்துள் ஒரு முறை சென்னை, ஒரு முறை கோவை சென்று வந்தாக வேண்டி இருந்தது. விடுமுறை, வேலை நாள் என்ற கணக்குகளை எல்லாம் மீறி நகர்களில் எங்கு நோக்கினும் ஜனத்திரள்.போதிய வாகன வசதிகள் இல்லாமல், எல்லா வாகனங்களிலுமே நெருக்கியடித்தபடி ஒருவரின் மூச்சுக் காற்றை மற்றொருவர் சுவாசித்தபடி, ஒருவர் உடலை மற்றவர் தொட்டபடி, நெருக்கியபடி, காலை மிதித்தபடி, இப்படி எத்தனையோ படிகளுடன் எப்படி எப்படியோ?உரிய நேரத்துள் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் வீண். அன்றைய பொழுதுக்குள் சென்று சேர்வோமா என்பதே கேள்வி.

இதை எல்லாம் சீர்படுத்த வேண்டிய அரசும் அலுவலர்களும் ஏன் அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் அரசெல்லாம் சரியில்லை எனச் சொல்ல, நண்பரோ நாம் எல்லாம் சரி இல்லை என்கிறார். அதாவது மக்கள் எல்லாம் சரி இல்லை, எனவே அரசு சரி இல்லை, எனவே நிர்வாகமும் சரி இல்லை எனவேதான் இத்தனை துன்பம் யாவும். இதற்கெல்லாம் அடிப்படை நல்ல ஜனநாயகம் சார்ந்த முறைகள் வேண்டும். இங்கு தான்...

மதுவை அகற்றி விடுவார்களோ என்ற பயத்திலே போட்டுத் தள்ளிய ஓட்டுகளில் முதல்வர் ஆகும், ஆளும் கட்சி ஆகும் யோகம் இருக்கிறதே...பின் எப்படி தொல்லை இல்லாமல் மக்கள் பயணம் செய்ய முடியும்?

போதிய வசதியான போதுமான எண்ணிக்கையில் வாகனங்கள் ஏற்பாடு செய்து நிர்வாகம் நடத்த முடியாதது அரசின் குற்றம் என்றால் அதை விட இந்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் கொடுமை வேறு... வாகனத்தை நிறுத்தாமல் செல்வது, ஒரு சில நொடிகள் மட்டுமே நிறுத்தி எவர் ஏறினால் என்ன எவர் இறங்கினால் என்ன எனப் பார்க்காமலே வாகனத்தை கிளப்புவது, நகர்த்துவது, விரைவாக ஓட்டுவது... சாவு கிராக்கி சீக்கிரம் இறங்கேன் என்பது., வீட்டில் சொல்லி விட்டு வந்து விட்டாயா என்பது...இறங்கி சக்கரத்தில் விழுந்தாலும் பரவாயில்லை என வண்டியை நகர்த்துவது, முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள், எனப் பாராமல் வாகனத்தை நடத்துவது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாம் எந்திர மயம், இதுதான் நகரமயமாதலின் விளவு.
பொது மக்களின் உயிருக்கும் உடலுக்கும் உடமைக்கும் வீடு வந்து சேரும் வரை உத்தரவாதமில்லை. இந்த பயணிகள் வாகனங்களை இயக்கும் நபர்கள் அனைவருக்கும் முதலில் அரசு பயிற்சி அளித்து  பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்வது எனத் தேற்ற வேண்டும்.

ரயிலும் அப்படித்தான் பஸ்ஸும் அப்படித்தான். மேலும் கார்களின் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் பெருத்து விட்டன, சாலையில் நகர்ப் புறச் சாலைகளில் புகுந்து வெளி வருவது இனி குறித்த நேரத்தில் முடியாத காரியமே.எல்லாமே நகர்புறம் சார்ந்த மையப்படுத்தலாகவே இருக்கிறது அது கல்வி, கலை, மருத்துவம், தொழில் சார்ந்த எல்லாமே...

இந்நிலையில் அவர்கள் எல்லாம் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள் என அலசினால், தொழிற் சங்கம், கோரிக்கை, எரிபொருள் சிக்கனம், நிர்வாக சீர்கேடுகள், குறித்த நேரம் காத்தல் இப்படி ஏகப்பட்ட காரணங்கள் சொல்லப்பட்டாலும் இங்கு தலைமை சரி இல்லை எனவே அதன் கீழ் இயங்குவார் எல்லாமே அப்படித்தான் இருக்க முடியும். போராட மாட்டேன் ஆனால் போராட்ட வெற்றி மட்டும் தவறாமல் எட்டி விட வேண்டும் என எதிர்பார்க்கும் நடுத்தர வர்க்க சித்தாந்தம் இதன் பெரும் தடை. எவருக்கும் சமுதாயக் கடமை இல்லாமல் சுயநலம் சார்ந்தே எண்ணுவதால் வரும் நிலையே அதிகம்.நோவாமல் நோம்பி கும்பிட வேண்டும் என எண்ணும் மனப்பக்குவம்...வேலை செய்வதானாலும், பிரச்சனைகளை கையாள வேண்டிவந்தாலும்...

இவர்கள் யாவருமே கீழ் இருக்கும்போது மக்கள் நலம் சார்ந்து சிந்தித்து கோரிக்கை எழுப்பியவர்கள் தான். அதாவது பதவிக்கு வரும் முன்பு அதை செய்வோம், இதை செய்வோம் என முழங்கி ஆட்சிக் கொட்டையை சாரி ஆட்சிக் கோட்டையை (தமிழ் எவருக்குமே இப்போது சரியாக எழுதத் தெரியவில்லை என்ன செய்வது..)பிடிப்பவர்கள்தான், கட்சிகள்தான், மேலும் வேலை கிடைக்கும் முன்பு சமுதாய நோக்கத்துடன் இருந்தவர்கள்தான், வேலை அதுவும் அரசு வேலை கிடைத்து விட்டால் சொல்லவும் வேண்டுமா?


இந்த நெருக்கடிகளை பயன்படுத்திக் கொண்டு இடைத்தரகர்கள், தனியார், புல்லுருவிகள், ஈனர்கள், குடிகேடர்கள், குடிகார‌ர்கள் எவருமே பெண்களை பயணத்தின் போதே கையாண்டு படுக்கை மொழி பேசிடலாம் என முயல்வது...பேருந்தில் அதிகாலையிலேயே காதல், காமரசம் ததும்பும் பாடல்களை ஒளி‍ ஒலி பரப்பை கூட்டத்தில் அதிக சத்தத்தை எழுப்புவது....ஆனால் இது போன்ற நெருக்கமான தனியார் வாகனத்தில் தான் கூட்டம் நிறைய ஏறுகிறது என்பதும் உண்மை...அதற்கு காரணங்கள் பல...

அப்படிப்பட்ட ஜன்னல் ஜாக்கெட்களும், எல்லாப் பெண்களும், எல்லா ஆண்களும் அப்படித்தான் என்றெண்ணும் விடலைக் கூட்டமும் இருப்பதையும் எவரும் மறுப்பதற்கில்லை.

இந்நிலையில் கேடு கெட்ட சமுதாயமாக்க அரசும் அரசு ஊழியர்களும், பொதுமக்களும் துணை புரிந்து கொண்டிருக்கிறோம். இங்கு ரௌத்ரம் பழக எல்லாம் நேரம் இல்லை...கண்டும் காணாமல் மென்மையாக போனால் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொண்டால் வீடு வந்து சேரலாம், கடமையை நிறைவேற்றலாம். இல்லாவிட்டால் பெண்டு பிள்ளைகளும் நமை தூற்றும் வாழத் தெரியாதவர் என ஏசும்...எனவே...போற்றுவார் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும் என சில செய்தும், பல செய்யாததுமாக எம் வாழ்வு சென்று கொண்டிருக்கிறது ...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment