Wednesday, July 13, 2016

நேற்றைய தடைகள் இன்றைய விடையுள்: கவிஞர் தணிகை

நேற்றைய தடைகள் இன்றைய விடையுள்: கவிஞர் தணிகை

ஒரு கல்வி நிறுவனத்தில் ஊடகப் பிரிவை கையில் ஏந்தியுள்ளேன். ஒரு முகாம் பற்றி செய்தியை பத்திரிகைகளுக்கு தர முயன்றேன். அதன் முன் 3 நாள் ஓடியதால் விரைந்து அனுப்ப முடிவு செய்தேன். அதற்கு புகைப்படமும் தேவை எனவே புகைப்படம் கை வந்து சேர்ந்தவுடன் தபால் அனுப்பிவிடலாம் என்றே சில நாட்கள் ஓடின.

ஒரு திங்கள் நாளில் ஏறத் தாழ மதியம் 3.20 மணி சுமாருக்கு புகைப்படங்கள் கை வந்தன. ஒரு கடிதத் தலைப்புடன் உள்ள தாளை கேட்டு வாங்கிக் கொண்டு முகாம் செய்தியை எழுதி ஏற்கெனவே அங்கீகாரம் பெற்று வைத்திருந்தேன் முதல்வரிடம்.  பண்டசாலையில் 10 கடித உறைகளும் பெற்று வைத்திருந்தேன்.

கல்லூரி மாலை நேரம் 3.30 மணியோடு முடியும். எனவே அனைத்து அலுவல்களும், அலுவலர்களும் அந்த நேரத்தோடு தம் பணிகளை முடித்துக்கொள்வர்.

கடிதத்தை அஞ்சலிட பொறுப்பைப் பார்க்கும் பெண் அலுவலரிடம் சொல்லி அதற்குரிய தபால் தலைகளையும் பெற்றுக் கொண்டேன். நானே அதை அஞ்சலிட்டுக் கொள்வதாக. மணி ஓடிக் கொண்டே இருந்தது...

அனைவரும் சென்று விட்டனர். எனக்கும் சேலத்துக்கு இட்டுச் செல்ல கல்லூரிப் பேருந்து வந்து விடலாம் எந்நேரமும் என்ற நிலை. ஓடினேன் நகல் எடுக்க அங்கே 2 வெள்ளைத் தாள் மட்டுமே நகல் எடுக்கும் இயந்திரத்தில். கீழ் இறங்கி வந்து ஏற்கெனவே உள்ள எனது கோப்பில் வைத்திருந்த ஏ‍ 4 வெள்ளைத் தாள்களை எடுத்து நகல் எடுத்துக் கொண்டேன் முதல் தடை தாண்டி விட்டேன்.

 பத்திரிகைகளின் விலாசத்தை உறைமேல் எழுதி புகைப்படத்தையும்
கடிதத்தையும் உள் வைத்தேன். அதை ஒட்ட வேண்டுமே...ஒட்ட பசைக்கு சென்று காசாளர் அறையில் இருந்த பசை டப்பாவை எடுத்தால் அதில் பசை இல்லை...இரண்டாவது தடை...அஞ்சலகத்தில் ஒட்டிக் கொள்ளலாம் என ஸ்டேப்ளர் வாங்கி பின் அடிக்கலாம் என நண்பரும் காசாளருமான அந்த அன்பரிடம் ஸ்டேப்ளர் கேட்டேன். கொடுத்தார்.

அதில் ஒரு சில பின்களே இருந்தன. எனவே அந்த ஸ்டேப்ளரில் பின்களை லோடு செய்தேன். எல்லாக் கவரையும் பின் செய்தேன். மூன்றாம் தடை தாண்டி..

அடுத்து பேனாவால் எழுதலாம் என்றால் பேனாவில் மை தீர்ந்திருந்தது., பக்கத்தில் இருந்த பணியாளரிடம் பேனா கேட்டு வாங்கி எழுதி முடித்தேன்.

எழுதி முடிக்க முடிக்க,,, கல்லூரிப் பேருந்து எங்களை எல்லாம் அழைத்துச் சேலம் செல்ல வந்து விட்டது. எனவே பயோ மெட்ரிக் விரல் சான்றை பதியவில்லை, வருகைப் பட்டியலில் மாலை செல்லும் போதும் கையெழுத்துச் சுருக்கமும் செய்ய வில்லை.அதை அடுத்த நாள் காலை தான் உணர்ந்தேன். அவ்வளவு வேலை நெருக்கடி, பணிச் சுமை, இந்த தபால்களை அனுப்பியே ஆகவேண்டும் என்ற விரைவான வேலை உன்மத்தம்.

சேலம் சந்திப்பில் உள்ள சூரமங்கலம் அஞ்சலகத்தில் வெளியே இருந்த பசையில் தபால் தலைகளை ஒட்டி தபால் பெட்டியில் போட்டுவிட்டேன் நான் வீட்டுக்கு வரும் பயணிகள் ரயில் ஏறும்முன்.

சில நாட்கள் சென்றன. எந்த பத்திரிகையிலும் செய்தி வந்ததாகத் தெரியவில்லை. ஒரு வேளை நாம் அனுப்பிய தபால் போதிய தபால் தலைகள் இல்லாமல் போயிருக்குமோ என்றெல்லாம் சந்தேகக் கீற்று.

ஆனால் இன்றைய தினத் தந்தியில் ஒரு முகாம் புகைப்படத்துடன் செய்தி வெளியானதாக உதவி நூலகரும் வாகன பொறுப்பு மற்றும் கணினி செயல்பாட்டளருமானவர் கூறி அதன் நகலை எடுத்து அறிவிப்புப் பலகையில் இட அன்புடன் அவருக்கு ஒத்துழைக்க மறுத்த அச்சடிக்கும் இயந்திரம், மற்றும் நகல் எடுக்கும் எந்திரத்தை காலையிலேயே எனக்காக சரி பார்த்து எடுத்துத் தந்தார்.அன்றைய ஒரு நாளில் நான் பட்ட கஷ்டம் எல்லாம் பனியாய் பஞ்சாய் பறந்திருந்தது. காரணம்...சமீப காலத்தில் வெறும் செய்திகள் மட்டும் முகாம் செய்திகளாக, நிகழ்வுகளை குறுஞ்செய்தியாக அனுப்பிக் கொண்டிருந்த தினத் தந்தி ஏடு அன்று மாவட்டச் செய்திப் பிரிவில் வழக்கமாக சுருக்கமாக எழுத்துகளில் மட்டும் போடுமே அது போல அல்லாமல் பக்கம் 7ல் பள்ளிப் பிள்ளைகளுக்கு பற் பரிசோதனை செய்யும் காட்சிப் படத்துடன் எமது செய்தியை வெளியிட்டிருக்க அன்றைய தடைகளுக்கு யாவும் இன்று விடை கிடைத்த திருப்தி இருந்தது. கஷ்டப் படுவது வீண் போவதில்லை என்ற நம்பிக்கை ஒளிக் கீற்று சற்று படர்ந்திருக்க...
அவ்வளவு தடைகளையும் சோர்வின்றி தாண்டியதால் பெற்ற சிறு வெற்றி இது என்பது போல இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சி...

ஊடகத்தில் இடம்பெறுவது அவசியம்தான். அதை அனைவரும் விரும்புகின்றனர். சசிபெருமாள் அதிகம் அதை விரும்பி விட்டார் என்பதும் எமக்குத் தெரியும்.

thanks: thinath thanthi.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment