Sunday, July 3, 2016

"அப்பா" சமுத்திரக் கனியின் நல்ல முயற்சி: கவிஞர் தணிகை.

"அப்பா" சமுத்திரக் கனியின் நல்ல முயற்சி: கவிஞர் தணிகை.
சாட்டை, பசங்க,கல்லூரி போன்ற படங்கள் எல்லாமே கல்வி நிலையை கல்வி நிறுவனங்களை விமர்சனத்துக்கு உள்ளாக்கும் படங்கள்.இப்போது அப்பா, ஆனால் அப்பா சொல்லியுள்ளது அப்பட்டமான உண்மை பள்ளிகளில் கல்வி நிறுவனங்களில் நடக்கும் மரணங்கள் யாவுமே ஏதோ ஒரு வழியில் நிறுவனத்தோடு தொடர்புடைய கொலைகள்தான் ஆனால் அவை யாவுமே தற்கொலைகளாக மாற்றி சித்திரிக்கப்படுகின்றன என்பது உண்மைதான். அந்த வகையில் பார்த்தால் அப்பா வலுவான சாட்டையடி கொடுத்திருக்கிறது. ஆனால் இந்த சாட்டை அடி பாறையாகக் கிடக்கும் தனியார் மயக் கல்விக்கும் அதை அனுமதிக்கும் அரசுக்கும் வலிக்குமா? அதை உடைக்குமா? தூள் தூளாய் செய்யுமா என்பதெல்லாம் நம் முன் நிற்கும் கேள்விகள். சசி பெருமாளின் மரணம் எப்படி மதுவிலக்கில் பாதிப்பு ஏற்படுத்தியதோ அதே நிலை தான் இந்த படமும் விளைக்கும் கல்வி நிலைகள் மேல் என்பது நமது திடமான கருத்து.

இதை படமாகக் கருதாமல் ஒரு நடைமுறை யதார்த்த பாடமாக எத்தனை பேர் எடுத்துக் கொள்ளப் போகிறோம் என்பதில் தான் இந்த படத்தின் வெற்றி.

இனி படத்திற்கு வருவோம்: கல்வி முக்கியம்தான், அதை விட முக்கியம் ஒழுக்கம், அதை விட முக்கியம் பிள்ளைகளின் உயிர்.இதை வலுவாகவே சொல்லி விட்டார். மேலும் கணவன் மனைவி அப்பா அம்மா என ஒர் பதவிக்கு உயர்ந்து செல்லும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி நடந்து கொள்ளக் கூடாது எனப் படம் நல்ல முறையில் புத்தி சொல்கிறது. என்னதான் இருந்தாலும் அம்மா சென்டிமென்ட் காலம் போய் அப்பாவின் பிணைப்பு சொல்லப் படும் காலம் போலும். என்னதான் இருந்தாலும் அம்மா நிலம் அப்பா போடும் விதைதானே எல்லாருடைய வாழ்வும் எனவே விதை ஒன்னு போட்டால் சுரை வேறா முளைக்கும் என்பதற்கேற்ப இந்த விதை நன்றாகவே விளைந்திருக்கிறது.சமுத்திரக் கனியாகவே எனைப்போன்ற ஏன் நிறைய ஆண்கள் இருப்பார்கள் அப்பாவாக.எனவே இது சமுத்திரக் கனியின் அப்பா மட்டுமல்ல நமது ஒவ்வொருவரின் அப்பா ஆகிறது. ஏ.ஆர். ர‍ஹ்மான் சிவ கார்த்திகேயன் போன்ற பிரபலங்களும் அப்பா என்றவுடன் கலங்கி நிற்பதை சின்னத் திரை காண்பித்திருக்கிறது.

நாம் சின்னத் திரையில் அதிகம் ஈடுபாடில்லாதவர்,என்றாலும் சின்னத் திரை இந்த படத்தின் ஆக்கப்பூர்வமான நபர்களை உடனே சந்தித்து ஒரு திரைச் சித்திரத்தை வழங்கி விட்டது இது பற்றிய எல்லாப் பக்கங்களிலும் பரிமாணங்களிலும்.

ஒவ்வொரு நாட்டிலுமே கல்வி மட்டும் சீராக அமைந்து விட்டால் அந்த  நாடு பல துறைகளிலும் உலகின் முன்னணி நாடாக விளங்கும். அதில் நாம் இன்னும் மெக்காலே கல்வியில் இருந்து வெளிவராததால் ஏற்படும் விளைவே இந்த மனப்பாடம் செய்து வாயில் எடுக்கும் கல்வி நிலை.

தம்பி இராமய்யா சிங்கம் பெருமாளாக அவருக்கே உரிய முறையில் கர்ஜனை செய்து தமது ரோலை மெருகேற்றியுள்ளார் தற்காலத்து அப்பாவாக. அந்த மாமா மாமா என்னும் மனைவி ரோலும் இயல்பாக பொருந்தி இருக்கிறது.

சமுத்திரக் கனி அதாவது தயாளனின் மனைவி ரோல் நமக்கே கோபம்  வருமளவு நல்ல கணவனை புரிந்து கொள்ளாத அதிக நடிப்புடன் ஆரம்பித்து கதையை நகர்த்தி பின்னால் சாந்தி அடைகிறது.சிறுவர்கள் நடிப்பில் பின்னி எடுத்து இருக்கிறார்கள். எவருமே நடித்ததாகத் தெரியவில்லை. வாழ்வை சொல்லிக் காட்டியிருக்கிறார்கள். இந்தப் படத்தை அனைவரும் பார்க்க வேண்டுமென அரசு வரி விலக்கு அளித்து ஒவ்வொரு மாணவ மாணவியும் ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு அப்பா அம்மாவும் பார்க்க வேண்டும் என வாய்ப்பேற்படுத்தி தரவேண்டியது ஒரு நல்ல சமுதாயத்தின் கடமை. அதிலும் இன்றிருக்கும் தமிழக கல்வி நிலையில் அவசிய தார்மீகக் கடமை.

அரசுக்கு இதெல்லாம் சவால். அரசு என்ன செய்யப் போகிறது. அடித்து அம்மணப்படுத்தி கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லி இறந்த பிறகும் எட்டு மணி நேரம் ஆனபிறகும் பெற்றவர்க்கு அந்த பிள்ளையின் உடலைக் கூட காட்ட மறுத்து வேடிக்கை காட்டும் நிலை சினிமா அல்ல உண்மை.  இது போன்ற ஒரு கல்வி நிலை தேவையா? பெற்றோர் அது போன்ற ஒரு கல்வியைத்தான் நமது பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டுமா? அதன் பின்னால்தான் செல்ல வேண்டுமா?

 நல்ல கேள்விகள். நாம் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக கேட்கும் கேள்விகள். அதை சினிமா மீடியத்தின் மூலம் ஒரு வியாபார முறையிலுமான சினிமாவுமாக மாற்றி சமுத்திரக் கனி பெரு வெற்றி பெற்றுள்ளார். இவரின் விசாரணை நடிப்பு, சாட்டை, காடு போன்ற படங்கள் பற்றி எல்லாம் பேச வேண்டும் நாடு பேச வேண்டும்.

மொத்தத்தில் இந்த சினிமா மூலம் பாலச் சந்தர், பாரதி ராஜா பாலுமகேந்திரா போன்றோரை எல்லாம் இவர்கள் எல்லாம் கடக்க விரும்புவது கண்கூடாகத் தெரிகிறது. அதுவும் இந்தக் கல்வி ஆண்டு துவங்க இருக்கும் இப்போது இது போன்ற படங்கள் வந்திருப்பது ஒரு தமிழ்ப் பட நல்லுலகத்துக்கும், தமிழகத்துக்கும் இது ஒரு வரம்.

அதிலும் நாசத் என்னும் மயில்வாகனம் என்னும் சிறு உருவத்தினன் செய்யும் காட்சி எல்லாம் எல்லாரையும் பரவசத்தில் ஆழ்த்துகிறது. படத்தை பார்த்து விட்டோம். ஆனால் தியேட்டரில் சென்றுப் பார்க்க வேண்டியது அவசியம் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது இந்தப் படம்.

34 நாட்களில் எடுத்து முடிக்கப் பட்ட படம். இது போன்ற படங்களே இப்போது தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தேவை. கபாலிகளோ, விஜய், சூரியா போன்றவர் நடித்து வெளிவரும் பொழுது போக்கு அமசங்கள் அடங்கிய படங்கள் எல்லாம் தேவையா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

எனது அப்பாவை, எனது மகனை இணைத்துப் பார்க்காமல் சமுத்திரக் கனியின் தயாளுடன் பயணம் செய்ய முடியவில்லை. இதைப் பார்க்கும் ஒவ்வொருவரின் அனுபவமும் இப்படித்தான் இருக்கும். முக்கியமாக நாமக்கல் வட்டம், இன்னும் மாநில முதல் மதிப்பெண் பெற வைக்கும் பள்ளிகளுக்கும் அந்த ஆர்வம் ஆதங்கத்தில் பிள்ளைகளை கசக்கிப் பிழியும் ஒவ்வொரு பள்ளிக்கும் இந்தப் படம் எடுத்துச் செல்ல வேண்டும் காட்சிப்படுத்தி அனைவரையும் பார்க்கச் செய்ய வேண்டும்.

சசிக்குமாரின் காட்சி ஒன்றுதான் ஒட்டமால் சந்தர்ப்பத்துக்கு பொருந்தாமல் வாலாக‌ துருத்திக் கிடக்கிறது. இந்த ஒரு குறை தவிர மற்ற எந்தக் காட்சியுமே குறை சொல்ல நினைத்தாலும் முடியாத ஒன்றாகவே இருக்க மிக நல்ல அருமையான படம். நல்ல படத்தை அனைவரும் பாருங்கள். ஆதரவு தாருங்கள்.மதிப்பெண் தரவேண்டும் என்றால் மறுபடியும் பூக்கும் தளம் தயாளனின் மகன் வெற்றீஸ்வரன் வாங்கிய 72 மதிப்பெண்கள் தரலாம். மேலும் தந்தைமார்களின் பணி அவ்வளவு தெளிவுபட இல்லை. அது தேவையுமில்லை ஏன் எனில் படம் எதற்காக எந்த நோக்கத்திற்காக எடுக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறியுள்ளது என்றே எண்ணுகிறேன்.

நன்றி
வணக்கம்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment