Saturday, July 30, 2016

ஆடி 18 மேட்டூர் அணையின் பெரும்சிறப்பு வாய்ந்த தன்னிகரில்லாத் திருவிழா: கவிஞர் தணிகை


ஆடி 18 மேட்டூர் அணையின் பெரும்சிறப்பு வாய்ந்த தன்னிகரில்லாத் திருவிழா: கவிஞர் தணிகை1934ல் கட்டி திறந்து வைக்கப் பட்ட மேட்டூர் அணை எனப்படும் ஸ்டேன்லி அணை எப்போதிருந்து ஆடிப் பெருக்கு 18 ஆம் நாள் திருவிழாவாக‌ குதூகலம் கொண்டிருக்கும் என எனக்குத் தெரியாத போதிலும் கடந்த 50 ஆண்டாக இதன் திருவிழா சாட்சியாக நான் இருந்து வருகிறேன்.

57 அடி மட்டுமே நீர் உள்ள நிலையில் நீர்த்தேக்கம் இந்த ஆண்டு பெரிய திருவிழாவை சந்திக்காது வழக்கம் போன்ற பிரம்மாண்டத்துடன் என்று எண்ண சாத்தியம் உள்ளது. ஆனாலும் நமது மக்கள் சாதாரணமானவர்கள் அல்ல எப்படி நீர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வந்து குவிய வேண்டியவர்கள் குவிந்தே தீர்வார்கள். அதை மதுபான அதிக விற்பனை சாதனையுடன் மாற்றி விடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.நீரின் அளவு மிகவும் குறைந்து கிடப்பதாலும், ஆங்காங்கே எல்லா இடங்களிலும் மழை பெய்து இருப்பதாலும், பெய்து வருவதாலும் ஆடி 18க்க்காக திறந்து விட்டு கொண்டிருந்த 5000 கன அடி நீரை 3000 கன அடி நீராக குறைத்திருக்கிறார்கள்.

இந்தப் பிரதேசத்தின் மிகப்பெரும் மக்கள் கூடும் திருவிழா.பெரும்பாலும் வெளியூர் ஜனங்கள் அதிகாலை முதலே வந்து குவிந்து விடுவார்கள். நீராடுவார்கள், முனியப்பன் கோவிலில் சாமி கும்பிடுவார்கள், நேர்த்திக் கடன் செய்வார்கள், இங்கு அணையோடு ஒட்டிக் கிடக்கும் லால் பகதூர் சாஸ்திரி பூங்காவில் உள்ள மான்கள், மீன் பண்ணை, பாம்புகள், வெள்ளை எலி, முயல்கள், முதலை , குருவி இனங்கள், லவ்பேர்ட்ஸ் எல்லாம் பார்த்து பெரு மரங்கள் அதனடியில் உள்ள இருக்கைகளில் அமர்ந்து ஓய்வெடுத்து, குழந்தைகளுக்கான சறுக்கல்கள்,பெரியவர் சிறுவர்களுக்கான ஊஞ்சல் விளையாட்டுகள், இப்படி பொழுது போக்கி சமைத்த அசைவ‌ உணவுண்டு இளைப்பாறி மகிழ்ந்து மாலையில் கலைந்து செல்வார்கள். எல்லாவற்றுக்கும் அடிப்படை பொங்கிப் பிரவாகமாய் சுழித்தோடும் காவிரியும் அதன் நீரும்.

ஆனால் இப்போதெல்லாம் அப்படி நிகழ்வதில்லை. காவிரியில் நீர் இல்லை. தமிழகத்தின் நதி காவிரி என்று சிறுபிள்ளைகளுக்கு பாடத்தில் ஆசிரியைகள் சொல்லிக் கொடுத்தாலும் அது கர்நாடகத்தின் நதியாகவே ஆகிவிட்டது.

இதில் என்ன ஒரு பெரிய விஷயம் என்றால் இப்போதெல்லாம் அணையை நெருங்கவே வழியில்லை. அணைக்கு நெருங்காதபடி கம்பி வேலியும் பல அடுக்கு கம்பெனி செக்யூரிட்டி ஃபோர்ஸ் காவலும் ... வெடிகுண்டு மிரட்டல் எதிரொலியாக அணைக்கு பாதுகாப்பாக.ஆனால் நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது குடும்பத்துடன் அணை மேல் நடந்து செல்வோம், அதில் ஒரு ரயில்வே இருப்புப் பாதை காணப்படும் ட்ராம் வண்டிகள் போனதன் அடையாளமாக. கார் எல்லாம் செல்லும். அப்போதிருந்த மலைப்பாதை மிகவும் கடினமாக மயிர்க்கூச்செறியும் வண்ணம் ஒரே வண்டி கீழ் அல்லது மேல் செல்வது மட்டுமாகவும் அது வந்த பிறகே அடுத்த வண்டி மேலோ கீழோ செல்ல முடியும். இப்போது சேலம் கேம்ப் 24 மணி நேரமும் இணைக்கப் படாமலே போக்குவரத்து பாலத்திலும் ,மலைப்பாதையிலும் நடைபெற்றுவருவது கவனத்தில் கொள்ள வேண்டியது. பாலம் பெரிதாக்கப்பட்டு விட்டது எப்போதும் வாகனப் போக்குவரத்துக்கு ஏற்ப.வெள்ளைக்காரர்கள் கட்டியதற்கு பின்னால் ஒரே சாட்சியாக நமது கொள்ளைக்காரர்கள் கட்டியதாக...
கூட்டம் பெருகப் பெருக உள்ளூர் மேல் மேட்டூர்க்காரர்கள் பெரும்பாலும் கீழ் மேட்டூர் செல்வதேயில்லை. மாலை ஒரு நடைப்பயிற்சி வழியே 16 கண்மாய் பாலம் எல்லீஸ் டங்கன் பாலம் வரை சென்று தமது ஆடிப் பெருக்குத் திருவிழா நிகழ்வை முடித்துக் கொள்ள ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகி விட்டன.

அதிலும் முக்கியமாக நீரைத் தொட அனுமதிக்காமல் அரசு பொதுப்பணித்துறை தடை விதித்ததால் எந்த மனிதரும் சென்று இப்போதெல்லாம் நீராடுவதும் கன்னி மார் கும்பிடுவதும் குறைந்து விட்டது. அதையும் மீறி சிலர் மட்டுமே என்ன கட்டுப்பாடு இருந்த போதும் கடைசி வரை சென்று நீரைத் தொட்டுவிட்டு ஆறுதல் அடைந்து திரும்பி வருகிறார்கள். மலையின் கடைசிக் கோடி வரை சென்று. சீத்தா மலைத் தொடர் மட்டும் திப்பு சுல்தான் கரடும் அதன் சார்ந்த மலையும் தேங்கி நிற்கும் நீர்த்தேக்கத்துக்கு அரணாக அமைந்துள்ள இந்த நீர்த் தேக்கம் கீரைக்காரனூர், திப்பம்பட்டி, கூனாண்டியூர் வரை அமைந்துள்ளது.அதாவது மேட்டூரின் மேற்குப் பகுதியில் ஒரு அரை வட்டம் வரைந்த அளவின் அமைப்புடன் நீர் தேங்கி இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது. கோம்பூரான் காடு சீமாட்டு முனியப்பன் கோவிலில் இருந்து பார்த்தால் போதும் மால்கோ கெம்ப்ளாஸ்ட் பின்னணியில் உள்ள ஆற்று நீரைப் பார்க்க முடியும்.

அப்போதெல்லாம் வெளியூர் சுற்றி உள்ள அத்தனை கிராமம் சார்ந்த கோயில்காரர்கள் அனைவருமே காவடி எடுத்தும், தமது கோவில் சார்ந்த கத்தி, ஈட்டி போன்றவற்றை எடுத்து வந்து காவிரியில் கழுவி எடுத்துச் செல்வது வழக்கம். மகாபாரத யுத்தம் 18 நாளாக நடந்து முடிந்த பிறகு அந்த ஆய்தங்களை போர் முடிந்து வந்து கழுவிச் செல்வதாக பொருளாம்.

இரவு முழுதும் அடுத்த நாளைப் பற்றி கனவாய் விரியும். சகோதர சகோதரர்களுடன் கை கோர்த்து கூட்டத்தில் சென்று தொலைந்து விடாத பயணம். பெரும்பாலும் பொறி, பேரிக்காய், போன்ற தின்பண்டங்களுடன் அந்த அந்த வருடம் ஏதாவது புதிதாக வரும் ஒரு விளையாட்டுச் சாமான் வீடு வந்து சேரும். மேலும் வீட்டுக்காக ஆகும் ஒரு பொருளும் இருக்கும். பெரும்பாலும் அங்கு வருடா வருடம் வாங்கி வரும் உண்டியல் தவறாது. அந்த நாளுக்காக இந்த நாளிலும் ஏங்குகிறோம். ஆனால் அந்த சகோதரிகள் எல்லாம் பேரன் பேத்தி எடுத்து விட்டார்கள். நிறைய பேர் மறைந்து விட்டார்கள். அந்த நாளும் மறைந்து விட்டது . இனி வரப் போவதேயில்லை.

மண் சட்டி செய்து அதற்கு கறுப்பு சாயம் பூசி, அந்த சட்டி கறுப்பாகவே இருக்கும். பார்க்க அவ்வளவு அழகாக. மாட்டு வண்டிகள் நிறைய அந்த மண் சட்டிகளாகவே  இருக்கும். அந்த வண்டிகளின் பக்கக் குச்சிகளில் எல்லாம் கூட மண் சட்டிகள் மாட்டப்பட்டு மாடுகளின் கழுத்தணி, மணி யாட ஜல் ஜல், கலீர் கலீர் சத்தத்துடன் இரவு முழுதும்  சாலையில் வண்டி போகும் சத்தம் எங்கள் ஊரிலும் தூங்காமல் படுத்துக் கொண்டு விழித்துக் கொண்டே இருக்கும் எம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதெல்லாம் இப்போது இல்லவே இல்லை. இனி எப்போதும் அந்த நாள் வரவே போவதில்லை.

அப்போதெல்லாம் பெரிய குடும்பங்கள். நீர்க் குழாய் குடி நீர் பற்றி எல்லாம் பெரிய கவலை உண்டு . ஆனாலும் ஆரம்ப நாட்களில் வாரம் ஒரு முறை வீட்டில் உள்ள எல்லா அழுக்குத் துணிகளையும் எடுத்துக் கொன்டு பெண்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு ஆற்றங்கரைக்கு குளிக்க துவைக்கச் சென்று துவைத்து வருவார்கள். நாங்கள் என்றால் எம் போன்ற சிறுவர்கள் நீச்சல் தெரியாதவர்கள் எல்லாம் கரையில் நின்று தூரத்தில் நின்று துணி காயவைத்ததை பார்த்துக் கொண்டே இருப்போம் அலுக்காத சலிக்காத வேடிக்கையை, ஆற்றை ,நீரை, மாபெரும் அணையை, இயற்கையும் செயற்கையுமான சூழலை.அப்போதெல்லாம் எப்போதும் ஒரே விளையாட்டுதான். சண்டைதான் காலில் விரலில் முட்டியில் எல்லாம்  கீழே விழுந்த அடிபட்ட காயம் இருக்கும் அதை நீரில் மூழ்க்கி வைத்தால் கொஞ்ச நேரத்தில் எங்கிருந்ததோ அந்த மீன்கள் எல்லாம் புறப்பட்டு தேடிவந்து அந்த புண்ணை அதன் அழுக்கை புரையை எல்லாம் கடித்து தின்று சுத்தம் செய்து செல்லும். அதன் பின் பார்த்தால் அந்தக் காயம் நன்றாக சிவந்து நிற்கும் சீக்கிரம் ஆறிவிடும்.மீன் கடிக்கும்போது ஒரு வலி இருக்கும் அதை அனுபவித்திருக்கிறீர்களா? சுறீர் என, வெடுக் வெடுக் என கடித்து, கடித்து இழுக்கும் . ஆனாலும் அது ஒரு இன்பமான வலி. நிறைய குழந்தைகள் அதை ஏற்க மாட்டார்கள். அழுவார்கள்.

எல்லாவற்றையும் விட பாலி போடுவார்கள். அதுதான் மிகவும் பிரதானம். கன்னி மார் கும்பிட காதாளக் கருக மணி கறுப்பு வளையல், சிவப்பு சாயம் பூசப்பட்ட பனை ஓலை எல்லாம் சேகரித்து மாவு இடித்து மாவிளக்கு இட்டு...7 நாள், 9 நாள் , 11 நாள், 14 நாள் என கணக்கிட்டு அதற்கு முன்பிருந்தே ஒரு தாம்பாளத்தில் அல்லது ஒரு குண்டா  என வாயகன்ற‌ ஒரு வீட்டுப்பாத்திரத்தில் நவ தானியத்தை முளை விட்டு வளர்ப்பார்கள். பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் கன்னிப் பெண்கள் இருப்பதால் இதை தவறாமல் செய்வார்கள். அது முளை விட்டு பச்சை முளை விட்டு பசுமை இலைகளுடன் ஆடாமல் நிமிர்ந்து வளையாமல் நேராக நிமிர்ந்து
   உயரமாக வளர்ந்து நிற்கும். ஒவ்வொரு வீட்டின் பாரம்பரியமாகவே இதை வளர்த்தெடுத்து ஆடிப் பெருக்கன்று அதை ஆற்றில் சென்று விடுவார்கள். பார்க்க கண் கொள்ளாக் காட்சிதான் போங்கள்...அதெல்லாம் இனி .இல்லை. அந்த பாலி நன்றாக வளர்ந்திருந்தால் அந்த ஆண்டு முழுதும் நன்றாக இருக்கும் என ஒரு மகிழ்வு நம்பிக்கை. அந்த நாட்கள் எல்லாம் இனி வரவே போவதில்லை.

அந்த அக்கறையுடன் வீட்டில் வளர்க்கப் பட்ட பாலியை(பாலிகை என்றும் சொல்வார்கள்) அப்படியே பெயர்த்து எடுத்து நீரில் விடுவார்கள், அது காவிரி நீரில் மிதந்து மெல்ல மெல்ல அசைந்து அலைக்குத் தக்கவாறு ஒரு பயணம் செய்து நீரில் அமிழும் அதில் சிலர் வெற்றிலைப் பாக்கை வைத்தும் கற்பூரம் ஏற்றி அனுப்பி வைத்து காவிரித் தாயை வணங்குவதுடன் கன்னிமார் என்றும் கும்பிடுவார்கள்.அதை எல்லாம் பார்க்க என்ன ஒரு அழகு...அதை எல்லாம் இரசிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்...

இப்போதெல்லாம் ஆற்றங்கரை மட்டுமல்ல, எங்குமே தனியிடங்களுக்கு குடும்பத்துடன் செல்லவே முடியாது. குடித்து விட்ட போட்ட எச்சில் மது பான பாட்டில்கள் இருப்பதை பார்க்காமல் வரமுடியாது மேலும் மனிதக் கழிவுகளும் எச்சங்களும் புனிதத் தலங்களை ஆற்றங்கரை வாசங்களை மனிதரின் சுவாசங்களை சகித்துக் கொள்ளவே அறவே முடியாத வீச்சங்களாக மாற்றி விட்டன என்பது நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை ஒப்புக் கொள்ள வேண்டிய நிகழ்காலம்.எப்படியாப் பட்ட கல் கட்டடங்கள், அதில் மாளிகை நிலவரைகள், தோரண வாயில்கள், உப்பரிகைகள் எல்லாம் சென்று நின்று அணையில் உள்ள நீரை இரசிக்கலாம் அழகிய வளவு நெளிவுடைய விளிம்புகள் உடைய அவற்றின் அழகு சொல்லி மாளாது ஆனால் அதில் நமது இந்தியன் சிறுநீர் கழித்து மலம் கழித்து எச்சில் உமிழ்ந்து எச்சமிட்டு துர் நாற்றம் அடிக்க வைத்து விடுவதால் அதனுட் புக வழி அடைத்து முட்களை போட்டு தடுத்து வைத்திருக்கிறார்கள்.

அந்த 16 கண் மாய் பாலத்தின் மேல் விதானத்தின் மேல் கதவின் தூக்கி இரும்பு பெட்டிக்கடியிலும், கற் விதானங்களிலும் கட்டி

 இருக்கும் தேன் கூட்டை ஆயுளில் வேறெங்குமே பார்க்க முடியாது... எல்லாம் காவிரி நீரின் கொடை.

இன்னொரு முக்கியமான செய்தி சொல்ல மறந்து விட்டேனே...எம்.ஜி.ஆர், சிவாஜி, ஏன் கமல் , ரஜின் படங்கள் வரை எல்லாமே எல்லாத் தியேட்டர்களிலும் அப்போது மிக அதிகமாக சினிமா மோகம் கொண்டிருந்த நாளில் மேட்டூரை சுற்றி 6 சினிமாத் தியேட்டர்கள் கொட்டகைகளுடன் சேர்ந்து இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அத்தனை தியேட்டர்களிலும் நாலைந்து காட்சி நடத்தி காசாக வாரிக் கொள்வார்கள். எந்த பேருந்திலுமே ஏற இறங்கமுடியாது எல்லாம் எங்கு பார்த்தாலும் வாகன மயம், மக்கள் கூட்டம்...மேட்டூர் திணறும். ஆண்டுக்கொரு முறை பொலிவு பெறும்.ஆனால் அந்த நாள் இனி திரும்பி வரவே போவதில்லை.
காவல்துறை தமது கடமையை நன்றாகவே செய்யும். ஏன் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் கூட நிறைய மக்களை சாலைகளில் ஒழுங்கு படுத்தும் பணி செய்வார்கள். நீர்மோர், இரசிகர் மன்றம், கட்சி பேனர் எல்லாம் கொடி கட்டிப் பறக்கும். இடையே புல்லுருவிகளின் கை வேலைகளும் நடக்கும் மாட்டிக் கொண்டவர்க்கு பாடமும் புகட்டப்படும்... இப்படியாக....இந்த ஆடி18 அன்று அனேகமாக எனக்கது வேலை நாளாக இருக்கும் நான் கலந்து கொள்ளாத சில ஆடி 18 களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.

வெள்ளைகாரனை நேசிக்கிறார்கள் இதையெல்லாம் கண்ட மனிதர்கள்..ஏன் எனில் அதன் பின் எந்த நீர்த் தேவைத் திட்டங்களும் இந்த தமிழகத்தில் மிகவும் பெரிதாக இந்த மேட்டூர் அணைத் திட்டத்தையும் மீறி செய்யப் படவே இல்லை..என்பதால்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
பி.கு: மறுபடியும் பூக்கும் வேர்ட்பிரஸ் டாட் காமில் 1350 பதிவுகளை இழந்த பிறகு இது 100 வது பதிவு.


இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் சொல்ல மறக்கக் கூடாதது: அன்றைய தினம் மெதுவாக 16 கண்மாய் நோக்கி நடந்து சென்றால் நாம் நிறைய நமது பழைய கால நண்பர்களை எல்லாம் சந்திக்கலாம்  வெளியூர் சென்று வாழ்வோர் எல்லாம்  கூட எதிரும் புதிருமாக வருவார்கள் பார்க்கலாம் சந்திக்கலாம்.4 comments:

 1. ஆடி 18 மேட்டூர் அணையின் பெரும்சிறப்பு வாய்ந்த தன்னிகரில்லாத் திருவிழா: கவிஞர் தணிகை = ஆடிப்பெருக்கு பற்றி அருமையான பதிவு. = வெள்ளைகாரனை நேசிக்கிறார்கள் இதையெல்லாம் கண்ட மனிதர்கள்..ஏன் எனில் அதன் பின் எந்த நீர்த் தேவைத் திட்டங்களும் இந்த தமிழகத்தில் மிகவும் பெரிதாக இந்த மேட்டூர் அணைத் திட்டத்தையும் மீறி செய்யப் படவே இல்லை.- நிஜம். - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி கவிஞர் தணிகை

  ReplyDelete
  Replies
  1. thanks for your feedback and sharing of this post sir. vanakkam.nice memories on those good lost days.

   Delete
 2. Because my tamil font is not working I (karthik amma .kalakarthik ) writes in english.From 1984 to 2000 ee were in Mettur.my husband was a.e.e of dam.ungkal pathivu antha iniya natkalai uyirpiththathu.Golden days .
  Kalakarthik
  Ponniyinselvan amma

  ReplyDelete
  Replies
  1. thanks for your feedback and comment on this post : Kalakarthik.madam. vanakkam. please keep contact.No worry about tamil font. Expression is important. I can manage with your language what ever it may be.yes Really those are Golden days.yes you are perfectly said.

   Delete