Sunday, June 5, 2016

பொய் சொல்லிகள்:‍‍ கவிஞர் தணிகை

பொய் சொல்லிகள்:‍‍ கவிஞர் தணிகை
மது அருந்துவோர் அதிகமாக அதிகமாக மது அருந்தாதோர் விதி விலக்குகள்,புகைப்போர் முன் புகைக்காதோர் வாழத் தெரியாதோர்,அது போல பொய்யுரையும் புனை சுருட்டும் செய்வார் முன் பொய் பேசாதோர் வேடிக்கையாகும் கேலிப் பொருள்.பொய் சொல்லக் கூடாது பாப்பா என்ற முண்டாசுக் கவிஞனின் பாப்பா பாட்டு நகைப்பிடமாகி விட்டது. பொய் சொன்னால் மட்டுமே எல்லாம் கூடும் பாப்பா என்ற பாடல் மட்டுமே பொருந்தும் உலகாகி விட்டது.

எப்படி எல்லாம் பேசுகிறார்கள், அப்பப்பா நினைத்துப் பார்த்தால் பெரும் மலைப்பாகி விடுகிறது. நாக்கை நினைத்தபடி நினைக்கவும் முடியாதபடியும் பயன்படுத்துகிறார்கள். பிறர் சொல்லாததை எல்லாம் சொல்லியதாக இவர்களே ஜோடித்து, சிருஷ்டித்து உருவாக்கி பேசி விடும் வித்தை தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.
கேட்டால் அப்படி இருந்தால்தான் எதையும் செய்ய முடியுமாம், பிழைக்க முடியுமாம். வெளியே சொல்வது முற்றிலும் வேறாக இருக்க நடைமுறையில் எதிர்ப்பதமாக செய்கிறார்கள். காரணம் கண்டறிய அப்படி செய்ய வில்லை எனில் அந்தக் காரியத்தை செயல்பாட்டை நடத்த முடியாமல் செய்து விடுகிறார்கள். எனவேதான் அப்படி பொய்யாடை புனைந்து திரிய வேண்டியதிருக்கிறது பொய் வலை கட்ட வேண்டியதிருக்கிறது என்கிறார்கள்.

தமக்கு முரண்பாடான கருத்து என்றால் அதை நேருக்கு நேராக எதிர் கருத்து கொண்டு சொல்லலம், விவாதம் செய்யலாம், மாறுபட்ட கருத்தை சொல்லி விளக்கலாம். ஆனால் அவை எல்லாவற்றுக்கும் மாறுதலாக பொய் சொல்லி புனை சுருட்டு செய்து ஜோடனையாக ஜோடித்துப் பேசி எதை சாதிக்க நினைக்கிறார்கள் என்பது இன்னும் விளங்கிக் கொள்ள முடியாத ஒன்றாகவே நம் போன்றோருக்கு இருக்கிறது.இதை படித்தவர், மெத்தப் படித்தவர் எல்லாமே செய்கிறார்கள் படித்தவர்கள் படிக்காதாரை விட அதிகம் செய்கிறார்கள்.
இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால் இது போன்ற எல்லா அயோக்யத்தனங்களும், மாய்மாலங்களும், வித்தைகளும் கற்றவர்களே வாழ தகுதியுள்ளார் என்று பெண்களும் பாராட்டி அங்கீகரித்து வாழத் தலைப்படுவது அதன் பின் வேதனைப்படுவது...

சிகரெட் புகைக்காத, மது அருந்தாத, ஒழுக்கமுடைய ஆண்கள் ஒன்றுக்கும் உதவாதார் , சாமியார் இவர் எதற்கும் உதவார் இவர் எந்த உறவுக்குமே சரிப்பட்டு வரார் என சொந்த பந்த உறவுகளும், நட்பும் , தொடர்புகளும், பெண்களும் கை கழுவி விட்டு சென்று விடுவது இயல்பான வாழ்க்கைப் போக்காகிவிட்டது.இது பெரிதும் வருந்தத் தக்கது, வேதனையான சமூகப் போக்கு,காட்சிக்கு அந்த மனிதர் கால் விளங்காது போல ஒரு சக்கர தட்டின் மேல் அமர்ந்து சாலையில் கை வைத்து தள்ளி பயணம் செய்து சாலையை கடக்கிறார். ஆனால் அவர் நடப்பதை நான் கண் கூடாக கண்டதுண்டு.  அந்தப் பிச்சைக்கார தம்பதியர் அந்த பேருந்து நிலையப் பகுதிகளில் மட்டுமே இருந்து பிழைக்கிறது. காலையில் தினமும் நான் கவனித்து வருகிறேன்.

இப்படித்தான் சமூகமும் ஏமாற்றுவாரை நம்பி செல்கிறது...இது அரசியல், கல்வி, கலாச்சாரம், கலை,தொழில்,நிறுவனங்கள், வியபாரம் அரசு நிறுவனங்கள் இப்படி எல்லாத் துறைகளிலும் நீக்கமற நிறைந்து விட்டது.

அரசே இதை எல்லாம் ஊக்குவிக்கிறது. பல விண்ணப்ப படிவங்களில் உண்மையைத் தெரிவிக்காமல் பொய்த் தகவல் தந்தால்தான் எதற்கான விண்ணப்பம் செய்யப்படுகிறதோ அந்த விண்ணப்பம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. எ.கா: ஒரு பணியில் இல்லாதவர் பணியில் இல்லை என சொல்ல அரசு விண்ணப்பத்தில் வழி இல்லை, ஏதாவது ஒர் கட்டத்தின் வழியே குறைந்த பட்ச வருவாயாவது காண்பித்து சான்றிதழ் பெற வேண்டியதிருக்கிறது. எனவே பொய் சொல்ல விரும்பாதாரையும் பொய் சொல்ல வைத்து கணக்கு காண்பிக்கிறது.
மேலும் சொல்லப் போனால் இன்றைய பெரும் கவர்ச்சி ஊடகமான சினிமா இது போன்ற நாயகத்தையே பெரிதும் செல்லுலாய்ட் வடிவத்தில் உருவாக்கி சமூகத்தின் முக்கிய சந்திப்புகளில் நுகர அனுப்பி வைக்கிறது.திருடர், ரௌடிகள்,கொலைகாரர், கற்பழிப்பார், கொள்ளைக்காரர், ஏமாற்றுவோர், பொருளாதாரக் குற்றவாளிகள், மல்லையாக்கள், அம்பானிகள், அதானிகள் எல்லாம் எப்படி தொழில் நடத்த முடிகிறது அப்படி எல்லா வித்தைகளையும் கையாண்டுதான். அவர்களே நாயக நாயகி ஆக்கப்படுகிறார்கள். அவர்களே ஊடகங்கள் மூலம் நாயகத்துவம் பெற்று அனைவராலும் பாரட்டப் பெற்று அதே போல வாழ்வு வாழத் தலைப்படுகிறார்கள். தனித்துவம் என்ற ஒன்று அழிக்கப்பட்டு காலம் வெகுவாகி விட்டது. ஒலிம்பிக் பொறுப்பாளராக அம்பானி குழுமத்தின் பெண் வந்திருக்கிறார் எல்லாவற்றிலுமே ஒரு பொய்க் கலாச்சாரம் படர்ந்து விட்டது.

எவ்வளவோ செய்ய வேண்டியதிருக்க அதிகாலையில் கூட பேருந்துகளில் வியாபாரக் கற்பனை பொய் சிந்தனை புகட்டும் பாடல்கள் அந்த பேருந்து பயணத்தை ஒரு பிரமையில் ஒரு கற்பனாலோகத்தில் பயணம் செய்ய வைத்து அந்த கணப் பொழுதுகளில் அருகருகே பயணம் செய்யும் எந்தவகையிலும் அவரது வாழ்வில் இடம் பெற முடியாத ஆண் பெண்களை எல்லாம் அந்தப் பொழுதின் நாயகம் ஆக்கி ஒழுக்க இழிவை ஏற்படுத்தி விடுகிறது. அந்த தனியார் மயத்தை ஊக்குவிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுக்கவும் மக்கள் பொய் சொல்லிகளை பதவியில் அமர்த்தவும் மகிழ்வுடன் தயாராகிவிடுகிறார்கள்...இந்த தேவையற்ற இரைச்சல் அடக்க முடியாமல் ஓலமாகி விட்டது. இதன் எதிர்ப்புக் குரல் யாரும் கேட்க முடியாமல் சாகும் முன் முணகும் ஒரு ஈன ஸ்வரமாக ஆகிவிட்டது.பால் விலை இறக்கம் என தேர்தல் அறிக்கை சொல்லியதை இந்த ஆளும் கட்சி அரசு செய்யாதாமே?

மதுவைப் பற்றி பேசாதிருந்திருந்து காங்கிரஸ் கட்சியுடன் கூடாதிருந்திருந்தால் தமிழகத்தின் ஆட்சி அமைப்பதலில் கூட மாறுதல் இருந்திருக்கலாம் என்பது எல்லாம் முடிந்த பின் தெரிய வந்திருக்கிறது.

பொய் சொல்லிகளை முறியடிக்க உண்மையை உரக்கச் சொல்வது எமது பாணி அது எந்த பாறை மேல் வேண்டுமானலும் முட்டி மோதி பயனற்றும் போகட்டும்.மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment