Sunday, June 19, 2016

எம்.ஜி.ஆரின் இரு வேறு திசைகள்: கவிஞர் தணிகை.

எம்.ஜி.ஆரின் இரு வேறு திசைகள்: கவிஞர் தணிகை.
 இலங்கை கண்டியில் பிறந்த தந்தையை வெகு விரைவில் இழந்த குழந்தை இந்தியா வந்தும் தமிழ்நாட்டில் வசதி இல்லாமல் தாயால் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் சேர்த்துவிட்டாலாவது வயிறாவது நிறையுமே என்று சேர்த்து விடப்பட்ட இரு சகோதரர்களில் இளையவரான எம்.ஜி.ஆர். நாடாண்ட கதை தமிழ் நாட்டில் ஒரு சரித்திரம்.



இவரின் சுவாசம் தமிழ்தான் .ஆனால் இவரை மலையாளி என பிறப்பால் மலையாளி ஆதலால் பேசி அதையே குறையாக பேசித் திரிவாரும் உண்டு.

எழுதும் நேரம் குறைந்து விட்டது .பொருளாதாரச் சிக்கனம் உடல் நலம் என்னை ரயில் பயணியாக்கி விட்டது.ரயில் பயணத்தில்  நண்பர் உடன் ஒருவரை ஆமாம் சாமி போட வைத்து எம்.ஜி.ஆரை ஒரு ஃபிராடு அவர் சம்பாதித்தது சினிமாவுக்கு வெளியே வேறு வழியில் , மற்றும் முதுமையடைந்த பிறகும் இள வயது பெண்களை தேடிக் கொண்டிருந்தார் என்றெல்லாம் பேசினார்கள்.

நண்பர் அடிப்படையில் நல்லவர்தான் ஆனால் அவ்வப்போது முரண்களுடன் பேசி இன்புறுவது அவரது இயல்பு.அதற்கு ஒரு சப்பைக்கட்டாய் உடன் ஒருவரை ஜால்ரா போடவும் ஏற்பாடு செய்து கொள்வார்.

அவர் ‍ எம்.ஜி.ஆர் செய்த தான தர்ம காரியங்கள் அளப்பரியன, எண்ணிறந்தன அவை யாவும் அவரின் தனிமனித ஒழுக்கக் கேட்டையும் விட அவரை குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் என்ற குறளின் படி அவரை தமிழ் நாட்டின் சரித்திரத்தில் பங்கெடுக்க வைத்து விட்டது நீங்களும் நானும் அந்த ஜால்ரா நபரும் விதிவிலக்கானவர்கள். என நான் பேசி முடித்து விட்ட போதும் அது பற்றிய அந்த கருத்தோட்டம் பற்றிய சிந்தனைத் தொடர் அறுபடாமல் என்னுள் நிகழ்ந்தபடியே இருப்பதால் அது ஒரு பதிவாகிறது.

தமிழ் இந்து நாளிதழில் அவர் பற்றி நாளொரு சம்பவம் பதிவாகிறது படித்துப் பாருங்கள் உண்மைப் பொருள் அறிந்து கொள்ளுங்கள் என்றேன் அதற்கு நண்பர் இந்து நாளேடு எல்லாம் நாங்கள் படிக்க வேண்டிய ஏடுமல்ல என பதிலுரைத்தார்.

வண்ணம் பூசிக்கொள்ளாமல் கலர் கண்ணாடி அணியாமலே நான் எல்லாவற்றையும் படித்து வருபவன். எம்.ஜி.ஆர்தான் இன்றிருக்கும் தமிழகத்தின் அரசியில் சூழலின் அடிப்படை என்ற போதிலும் அது காமராசர் இந்தியாவில் இந்திராவை பிரதமாராக்கி விட்டது போன்ற தவறு. எப்படி அதற்கு காமராசரை முழுதும் நாம் குற்றவாளியாக சொல்ல முடியாதோ அதுபோலவேதான் எம்.ஜி.ஆரின் கதையும்.



சாப்பாட்டு முன் அமர்ந்திருந்த சிறுவன் ராமச்சந்திரனை‍ எம்.ஜி.ஆரை கையை பிடித்து பந்தியிலிருந்து வெளியே இழுத்து விட்ட கண்ணீர்க்கதையின் எதிரொளிப்பு அவர் எவர் பசி என்றாலும் தம்மால் முடிந்தவரை  வாழ்க்கை எல்லாம் அனைவர்க்கும் பசிக்கு உணவிட்டதாக படித்ததுண்டு. அவர்தான் பள்ளியில் காமராசரின் திட்டமான‌ மதிய உணவை சத்துணவாக்கி ஏழைப் பிள்ளைகளின் பசியை போக்கவும் உறுதுணையான முதல்வராகவும் இருந்தார்.கருணாநிதியும் அவரை தி.மு.கவிலிருந்து வெளியேற்றினார் இன்றும் அனுபவித்து வருகிறார் அதன் விளைவை.

பொன்மனச் செம்மல் என அறிஞர் அண்ணாவாலே அழைக்கப்பட்டவர். அண்ணாவின் காலத்திய தி.மு.கவே எம்.ஜி.ஆரின் பொருள் கொடை சார்ந்து நிறைய கட்டங்களில் வளர்ந்த கதையை அண்ணாவே மேடையில் பாராட்டிப் பேசிய பதிவுகள் உண்டு. அப்போது என்.எஸ்.கேவும் ஒரு வள்ளல்.அதே என்.எஸ்.கேவுக்கும் கூட கடைசிக் கட்டத்தில் இவர் உதவியதாக நிகழ்வுகள் குறிப்பிடுகின்றன. ஒருக்கால் என்.எஸ்.கேவிடமிருந்தும் கூட இந்த தர்ம காரியத்தை இவர் கற்று அவரை முன் மாதிரியாக கொண்டிருந்திருக்கலாம்.


 அண்ணாவின் மறைவுக்கும் பிறகு , நெடுஞ்செழியன்,அன்பழகன் மதியழகன் போன்றோரை எல்லாம் கடந்து முதல்நிலை அடைய எம்.ஜி.ஆர். என்ற அஸ்திரம் தேவைப்பட்டது கருணாநிதிக்கு. அதன் பின் அந்த மனிதரையும் இந்த இராஜ தந்திரி ஒதுக்கி விட ஒதுக்கப்பட்ட மனிதர் ஒரு சரித்திரம் படைத்த கதை தமிழ் நாட்டில் நிகழ்ந்தது.

மாயத்தேவர் முதல் வெற்றி பெற்றி திண்டுக்கல் எம்.பி ஆகி அ.தி.மு.கவுக்கு தேர்தல், அரசியல் வழியை துவக்கி வைக்க அதன் பின் ஏறுமுகம்தான். இடையில் ஒரு பாராளுமன்றத் தேர்தலில் தோற்றார்கள் என்பது தவிர. தொடர்ந்து இருமுறை பதவியில் வெற்றி பெற்று முதல்வராக அமர்ந்தது எம்.ஜி.ஆர்தான் .

நிறைய மக்களுக்கு செய்ய நினைத்தார். ஆனால் நடைமுறையில் சில நிறைவேற்றப்பட்டன. பல முடியவில்லை ‍ திருச்சியை தலைநகராக மாற்ற நினைத்தது போல...



ஜெவை விட, கலைஞரை விட எம்.ஜி.ஆர் ஆட்சி நன்றாகவே இருந்தது என்பதை நினைவு தவறாமல் இருப்பார்  யாரும் உணரமுடியும். சிறு வயதுக்காரர்களுக்கு அது தெரிய வாய்ப்பில்லை. மேலும் இலங்கை பிரபாகரனுக்கு உறுதுணையாக நிறைய நன்மைகள் செய்தார் மற்ற முதல்வர்கள் எவரும் அந்த அளவு இலங்கைத் தமிழர் பால் அக்கறை கொண்டதாக இல்லை.

உண்மைதான் இவர் சார்ந்திருந்த துறையும், இவருக்கிருந்த அரசியல் செல்வாக்கும் பொருள் பலமும் நிறைய இளம் நடிகைகளின் அருகாமையை இவருக்கு சேர்த்திருக்கும் தான் . ஆனால் அதனால் எல்லாம் இவர் பொது வாழ்க்கை பாதிக்கவில்லை. இவர் எப்படி இருந்தபோதும் மக்களுக்கு செய்ய வேண்டிய சேர வேண்டிய திட்டங்களின் தொகையை தம் சுயநலத்துக்காக பயன்படுத்தவில்லை. தம் குடும்பத்துக்கு தமிழ் நாட்டின் அரசு பணத்தை கையகப்படுத்திக் கொள்ளவில்லை. அதுவே பெரும் தகுதி தற்கால நிகழ்வுகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால்.

அரசியலும் சினிமாவும் பொதுவாழ்வின் இரட்டை முகங்கள் என்பதாகவே அண்ணாவின் காலத்திலும்  ஏன்  அண்ணாவின் காலம் மட்டுமல்ல, காமராசர் காலத்தில் கூட சிவாஜி கணேசனை பயன்படுத்தி சினிமாக்கள் காங்கிரஸ் பற்றி அதன் பிரதானம் பற்றி பிரச்சாரம் செய்தன.அது எம்.ஜி.ஆரின் காலத்தில் மேலும் சிகரம் ஏறி என்.டி.ஆர் முதலானோர் ஆந்திராவில் வரவும் வழி வகுத்தன. கர்நாடகாவில் அந்த‌ அரிய முயற்சியை ராஜ்குமார் செய்யவில்லை. செய்திருந்தால் அங்கும் நடந்திருக்கும் பிரதான நடிகரே முதல்வராகும் கதை.

இன்று ரஜினிகாந்த் சாதனை கபாலி சாதனை, சூப்பர் ஸ்டார் என்பார் எல்லாம் எம்.ஜி.ஆரின் முன் உருவமற்றவர்களே. தமது பிரபலத்தை மக்கள் மனங்களில் விதைத்து ஆட்சியை பிடித்து தம்மால் ஆன காரியமாற்ற எம்.ஜி.ஆர் தயங்கவில்லை. அது சாப்பாட்டுக்கு இல்லாது பந்தி முன் பசியுடன் அமர்ந்து இருந்த சிறுவன் வெளியே இழுத்து விடப்பட்ட சிறுவனின் வெற்றி.

 இழிவாக எம்.ஜி.ஆரை சொல்வார் எல்லாம் தமது பொன்னை, பொருளை சிறிதளாவாவது பிறர்க்கு கொடுத்து பார்க்கட்டும். அதன் ஈத்துவக்கும் இன்பம் பற்றி தெரிந்து கொள்ளட்டும். பிறர் செய்யும் தர்மத்தை அதனால் அவர்கள் புகழ் பெருகியதை எல்லாம் நாம் விமர்சிக்கலாம். ஆனால் அதனால் அவர்களுக்கு என்றுமே சிறுமை விளைந்து விடுவதில்லை . அதுவும் அவர் மறைந்த பின்னும் அவர் பேர் சொல்லி இன்றைய ஆட்சி மலர்ந்திருக்கிற சூழல்களில். நிறைய மனிதர்கள் அவர் பின்னால் இன்னும் இருக்கிறார்கள். நமக்கு அது சரி என ஏற்றுக் கொள்ள முடியாத போதும்.

மக்கள் திலகம் ஏன் அவருக்கு பட்டப் பெயர். அவர் மக்களுடன் அவ்வளவு நெருக்கமாக இருந்ததால்தான். அது போல் எவருமே இனி அல்லது எப்போதும் இல்லை.



அவர் சந்திர பாபுவுக்கு, அசோகனுக்கு அல்லது தம்மை எதிர்த்தாருக்கு எல்லாம் தனிப்பட்ட முறையில் இழைத்த தவறுகள் பற்றி எல்லாம் முழுக்க முழுக்க நாம் அறிய முடியாதபோது நாம் அவற்றால் பாதிக்கப் படாதபோது அது பற்றி எல்லாம் நூற்றுக்கு நூறு எது சரி என்று உரைக்க முடியாது.

நான் சுட்டுக் கொண்டே இருப்பேன் என்ற எம்.ஆர். இராதா குடும்பம் வழி வழியாக தமிழர் என்ற போதையில் வாழ்ந்து வருகிறது .ஆனால் எம்.ஜி.ஆர் வாரிசே இரத்த வழியில் இல்லாத போதும் நாடாண்ட கதையில் சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கிறார் இந்த‌ மக்களாட்சி முறையில் தமிழகத்தின் ஆண்டவர் வரிசையில் அவர் இடம் பெற்றதை அவரின் கட்சி இடம் பெற்று வருவதை எவருக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

இது மக்களாட்சி தீர்ப்பு. அல்லது இந்த மக்களாட்சி முறையை சரி இல்லை என்று மாற்றுக மாற்ற முயல்க வாழ்த்துகள்.

dedicated to


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.








No comments:

Post a Comment