Wednesday, June 29, 2016

வெற்று அழுகையால் என்ன பயன்? கவிஞர் தணிகை

                                                 
வெற்று அழுகையால் என்ன பயன்? கவிஞர் தணிகை


காலை 7.30 மணிக்கு ஒரு பேருந்து நிலையத்தில் தம்பி டிபன் வாங்கிக் குடுங்க தம்பி என்று ஒரு முதியவளின் குரல்...  விடாமல் என்னை நெடுநேரம் துரத்தியது....       பேருந்து ஏறியமர்ந்தால் பெரும் கூட்டம். வயதான ஒரு பெண் எண்ணெய் காணாத சாமியார் பரட்டை முடிச்சுகளுடன் சிகை,கையில் ஒரு சிறு பழைய ஒயர் கூடை. நிற்கவே முடியவில்லை. இப்படீன்னு தெரிந்திருந்தால் நான் எஸ்.3 ல் ஏறியிருப்பேன் ( அது ஒரு நகரப் பேருந்து )உடல் நிலை சரியில்லாமல் மருத்துவ மனை செல்கிறார் போலிருக்கிறது

எந்த மனிதருமே அக்கறை கொள்வதாய் இல்லை. எனது இருக்கையருகே அந்தப் பெண்...நடத்துனர் அனுமதிச் சீட்டு கோர, அதை எடுக்கவும் தெம்பில்லை, என்னிடமிருந்த கூடையிலிருந்து எடுத்துக் கொடுக்க சொன்னார்.

கூடையைப் பார்த்தேன் உள்ளே ஒரு சிறு துண்டு, மாத்திரைகள்  ஒரு மணிப் பர்ஸ். அதில் உள்ள ஒரு பத்து ரூபாயை எடுத்து கொடுத்தவுடன் இன்னும் உள்ள சில்லறையை கேட்டார். அதில் 3 ரூபாய் இருந்தது. கொடுத்து விட்டு கொஞ்சம் ஒரு ரூபாய் குறைத்துக் கொள்ளுங்கள் என்றார் நடத்துனரிடம்.14 ரூபாய் அனுமதிச் சீட்டு.

அப்படி எல்லாம் குறைக்க மாட்டார் அம்மா, என்ற என்னிடம் மீண்டும் அந்தக் கூடையில் வெளியே இருந்த ஒரு 10 ரூபாய் தாளை எடுத்து ஒரு ரூபாய் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். நடத்துனர் வேண்டாம் என்று தம் பங்குக்கு புண்ணியம் தேடிக் கொண்டார்

நீங்க எங்க போறீங்க என்றார் அந்த முடியாத பெண். எழுந்து அமர்ந்து கொள்க என்று எனது இருக்கையை கொடுத்தேன். கைகளில் சிறு நடுக்கம் இருந்தபடியே இருந்தது. கழுத்தில் தாலி இருந்தது.

இவளுக்கு யாருமே துணையாக இல்லையா? ஏன் இந்த நிலை, இப்படியே பேருந்து நிலையத்தில் கொடிக்கம்பத்தடியில் படுத்துக் கிடக்கும் அந்த மனிதர் ....இப்படியாகவே நினைவு சென்றது.

ஓ என இந்த சமுதாயத்தை பார்த்து அழத்தான் தோன்றியது. அழுதென்ன பயன். ஒவ்வொரு தனிமனிதரும் ஏதாவது இந்த சமுதாயம் நோக்கி திருப்பிச் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இன்னும் இருக்கிறது.என்னருகே அமர்ந்திருந்த ஒரு கல்லூரி மாணவர் தூங்கியபடி பயணம் செய்து வந்தார்.

நான் விட்டு விட்ட சேவையை தொடரவே மறுபடியும் இந்த பயணம் வாழ்வு என்று வந்திருக்கும் போலிருக்கிறது. எங்கு பார்த்தாலும் முடைநாற்றம். எச்சில் சாலையில் துப்பும் பெரிய மனிதர்கள் . சிறுநீர், மலம் , குப்பை மேடு என ஒரே துர் நாற்றம் எங்கு பார்த்தாலும் சாலை நகர் புறம் பேருந்து நிலையம், ரயில் நிலையம் எல்லாமே!நிறைய பிச்சைக்காரர்கள் செயற்கை ஊனத்தோடும் இயற்கை ஊனத்தோடும்...

நன்றாக இருப்போர் தமது பணிகளை , தமது வேலையை, தமது பொறுப்பை, தமது கடமையை சரியாக செய்தால் இப்படி எல்லாம் இருக்குமா? இப்படி எல்லாம் நேருமா? ஈவு இரக்கமில்லாமலே போய் விட்டதே, எந்த மனிதர் பற்றியுமே வேறு எந்த மனிதருமே அக்கறை கொள்வதாகத் துளியும் தெரியவில்லையே...

கட்சிகள், அரசு, நிறுவனங்கள் பற்றி எல்லாம் சொல்லவே இல்லை. தனிமனித அவலங்கள் பற்றியே கவலைப்படுகிறேன். இதனிடையே புகைத்துக் கொண்டே பொது இடங்களில் பயணம் செய்யும் பொறுப்பற்ற மனிதர்கள், வாகனத்தின் படிக்கட்டு வாசலிலே குடித்து விட்டு படுத்துக் கிடக்கும் உணர்வற்ற சவங்கள்...இப்படியாக எங்கும்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments:

  1. காலத்திடமே பதில் உள்ளது ?

    ReplyDelete
  2. thanks for your feedback on this post Srimalaiyappanb Sriram. vanakkam. please keep contact

    ReplyDelete