Saturday, June 4, 2016

ஜெ (win) வின் மதியூகம் கலைஞரின் இராஜ தந்திரத்தை வென்ற கதை: கவிஞர் தணிகை

ஜெ  (win) வின் மதியூகம் கலைஞரின் இராஜ தந்திரத்தை வென்ற கதை: கவிஞர் தணிகை




92 ஆண்டுகள் முடித்த பழம் எம்.ஜி.ஆரை ஒதுக்கி, வைகோவை ஒதுக்கி, கலாமை கலாம் என்றாலே கலகம் தான் என்று மறுமுறை குடியரசுத் தலைவராக முன் மொழிய மறுத்து, மூப்பனாரை பிரதமாராக வரவிடாமல்  ஒத்துழைக்க மறுத்து, செம்மொழி மாநாட்டுக்கு ஒரு நூலாசிரியர் என்ற முறையில் கூட கலாமுக்கு அழைப்பிதழ் கொடுக்க மறுத்த நாயகரே உங்களின் இராஜ தந்திரத்தை மக்களின் பிரித்தாளும் கொள்கையை சரியாக கையாண்டதால் ஜெவின் மதியூகம் வென்று விட்டது.

ஒரு நூற்றாண்டுக்கு அருகே வந்தபோதும் இன்னும் ஆளும்  ஆசையும் விடவில்லை, பதவி ஆசையும் விட்டபாடில்லை. சொந்த மகனைக்கூட இவன் தான் என் வாரிசு எனச் சொல்லுமளவு உமக்கு குழப்பமில்லாமல் இல்லை.இன்று நீர் கட்சிக்குத் தலைவர், உமது மகன் பொருளாளர்,இளைஞரணித் தலைவர், மகள், மருமகள், மருமகன் எல்லாம் தான் கட்சி. ஆட்சி என்றால் நீங்கள் என்றே இருக்க வேண்டும் என்ற பேர் ஆசை பேராசை.எப்போதும் எம்.எல்.ஏ. உங்களுக்கென்று தனி இருக்கை இல்லை என்று சட்ட சபையில் சொல்லி விட்டார்களாமே!

 நீங்கள் வாழ்ந்த வாழ்வு அப்படி.என்ன என்ன முடியுமோ எல்லாம் செய்வீர் ஆனால் உமக்கு உகந்தவர் தவிர வேறு எவருமே பதவியில் அமர்ந்து விடக் கூடாது என்ற கவனத்தை தவற விட மாட்டீர். அந்த அம்மாவுக்கு எல்லாரையும் பந்தாடி விடும் பழக்கம் உண்டு என்றால் உமக்கு பந்து எல்லாப் பந்துகளுமே உங்கள் மைதானத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற கணக்கு. அதுதான் இப்போது தப்பு கணக்காகி விட்டது. நீங்களும் எவ்வளவோ கெஞ்சி கூத்தாடி எல்லாரையும் கூப்பிட்டுப் பார்த்தும் எவருமே உங்கள் அணிக்கு வரவில்லை. மக்கள் வேறு மாற்றி தீர்ப்பை எழுதி விட்டார்கள். அதற்கு 68 வயதின் மதி யூகம் உமது 92 வயதை இராஜ தந்திரத்தை பழுத்த அனுபவத்தை வென்றதாகி விட்டது.

ஒவ்வொரு கதைக்கும் ஒரு தனிப்பட்ட நபரின் ஒழுங்கு நடவடிக்கைகள் பாங்காக அமையும். நீங்கள் திறமை சாலி என்ற பதிவுகள் நிறைய உண்டு. ஆனால் நல்லவர் என்ற பதிவுகள் மிகவும் குறைவு. அப்படி எல்லாம் இருந்தால்தான் ஒரு பேரியக்கம் நடத்த முடியும் என்ற சூத்திரத்தில் சிக்கியபடியே உங்கள் பயணம் இன்னும் தொடர்கிறது.

உங்களின் தனிப்பட்ட திறமை, ஆளுமை , முதல்வர் நிர்வாகம் எல்லாம் நன்றாக இருக்கும்.ஆனால் கட்சித் தலைமை,அடுத்தவரை விலக்கி வைக்கும் தன்மை, தி.மு.க என்றால் முக தான் மு.க குடும்பம்தான் என்ற பிரமை எல்லாம் எம் போன்றோருக்கு மாறுபட்ட கருத்துகளை விளைப்பவை.

ஒரு வேளை கண்ணதாசனின் மனவாசம் வனவாசம் படித்ததால் உங்களின் சில செயல்பாடுகள் எமை பாதித்ததாயும் இருக்கலாம். பதவிக்காக எதையும் செய்வாராய் இருந்தீர் எத்தனையோ முறை மத்திய மந்திரிசபையில் இடம் பெற்று தமிழர் நலம் புறக்கணிக்கப்பட்ட போதும் மௌனியாகவே உங்களது நம்பிக்கை விசுவாசிகள்  மந்திரிகளாகவே நீடித்திருந்தார்கள்.

ஏன் இலங்கை தமிழர்களின் இனப்படுகொலை நடந்து முடிந்து பிரபாகரனின் முடிவு ஏற்பட்ட போதும் நீங்கள் தேர்தல் பதவி, கட்சிகள் கூட்டணி என்பதில் முழு கவனமாய் இருந்தவர்தான். நீங்கள் தமிழினத் தலைவராக உண்மையாகவே இருந்து போராடியிருந்தால் ஒருவேளை தமிழகமே உங்களுடன் பின் திரண்டு இலங்கை அரசுக்கு எதிராக போராடி நமது மத்திய நடுவண் அரசுக்கு நெருக்கடி கொடுத்திருக்க முடியும்.

கர்நாடகாக்காரர்கள் காவிரிக்கும் அவர்கள் இனத்துக்கும் போராடுவது போல...

எம்.ஜி.ஆர் பிரபாகரனுக்கு செய்த அளவில் கூட நீங்கள் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஈடுபடவில்லை.வேடிக்கைக்காக உண்ணாநோன்பு செய்தவர்தான் நீர். கேட்டால் மீசை அரும்பும் முன்னே ரயில் மறியல் செய்தவர் என்பீர். அதற்குள் எத்தனை சித்து விளையாடல் செய்திருந்தீரோ?

கண்ணதாசனுக்கு கிடைக்காத மோதிரம் மேடையில் அண்ணாவால் உமது தேர்தல் பணிக்காக அணிவிக்கப்பட நீங்களே மோதிரம் வாங்கிக் கொடுத்தவர்தானே? நெடுஞ்செழியன், மதியழகன், அன்பழகன் போன்றோரை பொதுப்பணித் துறையில் இருந்து கடந்து முதல்வர் பதவி அடைய அண்ணாவுக்கப்புறம் எம்.ஜி.ஆரை பயன்படுத்தி விட்டு அதன்பிறகு எம்.ஜி.ஆரையும் தூக்கி எறிந்தவர் தானே?

தூக்கி எறிந்தவர் வெகுண்டு எழுந்த சரித்திரம் கொடுத்த அடி இந்த தேர்தல் வரை அவர் இல்லாதபோதும் உங்களை பாதித்திருக்கிறது. என்னதான் மக்கள் உங்கள் பக்கம் நிற்க முயன்றாலும் தர்மம் எம்.ஜி.ஆர் என்ற எழுத்துகள், ஜெவின் வியூகம் மற்றும் மதியூகம் உஙக்ளது ராஜ தந்திரத்தை வீழ்த்தி விட்டது.

என்ன இதனால் மக்களுக்கு சேர வேண்டிய நல்ல விஷியங்கள் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஆதங்கம் எம் போன்றோர்க்கு. நீங்களும் உங்கள் கட்சியும் தோற்று மக்களுக்கு கிடைக்க இருந்த சற்று மேலான ஆட்சியையும் கோட்டை விட்டு விட்டீர்.

தனியார் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் ஏற்றப்பட்டிருக்க, அரசின் பால் விலை ஆவின் பால் விலை குறைக்கப் பட மாட்டாது என மாவட்ட செயலாளராக இருக்க வேண்டிய எமதருமை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவரே சொல்லி விட்டாராமே...

அ.இ.அ.தி.மு.க வின் தேர்தல் வாக்குறுதி அனைத்தும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அவர்களுக்கும் அதை தட்டிக் கேட்க வேண்டிய திராணி எவருக்குமே இல்லை.

தீர்ப்பை எதிர்பார்ப்போம், பணம் என்றால் பாதாளம் வரை பாயும் என்பார். அவர்கள் பணத்தை இறைப்பார்கள் எடுத்தும் கொள்வார்கள். நீங்கள்?....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

P.S:-  இறைக்காமலே எடுக்க முயல்பவர்...பால் இல்லா மடியிலும் கறக்க முயல்பவர், காசு கொடுக்காமலே மிரட்டி வந்த கதை எல்லாம் கண்ணதாசன் சொல்லில்...


No comments:

Post a Comment