Friday, June 24, 2016

தமிழனாய் இந்தியனாய் மனிதனாய் சுற்றித் திரிந்தேன் இந்தியா முழுதும்: கவிஞர் தணிகை

தமிழனாய் இந்தியனாய் மனிதனாய் சுற்றித் திரிந்தேன் இந்தியா முழுதும்: கவிஞர் தணிகைபிரதேச உணர்வுகள் தலை தூக்கி ஆடுவதாகவும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா , தமிழ்நாடு என தென்னகத்திலும் வடக்கிலும் இந்தி ,வங்காளி, குஜராத்தி, மராட்டி, சீக்கியம் என பிரிந்து கிடப்பதாகவும் சொல்லப்படலாம். ஆனால் நான் 1985 முதல் 1992 வரையிலான காலத்தில் இந்தியாவின் எல்லா பகுதிகளிலும், ரயில் வழி, தரை வழி, நீர்வழி மற்றும் வான் வழி ஆகிய எல்லா வழிகளிலும் பயணம் செய்தேன். எந்த அச்சுறுத்தலுக்கும் ஆளாகவில்லை.

மண் வேறாக தெரிந்தது, பூக்கள் வேறாக மரங்கள் வேறாக நீர் நிலை வடிவங்கள் வேறாக மனிதர்கள் வித்தியாசமாகத் தெரிந்தனர் ஆனாலும் தனிமனித போக்கு என்பதைத் தவிர வேறு பெரிய பிரதேச உணர்வுகள் எதனாலும் பெரிய அளவில் பாதிக்கப் படவில்லை என்பதே உண்மை.

சொல்லப் போனால் ஒரிஸ்ஸாவில் இருக்கும் போது முரளிதரன் கிடாவ் என்ற ஒரு மின்வாரிய பிரிவு அலுவலர் அல்லது செக் ஷன் ஆபிசர் அழைத்து அன்பொழுக விருந்தளித்ததும், ஆந்திராவுக்கும் ஒரிஸ்ஸாவுக்கும் இடைப்பட்ட நீர்வழி நிலவழியில் பொல்லூர் என்ற இடத்தில் பெயர் மறந்து போன மற்றொரு மலையாள நண்பர் அவரும் மின்சார வாரியப் பணியாளர்...மலேரியா பாதிப்பின் போது உணவகத்தில் வாந்தி எடுத்த போது அழைத்துச் சென்று அவரது வீட்டில் (அப்போது அவரது குடும்பம் ஊருக்குப் போயிருந்தார்கள்) தங்க இடமளித்து அவர் பணிக்குச் செல்லும்போதும் என்னை இருக்கச் சொல்லி விட்டு மருத்துவமனை சென்று சோதித்து அறிந்து காய்ச்சலுக்கு சிகிச்சை செய்து கொள்ளப் பணித்து விட்டு நான் யார் எப்படிப் பட்டவன் என்பது தெரியாமலே எனக்கு பேருதவி புரிந்ததும்

ஆந்திராவில் இருந்தபோது இரகுநாத்,மற்றும் நிரஞ்சன்குமாருடன் ஓர் வீட்டில் இருந்து கொண்டு சமைத்து உணவுண்டு மாலையில் ஒரு பள்ளி மைதானத்தில் மணலில் அமர்ந்து அளாவளாவி மகிழ்ந்ததும் அந்த பேங்க் ஆப் இந்தியாவின் மேலாளர் எம்மை அடிக்கடி வாரம் ஒரு முறையாவது அவர்கள் வீட்டில் எங்களது மூவரையும் அழைத்து விருந்து கொடுப்பதும் நாங்கள் 3 பேருமே அப்போது மணமாகாத இளைஞர்கள்.கேரளாவில் கொச்சின் எர்ணாகுளத்தில் ஒரு கன்னியாஸ்த்ரி நான் மரக்கறி உணவு மட்டுமே உண்பவன், அதிலும் அந்த 30 பேரில் ஒருவனே என்ற போதிலும் எனக்காக தனியாக அனைத்து பதார்த்தங்களையும் சமைத்து என்னை திக்கு முக்காட வைத்ததும் அன்பு மழையில் நனைய வைத்ததும்

கர்நாடகாவில் இருக்கும்போது ரெய்ச்சூர் வறண்ட பாலை பூமியில் வாழும்போதும் அந்த மக்கள் என்னை ஆதரித்ததும்,நமது தமிழரே ஒருவர் நான் செய்யாத தவறை செய்ததாக சொல்லி எமது மத்திய அலுவலகத்தில் எனக்கு அவப் பெயர் ஏற்படுத்த முயன்றதும்...ஒரு சாதராண கொர்ரய்யா என்னும் படிப்பறிவு இல்லா ஒருவனால் கோழி எச்சத்தின் அருகே உறங்க ஏற்பாடு செய்யப்பட்டதும்

நமது தமிழ்நாட்டில் கல்ராயன்மலையில் முதலில் மலைவாழ்மக்கள் எனக்கு இரவில் படுக்க இடமாக மாட்டுக் கொட்டிலை காண்பித்ததும்..இப்படியாக எனது நினைவு தொடர்வண்டியில் பின்னோக்கி பயணம் செய்ய ஆரம்பித்திருக்கிறது.ஆனால் எவருமே என்னிடம் எந்த பிரதேச உணர்வு கொண்டிருந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்த தனிப்பட்ட சிலர் ஆந்திராவில் நமை அரவாடு (தமிழ் மக்கள் நாகம் போன்றவர் என்பதும்) கர்நாடகா இன மக்கள் நம்மை அவர்கள் வாழ்வை பிடுங்க வந்த போட்டியாளர் என்றே இன்னும் நினைப்பதும்கேரளத்து மக்கள் வேறாக பிரிந்து கிடந்தாலும் நம் தமிழரை நிறைய இடங்களில் சார்ந்தும் வாழ்வதும் ஆனால் அவர்கள் இடத்தில் அவர்கள் மரபு சார்ந்த வாழ்வை வாழ்வதுமாக..

தனிப்பட்ட முறையிலான இது போன்ற தனிமனித அனுபவங்கள் ஒருவாறு பிறரின் அனுபவங்களில் இருந்து வேறுபட்டு இருப்பது எனை எல்லாவகையிலும் வேறுபடுத்திக் காண்பிப்பதை என்னால் சில சமயங்களில் வாய் விட்டும் சொல்ல முடிவதில்லை இப்படி எழுதி வைத்தாலும் அதை படித்து கோபம் கொள்வதற்கு நாம் எப்படி பொறுப்பாக முடியும்?

ஆனால் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த அப்போது போதிய மாத ஊதியமும் இல்லாதிருந்த அந்நிலையில் இந்த பரந்த மனதுக்காரர்கள் இல்லையெனில் எனது வாழ்வு எப்படி முடிந்து இருக்கும் என சொல்லவேத் தெரியவில்லை. அவர்களுக்கு எல்லாம் இந்த பதிவு பற்றித் தெரியவே போவதில்லை. ஆனால் அத்தனை அன்பு நண்பர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றியும் எப்போதும் உரித்தாகும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment