Wednesday, December 6, 2017

அண்ணாமலை நீ நின்றெரியும் விளக்கானாய்: கவிஞர் தணிகை

அண்ணாமலை நீ நின்றெரியும் விளக்கானாய்: கவிஞர் தணிகை

Image result for triangle hills


அண்ணாமலைன்னு பேரே வைக்கக் கூடாது, அப்படி வைச்சா அவனை சீக்கிரமா அந்த சிவனே எடுத்துக்குவான் என்பதை மீறி சுப்ரமணியம் அவனுக்கு அண்ணாமலை என்று பேர் வைத்தார். பையன் ஒரு தனிப்பிறவி. படு சுட்டி. எல்லாக் கல்வி கேள்விகளிலும் படித்து திளைத்து கரை சேர்ந்தான். அதன் விளைவு: இரமண மஹரிசி போல கையில் இருக்கிற காசை எல்லாம் முடியை மழித்துக் கொண்டு தூக்கி குளத்தில் எறிந்துவிட்டு பாதாள லிங்க அறையில் அண்ணாமலையில் அமர்ந்தது போல கோவில் கண்ட இடங்களில் குன்று கண்ட இடங்களில் எல்லாம் சென்று தனியே அமர்ந்து வந்தான்.

அபிராம பட்டர் பாடிய அந்தாதியில் உள்ள கோணாத கோல் பற்றி எல்லாம் தெரிந்து கொண்டான். அவனுக்கு வயது 30 ஆகும்போதெல்லாம் அந்த ஊரில் அவன் புகழ் வெகுவாக பரவியது அநியாயத்துக்கு எதிரான குரலாக அவனைத் தூண்டிவிட்டு பலரும் பயனடைந்து விட்டு அவனை துன்பத்துக்கு இரையாக்கினார்கள். பகடைகாயாக பலருக்கும் பயன்பட்ட அவன் ஒரு நாள் நான் எல்லாருக்கும் நல்லது செய்ய நினைக்கிறேன். கல்யாணம் பண்ண மாட்டேன்

இந்த நாட்டை ஆள எனக்கொரு வாய்ப்பு வந்தால் இந்தியாவின் தலைவிதியை மாற்றுவேன், நதிகள் இணைப்பெல்லாம் செய்வேன் என்று பேசித் திரியலானான். இவன் நல்லாதானே இருந்தான் என்ன ஆயிற்று இவனுக்கு என இவன் பற்றி தெரிந்தார் எல்லாம் இவன் மேல் அனுதாபப்பட ஆரம்பிக்க இவனோ குறைந்தபட்சம் நம்ம தமிழ்நாட்டை ஆள வாய்ப்பு கிடைத்தாலும் மக்கள் வாழ்வை வளமாக்குவேன். அனைவர்க்கும் குடிநீர், மருத்துவம், கல்வி, உணவு, வீடு இப்படி அத்தியாவசியத் தேவைகள் கிடைக்கச் செய்வேன், படித்த படிக்காத அனைவர்க்கும் வேலை கொடுத்து குடும்பங்களை எலலம் வறுமைப் பிணியிலிருந்து மீட்கச் செய்வேன் என்றான் பார்க்கும் எல்லாரிடமும்,

எங்கு வேண்டுமானாலும் நீ பெரிய இவனாக இருக்கலாம் இங்க முடியாதுடா என சொந்த ஊர்க்காரர்களாலே அவமானப்படுத்தப்பட்டான்..

உனக்கு ஒரு ஆள் கூட வாக்களிக்க மாட்டான் உன்னால் ஒரு கவுன்சிலர், மெம்பராகவும் ஆக முடியாது என்றார்கள். தப்பு குற்றம் செய்தார் எல்லாம் பதவிக்கு வரலாம் ஆளலாம் என்று இருக்கும்போது தவறுகளே செய்யாத நான் ஏன் வரக் கூடாதா? அதற்கு வழியே இல்லையா என்று கேட்டான் அவன் கேள்விக்கு எவருக்குமே விடை தெரியவில்லை.

அதுக்கு எல்லாம் கட்சி வேண்டும், காசு வேண்டும் அதெல்லாம் உன்னிடம் எங்கு இருக்கு என அவன் மேல் அக்கறை உள்ளார் சொல்லியும் கூட இவன் கேட்பதாக இல்லை.

அப்படியே கேட்டுக் கொண்டே காலத்தை கழித்த அவனை அவனது நண்பன் ஒருவன் கார்த்திகை என்ற பேருடையான் வா, அண்ணாமலைக்கு சென்று கார்த்திகை தீபம் பார்த்து வரலாம் என்று கூட்டிச் சென்றான்

அந்த இரண்டாயிரம் மூவாயிரம் அடி மலைக்கு மேல் கார்த்திகை தீபத்தன்று ஏற்றப்பட்ட தீபத்தைப் பார்த்த அண்ணாமலை அடுத்த வருடம் நம் ஊரிலும் இதே போல கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என கார்த்தி, பார்த்தி, பாரதி ஆகிய நண்பர்களிடம் சொல்லி வந்தான்.

அதெல்லாம் நம்மால் முடியாதுடா  என்ற அவன் நண்பர்களுக்கு ஏன்டா மனிதன் நினைத்தால் முடியாதா என்ன? என என்னால் எம் மக்களுக்கு நல்லாட்சிதான் புரிய கொடுத்து வைக்க வில்லை இது கூடவா முடியாது என அடுத்த ஆண்டில் மேட்டூரில் ஒரு மிகப் பெரும் கார்த்திகைத் திருவிழா நடக்கும் மாபெரும் மலை ஒன்றில் அண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம் போல ஏற்றப்படும், ஆர்வமுள்ளார் ஒத்துழைப்பு நல்க, பொருளுதவி செய்க என கார்த்திகை வரும் முன்னே  ஒரு துண்டுப் பிரசுரத்தை நண்பர்கள் காசு கொடுக்க அடித்து பரப்பினான். அதில் எவர் பேருமே போடவில்லை.

அவன் ஒருங்கிணைத்து சுமார் இரண்டு வருடம் ஒரு கம்பெனி முதலாளியை வைத்து கட்டிய ஈஸ்வரன் கோவிலைக் கூட இவன் எட்டிப் பார்க்காதவனாகி நின்று விட்டானாகி தனித்து விடப்பட்டானாகி விட்ட போது இவன் எப்படி இதைச் செய்ய முடியும் என பல கருத்துகளை பலரும் பேசி வந்தனர். சிலர் ஏசி வந்தனர் சிலர் பழி கூறினர், சிலர் இல்லாத பொல்லாங்கை எல்லாம் இவன் மேல் ஏற்றிப் பேசினர்....


நாள் நெருங்கி வந்தது. அவனை எவருமே சட்டை செய்யவில்லை. அவனுக்கு சிறுவயதில் தாம் பள்ளிக்கூடம் படிக்கும்போது வாத்தியார்கள் துரத்தும்போது போய் விட்டு வந்த திப்பு சுல்தான் கோட்டை என்னும் கரடு நினைவுக்கு வந்தது

அங்கே மறுபடியும் ஒரு நாள் சென்று பார்த்தான். அதே குன்று அப்படியே நிலை குலையாமல். ஆனால் பயம் குலை நடுங்க வைக்குமாறு அமானுஷ்ய மௌனத்துடன் நின்று கொண்டிருந்தது. அங்கே எவரையும் கொன்று போட்டு வந்தால் கூட ஒரு ஈ காக்க எறும்புக்கும் கூடத் தெரியாது. இல்லை இல்லை ஈ காக்கா எறும்பு பறவை விலங்கைத் தவிர வேறு எவருக்குமே தெரியாமல் போய்விடும் இடம் அது.

அங்கிருந்து ஒரு சுரங்கப் பாதை செல்லும் அது காவிரி அணைபகுதியிலிருந்து மைசூருக்கு திப்பு சுல்தான் ஆண்ட அரண்மனைக்கே செல்லும் அதனால்தான் அதற்கு திப்பு சுல்தான் கோட்டை, திப்பு சுல்தான் கரடு என்ற பேர் விளங்கி வந்தது. ஒரு கல்லை எடுத்து அந்த கீழாக செல்லும் குகைக்குள் போட்டால் அது உருண்டு செல்லும் சத்தம் கேட்கும். அது பயமுறுத்தும், வௌவால் எச்சமும், பூச்சி பல்லிகளின் நடமாட்டமும் குடலை பிடுங்கும் நாற்றமாக அடிக்கும்.

மனித அரவமே, சஞ்சாரமே அற்ற பகுதி அதுதான் மேட்டூரின் எல்லை அந்தப்பக்கம் சென்றால் கர்நாடகத்துக்கே கூட சென்று விடலாம்...பல மலைகளின் நடுவே ஆற்றின் அணை அமைவிடையே இந்த திப்பு சுல்தான் கரடு , கோட்டை இருக்கும் குன்று ஒரு சரியான முக்கோண வடிவாகவே வெகு தொலைவிருந்து பார்த்தாலும் தெரியும். மேலும் அதன் உச்சியும் மிக அற்புதமாக இயற்கையாகவே செயற்கையாக செய்திருந்தால் கூட அப்படி வந்திருக்காத வண்ணத்தில் மிகவும் சரியாக இருக்கும்.

நண்பர்களை எல்லாம் அழைத்து சொல்லச் சொன்னான் முடிந்தால் அனைவரும் அந்த மலை அடிவாரத்துக்கு வருமாறு அழைத்தான் மேட்டூருக்கே மாபெரும் கார்த்திகை தீபத்தை அந்த அண்ணாமலையில் ஏற்றுவது போல ஏற்றிக் காட்டுகிறேன் என்றான்

சசிபெருமாள் என்ற மதுவிலக்குப் போராளி செல்பேசி கோபுரத்தில் ஏறும்போது இருந்தது போல மக்கள் வெள்ளம் கூடியிருந்தது. இவன் ஒரு பைத்தியக்காரனாயிற்றே இவன் என்ன எப்படி அப்படி செய்ய முடியும்? எந்த வசூலிலும் அவ்வளவு பணம் இவனை நம்பி எவருமே கொடுக்காத போது இவன் என்ன செய்யப் போகிறான் என நண்பர்களும் கவலை அடைந்தனர் இவன் அதற்கான ஏற்பாடு எதையுமே செய்யவில்லையே எப்படி என அடிவாரத்தில் காத்திருக்க...

சுமார்  6 மணிக்கு மேல் இருக்கும், குளிர் கால இருட்டு ,திடீரென வெளிச்சம் சுடராக இருளைக் கடத்திவிட ஒரு நெடிய நெருப்பு சுடர் விட்டு எரிந்தது ....அந்த உடல் கருகி சாம்பலாகி முடியும் வரை ஒரு சத்தமும் எவரும் கேட்டதாக இல்லை, பாஹுபலி தர்மஸ்தலாவிலும், சிரவணபெலகொலாவில் நின்ற அதே போல ஒரு எலும்புக் கூடு உடையாமல் சாயமால் நின்று இருந்தது....


கார்த்தி, பார்த்தி. பாரதி ஆகிய அவன் நண்பர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒன்றுமே விளங்கவில்லை...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

ஒரு சிறுகதை முயற்சி... பொறுமை இல்லா நான் என்றுமே கதை எல்லாம் எழுத முயன்றதே இல்லை. இது வேறு.

Sunday, December 3, 2017

கண் கெட்ட பின்னே சூரிய உதயம்: கவிஞர் தணிகை

கண் கெட்ட பின்னே சூரிய உதயம்: கவிஞர் தணிகை

Related image




ஆர்.கே நகர் தொகுதியில் தி.மு.க வேட்பாளரை விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எல்லாம் ஆதரிக்கிறதாம்.

அதற்கு ஏகப்பட்ட விளக்கங்களை அளித்திருக்கிறார் வைகோ. மத்திய காவிக்கட்சியை அ.தி.மு.க ஆதரிக்கிறது அது மதவாதக் கட்சி என....
இவரால்தான்  சரியாக சொல்லப் போனால் 18 மாதங்களுக்கு முன்னால்  இவர்கள் எல்லாம் தி.மு.க அணியை பதவிக்கு வரவே கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு  மூன்றாம் அணியை ஏற்படுத்தி தமிழக அரசியலை இருண்டு போகச் செய்தவர்கள்

Now see his statement about his present stand of his party MDMK:

VAIKO:
மகத்தான தியாகத்தாலும், அளப்பரிய சாதனைகளாலும் ஒரு நூற்றாண்டுக் காலமாகக் கட்டி எழுப்பப்பட்ட இலட்சியக் கோட்டையாம் திராவிட இயக்கத்தைத் தகர்ப்பதற்கும் சிதைப்பதற்கும் கங்கணம் கட்டிக் கொண்டு, இந்துத்துவ சக்திகளும், திராவிட இயக்கத்தின் பரம எதிரிகளும், நாலாத் திசைகளில் இருந்தும் பலமுனைத் தாக்குதல் நடத்தும் சூழலில், திராவிட இயக்கத்தைப் பாதுகாக்கவேண்டிய வரலாற்றுக் கடமை மறுமலர்ச்சி தி.மு.கழகத்திற்கு இருக்கின்றது. எனவே, ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு முழு ஆதரவை வழங்குவது என்றும், வெற்றிக்காகப் பணியாற்றுவது என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானிக்கின்றது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Related image

அரசியல்ல எது வேண்டுமானாலும் நடக்கும்...அரசியல்ல எவருமே நண்பருமல்ல எதிரியுமல்ல....எல்லாம் சகஜமப்பா...

மக்கள் மட்டும் அப்படியே இவர்கள் என்ன சொன்னாலும் அதற்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டு தாங்கள் மாறாமல் தலைவருக்கும் கட்சிக்கும் அப்படியே கட்டுப்பட்டு வாக்களிக்க வேண்டும். வெட்கப்பட வேண்டிய அரசியலில் இன்னும் என்ன என்ன வேடிக்கை என்றுதாம் நாமும் பார்ப்போமே...

அம்மா ஜெ இருக்கும் வரை இவர்கள் எல்லாம் தனியாக நின்றே மூன்றாம் அணி ஒன்றை உருவாக்கி வாக்கு வங்கியை பிரித்தே ஆக வேண்டும் என வெளித் தெரியாத பேரங்களுக்குள் அடிமைப் பட்டு தம்மை தொலைத்துக் கொண்டு தொலைந்து போனவர்கள் மறுபடியும் வீரம் பேச விளைந்து விட்டார்கள் வீரம் விளைந்த மண்ணில்...

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




உண்மையான தத்துவத்தை நம்ப யாருமே இல்லையா? கவிஞர் தணிகை

உண்மையான தத்துவத்தை நம்ப யாருமே இல்லையா? கவிஞர் தணிகை

Image result for good ways of governess required


பட்டுக் கோட்டை அழகாக சொல்லிய பாடல்
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானியரும்
புத்தரும் யேசுவும்
உத்தமராம் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வைச்சாங்க
எல்லாந்தான் படிசீங்க
என்ன பண்ணிக் கிழிச்சீங்க?

என்று

அது போல ஜெ குற்றவாளி  என்று அனைவர்க்கும் தெரியும் நீதி மன்ற தீர்ப்பு அதை உறுதி செய்த தீர்ப்புகள்  இருந்தாலும் அவருக்கு சிலையும் அவர் பேரில் கட்சியும் இயக்கமும் தேர்தலும் ஆட்சியும் மக்களும், எல்லா மதங்களிலுமே பிற மனிதர்க்கு துரோகம் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாது எனச் சொல்லி இருக்கிற போது எப்படி ஒரு கிறித்தவன் பிற மனிதர்க்கு துரோகம் செய்ய முடியும்? எப்படி ஒரு முஸ்லீம் இன்னொரு மனிதரை துன்புறுத்த முடியும்? எப்படி ஒரு இந்து அடுத்துள்ள மனிதருக்கு வன்முறை செய்ய முடியும்? ஒழுங்காக கல்வி கற்ற எவராவது ஒரு மனிதரை கொலை செய்ய முடியுமா, வன்புணர்ச்சி செய்ய முடியுமா? கற்பழிக்க முடியுமா? சிறுமி, சிறுவர்களை துன்புறுத்த முடியுமா?

எல்லா அறிஞர்களும், யோகிகளும், சித்தர்களும், படித்த பெரும் அறிவாளிகளும் ஞானிகளும், எல்லாமே எல்லா உயிர்களும் நன்றாக துன்பமின்றி வாழ வழியே ஆசையே அளவில்லாமல் இருக்கக் கூடாது என்பதுதான் என்றார்கள் .  ஆனால் எந்த வழியிலேனும் செல்வத்தை சேர்த்து வைத்துக் கொள்வதுதான் வாழ்க்கை, ஆட்சி, அரசு, கட்சி, என்ற கோட்பாடுகளிலேயே உழன்று வரும் வாழ்க்கையை மட்டுமே வாழத் தலைப்பட்ட தலைமுறைகளில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

இதைப்பற்றி  எல்லாம் எடுத்துச் சொல்வாரை அது போன்ற நெறிகளுடைய வாழ்வு முறையில் செல்லத் தலைப்படுவாரை வாழத் தெரியாதவர், செல்வம் சேர்த்த வழி தெரியாதவர் என்றெல்லாம் இழி நிலைக்கு ஆளாக்குகிற ஒரு சமுதாயம் முன்னேற எங்கிருந்து வழி கிடைக்கும்?

ஆள்கின்ற ஆட்சிகளும் மக்களை எல்லாம் எந்தவித குறுக்கு வழியிலாவது ஆட்படுத்தி, அவர்கள் வாக்குகளைப் பெற்று பதவிக்கு வந்து பதவிக்கு வந்த பின்னே அவர்களை மடைமைப் படுத்தி தங்களை நிலை நிறுத்திக் கொள்கிற முனையும் சமுதாயம் எங்கிருந்து தமது நல்ல பாதைக்கு வழி காண முடியும்?

மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்ற  மூன்று பெரும் ஆளுமைகள் இருக்கிற வரை , ஆசையே அழிவுக்கு காரணம் என்ற அடிப்படையை ஏற்றுக் கொள்ளாதவரை,இந்த உலகத்தின் போக்கை மாற்றவே வழியில்லை. அதன் வளர்ச்சியைத்தான் நாம் ஆட்சி முறைகளில் மக்கள் வாழ்க்கையின் வழிமுறைகளையாக கொண்டிருப்பதைக் காண்கிறோம். ஜப்பானின் மனிதக்கறி பன்றிக்கறி மாதிரி இருப்பதாக தின்று பார்த்தவர் சொன்னது இன்று செய்தியாகி இருக்கிறது.

உலகின் பல பக்கங்களிலிருந்தும் எதெல்லாம் தேவையில்லையோ அதை எல்லாம் மனிதர்கள் விரும்ப ஆரம்பித்துள்ளமை உலகின் கலாச்சாரமாக மாறிக் கொண்டிருக்கிறது. பச்சைக் குத்துதலில் இருந்து, பல தார மணம், பலமுறை மணம், எல்லாம் சர்வ சாதாரணமாக மாறிக் கொண்டிருக்கிற காலம் மிக அருகே நமதருகே வந்துவிட்டது . அறிவியல் என்ற பேரிலான விளையாட்டு வினைகள் அனுதினமும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

கிராமமே இந்தியாவின் இதயம் என்ற மகாத்மாவின் பேச்செல்லாம் காலத்தால் தூக்கி வீசப்பட்டுள்ளது. கிராமம் எல்லாம் வேண்டாம் கிராமத்து இளைஞர்களை மணம் செய்ய மாட்டோம் என ஒரு பெண்களின் அணி இன்றைய கோபிநாத்தின் நீயா நானாவில் சென்று கொண்டிருக்கிறது

உண்மை, சத்தியம், நேர்மை, நம்பிக்கை, நல்வழி , நன்னெறி இவை எல்லாம் மதிப்பின்றி அஹிம்சை என்ற  அடிப்படை தீபத்தால் புதிய நாடாய் உருவான இந்தியா இன்று ஹிம்சை வழியை தேர்ந்து சென்று கொண்டிருக்கிறதூ.

பொய், கள்ளத்தனம், ,கொலை, களவு, சூது மது போதை எல்லாமே இன்று அதிகரித்தவண்ணம் வாழ்வைப்பற்றிய சிந்தனைகள் மாறிப் போய்விட்டன.

எனவே எல்லாக் கபடு சூது யாவற்றையும் அடித்து வீழ்த்தக் கூடிய முறைமைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.அதல்லாமல் இங்கே ஆள்வது, ஆட்சி, கட்சி எல்லாம் வெறும் மாயை, கண்துடைப்பு, பொய்.
நல்ல தலைமையை வேண்டிய அபிராம பட்டரைப் போல நானும் பிரார்த்திக்க ஆரம்பித்துள்ளேன்.

ஒரு காலத்தில் மன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி என்றார்களோ அப்படி, ஒரு நல்ல மன்னன் நல்லாட்சி நடத்தும்போது அந்த மக்களுக்கு பொற்காலம் என்றார்களோ அது போல ஆள்வோர் முறைகளும், முறைமைகளும் தூய்மைப்படுத்தப் பட வேண்டியதவசியம்.

அது எந்த மதமானாலும் மதமற்றதானாலும்....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.





நானும் இன்குலாப்பை நினைத்துப் பார்க்கிறேன்: கவிஞர் தணிகை.

நானும் இன்குலாப்பை நினைத்துப் பார்க்கிறேன்: கவிஞர் தணிகை.


Image result for inquilab poet sakul hameed


 டிசம்பர் 1ல் கவிஞர் இன்குலாப் என்கிற சாகுல் ஹமீது மறைந்த முதன் நினைவு தினம் என்று நிறைய பதிவுகள் பாரதிக்கும் பின் ஒரு உண்மைக் கவி என....நானும் அவரும் சேலம் மக்கள் கலை பண்பாட்டுக் கழகத்திற்காக 90களில் ஒரு கவியரங்கம் செய்தோம். அவர் அதில் தலைமைக் கவிஞர்.

நான் நீதி என்னும் தலைப்பில் கவிதை செய்தேன். அது அளவிற்கு அதிகமாகவே இருந்ததாக சபை நினைக்குமளவு அமைந்திருந்தது. அதற்கு அவர் எப்போதும் நீதி அப்படித்தான் தம் தீர்ப்பை எழுதும் என்று சொல்லி என் பக்கம் சார்பாக பேசினார்.

மேலும் கவிஞர் என்றால் எப்போதும் கவிதை எழுதிக் கொண்டிருப்பவர் என்ற ஒரு எண்ணம் இருக்கிறது மக்களிடம் படித்தவர்களிடம் கூட அப்படி அல்ல....கவிஞராய் வாழ்வதுதான் வாழ்க்கை. கவிதையை எப்போதும் எழுதிக் கொண்டிருப்பது என்பதெல்லாம் கவிஞர்களின் அடையாளம் அல்ல என்று அந்தக் கூட்டத்தில் பேசியது இன்று வரை என் நினைவிலிருந்து அகலாமல் இருக்கிறது.

சூரியனைச் சுமப்பவர்கள் என்ற நூலை அவரின் நினைவாக அவர் எனக்களித்தது இன்று வரை என் நூலகத்தில் வீற்றிருக்கிறது. அதென்னவோ இந்தியாவில் மிக நல்ல நபர்களுக்கு எல்லாமே அங்கீகாரம் ஒன்று சரியாக கிடைப்பதில்லை, அல்லது அவர்கள் இறந்த பின் தாம் கிடைக்கிறது.

அவர் தம் மகன்களையே சரியாகப் படிக்க வைக்க முடியாமல் கஷ்டப்பட்டார் என்பதெல்லாம் செய்திகளாகின்றன இப்போது. அறிஞர்களை, நாட்டின் உண்மையான விதைகள் எப்போதுமே தியாகத் தொட்டிலில் ஏழ்மையின் கட்டிலிலேயே இருந்து மடிந்து விடுகின்றன...

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Saturday, December 2, 2017

மத்திய வீட்டு வசதித் திட்டம்: எனது பகிர்வுகள்: கவிஞர் தணிகை

மத்திய வீட்டு வசதித் திட்டம்: எனது பகிர்வுகள்: கவிஞர் தணிகை


Related image

வீட்டின் மேற்கூரை ரீப்பர்கள் காலம் போய்விட தொங்க ஆரம்பித்திருக்கும் ஓடுகள் வேயப்பட்ட வீடுதாம் எமதும், எப்படிப் பார்த்தாலும் அவை வேயப்பட்டு 60 ஆண்டுக்கும் மேல் இருக்கும்.


இதை சரி செய்து சீராக்கலாம் என்றால் பொருளாதாரம் மேல் நிலையில் இல்லை. இன்றைய பொழுதில் நீர்வசதி, மணல், மின்வசதி அதன் செலவு வேலையாட் கூலி அக்கம் பக்கம் தொல்லை இவை யாவற்றையும் ஆலோசித்து ஒரு வீட்டு வேலை ஆரம்பிக்கலாம் என்பதும் செய்து முடிப்பதும் சாதாரணமானதல்ல.

இந்நிலையில் தமிழகத்தின் எல்லா மணல் குவாரிகளையும் 6 மாதம் மூடி விடவும், மலேசிய மணலை இறக்குமதி செய்யவும் அரசைப் பணித்திருக்கிறது நீதிமன்றம். மேலும் புதிய மணல் குவாரிகளும் ஏதும் திறக்கவும் கூடாது என்பதும் உத்தரவு.

இதை எல்லாம் அப்புறப்படுத்திப் பார்த்து விட்டு, வீடு கட்ட‌ ஊராட்சி மன்றம் வழியே சுமார் 2 இலட்சம் இலவசமாக மானியமாகக் கொடுக்கிறார்களாம். மோடி பிரதமர் திட்டம் என்ற பேரில் சுமார் 2 இலட்சம் ஏறத் தாழ அது 2 இலட்சத்து 16 ஆயிரம் என்ற போதிலும் 4 முறையாக 4 தவணையாக அதைப் பெறுவதில் சுமார் 20,000 கைக்கு வராதாம். ஒரு இலட்சத்து தொண்ணூறாயிரம் வரை கிடைக்குமாம்.

கையில் பணம் இருந்தால் கட்டிக் கொள்ளலாம், அதை எல்லாம் எதிர்பார்த்து கட்ட முடியாது, நாங்கள் எல்லாம் ஏன் இதை ஏற்றுக் கொண்டு கட்டினோம் என இருக்கிறது என்ற தகவல்களை எல்லாம் சேகரித்து எமது வீட்டின் துணைவி இதெல்லாம் வேண்டாம் என முடிவெடுத்தார்.\

இதெல்லாம் ஒரு பிரச்சனையே அல்ல. ஆனால் ஊராட்சி மன்றம் விடுவதாக இல்லை வேண்டாம் என்றெல்லாம் சொல்லக் கூடாது, வாங்கிக் கொள்ளுங்கள் என தொடர்புடைய பணி செய்யும் நபர்களை வைத்து தொந்தரவு செய்யவே ஆரம்பித்துவிட , நாங்கள் வேண்டாம் வேண்டாம் என மறுக்க...சரி வேண்டாம் என்றால் ஒரு விண்ணப்பத்தில் கையெழுத்தைப் போட்டுக் கொடுங்கள் எனச் சொல்லி நாமும் கையெழுத்திட்டு முடித்து விட்டொம்.

சில பல மாதங்கள் சென்றிருக்கும்.

மறுபடியும் நீங்கள் உங்கள் வங்கி வரவு செலவு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை, அதார் கார்ட், போன்ற அத்தியாவசிய அடையாள நகல்களை எங்களுக்கு கொடுங்கள் என வீட்டுக்கு வந்தும் சில முறை நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். வேண்டாம் என்று சொல்லி கையெழுத்திட்ட பிறகு மறுபடியும் ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என்றால் இந்தத் திட்டத்தில் சேர்வதாக சொன்ன 300 பேரில் சுமார் 200 பேர் வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். விவரம் தெரிந்த நீங்களே இப்படி செய்யலாமா கொடுங்கள் விவரங்களை நாங்கள் மறுபடியும் ஒரு விண்ணப்பம் தருகிறோம் அதில் கையொப்பம் இட்டுக் கொடுங்கள் என்றார்கள்.

இதென்ன கூத்தாக இருக்கிறதே? தொகை வேண்டும் என்று சொன்னால் தான் இந்த இத்தனை விவரங்களும் தேவை...வேண்டாம் என்பதற்கு மறுபடியும் நாங்கள் இந்த விவரஙக்ள் அடங்கிய நகல்களை இணைத்து தர வேண்டும்? எதற்கு அலுவலகம் வரவேண்டும் என்று செல்லவே இல்லை.
Related image

அதன் பிறகு மறுபடியும் நீங்கள் கொடுத்த ஆதாரங்கள் தொலைந்து விட்டன, அதைக் கணினியில் ஏற்றி அதன் பின் நீங்கள் வேண்டாம் என்று சொல்வதைக் காட்டி அதை மறு நபர்க்கு மாற்றிக் கொடுத்து விடலாம் எனவே நிலையைப் புரிந்துகொள்ளுங்கள் அந்த விவரங்களைக் கொடுங்கள் என்று மறுபடியும் வேண்டுகோள்.

தெருவிளக்குகள் மாதக் கணக்காக எரியவில்லை அதை எரியவைப்பதாக எத்தனை முறை சொல்லியும் ஊராட்சியும் மின் வாரிய அலுவலகமும் செய்வதாக இல்லை...நள்ளிரவில் ஒரு மணிக்கு, இரண்டு மணிக்கு குடி நீர் விட்டு பெண்களை தூங்க விடாமல் செய்யும் இந்த ஊராட்சியை நம்பி நாம் எந்தத் திட்டத்தை எப்படித்தான் நம்பி செயல் பட முடியும்?

இன்று மணல் விற்கும் நிலைக்கு மணலுக்கே இவர்கள் கொடுக்கும் பணம்  சரியாகப் போனால் எப்படி ஒரு ஏழை எளியவரால் வீடு கட்ட முடியும்? இவர்களுடன் மல்லுக் கட்டி அந்த தவணை முறைகளில் பணம் பெற நம்பி இருக்கும் சுவர்களை இடித்துவிட்டால் இருக்கும் நிலைக்கே பங்கம் வந்து விடாதா ஜோக்கர் என்னும் படத்தில் கட்டுவதாக சொன்ன கழிப்பறைக் கதைகள் எனக்கு நல் நிலையை நல் அறிவை ஊட்டி விட...

ஏன் இதை எல்லாம் பதிவாக்கி விடுகிறேன் எனில் இதுதான் நாட்டுக்கு உழைத்த உழைக்கும் ஒரு நியாயமான எவரையும் ஏமாற்ற விரும்பாத நல்ல நபர்களின் நிலை. இதை இந்திய நாட்டில் எவர் தீர்க்க வருவார்? என்பதற்காகவே...

எம் போன்றோரால் தீர்க்க முடியும்தான் ஆனால் எம்மை நம்புவார் என பெரும் கூட்டம் இல்லையே... வள்ளியூரில் ஓராண்டுக்கு முன் கட்டிய பாலம் இடிந்ததாக செய்தி.

 இன்று முதல்வர் திருவாக்கவுண்டனூரில் பைபாஸில் சுமார் 22 கோடி செலவில் உருவான பாலத்தை திறந்து துவக்கி வைத்திருக்கிறார் அம்மாவின் வாரிசாக நின்று...

இந்த இரண்டு செய்திகளுக்கும் எந்த வித இணைப்பும் தொடர்பும் இல்லை அப்படி எல்லாம் இருப்பதாக நீங்கள் நினைத்தால் அதற்கு நானோ மறுபடியும் பூக்கும் தளமோ பொறுப்பல்ல.

மறுபடியும் பூக்கும் வரை
 கவிஞர் தணிகை






திருட்டுப் பயலே 2. சினிமா: கவிஞர் தணிகை.

திருட்டுப் பயலே 2. சினிமா: கவிஞர் தணிகை.

Image result for thiruttu payale 2

2006ல் ஜீவன், அப்பாஸ், சோனியா அகர்வால், மாளவிகா ஆகியோரை வைத்து திருட்டுப் பயலே என்ற படத்தை எடுத்து வெற்றிப் படமாக்கிய அதே சுசி கணேசன் அகோரம் படத்தயாரிப்பு நிறுவனம் இம்முறை பாபி சிம்ஹா, பிரசன்னா , அமலா பால் ஆகியோரை வைத்து அதே போன்ற கதையை இந்தக் காலத்துக்கு ஏற்ற செல்பேசிக் கலாச்சாரத்துடன் போலீஸ் ஸ்டோரியுடன் செய்திருக்கும் படம்.

ப்ரசன்னா வில்லன் வேடம் கனகச்சிதமாக செய்யப்பட்டிருக்கிறது.நன்றாக செதுக்கி இருக்கிறார்.ஸ்னேகா மெச்சிக்கொள்வாரா என்றுதான் தெரியவில்லை. அஞ்சாதே படத்திலிருந்து இவர் இது போன்ற கதாபாத்திரங்களை ஜமாய்க்கிறார். நிபுணன், துப்பறிவாளன் போன்ற படங்களில் நல்ல சப்போர்ட்டிங் ரோல் கதாநாயக நடிகர்களான அர்ஜுன் மற்றும் விஷாலுடன்.

பாபி சிம்ஹா நல்ல கம்பீரமான போலீஸ்காரர் என்ற வேடத்தில், இரகசியமாக ஒட்டுக் கேட்கும் பணியில் நிறைய வீடு, கார் என பிறரிடமிருந்து பிடுங்கியதை பினாமி பேரில் வைத்திருந்ததை அனுபவிக்காமலே கடைசியில் குடும்பம், குழந்தைக் கருவில் என ஏமாற்றத்தில் நிறைவடைகிறார்.

அமலா பால் ஆட்டம் பாட்டம் கொண்டட்டம், காதல், ப்ரசன்னாவிடாம் இரகசியமாக மீன் தூண்டிலில் மாட்டிக் கொண்ட புழுவாக நன்றாக துடித்திருக்கிறார் நடித்திருக்கிறார்.

அடித்து அடித்து காயப்படுத்தப்பட்ட பால்கி என்னும் பாலகிருஷ்ணன் என்னும் ப்ரசன்னா கடைசியில் 3 வயது மூளை வளர்ச்சியுடைய சிறுவனாக கை கால் இயங்காமல் சக்கர நாற்காலியில் வைத்து அவரது தந்தையால் தள்ளிச் செல்லப்படுவது போன்ற கதை இது போல் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துவார்க்கு பாடமாக சொல்லப்பட்டிருக்கிறது.

அநியாயமாக ஈட்டும் ஊதியமும் பயன்படாது என்ற நீதியும் சொல்லப்பட்டிருக்கிறது. நமது அம்மா நிரந்தர முதல்வர் ஜெ வழக்கை விடவா இதெல்லாம் பிரமாதம்?

சிறிய சிறிய சம்பவங்கள் வழியாக மேலும் மேலும் கதை நகர்த்தப்பட்டு பார்ப்பவரை மேலும் மேலும் த்ரில்லிங் மன நிலைக்கு கொண்டு சென்றுவிடுகிறது இரகசிய உலகம். நிழல் உலகம், நிஜத்தில் கலகம் ஏற்படக் காரணம் என படம் சமூக வலைதளம், போலீஸ் ஸ்டோரி, பினாமி, நல்ல குடும்பங்கள், தினவு எடுத்துத் திரியும் அறிவார்ந்த கணினி உலகு சார்ந்த இளைஞர்கள் அவர்களுக்கு பகடைக்காய்களாகும் திருமணமான அத்தை மாமி பெண்டிர்.... இப்படியாக இந்தக் கதை...


அனேகமாக வேறு படம் இந்தப் படத்தை வந்து அழுத்தவில்லை எனில் பெண்களைக் கவரும் படமாக, பெண்களுக்கு எதை எல்லாம் செய்யக் கூடாது என்று சொல்லித் தரும் படமாக இருப்பதால் இப்படம் பேசப்படும். வசூலைக் கூட எடுக்கும். நன்றாகக் கூட ஓடலாம். ஆனால் லென்ஸ், போன்ற படங்கள் இதற்கும் முன்பே இதை விட வலுவானதாக இதே கதை அமைப்புடன் அடிப்படையில் வந்து விட்டாலும் கிரிமினல், சைபர் கிரிமினல் மற்றும் குடும்பம் என இந்தப் படம் வலுவடைகிறது . அனைவரும் பார்க்க வேண்டிய படமாகவும் மாறுகிறது. அமலா பாலும் ப்ரசன்னாவும் படத்தில் வலு சேர்ப்பார்களாகத் தெரிகிறார்கள்.

மறுபடியும் பூக்கும் தளம் இந்தக் காலத்துக்கு வேண்டிய படம் என்பதால் இந்தப் படத்திற்கு நூற்றுக்கு 55 மதிப்பெண் கொடுக்கலாம் என்று கருதுகிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



அண்ணாதுரை: சினிமா : கவிஞர் தணிகை

அண்ணாதுரை: சினிமா : கவிஞர் தணிகை


Image result for annadurai movie 2017

விஜய் ஆண்டனி இந்தப் படத்தில் எடிட்டிங்,இசை, தயாரிப்பு ஆகியவற்றில் பங்கு கொண்டு இரட்டை வேடங்களில் அண்ணாதுரை, தம்பிதுரையாக நடித்துள்ளார். என்றாலும் இது சலீம், பிச்சைக்காரன் அளவுக்கு சிறப்பாக இல்லை.யமன் , சைத்தான் அளவுக்கு அவ்வளவு கீழ் இறங்கியதாகவும் சொல்ல முடியாது.

அண்ணாதுரை, தம்பிதுரை, யின் அப்பாதுரையாக நீண்ட நாட்களுக்குப் பின் நளினிகாந்த் என்னும் நடிகருக்கு கண்ணியமான பாத்திரம் ஆனால் அமைதியான நடிக்க ஏதும் துணை செய்யாத வந்து போகும் பாத்திரம். படத்தில் வேறு எவருக்குமே வாய்ப்பு பெரிதாக இல்லாமல் விஜய் ஆண்டனி மட்டுமே பெரிதாக தெரிய வேண்டும் என்ற கதை அமைப்பு. ஏற்கெனவே சொன்ன மாதிரி இரட்டை வேடங்கள் வேறு.

மதுக் குடியின் தீமையைப் பற்றி மிகவும் அழுத்தமாக ஏதோ பதிவு செய்கிறார்கள் என்று பார்ப்பவர் சிந்திக்க ஆரம்பிக்கும்போது கதை அதை விட்டு வேறு தளத்துக்குள் சென்று விடுகிறது. அது கடைச்யில் தனக்காக வாழாமல் பிறர்க்காக வாழ்ந்து முடிவது என்று...

இதன் முன்னோட்டங்களில் எல்லாம் சொல்லியபடி இதுவரை வந்த தமிழ்ப் படங்களில் 50 படத்துக்குள் இதற்கும் இடம் என்றெல்லாம் எதிர்பார்ப்பு வார்த்தைகள் வீசப்பட்டு ஏமாற்றமாய் முடிந்திருக்கிறது.

மற்றபடி கதை திரைக்கதை வசனம் இயக்கமென சீனிவாசன் என்பவர் செய்திருக்கிறார். நிறைய மாற்றங்களை விஜய் ஆண்டனிக்காக கதையிலிருந்து மாற்றி செய்திருப்பதாக ஊகிக்கலாம்.

இயல்பான ஒளிப்பதிவை தில்ராஜ் என்னும் செந்தில் ராஜ் செய்திருக்கிறார். பெண்கள் காலை ஆறுமணி முதல் மாலை 6 மணி வரைதான் தனியே போகவேண்டும் இல்லையேல் உற்றாரை உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என ஒரு பெண்ணிடம் பேசி அவரை வன்முறையிலிருந்து காப்பாற்றுகிறார் அந்தப் பெண்ணோ பெண் காவலராகி இவரைக் காதலித்தவராய் இவரைக் கடைசியில் காப்பாற்றவும் எண்ணுகிறார் போலீஸ் என்கவுன்டரிலிருந்தும்...
மற்றொரு பியூட்டி பார்லர் வைத்திருக்கும் பெண்ணும் இந்த அண்ணாதுரையை நேசிக்கிறார், எஸ்தர் பெயரை கையில் பச்சைக் குத்திக் கொண்டு பாரில் குடித்துக் கொண்டு இறந்து போன காதலிக்காக கல்லறையில் குடித்து விட்டு படுத்துக் கிடந்து கொண்டு, அதைக் கூட்டி சுத்தப்படுத்திக் கொண்டு, அதே நேரம் ஜவுளிக்கடை வைத்து சமூகத்தில் நல்ல அந்தஸ்துடன் பிழைப்பதாக இருக்கும் அண்ணாதுரை மதுவை இன்னும் வேண்டும் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு மதுக்கடையில் மற்றொரு நபரை பிடித்துத் தள்ளி விட அவர் உடைந்த பாட்டில் மேல் விழுந்து சாவதாகவும் அதிலிருந்து இவரது தம்பியாக வரும் தம்பிதுரையின் வாழ்வும் பெற்றோர் வாழ்வும் மாறிப்போவதாகவும், நண்பர்க்காக பெற்ற கடனை அடைத்த பின்பும் வெறும் வெள்ளைத்தாளில் கை எழுத்து இட்டதை பெறாமல் வந்ததும், தம்பிக்கு பெண் பார்த்திருக்கும் வீட்டில் தம்பியைப் போலவே உடையும், சிகை அலங்காரமும், தாடியை குறைத்துக் கொண்டு சென்று பணத்தை பெற்று வருவதாகவும்

இப்படி எல்லாமே அதிக வலுவில்லாமல், பார்ப்பவரிடம் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தாமல் இட்டுக் கட்டிய கதையாகவே சினிமாவுக்காக எழுதிய கதையாகவே எந்தப் பக்கமும் நன்றாக இருக்கிறது என்றெல்லாம் சொல்ல முடியமல் எடுக்கப்பட்ட படம்.

இதை நன்றாக இருக்கிறது என்றோ நன்றாக இல்லை என்றோ சொல்ல முடியாதிருக்கும் படம்.

சுமார் ரகம். பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் பெரிதான பாதிப்பை ஏதும் ஏற்படுத்திவிடாது.

40 மதிப்பெண் நூற்றுக்கு கொடுப்பதே பெரிது. ராதிகா சரத்குமார் தயாரிப்பில் பங்கு பெற்றிருக்கிறார்கள்.

அறிஞர் சி.என் அண்ணாதுரையின் வாழ்க்கை வரலாற்றை அப்படியே எடுத்திருந்தாலும் அது இன்றைய சூழ்நிலைக்கு  மிகவும் நன்றாக பேரும் பெற்றிருக்கும் படம் நன்றாக ஓடி வசூலை அள்ளிக் குவித்திருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.