Wednesday, October 4, 2023

திருப்பூர் குமரனின் ஊர் திருப்பூர் அல்ல: கவிஞர் தணிகை

 திருப்பூர் குமரனின் ஊர் திருப்பூர் அல்ல: கவிஞர் தணிகை



கொடி காத்த குமரன் என்றும் திருப்பூர் குமரன் என்றும் அழைக்கப்படும் குமாரசாமி சென்னிமலையில் பிறந்து வாழ்ந்தவர்.சுமார் 28 ஆண்டுகள் வாழ்ந்து சரித்திரப் புகழ் பெற்றவர்.எனது இளமையில் தினமணி தீபாவளி மலர் ஒன்றில் முதன் முதலாக இவரின் ஊர் திருப்பூர் அல்ல என்பதும் இவர் பற்றிய நல்ல கருத்துகளையும் வெளியிட்டிருந்ததை படிக்க நேர்ந்தது. அது முதல் எல்லா சந்திப்புக் கூட்டங்களிலும் அதை நான் எனது உரை வீச்சில் குறிப்பிடத் தவறுவதேயில்லை.


 நெசவாளர் குடும்பம். ஒரு திருமணத்திற்கு மொய் ரூ.1 வீதம் ஒரே நேரத்தில் வந்த‌ எட்டு திருமணத்திற்கு மொய் ரூபாய் எட்டை வைக்க வழியின்றிப் போனதால் துக்கத்தோடும், வெட்கத்தோடும் அவமானமாகி விடுமே என்று கூச்சம் தாங்காமல் இரவோடு இரவாக வீட்டைக் காலி செய்து கொண்டு சென்னிமலையில் இருந்து திருப்பூர் வந்து குடியேறுகிறார்.அதன் பின் நடந்ததை நாடறியும் உலகறியும்.


கல்வி என்பது கற்றுக் கொள்ள,கற்றுக் கொள்வதை வாழ்வில் பயன்படுத்த.


1904 அக்டோபர் 4 முதல் 1932 சனவரி 11 வரை வாழ்ந்த இவர் வாழ்வு எனக்கு படிப்பினைத் தர 1991 ஜனவரி 21 அன்று அல்ல அதற்கும் முன்பிருந்தே திட்டமிட்டிருந்ததை அன்று முதல் அமல்படுத்தினேன்  எங்கள் குடும்பத்தில்.அதைப் படித்தது முதல் எங்கள் குடும்பத்திலும் நிலவி வந்த அந்த தீய பழக்கத்திலிருந்து எங்கள் குடும்பத்தை விடுவித்து விட்டேன்.


அதாவது வரதட்சணைக் கொடுமை போன்றதே இந்த மொய் கலாச்சாரமும். எனவே மொய் வாங்குவதில்லை வைப்பதுமில்லை என்ற நெறிக்குள் வந்து விட்டேன். எனது தங்கை மணம் முதல் அதை அமல்படுத்தி பல்லாண்டுகளாக பயணம் வந்து விட்டேன். இன்றைக்கு அந்த நெறியைக் கடைப்பிடிக்க ஆரம்பித்து சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. என்னால் முடிந்தால் சிறு அன்பளிப்புகள் செய்து விட்டு நிகழ்வுகளில் பங்கெடுத்துக் கொண்டு வருவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன்.அல்லது எனது புத்தகங்களின் அன்பளிப்புகள் தாம் வாழ்த்துகளுடன்.


சீட்டுப் பணத்தை ஏமாற்றிச் செல்கிறார்கள் என்ற காரணத்தால் எனது தாயையும் சீட்டு போன்றவை அவசியமில்லை எனக் கட்டுப் படுத்தி விட்டேன். அவற்றை நடத்துவதும் கட்டுவதுமில்லை.


இன்சூரன்ஸ்  ....வாழ்வுக் காப்புறுதி அவசியமில்லை என்று காந்தியம் சொல்வதால் அதையும் நாங்கள் செய்து கொள்வதில்லை


எங்கள் வாழ்வில் பெரிதாக சேமிப்பு என்று ஏதுமில்லை, சிக்கனம் தான் சேமிப்பு.


திருப்பூர் குமரனின் நாளில் இதை எல்லாம் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது, இவர் மட்டுமல்ல சுப்ரமண்ய சிவா பிறந்த நாளும் இன்றைய தினத்தில்...மகாக் கவி பாரதி, சிவா, செக்கிழுத்த செம்மல் போன்றோர் ஒரு குழுவாக பெரு நட்புடன் விடுதலைப் போராட்டத்தில் பாடுபட்டு தங்கள் வாழ்க்கையுடன் தங்கள் உடலையும் குடும்ப வாழ்க்கையையும் வேதனைப் படுத்திக் கொண்ட‌வரலாறு என் போன்றோருடன் இன்னும் வாழ்கிறது.

நூற்றாண்டுகள் கடந்தும் இவை வாழும்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment