Tuesday, September 26, 2023

சினிமாத் தீ: கவிஞர் தணிகை

  சினிமாத் தீ: கவிஞர் தணிகை



ஞாயிற்றுக் கிழமை "விமானம்" என்ற திரைப் படத்தை தொ(ல்)லைக் காட்சியில் பார்த்தேன். அடியேன் தான் சினிமாக் கட்சிக்காரனாயிற்றே. பார்க்காமல் விடுவேனா? அழுது கொண்டாவது பார்த்து விடுவதுதான் நமது பழக்கமாயிற்றே.


மிகவும் கீழ்த் தட்டு வாழ்க்கை பிரதிபலிப்பு. தெலுங்கு, தமிழ் பதிப்பு. சமுத்திரக் கனி மாற்றுத் திறனாளி மட்டுமல்ல பொதுக் கழிப்பிடத்தை பராமரித்து அதிலிருந்து வரும் சிறு தொகையில் கண்ணியமாக தாயில்லாத தமது மகனுக்கு உயர் வாழ்க்கையை பரிசளிக்க நினைப்பவர்.அவரைச் சுற்றி சில குப்பம் அல்லது சேரி புறம் போன்ற பகுதியில் வசிக்கும் வீடுகூட சரியாக இல்லா ஒண்டு குடிசை  நண்பர்கள் அவர்களின் குடும்பங்கள்.


ஒரே வரியில்: விமானப் பயணம் செய்ய வேண்டுமென்ற சிறுவனது ஆசையை நிறைவேற்ற பார்க்க சகிக்க முடியாத அளவு துன்பத்தை அனுபவிப்பதாக படம் காட்டுகிறது. கடைசியில் கடவுள் நம்பிக்கையையும் இழந்து படாத பாடு பட்டு எல்லாம் இழந்து விமானத்தில் பறக்கவும் அமர்கிற போது லுகேமியா என்னும் இரத்தப் புற்று நோயால் மகன் இறக்க தந்தையும் இறக்கிறார்.புதுமைப் பித்தன் சிறு கதை படித்தது போன்று முழுசோகமும் இதயம் முழுதும் கவ்வியது. சில நாட்கள் வெளியேற முடியவில்லை. ஏண்டாப்பா பார்த்தோம் என்றிருந்தது.


மிகவும் நடைமுறை யதார்த்தமான படம்...ஆனால் பார்த்து விட்டு அதை செரித்துக் கொள்ள முடியவில்லை.கீழ்த்தட்டு மனிதர்களின் நிலை அப்படியேதான் இருக்கின்றன தற்போதைய ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் போதும் சீன அதிபர் வந்த போதும் மதில் சுவர் எழுப்பி வறுமை ஒழிப்பை மறைத்து நிகழ்த்திய  நமது அரசு போல...


அந்தப் படத்தின் அதிர்வலை எனை எங்கெங்கோ கொண்டு சென்றது...அயோத்யா என்ற மனிதத்தின் இறுதிச் சடங்கு பற்றிய படத்தை விட இந்தப் படம் நிறைய வேதனைப் பட வைத்தது.


மறக்க முயன்று வருகையில்: சமந்தா ஒரு  TIK TOK   டிக் டாக் பதிவின் வழியே : தி சவுண்ட் ஆப் ம்யூசிக் THE SOUND OF MUSIC படமே தனக்கு மிகவும் பிடித்த படம் என்ற செய்தி அறிந்து அதை தேடிப் பிடித்துப் பார்த்தேன். எல்லாத் துறைகளிலுமே ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப் பட்டு நியமிக்கப் பட்டு 5 ஆஸ்கார் மற்றும் உலகளாவிய விருதுகளில் பெரும்பாலும் எல்லாவற்றையும் வாங்கிய 1965 படம்.அதாவது எல்லாவற்றிலும் ஒரு இனிமையை காணும் ஒரு நல் உள்ளம் பெற்ற ஒரு கன்னியாஸ்த்ரி பயிற்சியில் உள்ள இளம் பெண் எப்படி ஒரு குடும்பத்தை இனிமைப் படுத்தி காப்பாற்றுகிறார் கடைசி வரை உடன் இருந்து எனச் சொல்லும் படம். நிறைய எல்லாம் சத்தமெல்லாம் பாடலாகவே இசையாகவே நாயகிக்குத் தோன்றுவது போல நமக்கும் ஒலிக்க...பாட்டம் ஆட்டம் எப்படி சிறு பிள்ளைகளுக்கு அதுவும் தாயில்லாத 7 பிள்ளைகளுக்கு தாயாகிறார் என்பதும் ஆஸ்திரியாவின் கடற்படையின் காப்டனின் துணையாகவும் ஆகிறார் என்பதுவே கதை. 8.2 மில்லியன் டாலரில் எடுக்கப் பட்டு 286.2 MILLION டாலர் அந்தக் காலத்திலேயே வசூல் கண்ட படம். கொஞ்சம் பொறுமையுடன் பார்ப்பார்க்கு பொக்கிஷம் அல்லது புதையல்.


                                                         
 ALL IS WELL

இந்தப் படத்தையும் 3 இடியட்S  என்ற நமது இந்தியப் படத்தையும் பார்த்து மகிழ்ந்தேன். உண்மையிலேயே இயற்கை எப்படி மனிதர்கள் வாழ்வில் விளையாடும் என்பதை நகைச்சுவையுடன் மிகச் சிறப்பாக அறிவியலை விரும்பும் அனைவரும் பார்த்து இரசிக்க வேண்டிய பொறியியல் மாணவர்கள் பற்றிய படம். இந்தப் படத்தை பார்க்கச் சொல்லி எனதருமை நபர்கள் சிலர் சொல்லி இருந்த போதும் அதை அப்போதெல்லாம் பார்க்க இயலவில்லை இப்போது பார்த்தேன். நல்ல தயாரிப்பு அருமையான படம்


நகைச் சுவை மட்டுமல்ல எல்லா உணர்வுகளுக்கும் இந்தப் படம் அரிய விருந்து. சில நேரங்களில் பின் புற குந்து புறத்தைக் காட்டி நிர்வாணப் படுத்துவதையும்,  நண்பர்கள் மது குடித்துக் கூத்தடிப்பதையும் தவிர்த்தால் மிகவும் இரசிக்கத் தக்க படம். நண்பன் என்ற தமிழ் படம் இதன் மீளுருவாக்கம் தான். தமிழ் படத்தை நினைவூட்டும் போது அந்த பேராசிரியர் பாத்திரம் சத்ய ராஜ், மற்றும் அந்த சத்யன் பாத்திரம் நன்றாக இருந்த நினைவு. மேலும் கரீனா கபூர் சற்று முதிர்ச்சியான பாத்திரமாகத் தெரிந்தார் இந்த அமீர்கான், மாதவன் மற்றும் சர்மான் ஜோஷி கூட்டணியுடன் போமன் இரானி, ஓமி வைதியா என்ற நடிகர்கள்  சேத்தன் பகத்தின் பைவ் பாயிண்ட் சம் ஒன் என்ற நாவலை உயிரூட்டம் செய்திருந்தனர். நல்ல பொழுது போக்குடன் அறிவூட்டம் செறிந்த படம்.



இந்த இரண்டு படத்தையும் பார்த்துத் தான் விமானம் என்ற படச் சோகத்தை மறந்தேன். இந்த இரண்டும் சுகம், அது சோகம்.


இந்தப் பதிவை: குவெய்ட் நாட்டில் உள்ள எனதருமை சீடர் பிரவீன்குமார் தங்கவேல் அவர்களுக்காக அர்ப்பணம் செய்துள்ளேன்.

ALL IS WELL

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment