Sunday, June 27, 2021

உயிர் காக்கும் முயற்சியில் க.முகமது சாஹுல் அமீத் இளம் விஞ்ஞானி : கவிஞர் தணிகை

 thanks: BBC Tamil

Natarajan Sundar

உயிர் காக்கும் முயற்சியில் க.முகமது சாஹுல் அமீத் இளம் விஞ்ஞானி அவசியம் அறிக: கவிஞர் தணிகை

ஆக்சிஜன் அளவு குறைந்தால் செல்போனில் எச்சரிக்கை - விழுப்புரம் இளைஞரின் புதிய

முயற்சி

உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்தால், அதை அலைப்பேசியின் மூலம் தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கு உதவும் புதிய கருவி ஒன்றை உருவாக்கியுள்ளார் விழுப்புரத்தை சேர்ந்த க.முகமது ஷாகுல் ஹமீத்.

25 வயது முகமது ஷாகுல் ஹமீத் மின்னியல் தகவல் தொழில்நுட்ப பிரிவில் இளங்கலை பொறியியல் முடித்துள்ளார். கடந்த ஆண்டு தனது படிப்பை முடித்த இவர், கொரோனா நோய்த்தொற்று காரணமாக வீட்டிலிருந்தபடியே பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்கியுள்ளார். அதில் ஒன்றுதான் ஆக்சிஜன் எச்சரிக்கை பாதுகாப்பு சாதனம் (Oxygen Alert Safety Device) .

கொரோனா இரண்டாம் அலையால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு பலர் உயிரிழந்ததை கருத்தில் கொண்டு, இந்த புதிய கருவியை உருவாக்கியுள்ளார்.

ஆக்சிஜன் அளவு குறைந்தால் செல்போனுக்கு தகவல்

கொரோனா இரண்டாம் அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைகளின் வெளியே ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரிசையாக நிற்பதை செய்தி ஊடகங்களிலும், சமூக வலைத்தளத்திலும் பார்த்தபோது மிகவும் வேதனையாக இருந்தது. ஆகவே இதனை மையமாக கொண்டு ஆக்சிஜன் எச்சரிக்கை பாதுகாப்பு சாதனத்தை உருவாக்கினேன் என்கிறார் பொறியாளர் முகமது ஷாகுல் ஹமீத்.

குறிப்பாக இது வீட்டில் தனியாக இருக்கும் வயதானோர் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு பெரிதும் பயன் தரும் என்கிறார் முகமது ஷாகுல் ஹமீத்.

"வீட்டில் தனிமையாக இருக்கும் வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் அளவு குறைந்தால், உடனே அவர்களது குடும்பத்தினர் செல்போனுக்கு எச்சரிக்கை தகவல் கொடுக்கும் வகையில் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருவருக்கு மூச்சுத்திணறல் அல்லது ஆக்சிஜன் அளவு குறைந்தால் அவர் ஆபத்தான நிலைக்கு செல்வதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள இந்த சாதனம் உதவும்.

இந்த சாதனம் வாட்ச் போன்று கையில் அணியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக இருப்பவர் இந்த சாதனத்தை பொருத்திக்கொண்டால், அவருக்கு உடலில் ஆக்சிஜன் அளவு குறையும் போது உடனடியாக அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செல்போனுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பிவிடும்," என்கிறார் இளைஞர்.

மருத்துவமனைகளிலும் பயன்படுத்தலாம்

கூடுதலாக இதற்கென செயலி ஒன்றையும் இவர் உருவாக்கியுள்ளார். அதன் மூலமாகவும் ஆக்சிஜன் அளவை செல்போனில் தெரிந்துகொள்ளலாம்.

"இந்த செயலியின் முக்கிய செயல்பாடானது, மருத்துவமனையில் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் அனைவரது ஆக்சிஜன் அளவு எவ்வளவு உள்ளது என்று ஒரே நேரத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பது கடினமாகும். ஆனால் நோயாளிகள் அனைவரும் இந்த ஆக்சிஜன் எச்சரிக்கை பாதுகாப்பு சாதனம் அணிந்திருந்தால், அவர்களின் அனைவரது ஆக்சிஜன் அளவு எவ்வாறு உள்ளது என்பதை ஒருங்கிணைக்கப்பட்ட இந்த செயலியில் பார்க்கமுடியும்.

அதில், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவு 95க்கு கீழ் குறையும்போது அதனை இந்த செயலி மூலமாக சுலபமாக தெரிந்துகொள்ள முடியும். இதனால் ஆக்சிஜன் உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கருவியை மருத்துவர்கள் பொருத்திக் கொள்ளலாம். இதன் மூலமாக மருத்துவர்களுக்கு பணிச்சுமை குறையும், நோயாளிகளும் பயம் இல்லாமல் இருக்கலாம்," என்கிறார் ஷாகுல் ஹமீத்.

கொரோனா மட்டுமின்றி அன்றாட வாழ்விலும் பயன்படுத்தலாம்

இந்த சாதனத்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி, அன்றாட வாழ்விலும் பயன்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் அவர்.

"வீட்டில் முதியவர்கள் அல்லது நோய்வாய்ப்பட்டவர்கள் எதிர்பாராத விதமாக மூச்சுத் திணறல், மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக குடும்பத்தினரை உதவிக்கு அழைக்க முடியாத சூழல் ஏற்படலாம். அப்போது, ஆக்சிஜன் எச்சரிக்கை பாதுகாப்பு சாதனத்தின் மீது பொருத்தப்பட்டுள்ள அவசர அழைப்பு பொத்தானை (Button) அழுத்தினால், அவர்களது குடும்பத்தினர் செல்போனுக்கு உடனடியாக எச்சரிக்கை தகவல் மற்றும் கால் சென்றுவிடும். இதனால் வீட்டில் அல்லது தனியறையில் இருக்கும் முதியோர் அல்லது நோய்வாய்ப்பட்டவருக்கு அவசர மருத்துவ உதவி உடனடியாக வழங்க முடியும்," என்கிறார் இந்த இளம் பொறியாளர்.

குடும்பத்தினர் வேலைக்குச் சென்றாலும் அல்லது வெளியே எங்கு சென்றாலும் வீட்டில் இருப்பவர்கள் உடல்நலம் குறித்து முன்னெச்சரிக்கையாக இருக்கவே இந்த சாதனத்தை உருவாக்கியதாக ஷாகுல் கூறுகிறார்.

இந்த கருவி எப்படி செயல்படுகிறது?

"வாட்ச் போன்று கையில் அணிந்திருக்கும் இந்த சாதனம் கைவிரலில் பொறுத்த பட்டிருக்கும் ஆக்சிஜன் மீட்டர் சென்சார் உதவி மூலமாக உடலில் உள்ள ஆக்சிஜன் அளவை கண்காணிக்கிறது. ஒருவேளை உடலில் ஆக்சிஜன் அளவு 95க்கு கீழ் குறையும்போது, கையில் இருக்கும் மைக்ரோ கன்ட்ரோலருக்கு (Micro Controller) ஆக்சிஜன் குறைவாக இருக்கிறது என்ற தகவலை தெரிவிக்கும்.

இதைக் கையில் பொருத்தப்பட்டிக்கும் ட்ரான்ஸ்மீட்டர் அதனோடு இணைக்கப்பட்டிக்கும் ரிசீவருக்கு எச்சரிக்கை தகவலாக உடனடியாக அனுப்பும். பின்னர் குடும்பத்தினர் செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்ட அந்த ரிசீவர் கருவியானது, இதனோடு இணைக்கப்பட்ட குடும்பத்தினர் தொலைபேசி எண்களுக்கு உடனே எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பிவிடும். பிறகு அடுத்த 30 வினாடிகளில், அவசர எச்சரிக்கை அழைப்பு செல்லும் வகையில் இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது," என்றார்.

"தற்போது இந்த சாதனத்திற்கு காப்புரிமை பெறுவதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளேன். கொரோனா ஊரடங்கு காலத்தில் இதனைத் தயார் செய்ததால் எனக்கு தேவையான உபகரணங்கள் கிடைக்க சிரமமாக இருந்தது. அதன் காரணத்தினாலேயே இந்த சாதனம் கொஞ்சம் பெரிய வடிவில் உருவாக்கப்பட்டது. வரும் நாட்களில் இதை மேலும் சிறிய வடிவில் மாற்றி, மக்கள் செயல்பாட்டிற்கு கொண்டும் செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

மேலும் எதிர்காலத்தில் அன்றாட வாழ்வில் மக்கள் பயன்படுத்தும் விதமாக, ஐஓடி (Internet Of Things) மையமாக கொண்டு இயங்கும் வகையில் பல்வேறு சாதனங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளேன்," என முகமது ஷாகுல் ஹமீத் தெரிவித்துள்ளார்.

இளம் பொறியாளரின் பிற கண்டுபிடிப்புகள்

இதற்கு முன்னதாக இவர், சாலையில் வாகன விபத்துக்களை தடுக்கும் சாதனத்தை உருவாக்கினார். இதற்காக இந்திய அளவில் முதல் பரிசையும், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் மூன்றாம் பரிசும் பெற்றுள்ளார். இதனையடுத்து வெளியே செல்லும் பெண்களுக்கு மற்றவர்களால் இடையூறு ஏற்பட்டால் செல்போன் இல்லாமல் அருகேயுள்ள காவல் துறையினருக்கும் மற்றும் பெற்றோருக்கும் எச்சரிக்கை தகவல் அனுப்பும் சாதனத்தை உருவாக்கியிருக்கிறார்.

மூன்றாவதாக கொரோனா முதல் அலையின் போது தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்து கொடுக்கும் ரிமோட் மூலமாக இயங்கக் கூடிய சிறிய கார் (Tiny Robot) உருவாக்கினார்.

இவர் கண்டுபிடித்த சாதனங்களை‌ பாராட்டி இவருக்கு ரோபாட்டிக்ஸ் அகாதமி, விருது வழங்கியுள்ளது. மேலும் இவரின் படைப்புகளால் சர்வதேச சாதனையாளர் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார்.

நன்றி: பிபிசி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தமிழக வீரர்கள்

1. பவானி தேவி - வாள்சண்டை
2. சத்தியன் ஞானசேகரன் - டேபிள் டென்னிஸ்
3. சரத் கமல் - டேபிள் டென்னிஸ்
4. இளவேனில் வாலறிவன் - துப்பாக்கிச் சுடுதல்
5. நேத்ரா குமணன் - பாய்மரப் படகுப்போட்டி
6. கணபதி - பாய்மரப் படகுப்போட்டி
7. வருண் - பாய்மரப் படகுப்போட்டி



8.சாஜன் பிரகாஷ் நீச்சல் வீரர் நெய்வேலி

No comments:

Post a Comment