Sunday, January 6, 2019

பி.ஆர். சுபாஷ் சந்திரனின் நிழலற்ற பயணம்: கவிஞர் தணிகை

பி.ஆர். சுபாஷ் சந்திரனின் நிழலற்ற பயணம்: கவிஞர் தணிகை

Image result for sushil kumar shinde


 ஒரு முறை இவன் ஒரு பெண்ணின் கடையிலிருந்து அவர் அந்தப் பக்கம் வேறு வேலையாகப் போனதும் 4 இனிப்புப் பண்டங்களைத் திருடிக் கொண்டு ஓட அதைப் பார்த்தவர்கள் ஓடித் துரத்த, தகடு ஓடி மறைகிறான்


மாலையில் வேலைக்குப் போன இவனது தாய் சக்குபாய், பெரிய அம்மா கிருஷ்ணாபாய் வந்தவுடன் அந்த கடைக்கார முதியவள் வீடு வந்து தகடுவின் திருட்டைப் பற்றி முறையிடுகிறாள்.

தாயோ தன் மகன் தகடு அப்படி எல்லாம் செய்தே இருக்க மாட்டான் என சாதிக்கிறாள். அந்தப் பெண் தான் சொல்வது உண்மைதான் என ஒப்பாரி வைத்து விட்டு வீட்டுக்கு வெளியே சென்று இவன் நாசமாகப் போக என மண்ணை வாரித் தூற்றிச் சென்று விடுகிறாள்.

அதன் பிறகு தகடுவுக்கு நன்றாக பூசை நடக்கிறது. ஒப்புக்கொள்கிறான் உண்மையை இனிப்புக்கு அடிமையான, ருசிக்கு அடிமையாகி திருடியதை ஒப்புக் கொள்கிறான். அவன் தாய் அந்த உரிய காசைக் கொண்டு சென்று அந்த கடைக்கார அம்மாவிடம் கொடுத்து விடுகிறார்

அப்படி சிறுவனாக இருக்கும்போது திருடிய தகடுதான் இன்றைய நாட்டின் மிகச் சிறந்த தலைவர்களுள் ஒருவரான சுசீல் குமார் ஷிண்டே ...எப்படி இந்த மேஜிக், எப்படி இந்த உரு மாற்றம் அதைத்தான் இந்த நிழலற்ற பயணம் என்னும் தலித் வாடாவிலிருந்து தலைநகர்  வரை... நமக்கு அற்புதக் காட்சிகளாக பி.ஆர் சுபாஷ் சந்திரன் எழுத்துகளின் வழி வெளியாய் விரிகிறது.

நீண்ட நெடிய நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல நூலைப் படித்த நிறைவுடன் இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன். நூலை நாம் படிக்கக் கூடாது வலுக்கட்டாயமாக. அது நம்மை படிக்கத் தூண்டி கீழே வைக்க விடாமல் முடிக்கும் வரை நம்மை வேறு வேலை ஏதும் செய்யத் தோன்றாமல் கட்டிப் போடும், சாப்பிடுவது, தூங்குவது போன்ற எல்லாவற்றையும் அப்புறம் தள்ளி. அப்படிப்பட்ட புத்தகம் இது.

இதில் சொல்லப்பட்டிருக்கிற நாயகன் இன்னும் நம்முடனே வாழும் வாழ்ந்து வரும் தலித் தலைவர் ஆனால் அவருக்கு தலித் என்ற முத்திரை எல்லாம் இல்லை. நாட்டின் தலைவர். தகடு என்று சிறுவனாக அழைக்கப்பட்டு தன் பெயரை சுஷீல் குமார் எனத் தனக்குப் பிடித்த இருவரின் பேரை இணைத்து வைத்து பின்னாளில் பெயர் மாற்றி வைத்துக் கொண்ட சுசீல் குமார் ஷிண்டே அவர்களின் வாழ்வை நயம்படச் சொல்லி இருப்பதுதான் இந்த நூல்.

தலித்வாடாவிலிருந்து தலைநகர் வரை என்ற துணைத் தலைப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மூலம் வெளியிடப் பட்டிருக்கிறது 2011ல் முதல் பதிப்பும், 2013ல் இரண்டாம் பதிப்பும் வந்திருக்கிறது. விலை: ரூ.300.

ஏன் இவ்வளவு நாட்களாக இது போன்ற ஒரு நல்ல புத்தகம் என் கை வந்து சேராதிருந்தது என எனக்கேத் தெரியவில்லை. பொதுவாகவே நான் ஒரு புத்தக வெறியன். நான் படித்த புத்தகங்கள் எண்ணிலடங்கா.

ஒரு புத்தகம் நல்லதாக இருந்தால் முன் அட்டையில் ஆரம்பித்து கடைசி அட்டை வரை ஆய்ந்து ஒரு எழுத்து விடாமல் படித்து முடிக்காவிட்டல் எனக்கு தூக்கம் வராது...ஆனால் இப்போது மகனது படிப்புச் செலவுக்காக கல்லூரியில் ஒரு நாகரீகப் பணி புரிந்து வருகிறேன் அதுவும் ஒரு சேவையாக இருப்பதால்...எனவே புத்தகங்களின் தொடர்பு சற்று விலகி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்

அந்தக் குறையை எனது நண்பர் விடியல் குகன் அவ்வப்போது தீர்த்து வைக்கிறார். அவர் வாங்கும் புத்தகம் எப்போதும் எனக்கும் சேர்த்து. அவர் படிக்கும் முன்பே நான் படித்து அதைப்பற்றி சொல்லி விடுவதுதான் அதில் சிறப்பு.

பி.ஆர். சுபாஷ் சந்திரன் இந்தப் புத்தகம் வழியே சுசீல்குமார் ஷிண்டே பேர் காலத்தில் உள்ளளவும் தம் பெயரும் மறையாமல் இருக்க இந்த அரும்பணியைச் செய்து பேர் வாங்கிக் கொண்டுள்ளார். இந்த 68 வயது இளைஞர் இன்றும் தம்மை 30 வயது 20 வயது என்று சொல்லிக் கொள்கிறார்.

454 பக்கமுள்ள இந்த புத்தகம் தகடு என்ற சிறுவனிலிருந்து ஆரம்பித்து இந்த நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் தோற்போம் என்பது தெரிந்தே காங்கிரஸ் கட்சித் தலைமைச் சொல்லை ஆணையாக ஏற்று எல்லா எதிர்க்கட்சிகளாலும் முன் மொழியப்பட்டு நின்ற சுஷீல் குமார் ஷிண்டே என்னும் வாழும் மகாத்மா பற்றி சொல்கிறது.

காந்தி வாழ்வில் எப்படி சிறுவனாக இருக்கும்போது தகாத சேர்க்கை, காப்புத் திருடி மிட்டாய் வாங்கித் தின்றுப் பார்த்ததோ அதே போல நினைவூட்டுகிறது இவர் சிறுவனாக இருந்த போது வாழ்ந்த வாழ்வு.

5 வயது பையனாக இருக்கும்போதே தந்தையின் இழப்பு...எப்படி காந்திக்கு தாய் வாக்கும் தாயும் உருவாக முதல் காரணமானார்களோ அப்படி கிருஷ்ணாபாய் என்னும் பெரிய அம்மா, சக்குபாய் என்னும் தாய் அப்படி உருவாக முதல் காரணமாகிறார்கள். கிருஷ்ணாபாயும், சக்குபாயும் சகோதரிகள் கூட.

படிக்க முடியாத சிறுவன் பள்ளியை வெறுத்து மற்ற பையன்களுடன் சேர்ந்து சுற்றித் திரிகிறான். ஏன் வீட்டில் உள்ள பாத்திரப் பண்டங்கள எல்லாம் கூட விற்று வாங்கி சாப்பிடுகிறான் தம் இச்சையை நிறைவு செய்ய. உணவு உண்ணக் கூட தமது அன்னையர் இருவரும் மற்றவர் வீடுகளுக்கு சென்று குடும்பப் பணி ஏவல் செய்வதையும் பொருட்படுத்தாது கவலை இல்லாமல் இருக்கிறான்

இப்படி ஓரிண்டு ஆண்டுகள் ஆனபின்னே சோனுபாய் என்பவர் வீட்டில் சென்று இரண்டரை ஆண்டுகள் அவர்க்கு சிறுவனாக இருந்து பணி ஏவல் செய்கிறான். அங்கிருந்து தான் உருவாகிறான். சிறுவனின் புத்தி கூர்மை, ஒழுக்கம், அடக்கம், ஆகியவற்றைப் பார்த்து அந்த வீட்டினர் அவனுக்கு முழு சுதந்திரம் அளித்து எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கின்றனர். உணவளித்தும் காக்கின்றனர். அதை இன்றும் மறவாதிருக்கிறார் இந்தக் கனவான்.

அதன் பின் விஷ்ணு என்னும் ஒரு மருத்துவர் , ஷெல்வான்கர் என்னும் பள்ளி ஆய்வாளர், இப்படியே அவனுக்கு நிழல் தந்த சோனியாகாந்தி வரை நிறைய மாந்தர்களின் நற்செயல்கள் இவனைத் தொடர்கின்றன...காதலி, இறந்த நிச்சயிக்கப்பட்ட பெண், நண்பர்கள் வாய்ப்பே கிடைக்காமல் கை நழுவிப் போய்க்  கொண்டிருந்த மஹாராஷ்ட்ராவின் முதல்வர் பதவி, இப்படி எல்லாமே கிடைக்காமல் இருந்தது போல் இருந்து கிடைக்கிறது இவரது சகிப்புத்தன்மையால் நேரிய ஒழுக்கத்தால், கடின உழைப்பால்,

எல்லாமே இவருக்கு கிடைத்திருக்கிறது அதன் அடிநாளமாய் இவரின் பொறுமை இவரைக் காத்திருக்கிறது. எதிரிகளையும் நண்பர்களாக்கும் இவரின் பண்பு, இவர் செய்த சிறு சிறு பிழைகள் கூட இவரின் மேன்மைக்கு எப்படி அனுபவமாய்த் துணை செய்தன என்றும் அவற்றை எல்லாம் கூட இவரது குரு என மதிக்கிறார். அது போன்ற அனுபவங்கள் எல்லாம் இல்லை என்றால் இத்தனை கோணங்கள் இத்தனை பரிமாணங்கள் தம் வாழ்வில் வந்திருக்காது என மகிழ்வெய்துகிறார்.

பாய் பியூன், பியூன், நீதி மன்ற வளாகத்தில், காவல் துறை ஆய்வாளர், சட்ட வல்லுனர், வழக்கறிஞர் தொழில், விவசாயி பண்ணை வீடு, அரசியில் வாழ்வில் எம்.எல்.ஏ, எம்.பி, ராஜ்யசபா எம்.பி, 9 ஆண்டுகள் மஹாராஷ்ட்ராவின் நிதி மந்திரியாகி நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்தவர், முதல் அமைச்சர், விளையாட்டு பண்பாட்டு பிற்பட்டோர் நலம், இப்படி இவர் தொடாத துறைகளே மிகவும் குறைவு என்னும் படி நிறைய துறைகளில் பணி,சரத்பவாரின் சீடராக அரசியலுக்குள் நுழைந்தது, ஒரு கட்டத்தில் அவரை நீக்கச் சொல்லி கை எழுத்து வேட்டையில் சரியாகத் தெரியாமலே அவருக்கு எதிராக கை எழுத்து இட்டு அதன் எதிரொலியாக மகாராஷ்ட்ராவின் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தூக்கப்பட்டது, அகில இந்திய காங்கிரஸ் தலைவராக 12 மாநிலங்களுக்கும் பொறுப்பு வகித்தது, ஐநாவில் ஆங்கிலத்தில் பேசியது

ஆங்கிலத்தில் பள்ளிப் படிப்பில் தேறத் தவறியவர் ஐ.நாவில் ஆங்கிலத்தில் பேசியது...

இந்திய மத்திய மந்திரிசபையில் மின் இலாகா மந்திரியாக இருந்தது...

ஒருங்கிணைந்த ஆந்திரத்தின் ஆளுனராக பதவி வகித்தது...எங்கிருந்த போதும் எப்படி அப்துல் கலாம் மக்களின் குடியரசுத் தலைவர் என்று பேர் பெற்றாரோ அப்படி மக்கள் பணியாளராகவே இருந்து எவருக்கும் சளைக்கதவர் எந்தப் பணியைச் செய்தாலும் கொடுத்தாலும் சரியாகவே செய்வார் எனப் பேரும் புகழும் பெற்றது...

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...முழு புத்தகத்தையும் நானே சொல்லிவிடுவேன் போலிருக்கிறதே...வாங்கிப் படியுங்கள்...ஒரு இந்தியாவின் இரத்த நாளத்தை தெரிந்து கொள்ளுங்கள்

அரிஜனங்கள் அவர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடாத போது மற்றவர் எப்படி பாடுபடுவர் என எதிர்பார்ப்பது என முன்னேறிய அரிஜனங்களை அதாவது தற்போது சொல்லப்போனால் தலித்களை கேள்வி கேட்கிறார்.

ஆனால் பார்ப்பனர்கள் அல்லது பிராமணர்கள் உடன் சேர்ந்து பழக வேண்டும் அவர்களுடன் இணைந்து கற்றுக் கொண்டு முன்னேற வேண்டும் என்ற அவரின் புரிதல் சற்று நெருடல் ஏறபடுத்தக் கூடியதுதான் என்றாலும் அவர் அப்படித்தான் வளர்ந்திருக்கிறார்.

மேலும் அவர் நிறைய பேர் தம்மால் புண்படக்கூடும் என்றால் அந்தச் செயல்களை செய்யாமல் இருப்பதும், அதற்காக மனமுருகி மன்னிப்பு கேட்பதையும் நியாயம்தாம் என்கிறார். அப்படித்தான் வளர்ந்திருக்கிறார் . இப்போதும் அதையே செய்வேன் என்கிறார்.

மிக அரியதொரு நல்ல நிறைவான நூல் . வாங்கிப் படித்து உணருங்கள் ஒர் மாமனிதரை. இந்தியாவின் உள்ளொளியை.

நூல் உருதுவில் மற்றும் ஆங்கிலத்தில் பல பதிப்புகள்  வந்துள்ளன‌
நூலாசிரியர்: தற்போது ஹைதராபாத்தில் வாழ்ந்து வருகிறார். கல்லூரிகள் மற்றும் சமூக நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு பயிற்சி போன்றவை செய்தபடி...சிறந்த பத்திரிகையாளர்.


கவிஞர் தணிகை
மறுபடியும் பூக்கும் வரை.

3 comments:

  1. Thanks a lot for a detailed review that springs from the heart of The Reader ..for the first time I saw sach a wholehearted expression about my book... wish more people to read and recharge your body and mind

    ReplyDelete
  2. Thanks for your feedback on this post vanakkam .keep contact

    ReplyDelete
  3. Thanks for your feedback on this post vanakkam .keep contact

    ReplyDelete