Monday, December 31, 2018

இயக்கத்தின் துவக்கம்: கவிஞர் தணிகை

இயக்கத்தின் துவக்கம்: கவிஞர் தணிகை





இங்கு வரவேண்டும் என்று நினைத்தீர்கள்
வந்தீர்கள்
கூடினோம்.

நினைவில் விதைகளை விதைக்கிறோம்
நினைவுகளுடன் கலைந்து செல்கிறீர்கள்
வாழ்க்கைப் புலத்துக்கு

நினைவுடன் வாழ்கிறீர்கள்
நினைவுதான் வாழ்க்கை
இயக்கம் அதன் சேர்க்கை.

ஒருமித்துக் குவியும் நினைவின் முனையில்
இலக்கை மறைக்கும்
எதிர்ப்புகள் பொசுங்கும்

நீங்கள் நினைவின் கேந்திரங்கள்
நல்லதை நினையுங்கள்
நம்மை நல்லவர் நினைக்கும்
காலம் தொடரும்
நாமிருப்போம் உடலின்றியும்!

             கவிஞர் தணிகை

இது எனது மனச்சிகரங்கள் கவிதைத் தொகுதியிலிருந்து ஒரு துளி.

நான் ஏன் இங்கு?
எதற்காக இந்த விருதுகள், புத்தகங்கள்
என்ற கேள்விகளை எனக்குள் கேட்டுக் கொண்டேன்
பயனாக‌

இந்தப் பின் வரும் கவிதையை
உங்களுக்காக‌
இந்நன்னாளின் நினைவுகளுடன்
படைக்கிறேன்.

30 01 1993....01. 01. 2019

தியேட்டர்களையும் தொலைக்காட்சிகளையும்
வணங்கும் நாடு  எங்கள் திருநாடு.

ஷோ கேஸ்களுக்கு
இதயத்தைக் கொடுத்துவிட்டு
உண்மைக்கும் மேன்மைக்கும்
புற முதுகு காட்டும் பூமி
எங்கள் பூமி

காக்கை குருவி கூட எங்கள் ஜாதி
என்று சொன்ன எம்மண்ணிலே
ஜாதி, மத, மொழி, இனங்கள் சொல்லி
செயற்கை பூகம்பங்கள்
நடத்தும் கூட்டம் எங்கள் கூட்டம்.

சீமைச் சாராயக் கடைகளுக்கு
நாட்டை எடை போட்டு
ஏழைகளின் தலைகளைக் கொடுத்துவிட்டு
மீட்க வழியின்றி " நீங்க நல்லா இருக்கணும்" சாமி
என சினிமாவாலேயே வாழ்த்துப் பாடும் துயரம்
எமது துயரம்

திரை நிழல்களிடம் நீதியை தொலைத்து விட்டு
வீரத்தையும், காருண்யத்தையும் காதலையும்
வாழ்விலிருந்தே விலக்கி வைத்த
நடைமுறை எங்கள் வாழ்வின் முறை.

எங்களுக்கு சினிமா அரசியலானது
(அரசானது)
சினிமா இலக்கியமானது
சினிமா வாழ்க்கையாகுமா?

இந்நிலையில்
நான் புத்தகங்களுடன் அலைந்து கொண்டிருக்கிறேன்
ஒரு புத்தகம் வாங்கும் காசில் ஒரு சினிமா பார்க்கலாம்
என்கிறது கல்லூரி எம் கல்லூரி.

வருடத்தில் வெளியான 156 ...1992ல்
2018ல் 184 தோல்வியானாலும் வெற்றியானாலும்
இது ஒரு முன்னேற்றம்
எங்கள் இளமைக் கனவுகளில்

வேர்களைப் பற்றித் தெரியாது
மண் சாரம் பற்றிப் புரியாது
வெள்ளைக் காலர் வேலைக்காகவே
அடம் பிடித்து அழும் குழந்தைகள்
நம் குழந்தைகள்

ட்யூசன் நடத்த ஆள் பிடிக்கவே
பயன்படும் பள்ளிகள்
எம் பள்ளிகள்

எளிய முறையில் ஏமாற்றும் லாட்டரிக்கடைகள்
எம் கல்வி நிறுவனங்கள்

நீதியால் அநீதி செய்யப்படும் நாட்டில்
சட்டம் சம்பாதிக்கும் திட்டத்தில் ஒளிந்து கொண்டது

பறவைகளும் விலங்கும் கூட‌
இனவிருத்தி செய்கிறது
இளையதை ஈடேறும் வரை அரவணைக்கிறது

மனித ஜீவனிடம்தான்
தெரிந்ததை பிறர்க்கு சொல்லவும்
அனுபவத்தை பகிர்ந்து தரவும்
பிறர்க்கென வாழ்வதும்
சாத்யமாகிறது

நினைவுகளை பூமி ரேகைகளுடன்
இட்டுச் செல்ல , பின்பற்ற விட்டுச் செல்ல‌
நூதன ஊடகங்கள் பல‌

அதில் ஒன்று எழுத்து
இறந்த காலத்தின் அனுபவத்தை
நிகழ்காலத்துடன் பொருத்தவும்
நிகழ்காலத்தை நெஞ்சில் இருத்தவும்
எதிர்காலத்தை திருத்தவும்

எனவே உண்மையோடும் மானுட நேயத்தோடும்
உங்கள் முன் நிற்கிறேன் என் புத்தகத்தோடு
அன்புத் தாகத்தோடும்.

காலவெளியில் என் சுவடும் பதிய வேண்டுமென்றும்
கவிதை மாநதியில் என் படகும் வலியதேயென்றும்....

இந்த விருதுகள், விழாக்கள், புத்தகங்கள்
வெளியீட்டின் உள்ளீட்டில்
ஒரு தாயின் காருண்யம்
ஒரு தனயனின் உழைப்பு
இரு பூவிழிகளின் புரிதல்
சம்மணமிட்டு அமர்ந்து மலர்ந்து சிரிக்கிறது.

 இந்தக் கவிதை சார்ந்த கரு...
எனது மறுபடியும் பூக்கும் முதல் நூல் வெளியீட்டு விழாவில்
30 01 1993ல் சற்று வேறுபாடுகளுடன் மேடைக்கவிதையாய் வெளிப்பட்டதே...

 கவிஞர் தணிகை
மறுபடியும் பூக்கும் வரை....


No comments:

Post a Comment