Sunday, December 23, 2018

இப்படியும் சிலர் இருக்கின்றனர்:கவிஞர் தணிகை

இப்படியும் சிலர் இருக்கின்றனர்:கவிஞர் தணிகை

Image result for mentally disturbed
அவர் ஒரு நாகஸ்வர வித்வானாக இருந்து பார்த்திருக்கிறேன். நிறைய முறை அவர்களின் குழுவினருடன் பக்கத்து ஊர்களுக்கு எல்லாம் பயணம் செய்வதையும் பார்த்திருக்கிறேன். இப்போது அங்குலம் அங்குலமாக மட்டுமே காலை நகர்த்தி நடந்து வரும் முதுமை. அப்போதும் விடாமல் அதிகாலையில் எங்களது பேருந்து நிறுத்தத்தில் இந்தப் பக்கமிருந்து அந்தப் பக்கம் சாலையைக் கடந்து வருகிறார் வாகனசாரிகளுக்கும் இவர் மேல் ஏதாவது வாகனம் மோதி விடப் போகிறதே என பார்ப்பவர் மனதில் அதிர்ச்சி ஏற்படுத்தும் வண்ணமும் அந்த அபாயம் நேர்ந்து விடக்கூடாது என்றபடி துடித்துக் கொண்டிருக்க...
Image result for mentally disturbed
இப்படி சாலையைக் கடப்பது மட்டுமல்ல பேருந்து நிறுத்தத்தில் சாலையோரம் இப்படி காலை நகர்த்தி நகர்த்தி ஊர்ந்து வருகிறார். கையில் ஒரு தடி. ஏதாவது நாணயம் தென்பட்டால் கீழ் இருப்பதை குனிந்து எடுத்து பத்திரப்படுத்திக் கொள்கிறார். கீழ் தென்படுவது மட்டுமல்ல மண் புழுதியில் உள் புகுந்து கிடந்தாலும் அது அங்கே பேருந்துக்கு சில நிமிடம் காத்திருக்கும் நமக்குத் தெரிவதில்லை இவருக்குத் தெரிந்து அதை எடுத்து ஊதி எடுத்து வைத்துக் கொள்கிறார்.

பிறகு தான் அதை நம்மால் ஊகிக்கவே முடிந்தது. இந்தப் பெரியவர் இதற்காகவே பேருந்து நிறுத்தத்தில் விடாமல் ஊர்ந்து கொண்டிருக்கிறார் என்பதே.

புதிதாக பார்ப்பவர்கள், அல்லது அடிக்கடி பார்ப்பவர்கள் இந்தக் கிழவன் ஏய்யா இப்படி தினமும் நடந்து கொள்கிறான், என்னைக்காவது ஒரு நாள் வாகனத்தால் அடிபட்டு செத்து தொலைக்கப் போகிறான் பாரு என்று பலரது வாயிலும் வர ....ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவர் தொடர்ந்தபடியே இருக்கிறார்.
Image result for mentally disturbed
இது இப்படி என்றால்: சேலத்தில் ஐந்து வழிச் சாலையில் நான் அடிக்கடி அல்லது தினமுமே ஒரு கட்டையான குட்டையான மிகவும் ஆரோக்யமான நல்ல உடல் வலுவுள்ள நடுத்தர வயதுள்ள மனிதர் ஒருவர் மஞ்சள் ஆடையை அணிந்து கொண்டு வலது கையில் கங்கணம் எனப்படும் மஞ்சள் துணியைக் கட்டிக் கொண்டு ஒரு பித்தளைச் செப்புக் குடத்துடன் பேருந்துக்கு நிற்பாரிடையே வந்து அம்மன் காணிக்கை கேட்டுக் கொண்டே இருப்பார். அவருக்கு தினமும் அம்மன் அருளும் திருவிழாவும் உண்டு.

இன்னொரு முதியவள் தினமும் இந்தப்பக்கமிருந்து வரிசையாக கேட்டுக் கொண்டே செல்வார். தினமும் இது வாடிக்கையாக நடக்கும்

இன்னொரு நபர் இங்கு எங்கள் குடும்பத்திற்கெல்லாம் அவர்கள் குடும்பமே தெரியும் அவர் அந்தக் குடும்பத்தின் கடைசி ஆண்பிள்ளை. கூன் வளைந்து மிகவும் கரிய நிற ஆடையுடன் தூக்க முடியா ஒரு பை மூட்டையை தூக்கியபடி எங்கள் ஊருக்கு வருவார், அதாவது அவரது பிறந்த ஊருக்கு வருவார் மேட்டூர் அணை நோக்கி செல்வார். யாரையும் பிச்சை கேட்டும் பார்த்ததில்லை. ஆனால் தினமும் அவர் பாடு நடந்தபடியே இருக்கிறது. ஏதோ பேசிக் கொண்டே இருப்பார். ஒரு நாள் மகனது விளையாட்டு சீருடை ஒர் செட் எடுத்துக் கொண்டு சென்று போட்டுக் கொள்ளேன் என்றதற்கு வேண்டாம் பெரிய இவனா, கொண்டு வந்து கொடுக்கிறானாம், இவன் எல்லாம் கொடுத்து நான் போடுவேனா...என என்னைத் திட்ட ஆரம்பித்து விட்டார் அந்த மனிதர்.

இது போல எல்லா நாடுகளிலுமே இருக்கிறார்களாமே...முன்னேறிய் நாடுகள் முன்னேறாத ஏழை நாடுகள் என்ற கணக்கு எல்லாம் இதற்கில்லை போலும்...

அடிப்படை உறவுகளின் பாதிப்புகள் தாம் இதற்கெல்லாம் காரணமோ...குடும்பமோ காதலோ குழப்பமோ என்னவோ போங்கள்...தெரிந்தவர் தெளிந்தவர் பிச்சை எடுக்க, குழம்பியவர் வீம்பில் மறுக்க அவர்களையும் எடுத்துக் கொண்டு இந்த் பூமியின் சுழலோட்டம்...
Related image
கவிஞர் தணிகை.

மறுபடியும் பூக்கும் வரை

No comments:

Post a Comment