Saturday, July 28, 2018

எல்லாக் கட்சிகளும் சேர்ந்து நிற்கிற காட்சி:

எல்லாக் கட்சிகளும் சேர்ந்து கொள்கிற ஒரே இடம்: கவிஞர் தணிகை
Image result for death calls


எல்லாக் கட்சிகளும், எல்லாத் தலைவர்களும்  ஏன் எல்லா உயிர்களும் சேர்ந்து கொள்கிற ஒரே இடம்...

அந்த ஒற்றுமை மட்டும் மனித குலத்திற்கு இல்லை என்றால், உயிர்களுக்கு இல்லை என்றால் எப்படி இருக்கும் இந்த பூமிப் பந்து...சுழல்வதும் நின்று விடாதா?

அரசியலாலும், பண பலத்தாலும் வாங்க முடியாத ஒரே விலை அந்த நீதியை மட்டும் உயிர்களால் என்ன விலை எப்படி கொடுத்தாலும் வாங்கவே முடியவில்லை. அந்த சட்டத்தை மட்டும் எந்த குறுக்கு வழியாலும் உடைக்கவே முடிவதில்லை... வேண்டுமானால் இந்த அறிவியலும் மருத்துவ கண்டுபிடிப்புகளும் சற்று நீட்டிப்பு செய்து கொள்வதாக காட்டிக் கொள்ளலாம்.. மனிதம் 113 வயது என இப்போது உச்சம் ஏறிக் கொண்டிருக்கிறது...சிவாங்கி பதக் தனது 17 வயதில் அருணிமா சின்ஹா பற்றித் தெரிந்து கொண்டு பற்றி எவரெஸ்ட் சிகரம், மற்றும் கிளிமாஞ்சரோ சிகரமும் ஏறி விட்டாள் என்ற செய்திகளும் இவற்றிடை சிறு கீற்றுகளாக வெளிப்படுகின்றன..

இவர்கள் போடும் கோஷம் எல்லாம் வெற்று கோஷமாக இல்லாமல் உயிர்களை வாழ வைக்கும் எனில், குடிநீர், மருத்துவம், கல்வி, சுகாதாரம் அனைவருக்கும் எளிதாக‌ கிடைக்குமெனில் அதை எல்லாம் இவை கொடுக்குமெனில் இந்த 71 ஆம் சுதந்திர ஆண்டிலும் கூட இந்தியா மெச்சிக் கொள்ளலாமே.. எல்லாம் செய்ய எல்லாரும் சேர்ந்து கொள்ளலாமே...எல்லாமே ஏழைக்கு செய்வதாக நாட்டுக்கு செய்வதாக சொல்லித்தானே வருகிறார்கள் வந்தார்கள்...எல்லாருக்குமே தலைமைப்பதவி மேல் ஆசை இருக்கும் தான்...ஆனால் ஒரு நாற்காலியில் ஒருவர் தாமே அமரமுடியும்...ஆனால் இந்த நாற்காலி அனைவர்க்கும் தவறாமல் கிடைக்கிறதே...

நிலை இப்படி நிலையாமையில் இருக்கிற போதும் ஏன் இப்படி 7 மாத குழந்தை என்றும் பாராமல் காமம்  தலைவிரித்தாடுகிறது? ஏன் காவிரியில் வெள்ளம் அபாயம் என்று தெரிந்த பின்னும் 5 உயிர்கள் போகிறது? ஏன் விரைவு ரயில் வழித்தடம் சாதாரண பயணிகள் ரயிலுக்காக மாற்றப்பட்டு படிக்கட்டுப் பயணத்தில் கல்லூரி மாணவர்களின் உயிர்களும் தலைகளும் பந்தாடப்படுகின்றன‌

ஏன் தற்கொலைகள் கொத்துக் கொத்தாகவும், கொலைகளும், நகை பறிப்புகளும், பெரும் கொள்ளைகளும், ஏமாற்றுதல்களும், ஏமாறுதல்களும் இயல்பாக சந்திர கிரகணம் சூரிய கிரகணத்தை எப்படி மனிதர்களால் தடுக்க முடியாதோ அது போல தடுக்க முடியாது போய்க் கொண்டிருக்கின்றன?

எப்படி இந்தியாவில் அஸ்ஸாம், கர்நாடகா, தமிழ்க் காவிரிகளில் வெள்ள முறுக்கங்களில் நாடே வியத்தகு காட்சிகளும் விரிந்து போக வியந்து கிடக்கும்போதும் ஏழைகளுக்கும், கடைத்தட்டு மக்களுக்கும் குடிக்கவும் நீர் கிடைக்காமல் அல்லோகலப்படுகின்றன....

ஒரு நிறுவனமாக இருந்தாலும் அரசாக இருந்தாலும் ஆட்சியாக இருந்தாலும் கடைசியாக வந்து கை ஏந்துவாருக்கும் இல்லை என்ற நிலை இல்லாதிருக்க வகுப்பதல்லவா திட்டமாக இருக்க முடியும்...இங்கு மேல் இருக்கும் மேட்டுக்குடிகள் பெற்றது போக மிச்சம் மீதி கூட கடைசிவரை வந்து சேரவே மறுக்கின்றனவே...

வல்லபாய் படேலுக்கு சிலை ஆப்பிரிக்காவில் வைத்ததால் பல நூறுகோடிகள் இந்தியப் பணத்தை தாரை வார்க்கும் பிரதமரால் இங்கிருக்கும் ஒரு ஏழைக்கு, வேலை வாய்ப்பை ஏற்படுத்தி உழைப்புக்கேற்ற உத்தரவாத வாழ்வை வழங்க முடியவில்லையே...இதை எல்லாம் பார்க்கும்போது  எல்லாம் கோளாறுகளின் வடிவாகவே மனிதகுலம் இயங்கி வருகிறது அதை எல்லா உயிர்களுமே பகிர்ந்து கொள்கின்றன.. திட்டம் வேண்டும்...அனைவர்க்கும் ஏற்ற ஆளுக்கு ஆள் மாறாத சட்டம் நீதி வேண்டும். நிர்மலா சீதாராமனும் ஓபிஎஸ்ஸும் பதில் சொல்லியே ஆக வேண்டும்...

 அவை யாவற்றுக்கும், அவர்க்கெல்லாம், அவரவர் செயல்பாட்டுக்கு எல்லாம்,அதற்கெல்லாம் விடையாகவே அவரவர் வாழ்வு, அவரவர் பயணங்கள், அவரவர் வாழ்வு தாழ்வு பிறப்பு, வளர்ப்பு, இருப்பு இறப்பு யாவுமே...பிற வீட்டின் இறப்பு மறு வீட்டுக்கு ஒரு வேலை நாளின் சிறு பகுதி...அதுவே அவரவர்க்கு என்றால் வாழ்க்கையை திருத்தி எழுத வேண்டிய பதிப்பு. மாற்றிக் கொள்ள வேண்டிய தொகுதி...

மறுபடியு பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

பி.கு.:

27 ஜூலை கலாமின் 3 ஆம் நினைவு நாள் அதற்கு நாம் எதையும் எழுத காணிக்கையாக்க முடியவில்லை...பணிச் சுமை.

கலைஞர், தா பாண்டியன் ஆகியோர் கவலைக்கிடம் என மருத்துவ மனையில் அனுமதி என்ற செய்திகள் எல்லாம் நேற்று ஊடக வழி...அவற்றை எவற்றையும் இந்தப் பதிவு குறித்து வருவதல்ல...பொதுவான உயிர்களின் நியதியை சிந்தித்ததன் விளைவாகவே பதிவு செய்யப்படுகிறது...

உயிரோட்டமும், இயக்கமும் இருக்கும் வரை விட்டுக் கொடுக்காமல் பகை கொள்ளும் உயிரினம், அந்த கடைசி தருணம் வந்ததும் எல்லாருமே பெரும்பான்மை பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஓரிடத்தில் கூட வாழ வாழ வேண்டும் என இயற்கையை கூவி கூப்பி அழைக்கின்றன... சேர்ந்து நிற்கின்றன...என்னே ஒரு காட்சி என்னே ஒரு ஒற்றுமை...ஏன் எனில் நமக்கும் நாளைக்கு இதே நிலைதானே இதே கதிதானே என்ற நிதர்சன உண்மையாலா...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.





2 comments: