Friday, July 20, 2018

ரஜினி காந்துக்கும் விஜய்காந்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை: கவிஞர் தணிகை.

ரஜினி காந்துக்கும் விஜய்காந்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை: கவிஞர் தணிகை.

Image result for rajinikanth and vijayakanth acted together

சினிமா உலகில் விஜய்காந்த் டூப்ளிகேட் ரஜினிகாந்த் என விமர்சிக்கப்பட்ட ஒரு காலம் போய் அவருக்கு என ஒரு தனிப்பாதையை அமைத்துக் கொண்டு சினிமாவில் முன்னேறிய விஜய்காந்த் ரஜினிகாந்துக்கும் முன்பாகவே அரசியலுக்கு வந்து தனிக்கட்சி ஆரம்பித்தார். எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார்.

அவரது கல்யாண மண்டபம் ஒன்றும் சர்ச்சைக்குள்ளானது. அப்போது ஆளும் கட்சியானவர்கள் அதன் பின் இவரிடமே கூட்டணிக்கெல்லாம் முயன்றது காலத்தின் பதிவு. இவ்வளவு செல்வாக்கு பெருகி வரும் சூழலில் தன்னை சிறுத்துப் போகச் செய்தது அவரின் பின் தொடர்ந்த செயல்பாடுகள். மிக வீரமான படங்களை எல்லாம் கொடுத்தும், ஜெ வை சட்டசபையிலேயே நேரடியாக எதிர்த்தவரும் மதுவின் பிடியாலும், உடல் நலம் குன்றியதாலும் பேசவே முடியாத காரணத்தால் ஊடகம், சமூக வலை தளங்கள் மூலம் எள்ளி நகையாடக் காரணமானார்.

மனைவியும், மைத்துனரும் துணையாகி கட்சியை வழி நடத்த, சிங்கப்பூர் எல்லாம் சென்று தேர்தல் காலத்தில் பெரும் தொகை பேரம் பேசியதாக செய்திகள் உலவின. வைகோவால் திமுக கூட்டணிக்கு செல்லாமல் படு தோல்வி அடைந்து கட்சி நிலை நலிவடையும் காலத்துக்கு சென்று கொண்டிருக்க அவர் கட்சியிலிருந்து முக்கியமான உறுப்பினர்கள் எல்லாம் வேறு கட்சிக்குத் தாவி தப்பிப் பிழைத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

அதே போல ரஜினிகாந்தும் எப்போதும் அரசியல் செய்து கொண்டுதான் இருக்கிறார். இவர் மூப்பனாரை நேரடியாகவே ஆதரித்தும், அப்போடைய ஒரு தேர்தலில் இனி மாறுதல் நிகழ வில்லை எனில் ஆண்டவரால் கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது எனச் சொல்லியும், தேர்தலில் எந்தப் பக்கம் வாக்கு அளிக்க வேண்டும் என்று அறிவித்தும் கலைஞரின் அன்புக்கு பாத்திரமானார்.

இவரின் வீடும், ஜெ வின் வீடும் அதாவது என்றும் முதல்வரான ஜெவின் இருப்பிடமும் ஒரே இடத்தில் இருப்பதால் அதில் முரண்கள் தோன்றி ஆர்ப்பரிக்க வழியின்றி அடங்கியே இருந்தார். மன்னன் போன்ற படங்கள் அதன் பிரதிபலிப்பு எனச் சொல்வாரும் உண்டு.

இங்கும் இவரது மனைவி சொல்லே மந்திரம் என்பது போல அங்கே பிரேமலதா விஜய்காந்த் போலவே இங்கே லதா ரஜினிகாந்தின் வழிமுறைகள் இவரையும் வழி நடத்துவதாகவே சம்பவங்கள் சாட்சிகள்.

இப்போது அமித் ஷா விடம் ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி  அப்படிக் கொடுத்தால் பாரதிய ஜனதாவுடன் ஒத்துழைப்பு செய்வதாகவும் இல்லையேல் விட்டு விடுங்கள் எனப் பேசியதாகவும் செய்திகள் உலவுகின்றன.

ஆக என்னதான் நடக்கிறது என்று பார்த்தால் விஜய்காந்த் போன அதே வழித்தடத்தில் தாம் ரஜினிகாந்தும் சென்று வருகிறார் என்பதை ஒப்பீடு செய்வார்க்குப் புரியும். இவருக்கும் ராகவேந்திரா திருமண மண்டபம் உண்டு. அதே போல கட்சி, அரசியல், அப்படி இப்படி என எட்டு வழிச்சாலை பரவாயில்லை, போலீஸ் தரப்புக்கு சாதகமாக பேசுவது என்றெல்லாம் குளறுபடிகள் இவரிடமும் உண்டு. அவர் மேடையில் உளறுவார். இவர் மேடை இல்லாமலே உளறுகிறார் . எனவே இருவருமே ஒரே வழிப்பயணத்தில் இருப்பதை அனைவரும் காணலாம்.

சிலவற்றுக்கு கருத்தே தெரிவிக்க மாட்டார். கருத்து தெரிவித்தார் என்றால் அது மிகவும் சமுதாய நெருடல்களை , முரண்பாடுகளுடன் இருப்பது அவரின் நிலைப்பாடே தவிர சமுதாயமேம்பாட்டுக்கான, அல்லது மக்கள் நலம் சார்ந்ததாக ஊன்றிப் பார்த்தால் இருக்காது.

ஓடாத படங்களை  ஓடவைக்க நிறைய பட்ஜெட்டில் படம் எடுக்க, தமிழ் சினிமாவின் அதிகம் பணம் வாங்கும் நடிகராக இன்னும் இருக்கிறார் என்றாலும் முதல்வராகவோ ஒரு கட்சிக்கு ஏற்ற தலைமைப் பண்புகள் கொண்டாராகவோ சினிமாப் பின்னணி அல்லாமல் ஆன்மீகப் பயண அனுபவங்கள் வேறு அவரிடம் சிறப்பு இயல்புகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

கமல் ஹாசனாவது கருத்துகளைத் தெரிவிக்கிறார். மக்களின் பக்கம் நிற்கிறார் ஆனால் அவரின் பக்கம் ரஜினிகாந்த் இடம் சேரும் கூட்டம் அளவு இல்லை என்கிறார்கள்...இவர் தனக்கில்லாத தகுதி கமல்ஹாசனிடம் இருப்பதை தெரிந்து கொண்ட பின்னும் அவரையாவது ஆதரிக்க தமது கூட்டத்தாரிடம் சொல்லலாம்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: