Tuesday, July 17, 2018

புலை நாற்றம்: கவிஞர் தணிகை

புலை நாற்றம்: கவிஞர் தணிகை

Image result for bad smell and traveller

இப்போதெல்லாம் எதையாவது பார்த்து அதில் ஆழ்ந்து விடுகிறேன்...உடனே இராமலிங்க வள்ளலாராக மனம் உருகி விடுகிறது. தலை வலிக்க ஆரம்பிக்கிறது..பேருந்து நிலையங்கள், புகை வண்டி நிலையங்கள்: எல்லாவற்றிலும் சகித்துக் கொள்ள முடியாத மானிடங்கள். உடனே அன்னை தெரஸா நினைவிறங்கி இவர்க்கெல்லாம் என்ன, எப்படி உதவப் போகிறோம் என்ற எண்ணங்கள் ஆலோலம் போடுகிறது.

இன்று மேட்டூர் ரயிலில் ஏறிய உடன் புலை நாற்றமெடுக்க ஒரு மனிதன் கடைசிப் பெட்டியில் வழக்கமாக நான் இறங்குவதற்கு வசதியாக ஏறும் பெட்டியில் ஒரு பெரிய சீட் முழுதும் படுத்துக் கிடந்தான்.

ஒரு பக்கம் தாள முடியவில்லை. எங்கே போக வேண்டும் எனக் கேட்டேன். சரியாக சொல்லவில்லை. நானே மேட்டூரா எனக் கேட்டுவிட்டு எனது  பையை மற்றொரு இருக்கையில் வைத்துவிட்டு கீழ் இறங்கி நின்று கொண்டேன்.

கண்ணில் பார்த்ததால் உருவாகும் வேதனை, பார்க்காதிருந்திருந்தால் இருந்திருக்காதே...அதே இன்னும் கொஞ்சம் காலம் தாழ்ந்து வந்திருந்தால் இந்த அலைக்கழிப்பு எண்ணம் எல்லாம் தோன்றியே இருக்காதே...மேலும் அந்த இருக்கையை பயன்படுத்தினாலும் கண்ணுக்குத் தெரியா கிருமிகள், வைரஸ்கள் அதைப் பயன்படுத்துவாரையும் ஒட்டிக் கொள்ள வாய்ப்பிருக்கலாமே... என்றெல்லாம் நினைவோட்டம்...

காலம் நகர ஆரம்பித்தது. மறுபடியும் அந்த மனிதன் மணி எத்தனை , ரயில் எத்தனை மணிக்கு கிளம்பும் என கேட்டான். சொன்னேன். சிறிது நேரத்தில் மாணவர்கள் வர ஆரம்பித்தனர்.

அந்த மனிதன் மெதுவாக எழுந்து ஒரு காகித பெப்ஸி டப்பாவுடன் குடி நீர்க் குழாயருகே சென்று விட்டு மறைந்து போனான்.
அவன் மேட்டூர் ரயில் பயணியாக காட்டிக் கொண்டது பொய் என்பது புரிந்து போனாலும் இது போன்ற முகங்களும், மனிதர்களும் நிறைய நிறைய இப்போதெல்லாம் பொது இடங்களில் திரிவதை, உழல்வதை பார்க்கத் தாளமுடியவில்லையே என்றாலும் நாமும் இந்த உருப்படி இல்லா சமூகத்தில் மகனை உருப்படி ஆக்குவதற்காக ஒரு கல்வி நிறுவனத்தில் பணி செய்து உடலை உயிரை உருக்கி வாழ்பவன் தானே என்று பார்க்க நினைக்க ஆரம்பிக்கும்போதே ஹோசிமின்னாக நாமும் விளங்கி  நாட்டுக்கெல்லாம் ஒரு நல்ல தலைமையைத் தர மாட்டோமா என்று ஒரு கேள்வியும் உதி(ர்)த்தபடியே நாட்கள் போய்க் கொண்டிருக்கிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment