Tuesday, July 5, 2016

புதுசாம்பள்ளியில் ஏன் சேலம் மேட்டூர் பயணிகள் ரயில் நிறுத்தக் கூடாது? கவிஞர் தணிகை

புதுசாம்பள்ளியில் ஏன் சேலம் மேட்டூர் பயணிகள் ரயில் நிறுத்தக் கூடாது? கவிஞர் தணிகை



மேட்டூர் சேலம், சேலம் மேட்டூர் பயணிகள் ரயில் இப்போது நன்கு பயன்பாட்டில் இருக்கிறது என்றாலும் காலை நேரம் நான் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பேசியபடியேதான் தாமதமாகவே சேலம் வருவதால் சேலம் வரும் அலுவலக பயணிகள் அதைப் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை.

ஆனால் இந்த பதிவு அதைப் பற்றி அல்ல.பெரும்பாலும் சேலம் செல்லும்போதும், மேட்டூர் வரும்போதும் ஓமலூர், மேச்சேரி ரோடு ஆகிய 2 இடங்களில் மட்டுமே இடையில் நிற்கும் இந்த ரயிலில் மாலை 5.30 மணிக்கு சேலம் சந்திப்பில் இருந்து புறப்படும்போது நிறைய கல்லூரி மாணவர்களும் மற்ற பயணிகளும் ஏறுகின்றனர். அனால் அதில் பெரும்பாலும் புதுசாம்பள்ளி என்ற ஊரில் இறங்குவோர் அதிகம்.

ரயில் இந்த இடத்தை நெருங்கும்போது மேட்டூர் ரெயில்வே நிலையத்தின் அருகே என்பதாலும் மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு செல்லும் ரயில் பாதை பிரிகிறது என்பதாலும் சிவப்பு விளக்கு போடப்படுகிறது.



எனவே பொதுவாகவே மேட்டூர் சேலம் பயணீகள் ரயில் மிக மெதுவாகவே செல்லும் நிற்காத குறையாக. ஆனால் ஆபத்தை உணராமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு புதுசாம்பள்ளியில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கும் நபர்கள் சுமார் 50 பேராவது இருக்கும் அதில் முக்கியமாக கல்லூரி மாணவர்கள் அதிகம். சில நாட்களுக்கும் முன் மேச்சேரி ரோடு நிறுத்தத்தில் ரயில் நிற்பதற்கும் முன்பாக ( அங்கு நிறுத்தம் இருக்கிறது என அறிந்தே) ஒரு கல்லூரி மாணவர் ஓடும் ரயிலில் இருந்து ரயில் நிற்கும் முன் குதித்து முகம், கை எங்கும் காயம் என்பது குறிப்பிடத்தக்கது)

மெட்ரோ ரயில் சென்னையில் நிற்பது போல மேட்டூர் ஆர். எஸ் ரயில் நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்டு, புதுசாம்பள்ளி, ராமன் நகர் போன்ற நிறுத்தங்களில் நின்று சென்றால் நிறைய போக்குவரத்துக்கு பயன்படும். பேருந்தில் செல்வோர் எல்லாம் ரயில் நோக்கி திரும்பி விடுவார்கள்.

அதெல்லாம் கூட அப்புறம் செய்து கொள்ளலாம். முதலாவதாக செய்ய வேண்டியதும் முக்கியமாக செய்யவேண்டியதும் என்ன வெனில் மாலை வரும் இந்த ரயில் புதுசாம்பள்ளியில் குறைந்தபட்சம் ஒரு அரை நிமிடம் அல்லது 30 விநாடிகள் நிறுத்துவதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்படலாம். அனைவரும் பயமின்றி பாதுகாப்பாக இறங்க முடியும். இது வரு முன் காப்போம் என்பதற்கேற்றபடியான முன் வேண்டுதலாகும்.சிவப்பு விளக்கு போட்டுள்ள நிலையில் அதற்காகவும் இதற்காகவும் நிறுத்தி எடுக்கலாம். அதனால் ஒன்றும் பாதிப்பில்லை.ரெயில்வே துறைக்கு நஷ்டமோ கஷ்டமோ இல்லை. ஓட்டுனர் ஒருவர் கொஞ்சம் முயற்சி எடுத்துக் கொள்வது தவிர. ஆனால் நிறுத்தி எடுத்தால் இன்னும் நிறைய பயணிகள் இதை பயன்படுத்துவார் என்பது மட்டும் உறுதி.

இந்த வேண்டுதலை சேலம் கோட்ட மேலாளரிடமும் (‍ஹரிஸ் சங்கர் வர்மா ஐ.ஆர்.டி.எஸ் அவர்களிடமும்) அவர்கள் பரிந்துரையின் படி வழிகாட்டுதல் படி பொது மேலாளர் தெற்கு இந்திய ரெயில்வே பிரிவு சென்னை அலுவலகத்திலும் சேர்த்துள்ளேன்.

இந்த பேச்சு வார்த்தை சேலம் கோட்ட மேலாளர் தனிச் செயலரிடம் மற்றும் பொது மக்கள் நல்லுறவு அலுவலர் அவர்களிடமும் பேசும்போதும் நண்பர் வழக்கறிஞர் அருணாச்சலம் அவர்களும் ஆர்வமாக உடன் வந்தார்.

சேலம் கோட்ட மேலாளர் அலுவலகம் சேலம் சந்திப்பில் இருந்து சிறிது தொலைவில் ரெயில்வே குடியிருப்புகள் அருகே மிகத் தள்ளி அமைந்துள்ளது. அவர்கள் ரெயிலை நிறுத்தும் அதிகாரம் எல்லாம் பொது மேலாளர் தென்னக ரெயில்வே பிரிவு அனுமதித்தால் நடக்கலாம். எங்களுக்கு அந்த அளவு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என்றார்கள். எனவே சென்னை தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கும் அந்தக் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளேன்.

இன்னும் ரயில்வே நிர்வாகம் நவீனப்படுத்தப்பட்டு, கணினி மயமாக மெயில் வழியில் எல்லாம் தொடர்பு கொள்வதில்லை. அது அலுவலக ரீதியாக அங்கீகாரமுடைய தொடர்பு வழியில்லை என அங்கு விளக்கினார்கள்.

பயணிகள் அனைவரிடமும் கை ஒப்பம் பெற்றும் தருகிறோம் என்ற எமது கோரிக்கைக்கு அதெல்லாம் கூட தேவையில்லை நீங்கள் அழகாக பிரதிநிதித்துவம் செய்துள்ளீர் இது போதுமானது என சொல்லியுள்ளார்கள். பார்ப்போம் இதன் பலன் என்னவாக இருக்கும் என.தனி மனிதராக செய்வதற்கும், இயக்க ரீதியாக செய்வதற்கும் இந்த நாட்டில் இன்னும் நிறைய எண்ணிலடங்கா பணிகள் செய்யப்படாமலே காத்திருக்க.... நாடு அழிவுப்பாதையில் மட்டும் தவறாமல் போய்க் கொண்டிருக்க நம்மால் முடிவதை நாம் செய்து கொண்டே இருப்போம் ஆக்கபூர்வமாக...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, July 3, 2016

"அப்பா" சமுத்திரக் கனியின் நல்ல முயற்சி: கவிஞர் தணிகை.

"அப்பா" சமுத்திரக் கனியின் நல்ல முயற்சி: கவிஞர் தணிகை.




சாட்டை, பசங்க,கல்லூரி போன்ற படங்கள் எல்லாமே கல்வி நிலையை கல்வி நிறுவனங்களை விமர்சனத்துக்கு உள்ளாக்கும் படங்கள்.இப்போது அப்பா, ஆனால் அப்பா சொல்லியுள்ளது அப்பட்டமான உண்மை பள்ளிகளில் கல்வி நிறுவனங்களில் நடக்கும் மரணங்கள் யாவுமே ஏதோ ஒரு வழியில் நிறுவனத்தோடு தொடர்புடைய கொலைகள்தான் ஆனால் அவை யாவுமே தற்கொலைகளாக மாற்றி சித்திரிக்கப்படுகின்றன என்பது உண்மைதான். அந்த வகையில் பார்த்தால் அப்பா வலுவான சாட்டையடி கொடுத்திருக்கிறது. ஆனால் இந்த சாட்டை அடி பாறையாகக் கிடக்கும் தனியார் மயக் கல்விக்கும் அதை அனுமதிக்கும் அரசுக்கும் வலிக்குமா? அதை உடைக்குமா? தூள் தூளாய் செய்யுமா என்பதெல்லாம் நம் முன் நிற்கும் கேள்விகள். சசி பெருமாளின் மரணம் எப்படி மதுவிலக்கில் பாதிப்பு ஏற்படுத்தியதோ அதே நிலை தான் இந்த படமும் விளைக்கும் கல்வி நிலைகள் மேல் என்பது நமது திடமான கருத்து.

இதை படமாகக் கருதாமல் ஒரு நடைமுறை யதார்த்த பாடமாக எத்தனை பேர் எடுத்துக் கொள்ளப் போகிறோம் என்பதில் தான் இந்த படத்தின் வெற்றி.

இனி படத்திற்கு வருவோம்: கல்வி முக்கியம்தான், அதை விட முக்கியம் ஒழுக்கம், அதை விட முக்கியம் பிள்ளைகளின் உயிர்.இதை வலுவாகவே சொல்லி விட்டார். மேலும் கணவன் மனைவி அப்பா அம்மா என ஒர் பதவிக்கு உயர்ந்து செல்லும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி நடந்து கொள்ளக் கூடாது எனப் படம் நல்ல முறையில் புத்தி சொல்கிறது. என்னதான் இருந்தாலும் அம்மா சென்டிமென்ட் காலம் போய் அப்பாவின் பிணைப்பு சொல்லப் படும் காலம் போலும். என்னதான் இருந்தாலும் அம்மா நிலம் அப்பா போடும் விதைதானே எல்லாருடைய வாழ்வும் எனவே விதை ஒன்னு போட்டால் சுரை வேறா முளைக்கும் என்பதற்கேற்ப இந்த விதை நன்றாகவே விளைந்திருக்கிறது.



சமுத்திரக் கனியாகவே எனைப்போன்ற ஏன் நிறைய ஆண்கள் இருப்பார்கள் அப்பாவாக.எனவே இது சமுத்திரக் கனியின் அப்பா மட்டுமல்ல நமது ஒவ்வொருவரின் அப்பா ஆகிறது. ஏ.ஆர். ர‍ஹ்மான் சிவ கார்த்திகேயன் போன்ற பிரபலங்களும் அப்பா என்றவுடன் கலங்கி நிற்பதை சின்னத் திரை காண்பித்திருக்கிறது.

நாம் சின்னத் திரையில் அதிகம் ஈடுபாடில்லாதவர்,என்றாலும் சின்னத் திரை இந்த படத்தின் ஆக்கப்பூர்வமான நபர்களை உடனே சந்தித்து ஒரு திரைச் சித்திரத்தை வழங்கி விட்டது இது பற்றிய எல்லாப் பக்கங்களிலும் பரிமாணங்களிலும்.

ஒவ்வொரு நாட்டிலுமே கல்வி மட்டும் சீராக அமைந்து விட்டால் அந்த  நாடு பல துறைகளிலும் உலகின் முன்னணி நாடாக விளங்கும். அதில் நாம் இன்னும் மெக்காலே கல்வியில் இருந்து வெளிவராததால் ஏற்படும் விளைவே இந்த மனப்பாடம் செய்து வாயில் எடுக்கும் கல்வி நிலை.

தம்பி இராமய்யா சிங்கம் பெருமாளாக அவருக்கே உரிய முறையில் கர்ஜனை செய்து தமது ரோலை மெருகேற்றியுள்ளார் தற்காலத்து அப்பாவாக. அந்த மாமா மாமா என்னும் மனைவி ரோலும் இயல்பாக பொருந்தி இருக்கிறது.

சமுத்திரக் கனி அதாவது தயாளனின் மனைவி ரோல் நமக்கே கோபம்  வருமளவு நல்ல கணவனை புரிந்து கொள்ளாத அதிக நடிப்புடன் ஆரம்பித்து கதையை நகர்த்தி பின்னால் சாந்தி அடைகிறது.



சிறுவர்கள் நடிப்பில் பின்னி எடுத்து இருக்கிறார்கள். எவருமே நடித்ததாகத் தெரியவில்லை. வாழ்வை சொல்லிக் காட்டியிருக்கிறார்கள். இந்தப் படத்தை அனைவரும் பார்க்க வேண்டுமென அரசு வரி விலக்கு அளித்து ஒவ்வொரு மாணவ மாணவியும் ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு அப்பா அம்மாவும் பார்க்க வேண்டும் என வாய்ப்பேற்படுத்தி தரவேண்டியது ஒரு நல்ல சமுதாயத்தின் கடமை. அதிலும் இன்றிருக்கும் தமிழக கல்வி நிலையில் அவசிய தார்மீகக் கடமை.

அரசுக்கு இதெல்லாம் சவால். அரசு என்ன செய்யப் போகிறது. அடித்து அம்மணப்படுத்தி கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லி இறந்த பிறகும் எட்டு மணி நேரம் ஆனபிறகும் பெற்றவர்க்கு அந்த பிள்ளையின் உடலைக் கூட காட்ட மறுத்து வேடிக்கை காட்டும் நிலை சினிமா அல்ல உண்மை.  இது போன்ற ஒரு கல்வி நிலை தேவையா? பெற்றோர் அது போன்ற ஒரு கல்வியைத்தான் நமது பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டுமா? அதன் பின்னால்தான் செல்ல வேண்டுமா?

 நல்ல கேள்விகள். நாம் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக கேட்கும் கேள்விகள். அதை சினிமா மீடியத்தின் மூலம் ஒரு வியாபார முறையிலுமான சினிமாவுமாக மாற்றி சமுத்திரக் கனி பெரு வெற்றி பெற்றுள்ளார். இவரின் விசாரணை நடிப்பு, சாட்டை, காடு போன்ற படங்கள் பற்றி எல்லாம் பேச வேண்டும் நாடு பேச வேண்டும்.

மொத்தத்தில் இந்த சினிமா மூலம் பாலச் சந்தர், பாரதி ராஜா பாலுமகேந்திரா போன்றோரை எல்லாம் இவர்கள் எல்லாம் கடக்க விரும்புவது கண்கூடாகத் தெரிகிறது. அதுவும் இந்தக் கல்வி ஆண்டு துவங்க இருக்கும் இப்போது இது போன்ற படங்கள் வந்திருப்பது ஒரு தமிழ்ப் பட நல்லுலகத்துக்கும், தமிழகத்துக்கும் இது ஒரு வரம்.

அதிலும் நாசத் என்னும் மயில்வாகனம் என்னும் சிறு உருவத்தினன் செய்யும் காட்சி எல்லாம் எல்லாரையும் பரவசத்தில் ஆழ்த்துகிறது. படத்தை பார்த்து விட்டோம். ஆனால் தியேட்டரில் சென்றுப் பார்க்க வேண்டியது அவசியம் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது இந்தப் படம்.

34 நாட்களில் எடுத்து முடிக்கப் பட்ட படம். இது போன்ற படங்களே இப்போது தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தேவை. கபாலிகளோ, விஜய், சூரியா போன்றவர் நடித்து வெளிவரும் பொழுது போக்கு அமசங்கள் அடங்கிய படங்கள் எல்லாம் தேவையா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

எனது அப்பாவை, எனது மகனை இணைத்துப் பார்க்காமல் சமுத்திரக் கனியின் தயாளுடன் பயணம் செய்ய முடியவில்லை. இதைப் பார்க்கும் ஒவ்வொருவரின் அனுபவமும் இப்படித்தான் இருக்கும். முக்கியமாக நாமக்கல் வட்டம், இன்னும் மாநில முதல் மதிப்பெண் பெற வைக்கும் பள்ளிகளுக்கும் அந்த ஆர்வம் ஆதங்கத்தில் பிள்ளைகளை கசக்கிப் பிழியும் ஒவ்வொரு பள்ளிக்கும் இந்தப் படம் எடுத்துச் செல்ல வேண்டும் காட்சிப்படுத்தி அனைவரையும் பார்க்கச் செய்ய வேண்டும்.

சசிக்குமாரின் காட்சி ஒன்றுதான் ஒட்டமால் சந்தர்ப்பத்துக்கு பொருந்தாமல் வாலாக‌ துருத்திக் கிடக்கிறது. இந்த ஒரு குறை தவிர மற்ற எந்தக் காட்சியுமே குறை சொல்ல நினைத்தாலும் முடியாத ஒன்றாகவே இருக்க மிக நல்ல அருமையான படம். நல்ல படத்தை அனைவரும் பாருங்கள். ஆதரவு தாருங்கள்.



மதிப்பெண் தரவேண்டும் என்றால் மறுபடியும் பூக்கும் தளம் தயாளனின் மகன் வெற்றீஸ்வரன் வாங்கிய 72 மதிப்பெண்கள் தரலாம். மேலும் தந்தைமார்களின் பணி அவ்வளவு தெளிவுபட இல்லை. அது தேவையுமில்லை ஏன் எனில் படம் எதற்காக எந்த நோக்கத்திற்காக எடுக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறியுள்ளது என்றே எண்ணுகிறேன்.

நன்றி
வணக்கம்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Saturday, July 2, 2016

சரஸ்வதியின் சிரிப்பும் இலட்சுமியின் துடிப்பும் பார்வதியின் வெடிப்பும்: கவிஞர் தணிகை

சரஸ்வதியின் சிரிப்பும் இலட்சுமியின் துடிப்பும் பார்வதியின் வெடிப்பும்: கவிஞர் தணிகை




கல்வியா செல்வமா வீரமா அன்னையா தந்தையா தெய்வமா ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா? டி.எம்.எஸ்.பின்னணி பாடிய‌ பாடல் சிவாஜி வாயசைப்பில் நடிப்பில் சரஸ்வதியின் சபதத்தில் கண்ணதாசன்  எழுதிய பாடல் நன்றாக இருக்கும். என்றும் கேட்கலாம்.

ஆனால் இன்று செல்வத்தைப் பெற்றிருந்தால் மட்டுமே கல்வி என்ற நிலை நாடெங்கும் ஏற்பட்டு விட்டது. பள்ளிக் கல்வி வரை அரசின் ஆதிக்கம் நிலவ மேல் பட்டப் படிப்பு, தொழி முறைக் கல்வி யாவும் தனியார் குறு நில மன்னர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது.

பள்ளிக் கல்வி எல்லாம் கூட நகர்புறம் சார்ந்த தனியார் ஆதிக்கம் இப்போது கிராமப் புறங்கள் எல்லாம்கூட‌ கோலோச்சத் தொடங்கி ஆண்டுகள் பல ஆகியும் அரசு இதைப் பற்றி ஏதும் கண்டு கொள்வதாகவே இல்லை.

ஆயிரக்கணக்கான நூற்றுக்கணக்கான பிள்ளைகள் பயிலும் பள்ளிகளில் அதற்கு ஏற்புடைய கட்டமைவுகள் இல்லை. ஏன் சொல்லப் போனால் கழிப்பறை வசதிகளும், அதை தூய்மைப்படுத்தும் மனித சக்தியும்  வளங்களும் காணப்படவில்லை. கட்டமைவும் ஆசிரியர்களும் உள்ள பள்ளியில் சில மாணவர்களே உள்ளனர். அரசு செலவு செய்யுமளவிற்கு மாணவர் சேர்க்கைகளே இல்லை.

கல்வி வேண்டுமானால் இலட்சக்கணக்கில் , கோடிக்கணக்கில் செலவு செய்யும் தகுதி வேண்டும். அந்த அளவு பணத்தைப் பெற எல்லா வழிமுறைகளும் தெரிந்த வாழ்வு வாழத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் கல்வி, செல்வம், வீரம் எல்லாம் இருக்கும்

செல்வம் என்றால் 16 செல்வமல்ல, வீடு, நிலம், கார், கரன்ஸி, வங்கிக் கணக்கில் உள்ள இருப்பு,இவைதான்.



இங்கு வீரம் என்பது அடியாள், வேலையாட்களை கையாளும் முறை எனப் பொருள் படும்.



வீரம் என்றால் ஒரு பெண்ணை ரெயில் நிலையத்தில் வெட்டுவதும் அடிப்பதும் என்று ஆகி விட்ட இளைஞர்களை என்னதான் சொல்வது? எப்படித்தான் இளைஞர் என்பது? கல்வி என்றால் பெண் தலையை வெட்டி அசிங்கமாகப் பிரபலப் படுத்தி ஊடகங்களில் அலைய விட்டு அவர்கள் அறிவியல் மேதமையை தொழில் நுட்பம் வழியாக காட்டிக் கொண்டு அந்தப் பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவு அழிவு சக்திக்கு தமது ஆக்க சக்தியை ஆற்றலை பயன்படுத்தும் இளைஞரை எப்படி இளைஞர் என்பது? இளைஞர் என்று ஏற்றுக் கொள்ள முடியும்? இப்படி பயன்படுத்தப் பட்ட சக்தி அடுத்து சிறையில் பல்லாண்டு முடங்கி விடப் போகிறது அல்லது மரணம் என்று முடிவு எய்தப் போகிறது...




இந்தியாவில் இது போன்று ஆக்க பூர்வமான சக்திகள், ஆற்றல் பேராற்றல் இந்த நாட்டுக்கும் வீட்டுக்கும் பயன்படாமலே விரயமாகிப் போகிறது... இவர்கள் எந்த வழியில் செல்ல வேண்டும் என்ற ஆற்றுமைப் படுத்த நல்ல தலைமை இல்லை. நல்ல தலைமைகளை எவரும் ஏற்பதுமில்லை.

இன்னும் தரிசாகி வரும் இந்திய விவசாய நிலங்கள் பற்றி சொல்லவே வேண்டாம். அது போலவே நமது இளைய தலைமுறையும்.

இதையெல்லாம் கண்டும் காணாமல் ஊக்கப்படுத்தி மது, புகை , போதை போன்றவற்றால் இவர்களை எல்லாம் நாசப்படுத்தி வரும் அரசை அரசுகளை , சட்டம் நீதி நிர்வாகத்தை நாம் எப்படி நல்ல நிர்வாகம் நல்லரசு என்று ஏற்றுக் கொள்ள முடியும்?

பொது இடங்களில் புகை பிடிப்பதையும், பொது இடங்களில் மது புட்டிகள் கிடப்பதையும் மதுப் புட்டிகள் போல மனிதர்கள் குடித்து விட்டு கிடப்பதையும் எப்படி ஒரு அரசு அனுமதிக்க முடிகிறது?
Image result for magudanchavadi suicide due to morphing in facebook



இது போன்ற விஷயங்களில் ஏதாவது செய்தால் ஒவ்வொரு மனிதருக்கும் பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு வரும், அவன் எவ்வளவு பெரியவன் சிறியவன் ஆனாலும் பொது இடங்களில் எச்சில் துப்ப மாட்டான், சிறு நீரும் மலமும் கழிக்க மாட்டான். இங்குதான் சாக்கடை எங்கும் பிளாஸ்டிக் பைகளாக நிரம்பிக் கிடக்கிறதே அதை எந்த அரசு எப்படி சரி செய்யப் போகிறது? என்று சரி செய்யப் போகிறது? அதற்கெல்லாம் நேரம் இல்லை. எனவே பொது இடங்களில் குத்து வெட்டு கொலை, கொள்ளை, திருட்டு யாவும் இயல்பாக ஆகிவிட்டது.




அரசின் வேலையா தனி மனிதர் பணியா இவை எல்லாம் என்ற பட்டி மண்டபஙகள் நடத்த வேண்டிய தேவயே இல்லை. இரண்டுமே . என பட்டி மண்டப பொது முடிவு போலவே இதற்கும் . ஒவ்வொரு மனிதருக்கும் அந்த உணர்வு வேண்டும், அதை ஏற்படுத்தும், கட்டுப்படுத்தும், ஊக்கப்படுத்தும் செயல்களை அரசு மேற்கொள்ள வேண்டும் . இல்லையேல் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன அழிவு மிக அருகாமையில் வந்த வண்ணமே இருக்கிறது. அதற்கான சான்றுகளே நாம் இன்று காணும் சமூக காட்சிகள் யாவும்.

Image result for magudanchavadi suicide due to morphing in facebook

கல்வி, செல்வம், வீரம் என்பதன் பொருள் யாவும் பால் திரிந்து போனது போல விரயமாகி விட்டது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Friday, July 1, 2016

உலக மருத்துவர்கள் தினமாமே?(01.007.2016): கவிஞர் தணிகை

உலக மருத்துவர்கள் தினமாமே?(01.007.2016): கவிஞர் தணிகை

மருத்துவர் என்பவர் தெய்வம்தான் ஆனால் அந்தத் தெய்வங்களுக்குத்தாம் தாம் தெய்வம் என்பது தெரியாமல் இருக்கிறது.இந்த நாட்டின் கொடுமையான வருந்தத் தக்க விளைவு இது..

எனையறிந்த நானறிந்த நல்ல இரண்டு மருத்துவர்களுக்கு வாழ்த்தும், இன்னும் சில மாதங்களில் மருத்துவர்களாக இருக்கும் 20 பேருக்கு ஆசிகளும் கூறினேன்.



சீனாவுக்கு மாவோ கிடைத்த மாதிரி அப்துல் கலாம் போன்றோர் மாறி இருந்திருந்தால் ஒரு வேளை நம் நாட்டிலும் கிராமங்கள் எங்கிலும் நோய்களும் பிணிகளும் இல்லாது தீர்ந்து போயிருந்திருக்கலாம். எல்லா வைத்திய உதவிகளுமே நகர்புறம் சார்ந்தே இருக்கின்றன.

போய் வருவதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது பாமர மக்களுக்கு.ஏதாவது ஒரு தொழில் வல்லவர்கள் அடங்கிய துறையாவது இந்த நாட்டில் ஒழுங்கமைவுடன் இருந்தால் அதைப் பார்த்து மற்ற துறைகளும் கற்று, அனுபவப் பட்டு ஒரு வேளை வளர்ச்சி அடையலாம்... ஆனால் இங்கு எல்லாத் துறைகளுமே ஒரே மாதிரி புரையோடியே கிடக்கின்றன.

எனவே மருத்துவம் பற்றி மட்டுமே கவலைப்பட்டு புண்ணியமில்லை. ஆனால் மருத்துவம் பற்றி கவலைப்பட்டே ஆக வேண்டும் ஏன் எனில் உயிர் காக்கும், பிணி போக்கும் உன்னத துறை என்பதால்.

காவல் துறை , மருத்துவத் துறை, அரசியல், ஆட்சி, பத்திரிகை, சட்டம் நீதி நிர்வாகம் , ஆசிரியர்,பொறியாளர் இப்படி இந்தத் துறை எல்லாம் நாட்டமை உள்ள நாட்டை கட்டமைவிக்க வேண்டிய துறைகள்/ ஆமாம் ஆனால் இவை எதுவுமே ஒழுங்காக இல்லை.

இதில் எந்த துறையாவது ஒரு துறை நன்றாக அமைந்தால் கூட போதும் நாடு முன்னேறலாம். மேலும் மேலும். மருத்துவத் துறை சிறந்து இருந்தால் நாட்டில் இந்தளவு பிணி பல இருந்திருக்காது. அதனுடையை தொடர்புடைய துறைகள் யாவும் வணிக மயம் அடைந்திருக்காது.

மேட்டூர் மாவட்ட மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்த பல கிராமப்புறம் சார்ந்த மக்கள் 24 பேர் கண் பார்வை போன கதை ஒரு மருத்துவத் துறை சான்று.

மருத்துவம் என்பது ஒரு சேவை. தொழில் அல்ல. சாகப் போகும் நிறைய மனித உயிர்கள் நிறைய மடிந்து போகின்றன உரிய நேரத்தில் மருத்துவரும் மருத்துவ உதவிகளும் கிடைக்கப் பெறாததால்.

கோடிக்கணக்கில் மருத்துவப் படிப்பு விற்பனைக்கு விற்கப்படும் நாட்டில் இதை எல்லாம் எதிர்பார்ப்பதும் நமது அறியாமையே.




மேட்டூர் அரசு மருத்துவமனையில் ஒரு முறை ஒரு காவல்துறை சார்ந்த இளைஞர் ஒருவரின் தங்கையின் பிரசவ நேரத்தில் மருத்துவர்கள் ஒத்துழைக்க மறுத்து சேலம் கொண்டு செல்லுங்கள் எனச் சொன்ன காலக் கட்டத்தில் மற்றொரு பத்திரிகை நண்பர் அந்த உரிய நேரத்தில் என்னால் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு மருத்துவர்களை உரிய முறையில் பேசி அந்த பிரசவத்தை நல்ல முறையில் நடக்க ஏற்பாடு செய்தார். அப்போதே அந்த மருத்துவ மனையில் எப்படி என நாமெல்லாம் அறிந்தது. அது இப்போது 24  பேரின் அதுவும் வயது முதிர்வான பெண்களின் கண்பார்வையோடு பறி போயிருக்கிறது.

ஒரு குடையின் கீழ் மருத்துவம் என்பது ஒரு சுரண்டல் தொழிலாகிவிட்டது. ஒரு மருந்துக்கடை எவ்வளவு வியாபரம் செய்திருக்கிறது எனப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும் இந்த நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை.

அடியேனும் இப்போது மருத்துவக் கல்வி சார்ந்த தொழில் பணி அல்லது சேவையில் இருப்பதால் பல பள்ளிகளுக்கும், பல நிறுவனங்களுக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு எம்மால் ஆன சேவையை செய்ய ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருப்பது என்ற செய்தியே இந்த உலக மருத்துவ தினத்தில் உங்கள் அனைவரோடும் நான் பகிர்ந்து கொள்ளும் செய்தியாகும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Wednesday, June 29, 2016

வெற்று அழுகையால் என்ன பயன்? கவிஞர் தணிகை

                                                 
வெற்று அழுகையால் என்ன பயன்? கவிஞர் தணிகை


காலை 7.30 மணிக்கு ஒரு பேருந்து நிலையத்தில் தம்பி டிபன் வாங்கிக் குடுங்க தம்பி என்று ஒரு முதியவளின் குரல்...  விடாமல் என்னை நெடுநேரம் துரத்தியது....       பேருந்து ஏறியமர்ந்தால் பெரும் கூட்டம். வயதான ஒரு பெண் எண்ணெய் காணாத சாமியார் பரட்டை முடிச்சுகளுடன் சிகை,கையில் ஒரு சிறு பழைய ஒயர் கூடை. நிற்கவே முடியவில்லை. இப்படீன்னு தெரிந்திருந்தால் நான் எஸ்.3 ல் ஏறியிருப்பேன் ( அது ஒரு நகரப் பேருந்து )உடல் நிலை சரியில்லாமல் மருத்துவ மனை செல்கிறார் போலிருக்கிறது

எந்த மனிதருமே அக்கறை கொள்வதாய் இல்லை. எனது இருக்கையருகே அந்தப் பெண்...நடத்துனர் அனுமதிச் சீட்டு கோர, அதை எடுக்கவும் தெம்பில்லை, என்னிடமிருந்த கூடையிலிருந்து எடுத்துக் கொடுக்க சொன்னார்.

கூடையைப் பார்த்தேன் உள்ளே ஒரு சிறு துண்டு, மாத்திரைகள்  ஒரு மணிப் பர்ஸ். அதில் உள்ள ஒரு பத்து ரூபாயை எடுத்து கொடுத்தவுடன் இன்னும் உள்ள சில்லறையை கேட்டார். அதில் 3 ரூபாய் இருந்தது. கொடுத்து விட்டு கொஞ்சம் ஒரு ரூபாய் குறைத்துக் கொள்ளுங்கள் என்றார் நடத்துனரிடம்.14 ரூபாய் அனுமதிச் சீட்டு.

அப்படி எல்லாம் குறைக்க மாட்டார் அம்மா, என்ற என்னிடம் மீண்டும் அந்தக் கூடையில் வெளியே இருந்த ஒரு 10 ரூபாய் தாளை எடுத்து ஒரு ரூபாய் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். நடத்துனர் வேண்டாம் என்று தம் பங்குக்கு புண்ணியம் தேடிக் கொண்டார்

நீங்க எங்க போறீங்க என்றார் அந்த முடியாத பெண். எழுந்து அமர்ந்து கொள்க என்று எனது இருக்கையை கொடுத்தேன். கைகளில் சிறு நடுக்கம் இருந்தபடியே இருந்தது. கழுத்தில் தாலி இருந்தது.

இவளுக்கு யாருமே துணையாக இல்லையா? ஏன் இந்த நிலை, இப்படியே பேருந்து நிலையத்தில் கொடிக்கம்பத்தடியில் படுத்துக் கிடக்கும் அந்த மனிதர் ....இப்படியாகவே நினைவு சென்றது.

ஓ என இந்த சமுதாயத்தை பார்த்து அழத்தான் தோன்றியது. அழுதென்ன பயன். ஒவ்வொரு தனிமனிதரும் ஏதாவது இந்த சமுதாயம் நோக்கி திருப்பிச் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இன்னும் இருக்கிறது.என்னருகே அமர்ந்திருந்த ஒரு கல்லூரி மாணவர் தூங்கியபடி பயணம் செய்து வந்தார்.

நான் விட்டு விட்ட சேவையை தொடரவே மறுபடியும் இந்த பயணம் வாழ்வு என்று வந்திருக்கும் போலிருக்கிறது. எங்கு பார்த்தாலும் முடைநாற்றம். எச்சில் சாலையில் துப்பும் பெரிய மனிதர்கள் . சிறுநீர், மலம் , குப்பை மேடு என ஒரே துர் நாற்றம் எங்கு பார்த்தாலும் சாலை நகர் புறம் பேருந்து நிலையம், ரயில் நிலையம் எல்லாமே!



நிறைய பிச்சைக்காரர்கள் செயற்கை ஊனத்தோடும் இயற்கை ஊனத்தோடும்...

நன்றாக இருப்போர் தமது பணிகளை , தமது வேலையை, தமது பொறுப்பை, தமது கடமையை சரியாக செய்தால் இப்படி எல்லாம் இருக்குமா? இப்படி எல்லாம் நேருமா? ஈவு இரக்கமில்லாமலே போய் விட்டதே, எந்த மனிதர் பற்றியுமே வேறு எந்த மனிதருமே அக்கறை கொள்வதாகத் துளியும் தெரியவில்லையே...

கட்சிகள், அரசு, நிறுவனங்கள் பற்றி எல்லாம் சொல்லவே இல்லை. தனிமனித அவலங்கள் பற்றியே கவலைப்படுகிறேன். இதனிடையே புகைத்துக் கொண்டே பொது இடங்களில் பயணம் செய்யும் பொறுப்பற்ற மனிதர்கள், வாகனத்தின் படிக்கட்டு வாசலிலே குடித்து விட்டு படுத்துக் கிடக்கும் உணர்வற்ற சவங்கள்...இப்படியாக எங்கும்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, June 26, 2016

தியான வழிகாட்டிகள் விவேகானந்தரும் அரவிந்தரும்: கவிஞர் தணிகை

தியான வழிகாட்டிகள் விவேகானந்தரும் அரவிந்தரும்: கவிஞர் தணிகை




தியானம் செய்கிறேன் என்றாலே ஈஷாவா, வேதாத்திரியா,பிரம்ம குமாரிகளா,ரவி சங்கரா என கட்சி கட்டிப் பேசும் நிலையில் தியானத்தின் அடிப்படை ஒன்றுதான் அதில் இவர்கள் எல்லாம் சிறிது வசதிக்குத் தக்கபடி பிரணாயாமம், ஆசனம், போன்றவற்றை சிறிது சிறிதாக மிகைப்படுத்தி  அல்லது குறைவு படுத்தி அல்லது வசதிப்படுத்தி வைத்து செய்து வருவதை எந்தக் கட்சி யாருக்கு பிடிக்கிறதோ அது போல இந்த தியானப் பயிற்சி முறைகளிலும் பிடிப்பவர்கள் சேர்ந்து கொள்கிறார்கள்.மற்றபடி இதன் நடுத் தண்டும் வேர்ப் பகுதியும் ஒன்றே ஒன்றுதான்.

இனி அரவிந்தர் சொல்வதை பார்ப்போம்:

தியானத்தின் போது எல்லாவிதமான எண்ணங்களும் வருவது பகைச் சக்திகளாலன்று; சாதாரண மனித மனத்தின் இயல்பே அதற்குக் காரணம். எல்லாச் சாதகர்களுக்கும் இந்தக் கஷ்டம் ஏற்படும்; பலருக்கு மிக நீண்ட காலத்திற்கு இருக்கும். அதை ஒழிக்கப் பல வழிகள் உள்ளன.

ஒரு வழி எண்ணங்களைக் கூர்ந்து பார்த்து, அவை காட்டும் மனித இயல்பைக் கவனித்து, ஆனால் அவைகளுக்குச் சம்மதம் கொடாமல், தாமகவே அவை ஆடி ஓய்ந்து அடங்க விடுவது‍‍‍‍‍===1.ஆற்றில் ஓடும் பொருள்களை ஓட விட்டு அமைதியாக அமர்ந்து பார்ப்பது போல,2.அறிவுக்கேற்ப ஒரு பொருள் பற்றி சிந்தித்து முடிவு கண்டு ஓய்ந்து போவது போல,3. சுவற்றில் அடித்த பந்து போல எண்ண அலைகளை அப்படியே திருப்பி அனுப்ப கற்றுக் கொள்வது....

இந்த வழியையே சுவாமி விவேகானந்தர் அவருடைய இராஜ யோகத்தில் சிபாரிசு செய்கிறார். இன்னொரு வழி, எண்ணங்களைத் தனதாகக் கருதாமல், சாட்சி புருஷனாகப் பின்னால் விலகி நின்று சம்மதம் மறுப்பது...எண்ணங்களை புறத்தே இருந்து அதாவது இயற்கையிலிருந்து வருபவைகளாகக்க் கருதப்பட வேண்டும். அவைகள் மனவெளியைக் கடக்கும் பிரயாணிகள் போன்றவை. நமக்கும் அவைகளுக்கும் தொடர்பில்லை.அவற்றில் நமக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்பது போல உணரவேண்டும். இப்படிச் செய்து வந்தால் சிறிது காலத்திற்குப் பிறகு மனம் இரண்டு பாகங்களாகப் பிரிகிறது.

ஒரு பாகம் அமைதியாக சலனமின்றி சாட்சியாக எல்லாவற்றையும் பார்க்கிறது; இது எண்ணங்களை அலைந்து திரியும் பிரகிருதிப் பாகம்.
பிரகிருதிப் பாகத்தையும் அமைதியாக்க அல்லது மோனமாக்க முயலலாம்.

 பிரகிருதி என்றால் மூலப்பகுதி /அடிப்படை அல்லது பிரதானப் பகுதி என்று சொல்லலாமா? சொல்லலாம் என்றே நினைக்கிறேன்.

மூன்றாவது ஒரு வழி உள்ளது அது தீவிரமானது. இந்த முறைப்படி எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன என்று கவனித்து, அவை தன்னிடமிருந்து வரவில்லை, தலைக்கு வெளியிலிருந்தே வருகின்றன எனச் சாதகன் அறிகிறான். அவ்வாறு அவை வருவதைக் கண்டு பிடித்தால், அவை உள்ளே புகுமுன் அவைகளை அப்படியே அப்பால் எறிந்து விட வேண்டும். இதுவே எல்லாவற்றிலும் கடினமான‌ முறை. இம்முறையை எல்லாரும் பின் பற்ற முடியாது; முடிந்தால் இதுவே மோனத்திற்கு மிகச் சக்தி வாய்ந்த சுருக்கு வழியாகும்.

ஆதாரம் நூல் : யோகத்தின் அடிப்படைகள்‍... ஸ்ரீ அரவிந்தர்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Friday, June 24, 2016

தமிழனாய் இந்தியனாய் மனிதனாய் சுற்றித் திரிந்தேன் இந்தியா முழுதும்: கவிஞர் தணிகை

தமிழனாய் இந்தியனாய் மனிதனாய் சுற்றித் திரிந்தேன் இந்தியா முழுதும்: கவிஞர் தணிகை



பிரதேச உணர்வுகள் தலை தூக்கி ஆடுவதாகவும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா , தமிழ்நாடு என தென்னகத்திலும் வடக்கிலும் இந்தி ,வங்காளி, குஜராத்தி, மராட்டி, சீக்கியம் என பிரிந்து கிடப்பதாகவும் சொல்லப்படலாம். ஆனால் நான் 1985 முதல் 1992 வரையிலான காலத்தில் இந்தியாவின் எல்லா பகுதிகளிலும், ரயில் வழி, தரை வழி, நீர்வழி மற்றும் வான் வழி ஆகிய எல்லா வழிகளிலும் பயணம் செய்தேன். எந்த அச்சுறுத்தலுக்கும் ஆளாகவில்லை.

மண் வேறாக தெரிந்தது, பூக்கள் வேறாக மரங்கள் வேறாக நீர் நிலை வடிவங்கள் வேறாக மனிதர்கள் வித்தியாசமாகத் தெரிந்தனர் ஆனாலும் தனிமனித போக்கு என்பதைத் தவிர வேறு பெரிய பிரதேச உணர்வுகள் எதனாலும் பெரிய அளவில் பாதிக்கப் படவில்லை என்பதே உண்மை.

சொல்லப் போனால் ஒரிஸ்ஸாவில் இருக்கும் போது முரளிதரன் கிடாவ் என்ற ஒரு மின்வாரிய பிரிவு அலுவலர் அல்லது செக் ஷன் ஆபிசர் அழைத்து அன்பொழுக விருந்தளித்ததும், ஆந்திராவுக்கும் ஒரிஸ்ஸாவுக்கும் இடைப்பட்ட நீர்வழி நிலவழியில் பொல்லூர் என்ற இடத்தில் பெயர் மறந்து போன மற்றொரு மலையாள நண்பர் அவரும் மின்சார வாரியப் பணியாளர்...மலேரியா பாதிப்பின் போது உணவகத்தில் வாந்தி எடுத்த போது அழைத்துச் சென்று அவரது வீட்டில் (அப்போது அவரது குடும்பம் ஊருக்குப் போயிருந்தார்கள்) தங்க இடமளித்து அவர் பணிக்குச் செல்லும்போதும் என்னை இருக்கச் சொல்லி விட்டு மருத்துவமனை சென்று சோதித்து அறிந்து காய்ச்சலுக்கு சிகிச்சை செய்து கொள்ளப் பணித்து விட்டு நான் யார் எப்படிப் பட்டவன் என்பது தெரியாமலே எனக்கு பேருதவி புரிந்ததும்

ஆந்திராவில் இருந்தபோது இரகுநாத்,மற்றும் நிரஞ்சன்குமாருடன் ஓர் வீட்டில் இருந்து கொண்டு சமைத்து உணவுண்டு மாலையில் ஒரு பள்ளி மைதானத்தில் மணலில் அமர்ந்து அளாவளாவி மகிழ்ந்ததும் அந்த பேங்க் ஆப் இந்தியாவின் மேலாளர் எம்மை அடிக்கடி வாரம் ஒரு முறையாவது அவர்கள் வீட்டில் எங்களது மூவரையும் அழைத்து விருந்து கொடுப்பதும் நாங்கள் 3 பேருமே அப்போது மணமாகாத இளைஞர்கள்.



கேரளாவில் கொச்சின் எர்ணாகுளத்தில் ஒரு கன்னியாஸ்த்ரி நான் மரக்கறி உணவு மட்டுமே உண்பவன், அதிலும் அந்த 30 பேரில் ஒருவனே என்ற போதிலும் எனக்காக தனியாக அனைத்து பதார்த்தங்களையும் சமைத்து என்னை திக்கு முக்காட வைத்ததும் அன்பு மழையில் நனைய வைத்ததும்

கர்நாடகாவில் இருக்கும்போது ரெய்ச்சூர் வறண்ட பாலை பூமியில் வாழும்போதும் அந்த மக்கள் என்னை ஆதரித்ததும்,நமது தமிழரே ஒருவர் நான் செய்யாத தவறை செய்ததாக சொல்லி எமது மத்திய அலுவலகத்தில் எனக்கு அவப் பெயர் ஏற்படுத்த முயன்றதும்...ஒரு சாதராண கொர்ரய்யா என்னும் படிப்பறிவு இல்லா ஒருவனால் கோழி எச்சத்தின் அருகே உறங்க ஏற்பாடு செய்யப்பட்டதும்

நமது தமிழ்நாட்டில் கல்ராயன்மலையில் முதலில் மலைவாழ்மக்கள் எனக்கு இரவில் படுக்க இடமாக மாட்டுக் கொட்டிலை காண்பித்ததும்..இப்படியாக எனது நினைவு தொடர்வண்டியில் பின்னோக்கி பயணம் செய்ய ஆரம்பித்திருக்கிறது.ஆனால் எவருமே என்னிடம் எந்த பிரதேச உணர்வு கொண்டிருந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்த தனிப்பட்ட சிலர் ஆந்திராவில் நமை அரவாடு (தமிழ் மக்கள் நாகம் போன்றவர் என்பதும்) கர்நாடகா இன மக்கள் நம்மை அவர்கள் வாழ்வை பிடுங்க வந்த போட்டியாளர் என்றே இன்னும் நினைப்பதும்



கேரளத்து மக்கள் வேறாக பிரிந்து கிடந்தாலும் நம் தமிழரை நிறைய இடங்களில் சார்ந்தும் வாழ்வதும் ஆனால் அவர்கள் இடத்தில் அவர்கள் மரபு சார்ந்த வாழ்வை வாழ்வதுமாக..

தனிப்பட்ட முறையிலான இது போன்ற தனிமனித அனுபவங்கள் ஒருவாறு பிறரின் அனுபவங்களில் இருந்து வேறுபட்டு இருப்பது எனை எல்லாவகையிலும் வேறுபடுத்திக் காண்பிப்பதை என்னால் சில சமயங்களில் வாய் விட்டும் சொல்ல முடிவதில்லை இப்படி எழுதி வைத்தாலும் அதை படித்து கோபம் கொள்வதற்கு நாம் எப்படி பொறுப்பாக முடியும்?

ஆனால் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த அப்போது போதிய மாத ஊதியமும் இல்லாதிருந்த அந்நிலையில் இந்த பரந்த மனதுக்காரர்கள் இல்லையெனில் எனது வாழ்வு எப்படி முடிந்து இருக்கும் என சொல்லவேத் தெரியவில்லை. அவர்களுக்கு எல்லாம் இந்த பதிவு பற்றித் தெரியவே போவதில்லை. ஆனால் அத்தனை அன்பு நண்பர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றியும் எப்போதும் உரித்தாகும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.